1993ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் திகதி சனிக்கிழமை காலை 7.20 மணியளவில் யாழ்ப்பாணம் குருநகரில் உள்ள புனித ஜேம்ஸ் கத்தோலிக்க தேவாலயத்தின் மீது விமானப்படைக்குச் சொந்தமான விமானத்தில் இருந்து இரண்டு குண்டுகள் வீசப்பட்டன. இத்தாக்குதலின்போது ஒன்பது பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு, பலர் காயமடைந்தனர். இத்தாக்குதல் காரணமாக தேவாலயம் மற்றும் அதன் அருகில் இருந்த கட்டடங்கள் கடுமையாக சேதமடைந்தன. குறித்த தினத்தன்று காலை, புனித ஜேம்ஸ் தேவாலயத்தில் நற்கருணை வழிபாடு நடைபெறவில்லை. அதற்கருகிலிருந்த ஒரு சிறிய தேவாலயத்திலேயே புனித நற்கருணை ஆராதனை நடைபெற்றது. புனித ஜேம்ஸ் தேவாலயத்தில் அவ்வழிபாடு இடம்பெற்றிருந்தால் இன்னும் பலர் கொல்லப்பட்டும் காயமடைந்திருக்கவும் கூடும்.

தேவாலயத்தில் இருந்தவர்களில் சிலர் பிரார்த்தனையில் ஈடுபடவந்தவர்கள். ஏனையவர்கள் அன்று வானில் பறந்து திரிந்த இலங்கை விமானப்படை விமானங்கள் குண்டு வீசக்கூடும் என அஞ்சி தேவாலயத்தில் சரண் புகுந்தவர்கள். அந்த தேவாலயம் அவர்களுக்குப் பாதுகாப்பான இடமாக அமையும் என நம்பி அவர்கள் அங்கு வந்தார்கள். ஆனால், அவர்கள் நினைத்தது போல பாதுகாப்பானதாக இருக்கவில்லை.

கத்தோலிக்க பாதிரியாராக அபிஷேகம் பெற இருந்த ஒருவர் சம்பவத்தின் போது பாதிரியார் இல்லத்தில் இருந்ததை நினைவு கூர்ந்தார். விமானம் ஒன்று தலைக்கு மேல் பறக்கும் சத்தத்தை அவர் கேட்டு குடியிருப்பை விட்டு வெளியேறி தண்ணீர் தொட்டிக்கு அருகில் தஞ்சம் புகுந்தார். அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. தேவாலயத்தின் சமையல்காரரும் அந்நேரத்தில் பாதிரியாராக அபிஷேகம் பெற இருந்தவருடன் இருந்தார். தாக்குதலிலிருந்து தஞ்சம் பெற அவர் தேவாலயத்திற்குள் விரைந்தார். இத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் அவரும் ஒருவர்.

தேவாலயத்தின் பிரதான ஞாயிறு பாடசாலை ஆசிரியரும் இத்தாக்குதலில் கொல்லப்பட்டார். ஒரு பெண்ணின் உடல், தாக்குதல் காரணமாக சிதறியது. குறைந்தது ஒரு குழந்தை உயிரிழந்தது. சபை பாதிரியார் மற்றும் சபையின் செயலாளரால் கையெழுத்திடப்பட்ட கடிதத்தில், இருவர் உயிரோடு தீக்கிரையாகினர் என்றும், ஏனையோர் கட்டட இடிபாடுகளில் சிக்கி நசுங்கி உயிரிழந்தார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தாக்குதலில் உயிரிழந்த ஒரு பெண், அவர் அணிந்திருந்த நகைகள் மற்றும் அவர் வீட்டை விட்டு வெளியேறும் முன் கணவன் கொடுத்த ரூ. 35 அவரது கைக்குட்டைக்குள் இருந்ததைக் கொண்டு அடையாளம் காணப்பட்டார். கொல்லப்பட்டவர்களின் உடல் உறுப்புக்கள் சிதறிக் கிடந்தன. இந்த உடல் உறுப்புக்கள் மற்றும் இடிபாடுகளின் கீழ் இறந்தவர்கள் ஒரு பிரேதப்பெட்டியில் வைத்து புதைக்கப்பட்டனர். இத்தாக்குதலில் உயிர்பிழைத்த ஒருவர் தனது அனுபவத்தைப் பகிர்கையில், இத்தாக்குதல் இடம்பெற்றதன் பின்னர் தாக்குதல் தொடர்பான கனவுகள் பல நாட்களாக தோன்றியதாக தெரிவித்தார். இதன் காரணமாக அவர் மருத்துவ ஆலோசனை பெறவேண்டி இருந்ததாகவும் அவர் கூறினார். ஆலயத்தின் உலோகக் கூடாரம் மற்றும் புனித புரவலன்களும் இத்தாக்குதல் காரணமாக சிதறிக்கிடந்தன. தேவாலயத்தின் மேற்கூரை, மின்கம்பங்கள் மற்றும் சுவர்கள் இடிந்து விழுந்தன. பாதிரியாரின் குடியிருப்பு, தேவாலய சபைக் கூடம் மற்றும் அருகிலுள்ள கட்டடங்களும் சேதமடைந்தன. வீசப்பட்ட வெடிகுண்டின் சக்தி அதிகமாயிருந்த காரணத்தினால், ஆலயக்கதவு ஒன்றின் ‘கீல்’ ஒரு மரத்தின் மேல் வீசப்பட்டு இருந்தது.

