அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பூகோள குற்றவியல் விவகாரங்களுக்கான தூதுவர் ஸ்டீபன் ரப்பின் இலங்கை விஜயத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்துக்கு முன்பாக தேசிய ஒழுங்கமைப்பு ஒன்றியத்தினர் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர்.

இன்று காலை 10.30 மணியளவில் பௌத்த பிக்குகள் சகிதம் நூற்றுக்கும் மேற்பட்டோர் பதாகைகளை தாங்கிய வண்ணம் கொள்ளுப்பிட்டி சந்தியிலிருந்து பேரணியாக அமெரிக்க தூதரகத்தை வந்தடைந்தனர். அமெரிக்க தூதரகத்தின் வாயிலில் சுமார் 200 பொலிஸார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் தூதரகம் முன்பிருந்தவாறு தூதுவர் ஸ்டீபன் ரப்பிற்கு எதிராக கோஷமெழுப்பினர். “பாகிஸ்தானில் நீங்கள் நடத்திய விமானத் தாக்குதலை பற்றி விசாரணை நடத்துங்கள்”, “ஏன் இந்த இரட்டை வேடம்”, “ஈராக்கில் நீங்கள் செய்த யுத்த குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்துங்கள்”, “மக்களை பாதுகாக்கவே இலங்கை இராணுவத்தினர் உயிரிழந்தனர்” ஆகிய சுலோகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திய வண்ணம் எதிர்ப்பு கோஷமெழுப்பினர்.

நேற்று வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜாங்க தினைக்களத்தின் பூகோள குற்றவியல் விவகாரங்களுக்கான தூதுவர் ஸ்டீபன் ரப் யாழ். ஆயர் மற்றும் மன்னார் ஆயர் ஆகியோரைச் சந்தித்திருந்தார். அத்துடன், வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் உறுப்பினர் அனந்தி சசிதரனையும் சந்தித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க தூதரகத்துக்கு முன்பு தேசிய ஒழுங்கமைப்பு ஒன்றியத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது எடுக்கப்பட்ட படங்கள் கீழே தரப்பட்டுள்ளன.