படம் | Wikipedia
முன் கதை – 01
சமீபத்தில் நண்பன் ஒருவன், “தங்கச்சிக்கு சாமத்திய வீடு செய்யிறம். வாடா…” என்று அழைத்தான். நான் ஏன்டா? என்றேன், அவன் நான் ஏதோ பகிடிக்கு கேக்கிறன் எண்டு நினைச்சு, பதில் ஒண்டும் சொல்லாம போட்டான்.
பின் கதை – 01
2008ஆம் ஆண்டு வன்னில நடந்த கதை இது. அப்ப நாங்கள் சின்ன பெடியள். வீட்டு கவலை, நாட்டுக் கவலை எத பற்றியும் எங்களுக்கு கவலை இல்லை. நாங்கள் அப்ப நாட்டு பிரச்சினை எண்டு கவலை பட்டது ஒண்டே ஒண்டுக்கு தான். அது கிபிர் விமானம்.
உங்களுக்கு எத்தின பேருக்கு கிபிர் விமானம் தெரியும்? சண்டை நடந்த காலத்தில வன்னில இருந்த சின்ன பெடியள கேட்டா கிபிர் பற்றி கதைகள் ஏராளம் சொல்லுவம்.
எனக்கு முதல் முதல் கிபிர் அனுபவம், ஒருக்கா ரியூசனுக்கு போட்டு வாற வழில நடந்தது. அண்டைக்கு நான் தப்பினது ஏதோ என்ர அதிஸ்ரம். அண்டேல இருந்து எனக்கு கிபிர் எண்டா பயம். எல்லாருக்கும் பயம்தான். ஆனா, எனக்கு கொஞ்சம் அதிகம். அதோட முதல் முதல் கிபிர் அடிக்கேக்க பயப்படும் போது என்ர வலது கை நடுங்கினது. அதுக்கு பிறகு தூரத்தில கிபிர் சத்தம் கேட்டாகூட என்ர கை வெட வெட எண்டு நடுங்கும்.
பின் கதை – 2
பள்ளி கூடம் யெளவனம் தொடங்கின காலம் அது. பள்ளி கூடத்தில் எனக்கு நிறைய நண்பர்கள், நண்பிகள். அதில முக்கியமா தோழி அபிராமி. மற்ற நட்புகளை விட அபிராமிய எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுக்கு காரணம், ஒரு இங்கிலிஸ் படம். எனக்கு அப்ப சாகசம், மந்திர தந்திரம் நிறைஞ்ச கதை புத்தகங்கள், படங்கள் பார்க்கப் பிடிக்கும். நானும் அபிராமியும் உற்ற நண்பர்களாக அப்பிடிப்பட்ட ஒரு படம்தான் காரணம். அபிராமி ஒரு நாள் தான் கொழும்புக்கு போன நேரம் பார்த்த Bridge to Terabithia எண்ட படத்த பற்றி சொன்னாள்.
படத்தில எங்கட வயச ஒத்த ஒரு சுட்டி பையனும் பெண்ணும் தங்கட தனிமைய போக்க வீட்டுக்கு அண்மையில் ஆற்றோடு இருக்கிய காட்டுக்குள்ள விளையாட போவார்கள். அந்த காட்டினை தாங்கள் ஆளும் ராஜ்ஜியமாக கற்பனை செய்து கொள்வார்கள். அதற்கு தெரபேதியா என்று பெயரிடுவார்கள். அங்கே இருக்கும் அணில் முதலான சிறு மிருகங்களை அரக்கர்களாகவும் எதிரியாகவும் கற்பனை செய்து, தாங்கள் சாகசம் புரிவதாய் விளையாடுவார்கள். அவர்கள் தங்களுடைய நாட்டுக்கு சுலபமாய் வர தடையாக இருக்கும் ஆற்றின் மீது பாலம் ஒண்டு அமைக்க முனைவார்கள். பாலம் கட்டப்பட்டதா? அந்த நட்புக்கு என்ன நடந்தது? என்பது மீதிக் கதை
Bridge to Terabithia – Katherine Paterson எழுதிய புகழ்மிகு சிறுவர் நாவல். இயக்குனர் Gabor caspo இதனை படமாக்கினார். இதோ ஆர்வமுள்ளவர்கள், படத்தைப் பார்க்கலாம்.