குருநகரில் உள்ள கத்தோலிக்கர்களின் தோற்றம் சுமார் 400 ஆண்டுகளுக்கு (1624ஆம் ஆண்டு வரை) முன்னர் பதியப்பட்டதோடு, 1861ஆம் ஆண்டு கட்டப்பட்ட புனித ஜேம்ஸ் தேவாலயம் யாழ்ப்பாணத்தில் உள்ள பழமையான தேவாலயங்களில் ஒன்றாகும். 1993ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் இருந்த மிகப்பெரிய தேவாலயங்களில் இதுவும் ஒன்றாக இருந்தபடியினால், வானிலிருந்து எளிதாக அடையாளம் காணப்படக்கூடிய ஒரு தேவாலயமாக இருந்திருக்கும். இந்த ஆலயத்தைச் சூழவுள்ள பகுதியில் தீவிரவாதிகளின் முகாம்கள் இருக்கவில்லை என்று  பாதிரியார் மற்றும் திருச்சபை செயலாளரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. தேவாலயங்கள் மற்றும் கோவில்களில் தஞ்சம் அடையுமாறு இலங்கை அரசாங்கம் பலமுறை மக்களைக் கேட்டுக்கொண்டதாகவும், அதன்பின் அதன் ஆயுதப்படைகள் இந்தக் கட்டடங்கள் மீது குண்டுகளை வீசி மக்களைக் கொன்று குவித்ததாகவும் அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேவாலய குண்டுதாக்குதலுக்கு முன்னரும் பின்னரும்

தேவாலயத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலுக்கு முன்னரும், அதன் பின்னரும், தொடர் குண்டுத்தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. குறிப்பாக, 1993ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12ஆம் திகதி, யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் (கச்சேரி) குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி, மாவட்டச் செயலாளரும் (அரசாங்க அதிபர்) காயமடைந்தார். தேவாலய குண்டுதாக்குதல் இடம்பெற்ற அதேநாள் மாலை, கொக்குவில் நந்தவில் அம்மன் இந்து ஆலயம் மீது குண்டுத்தாக்குல் இடம்பெற்றது. அத்தோடு, மறுநாள் 1993ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் திகதி அன்று வரணியில் உள்ள வைரவர் இந்து ஆலயம் மீதும் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றது. இத்தாக்குதல் காரணமாக இக்கோவில் முற்றாக அழிக்கப்பட்டது. பலர் காயமடைந்துள்ளதுடன், அருகில் உள்ள பல வீடுகளும் சேதமடைந்துள்ளன. தேவாலய குண்டுதாக்குதல் இடம்பெற்று மறுநாள், 1993ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் திகதி, வைத்தியசாலை உயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ள யாழ். பொது வைத்தியசாலை நுழைவாயிலில் இருந்து 50 மீற்றருக்குள் குண்டுகள் வீசப்பட்டன. 1993ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15ஆம் திகதி கிளிநொச்சி மற்றும் முள்ளியவளை வைத்தியசாலைகள் மீது குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

1993ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் திகதி உள்ளூர் மக்களால் தேவாலயத்தில் இருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ICRC) அலுவலகம் மற்றும் மாவட்டச் செயலகம் வரை மௌனப் போராட்ட பேரணி ஒன்று நடாத்தப்பட்டது. இப்பேரணியில் பங்குபற்றிய சிலர் தங்கள் வாயை கருப்புத் துணியால் மூடிக்கொண்டு பதாகைகளை ஏந்தியிருந்தனர் என அதில் பங்கேற்ற ஒருவர் நினைவுகூர்ந்தார். ஆர்ப்பாட்டம் நடைபெற்ற அன்று மாலை தேவாலயத்திற்கு அருகிலுள்ள பகுதிகள் மீது மீண்டும் வான்வழி தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இத்தாக்குதல்களில் குறைந்தது 8 பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு மேலும் பலர் காயமடைந்தனர். இத்தாக்குதல்களின்போது பல கடைகளும் சேதமடைந்தன. குறித்த பேரணி நடைபெற்ற பின்னர் டிசம்பர் 3ஆம் திகதி மாலை தனது வீட்டில் ஷெல் விழுந்ததாக தேவாலயத் தலைவர் ஒருவர் கூறினார்.

