படம் | Panoramio

அஞ்சு சதத்துக்குப் பெறுமதியில்லாதவன் என்று வேலை வெட்டியில்லா தவன்களைச் சொல்வதுண்டு. அதற்கிடையில் அஞ்சு சதத்துக்கு இருந்த பெறுமதியை மறந்ததன் விளைவே இந்தப் பழமொழி உருவாக்கம் என்பதைப் புரிந்துகொள்ளுமளவுக்கு நாம் யாரும் சிந்திக்கவில்லை. பழமொழி குறிப்பதுபோல அஞ்சு சதமோ, அதற்கு முன்னான சதங்களோ பெறுமதியற்றவையா? எப்போதாவது பெறுமதியற்று இருந்தவையா? சதங்களின் வளர்ச்சியும், ரூபாய்களின் அறிமுகமும் அரசியல், பொருளாதார, சமூக விடயங்களில் ஏதாவது தாக்கம் செலுத்தக் கூடியவையா? சதம் பற்றிய கதையை வைத்திருப்பவர்கள் அனைவரும் காலம் கடந்தவர்கள்தான். கிட்டத்தட்ட 50 வயதைத் தாண்டியவர்களிடம் சதத்தின் பெறுமதி குறித்த கதைகள் நிறையவே உண்டு. அவர்கள் காலத்தின் பொருளாதார நிலையை குப்பைகளில் கிடக்கும் சதங்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

பொதுவாக நாணயப் புழக்கம் என்பது, குறித்த சமூகம் ஒருமையப்பட்ட அதிகார சக்திகளின் ஆளுகைக்குட்பட்ட நிலையிலேயே சாத்தியமாகும். அதாவது, அந்த சமூகத்தை ஆள்வதற்கு ஒரு தலைவனோ, அல்லது மக்கள் மயப்பட்ட நிர்வாகமோ இருக்கும்போது, அவர்களின் கொடுக்கல் வாங்கல்களுக்காகப் பணம் அறிமுகப் படுத்தப்படுகின்றது. அதை வெளியிடும் அமைப்பு ஆளுபவர்களின் அங்கீகாரம் பெற்றதாக இருக்கும். இலங்கையை அல்லது வடக்கைப் பொறுத்த வரையில் கி.மு. 2500ஆம் ஆண்டுகளில் இருந்து இவ்வாறான சதங்கள் கிடைக்கின்றன. ஆகவே, குறித்த காலப்பகுதியிலிருந்து இலங்கையில் அதிகாரமயப்பட்ட அரசுகள் உருவாகிவிட்டன என்ற முடிவுக்கு வரமுடியும். அத்துடன், கொடுக்கல் வாங்கல் முறையான பண்டமாற்று முறையும் மாற்றம் கண்டு, பணம் கொடுத்துப் பொருள் வாங்கும் முறையும், வணிகமயப்பட்ட சுரண்டல் சமுதாயத்தின் உருவாக்கத்தையும் சதங்களின் வருகையிலிருந்து அவதானிக்கலாம்.

எங்கள் மத்தியில் அரைச் சதத்திலிருந்தே சதப் புழக்கம் ஏற்பட்டது. அதற்கு முன்னரான பணத்துக்கு நிகரான உலோகக் குற்றியை அனா என்கின்றனர். ஆறு அனாவுக்கு குதிரையும் வேணும், ஆறுகடக்கப் பாயவும் வேணும் என்ற பழமொழியும், சதத்துக்கு முன்னராக பணப்புழக்கத்தை நினைவுபடுத்துகின்றது. அரைச்சதம் பாவனையிலிருந்தது, இப்போதிலிருந்து 3 அல்லது 4 தலைமுறையினருக்கு முன்பான காலத்திலாகும். அதாவது, தமிழ் உறவு முறையின்படி பூட்டன், பூட்டிக்கும், அவர்களுக்கு முந்திய தலைமுறையின ருக்கும் உரிய பணமே அரைச்சதம். அவர்களின் காலத்தில் அரைச்சதம் பெரும் பணம். அதைக் கொண்டு, நாளொன்றின் முக்கிய பொருளாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்துகொள்ள முடியும். அதிகளவில் அரைச்சதத்தின் பாவனை இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்பான காலத்திலேயே இருந்திருக்கின்றது. செப்பு, வெண்கலம் ஆகிய உலோகங்களால் தயாரிக்கப்பட்ட அரைச் சதங்களில் பிரிட்டன் இளவரசி அல்லது இளவரசனின் தலைச் சின்னம் பொறிக்கப்பட்டு, தமிழிலும், சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் அரை என்பதை ஒன்றின் கீழ் இரண்டாக எண்ணில் எழுதி வெளியிட்டிருப்பார்கள். அதிலும், தமிழில் எழுதப்படுகிகையில் ரூ. சதம் என்று தெளிவாக தனியாக குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த அரைச் சதங்களைக் கொண்டு, அந்தக் காலத்து அரசியலைச் சொல்லிவிடலாம். இலங்கை நேரடியாக பிரிட்டனின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. பணம் உள்ளிட்ட முக்கிய அரச விடயங்களை அவர்களே கவனித்துக் கொண்டனர். அந்த அரச நிர்வாகம் எப்படி இருக்குமெனில் அரசாளுபவருக்கு முன்னிலையளித்திருக்கும். அதை நாணயத்தில் தம் தலையைப் பொறித்துக் கொள்ளவதிலிருந்து அறியலாம். இப்படி அவரவர் சிந்தனைக்கும், அறிவுக்கும் அமைவாக இந்தக் காலத்தில் பெறுமதியற்றுக் கிடக்கும் அரைச் சதத்துக்குப் பின்னாலிருந்த அரசியலைப் புரிந்துகொள்ளலாம்.