இப்படியொரு கதையை அவள் சொன்னதில் இருந்து இருவரும் தோழர்களானோம். நாங்கள் பள்ளிக் கூடம் விட்டுபோற வழியில் ஒரு சிறிய பாலம் இருக்கும். அதில் மழை காலத்தில மட்டும் தண்ணீர் பாயும். அந்த பாலத்துக்கு நாங்கள் தெரபேதியா பிரிச் எண்டு பெயர் வச்சம். ஒவ்வொரு நாளும் அந்தப் பாலத்தில இருந்திட்டு தான் வீட்ட போவம்.
பின் கதை – 3
அண்டைக்குதான் அது நடந்தது. நாங்கள் இருவரும் பாலத்தில இருக்கேக்க தீடிரெண்டு பெரிய சத்தம். கிபிர்…!!! நாங்கள் இரண்டு பேரும் அலறி அடித்துக் கொண்டு எங்கட பாலத்துல பதுங்கினம். என் கை வெட வெடக்கத் தொடங்கியது. கிபிர் போனா பிறகும் கை நடுக்கம் நிற்கவில்லை. அப்போ அபிராமி என்ர நடுங்கிற கையை பிடித்தாள்.
“பயப்படாதயடா கிபிர் போட்டுது.”
அவள் கையைப் பிடித்தவுடன் என் கை நடுக்கம் ஆச்சரியமாக உடனே நின்று போனது. அதுக்குப் பிறகு எப்ப கிபிர் சத்தம் கேட்டாலும் என்ர கை என்னை அறியாம அபின்ர கைய இறுக்கி பிடித்து கொள்ளும். அவள் “தெரபேதியாவின் ராசாக்கு பயத்த பாரன்” எண்டு கேலி செய்வாள். எனினும் கையை விட்டதில்லை.
பின் கதை – 4
கொஞ்ச நாள் அபிராமி பள்ளி கூட வாறதில்லை. சக தோழிகளிடம் கேட்ட போது தமக்குள் எதோ சொல்லி சிரித்தனர். எனக்கு முழுமையாய் புரியாவிட்டாலும், ஓரளவு உள்ளுணர்ந்து கொண்டேன். அபிராமி பள்ளி கூடம் திரும்ப வரத் தொடங்கினாள்.
“கொஞ்சம் குண்டாகிட்டாயடி”
சிரித்தாள். வழமைபோல்தான் அவள் இருப்பதாயும் கதைப்பதாயும் எனக்குத் தோன்றியது. அப்போது தான் அது நடந்தது. தீடிரென வானத்தில் இரச்சல் எழதொடங்கியது. எல்லாரும் பதுங்கு குழிக்குள் பதுங்கினம். நான் வழமை போல அபியின் கையைப் பற்றினேன். அவள் ஏதோ நெருப்பு பட்டது போல் கையை உதறி எடுத்துக் கொண்டாள்.
“இனி இப்பிடி கைய தொடாதையடா…!”
முன் கதை – 2
நண்பன் தங்கச்சியின்ர சாமத்திய வீட்டுக்கு சொன்னபோது எனக்கு அபியின்ர ஞாபகம் தான் வந்தது.
எங்கட சமூகத்தில இருக்கிற அல்லது நடக்கிற மிகப்பெரிய அவலங்களில் இதுவும் ஒன்று. திடீரென பிள்ளைகளின் உடலிலும் மனதிலும் நுழையும் பாலியல் எனும் ஒன்றைப் பற்றி நம் சமூகம் அவர்களுக்கு எத்தகைய ஒரு வழிகாட்டலை செய்கின்றது என்று நாம் யாரும் கவனித்து இருகின்றோமா?
எனக்கு நடந்தது வெறும் புறக்கணிப்பு. அண்டைக்கு அபிராமியின் கையை நான் பற்றும்போது எந்தவித அழுக்கும் என் நெஞ்சில் இல்லை. ஆனால், அபியை அத்தகைய செயலினை செய்யத் தூண்டியது எது என்பதே இந்த சமூகத்தின் பெரிய பிரச்சினை.