1993ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் திகதி கொழும்பு கத்தோலிக்க பேராயம் வெளியிட்ட சிங்கள மற்றும் ஆங்கில வார இதழ்களான ‘ஞானார்த்த பிரதீபய’ மற்றும் ‘மெசஞ்சர்’ ஆகியவை இத்தாக்குதல்கள் பற்றி செய்திகளை வெளியிட்டிருந்தன. மேலும், இத்தாக்குதல் தொடர்பாக கருத்து தெரிவித்த அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், இது தவறுதலாக மேற்கொள்ளப்பட்ட துரதிர்ஷ்டவசமான சம்பவம் எனக் கூறியதாக இரு பத்திரிகைகளும் தெரிவித்தன. எனினும், யாழ்ப்பாண கத்தோலிக்க பேராயர் அப்போதைய ஜனாதிபதி டி.பி. விஜேதுங்கவுக்கு எழுதிய கடிதத்தில், இந்தக் குண்டுவெடிப்புக்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இலங்கையின் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை இந்த விடயத்தை அரசாங்கத்திடம் எடுத்துச் சொன்னதாகவோ அல்லது அது பற்றி கருத்து தெரிவித்ததாகவோ எந்த அறிக்கையும் என்னால் காண முடியவில்லை.

சேதத்துக்குள்ளான தேவாலயத்தை மீண்டும் கட்டியெழுப்ப தேவாலய சமூகம் யாவரும் ஒன்று கூடி, “புனித. ஜேம்ஸ் தேவாலய புனரமைப்பு சபை”யை தாபித்தனர். இதில் யாழ்ப்பாண கத்தோலிக்க ஆயரும் அங்கத்தவராக இருந்தார். இது தொடர்பான கூட்டங்கள் மற்றும் கடிதப் பரிமாற்றங்களின் சில குறிப்புகள் கிடைக்கப்பெற்றன. யாழ்ப்பாணத்தில் அப்போது நிலவிய போர் மற்றும் பதற்ற சூழ்நிலைகள் காரணமாக, இலங்கை அரசாங்கத்தால் கட்டுமானப் பொருட்கள் உட்பட பல பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக தேவாலயத்தை மீண்டும் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இப்பணிகளுக்காக மணல் கொண்டுவருவதற்குக் கூட அரசாங்க அதிபரின் அனுமதி பெறவேண்டிய நிலை காணப்பட்டது. 1993 முதல் 2002 வரை ஜனாதிபதி, புனர்நிர்மானம், புனர்வாழ்வு மற்றும் சமூகநல அமைச்சு, வடக்கின் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அதிகாரசபை (RRAN) மற்றும் யாழ்ப்பாண அரசாங்க அதிபர் ஆகியோருக்கு இடையில் கடிதங்கள் மூலமாக பல தடவைகள் தொடர்புகள் மேற்கொள்ளப்பட்டன. 2000ஆம் ஆண்டு பெப்ரவரி 14ஆம் திகதி வரை, திருச்சபை மக்கள் மற்றும் உபயதாரர்களின் பங்களிப்புகள் மூலம் ரூ. 3,286,240 பெறப்பட்டதன் விளைவாக தேவாலயத்தின் பிரதான பிரிவின் தூண்கள், சட்டங்கள், கூரை மற்றும் சுவர்கள் ஆகியவை பழுதுபார்க்கப்பட்டு திருத்தப்பட்டன. மேலும், தேவாலய அங்கத்தவர்கள் சீமெந்து, மணல் மற்றும் பிற கட்டுமானப் பொருட்களையும் வழங்கி உதவினார். தேவாலயத் தொடர்பாடல் ஆவணங்களின்படி, 1994ஆம் ஆண்டு பெப்ரவரி 6 இல், தேவாலயத்தைத் திருத்துவதற்காக யாழ். பொறியியலாளர் திணைக்களம் ரூ. 9,078,000 தொகையினை மதிப்பீடு செய்தது. எனினும், ஜனவரி 12, 2002 வரை, இராணுவம் உட்பட அரசால் ரூ, 2,350,000 மட்டுமே வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நீதி மற்றும் நினைவுச்சின்னங்கள்