இனி ஒரு சதம். ஒரு சதத்தைப் பயன்படுத்தியவர்கள் நம்மிடையே இருக்கின்றார்கள். அதாவது, வாழ்வின் இறுதி அந்தத்தில் இருப்பவர்கள் ஒரு சதப் பாவனையளார்களாயிருப்பர். அந்தக் காலத்தில ஒரு சதத்துக்குத் தோடம்பழ இனிப்பும், கலர் கலராய் விற்கும் பல்லி முட்டாசும் வாங்கிச் சாப்பிட்டிருக்கிறன் என்கிறார் அப்படியான ஒருவர். ஆக, ஒரு சதம் பாடசாலைக் குழந்தைகளில் பைக் காசாக அப்போது இருந்திருக்கிறது. ஒரு சதத்தையும் பிரிட்டன்காரர்களே அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். அரைச்சதம் போலவோ அமைப்புடன், ஆங்கிலத்தில் மட்டும், சதத்தின் பெறுமதியைக் குறித்து, தமிழ் – சிங்கள மொழிகளில் சதம் என்பதை மட்டுமே குறித்திருக்கின்றனர். ஆரம்பகால ஒரு சதம், முழுக்க முழுக்க வெள்ளைக்காரனின் பணமாக இருந்திருக்கின்றது. தமிழ் மற்றும் சிங்கள மக்கள் பணத்தின் பெறுமதியை அறிந்து கொள்ள மாத்திரமே அவர்களது சுதேசிய மொழியில் சதம் குறிக்கப்பட்டுள்ளது. இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் வெளிவந்த ஒரு சதத்தில், சிங்கள பெரும்பான்மைப் பலம் அதிகரிப்பதை அவதானிக்கலாம். ஆங்கிலத்தில் சிலோன் என்று பெரிய எழுத்தில் எழுதப்பட்டதற்குப் பதிலாக, அதைவிடப் பெரிய எழுத்துக்களில, சிங்களத்தில் சிறிலங்கா என்று பொறிக்கப்பட்டிருக்கும். சதத்தின் முன் பக்கத்தில் காணப்படும் இலங்கை – பிரிட்டன் இணைப்புச் சின்னத்தில், இந்த நாட்டைக் குறிக்கும் வாளேந்திய சிங்கமும், கீழே தமிழ் – ஆங்கிலத்தில் கண்ணுக்குத் தெரியாதளவில் இலங்கை என்று எழுதப்பட்டிருக்கும். உட்பக்கத்தில் கொட்டெழுத்தில் சதம் என சிங்களத்திலும், ரூ. (ரூபா) என்பதைத் தவிர்த்து, சதம் என்று தமிழிலும், சென்ட்ஸ் என்று ஆங்கிலத்திலும் சம அளவில் எழுதப்பட்டிருக்கும். இலங்கை பிரிட்டனிடமிருந்து முற்றாக விடுதலை வாங்கிய 1971ஆம் ஆண்டுக்குப் பின்னர் வெளிவந்த ஒரு சதங்களில் உள்பக்கம் மட்டுமே தமிழில் சதம் என்பது மட்டும் பொறிக்கப்பட்டிருக்கும்.

“இப்போது பெறுமதியற்ற ஐந்து சதம் அப்போது பெரிய காசு. அந்த நாளில அஞ்சு சதம் குடுத்தால் ஒரு குவியல் மீனும், றாலும் வாங்கி நல்லா சமைச்சி சாப்பிடலாம். யாழ்ப்பாணத்தில உள்ளுக்குள்ள ஓடுற பஸ்களுக்கு அஞ்சு சதந்தான் குடுப்பம். ஒரு இடியப்பம் 3 சதத்துக்கு சாப்பிட்டிருக்கிறன். இப்பத்தைய இடியப்பம் எண்டு நினைச்சிப் போடாதையுங்கோ. அந்த காலத்தில கோதும மா பாடை ஒட்டுறத்துக்குத்தான் வாங்குறது. அதால அரிசி மா இடியப்பம்தான் அவிப்பினம். 3 இடியப்பம் சாப்பிட்டா 9 சதம். ஒரு சதம் எண்டாலும் திருப்பித் தந்துடுவார் கடைக்காரர். இப்ப 10 ரூபா மிச்சம் எண்டாலும் இனிப்புத்தாறாங்கள்” என்கிறார் ஐந்து சத பெறுமதியறிந்த ஒருவர்.