ஆண் – பெண் நட்பு, சாதரண தொடுகை, கருத்துப் பகிர்வு, புரிதல், தேடல் என்பன பாலியல் எனும் ஒன்று புகுந்த பின்பு ஏன் விளைதிறன் அற்று போகின்றது.
ஒரு பெண் பிள்ளையோ, ஆண் பிள்ளையோ வயதிற்கு வருதல் என்பதை ஏன் இப்படியொரு பிறழ்வான வடிவத்தில் கட்டமைத்து வைத்திருக்கிறது இந்த சமூகம்.
பெண் பிள்ளை ஒன்று பாலின மாற்றத்தை சந்திப்பதை “பூப்புனித நீராட்டு விழா” என்று கொண்டாடுகிறார்கள். சிவாஜி படத்தில சாலமன் பாப்பையா சொன்ன மாதிரி, “எங்க வீட்டில பொண்ணிருக்கு” எண்டு சொல்லத்தானா இந்த சடங்கு? பாவம் அந்த பிள்ளையும், தனக்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் வீடியோக்காரன் சொல்வதற்கு எல்லாம் திரும்பி திரும்பி போஸ் கொடுப்பது எத்தகையதொரு அவலம்.
பாலின மாற்றம் இயற்கை என்பதை ஏன் யாரும் தங்கள் பிள்ளைகளுக்குப் புரிய வைப்பதில்லை. அதனை ஒரு போகப்பொருள் போலவும், தவறு செய்யத் தூண்டுவது போலவும் ஏன் கற்பிக்கின்றார்கள்?
இன்று சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களும், கற்பழிப்புகளும், நடப்பதற்கான காரணம் ஒழுங்கற்ற அடிப்படை பாலியல் கல்வி எம் சமூகத்தினால் வழங்கப்படாமையினாலேயே ஆகும். அண்ணன், தங்கை கைகளை கோர்த்த படி சென்றாலே “கூ” என்று கத்தும் தெருவோர நாய்களை உருவாக்கியதும் இந்த சமுகம் தான்.
9ஆம் வகுப்பு சுகாதார புத்தகத்தில் பாலியல் கல்வி இருக்கிறது. ஆண் – பெண் என்பது என்ன? எது பாலியல்? அடிப்படை பாலியல் தெளிவாக கூறப்பட்டு இருக்கிறது, ஆனால், பிரச்சினை என்ன என்றால், வகுப்பில் அந்தப் பக்கங்களை எந்த ஆசிரிய பெருந்தகைகளும் திறப்பதே இல்லை. ஆண் பிள்ளைகள் ஒரு பக்கமும், பெண் பிள்ளைகள் ஒரு பக்கமும் இரகசியமாக அந்தப் பக்கங்களை புரட்டிப் பார்த்து தமக்குள் வெட்கப்பட்டு கேலியாக ஒருவருக்கு ஒருவர் பார்த்து சத்தமின்றி சிரித்து கொள்கிறார்கள்.
இதைப் படிக்கும் அம்மாக்கள், அப்பாக்கள் அல்லது ஆசிரியளில் யாராவது என் பிள்ளைக்கு பாலியல் பற்றி தெளிவுபடுத்தி இருக்கிறேன் என்று கையைத் தூக்குங்கள் பார்க்கலாம்.
எப்போது உங்கள் கைகள் உயரும் என்று என் பேனாவும் இந்த சமூகமும் காத்திருகின்றது.
பின் கதை – 5
எனினும், இறுதிப்போரில் ஷெல் வீழ்ந்து இறந்து போன என் அபியின் வலது கை இனி மீளாது என்ற யதார்த்தத்தை, வானில் விமானம் ஏதும் சத்தமிட்டால் கூட நடுங்கும் என் கை புரிந்து கொள்வதாய் இல்லை.
“நீர் வழிப்படும் புனை போல் ஆருயிர் முறை வழிப்படும்”
கணியன் பூங்குன்றன் (புறநானூறு)
ப்ரதீப் குணரட்ணம்