பிரிட்டிஷார் இலங்கையில் வெளியிட்ட ஐந்து சதங்களில், அவர்கள் இந்திய – மற்றும் இலங்கை நிர்வாகங்களை ஒரே வரிசையில் மேற்கொண்டார்கள் என்பதற்கான ஆதாரங்கள் உண்டு. ஒருபக்கத்தில் இந்தியாவுடன் இணைந்ததே இலங்கை என்பதை குறிக்கும் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இடம்பெற்றிருக்கும். சதத்தின் உட் பக்கத்தில் தமிழ், சிங்கள, ஆங்கில மொழிகளுக்கு சம அந்தஸ்து வழங்கியிருப்பார்கள். இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னரான காலங்களில் வெளியிடப்பட்ட ஐந்து சதங்களில் சிங்களப் பெரும்பான்மைத்துவம் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டிருக்கும்.

பத்துச்சதம் என்பது மிகப்பெரும் பணம். ஒரு நாள் செலவுக்கு பத்துச்சம் மிச்சம்மிச்சமா போதும் தம்பி. அந்த நாளையில ஒரு நாள் கூலிச் சம்பளமே பத்துச்சம்தான். சில பேர் சதம் வாங்குவாங்கள். சிலர் சாப்பிட்டிட்டுத் தோட்டத்தில இருக்கிற எதையாச்சும் எடுத்துக் கொண்டு போவாங்கள். தென்னை மரம் ஏறித் தேங்காய் புடுக்க 10ச்சம். பனை ஏற 15 சதம். சதம் வாங்காட்டி 3 தேங்காய் வாங்கிக் கொண்டு போவாங்கள் என்பவரிடம், சதம் பற்றிய அதிக குறிப்புக்கள் உண்டு. அந்த நாளில புதுப்படம் எண்டால் 65 சதம், பழைய படம் எண்டா, 35 சதம், அரை ரிக்கேட் 25 சதத்திலிருந்து 10 சதம் வரைக்கும் போகும். 25 சதம் இருந்தா படம் பாத்து, அண்டைய நாள் முழுதும் நண்பர்களோட யாழ்ப்பாணம் முழுதும் சுத்தித்திரிஞ்சி சாப்பிட்டும் போடுவம். இப்பயெண்டால் முடியுமே!

அந்தத் தலைமுறை வாழ்வை செலவின்றி அனுபவித்துத்தான் இருக்கின்றது என்பதை சதப்பாவனை குறித்த அவர்களின் நினைவுகள் சொல்கின்றது.

பத்துச் சதத்திலும், வெள்ளைக்காரன் வெள்ளைகாரனாகவே தொழிற்பட்டிருக் கிறான். அவன் தவிர்ந்த இலங்கையர்களுக்கு சதத்தில் சம அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. சுதந்திரத்தின் பின்னர் வெளியிடப்பட்ட வெள்ளி பத்து சதங்களில் இலங்கை அரசின் குறியீடும், அதாவது சக்கரத்துக்குள் வாளேந்திய சிங்கம், உள்ளே தமிழில் பத்து சதம் என எழுத்தில் எழுதப்பட்டும் உள்ளது.

இவை அனைத்தையும் இணைத்தே 25 சதம் வெளியிடப்பட்டுள்ளது. பிரிட்டிஷார் இலங்கையில் வெளியிட்ட 25 சதங்களில் தமிழில் தெளிவாக சதம் என்று பொறிக்கப்பட்டிருக்கும். சிங்களத்தில் வெறும் சதம் என்பது மட்டும் குறிக்கப்படும். வழமையான அவர்களின் இளவரசர் தலை சின்னம் பொறித்த சதமாகவே இதுவும் காணப்பட்டது. இலங்கை அரசு வெளியிட்ட 25 சதங்களில் பெரும் பான்மைத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்பட்டிருக்கும்.

இவ்வாறாக 25 சதத்தைத் தாண்டிய சதங்களின் பாவனை 50 சதமாகவும், பின்னர் ஒரு ரூபாயாகவும், இரண்டு, ஐந்து, பத்து, பத்தாயிரம் ரூபாயாகவும் மாறியது. உலகம் சுருங்கி வியாபாரமயப்பட சதங்களின் பெறுமதி குறைந்து மறைந்தே போனது. ரூபாய்களின் பெறுமதி அதிகரிக்க அதிகரிக்க சமூகத் தேவைளும், அதிதீவிர சுரண்டல்களும் ஏற்பட்டன. நாளொன்றின் சராசரித் தேவை அரைச் சதத்தில் தொடங்கி 1000 ரூபாய்களைத் தாண்டிச் செல்கிறது. சதங்களின் காலத்தில் இல்லாத களவு, கொள்ளை, வழிப்பறி குற்றங்கள் ரூபாய்களின் காலத்தில் மிதமிஞ்சிவிட்டன. சதங்கள் பெறுமதியாக இருந்த காலத்தில், பெறுமதியாக இருந்த மனிதன், ரூபாய்கள் பெறுமதியாக இருக்கின்ற காலத்தில், மனிதன் பெறுமதியற்றுப் போகிறான். ரூபாய்களின் முன்னால் மனிதன் சதமானான்.

நன்றி: சூரியகாந்தி

ஜெரா