தேவாலயத்தின் பழுதுபார்க்கும் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. இத்தேவாலயத்தின் வயதான அங்கத்தவர்கள், திருத்த வேலைகளின் பின்னர் தேவாலயம் அதே அளவு, வடிவமைப்பு போன்றவற்றைத் தக்க வைத்துக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். தேவாலயம் ஆரம்பிக்கப்பட்ட 1624 முதல் 2013 வரை “குருநகர் தேவாலயத்தின் அடையாளங்கள்” பட்டியலிடப்பட்ட பலகையில், 1993இல் “தேவாலயத்தின் மீதான வான்வழி தாக்குதல் – 9 பேர் கொல்லப்பட்டார்கள்” என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. 1986ஆம் ஆண்டு 31 குருநகர் மீனவர்கள் கடலில் படுகொலை செய்யப்பட்டதையும் (ஊடக அறிக்கைகள் மற்றும் உள்ளூர் மக்கள் கடற்படையைக் குற்றம்சாட்டுவது) மற்றும் 1995ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து மக்கள் வெளியேறியதையும் இந்தச் சின்னம் குறிப்பிடுகிறது. தேவாலயத்தில் வெடிகுண்டு ஒன்று விழுந்த இடத்தில், “Honour for the Dead, Warning to the Living, Temple for Justice” என்ற வாசகங்களுடன் ஒரு நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. “தலைமுறை தலைமுறையாய் இடிந்துகிடந்த பாழான பட்டணங்களைப் புதிதாய்க்கட்டுவார்கள். கர்த்தராகிய நான் நீதியை நேசிக்கிறேன்” என்ற வேதாகம வாக்கியம் இந்த நினைவுச்சின்னத்தின் மேல் கூரையில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் ஆண்டுதோறும் நவம்பர் 13ஆம் தேதி நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்படுவதுடன், இந்தத் துயரச் சம்பவம் நடந்து 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டும் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

என் அறிவிற்கு எட்டிய வரையில், போரின் போது ஒரு தேவாலயத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட முதலாவது பெரிய தாக்குதல் இது. இதனைத் தொடர்ந்து யாழ். மாவட்டத்தில் உள்ள நவாலி மற்றும் அல்லைப்பிட்டி தேவாலயங்கள் மற்றும் மன்னார் மாவட்டத்தில் மடு தேவாலயம் மற்றும் பேசாலை தேவாலயங்கள் போன்ற தேவாலயங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

வழங்கப்பட்ட இறப்பு சான்றிதழ்களில் இறப்புக்கான காரணம் “வான்வழி குண்டுவீச்சு” என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இத்தாக்குதலில் கொல்லப்பட்ட தாய் ஒருவரின் குழந்தைகளுக்கு தலா ரூ. 10,000 வழங்கப்பட்டுள்ளது. எனினும், இறந்தவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் வழங்கப்பட்ட இழப்பீடு பற்றி அதிக தகவல்கள் கிடைக்கவில்லை. தேவாலயத்தின் மீது இரண்டு குண்டுகளை வீசிய விமானப்படை விமானத்தில் இருந்தவர்கள் யார், யார் உத்தரவு பிறப்பித்தது போன்றவற்றைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமான விடயமல்ல. தேவாலயத்தில் நான் இருந்தபோது, இத்தாக்குதலுக்குப் பொறுப்பானவர்களைப் பொறுப்புக் கூறுவதற்கு ஏதேனும் விசாரணைகள் மற்றும் முயற்சிகள் நடந்ததா என்று கேட்டேன். இதை நான் கேட்டபோது இருவரும் என் முகத்தைப் பார்த்து சிரித்தனர். இந்தப் படுகொலைக்கு விமானப்படைதான் காரணம் என்பதற்கு ஏராளமான சான்றுகள் மற்றும் ஒப்புதல்கள் இருந்தபோதிலும், விசாரணைகள், வழக்குகள், தண்டனைகள் எதுவும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இது மிகவும் தாமதமான ஒப்புக்கொள்ளலாக இருந்தாலும், அர்த்தமுள்ள ஒப்புதல், மன்னிப்பு, இழப்பீடு மற்றும் பொறுப்பானவர்களை சட்டபூர்வமாக பொறுப்பேற்க வைப்பதற்கு காலம் தள்ளிப்போகவில்லை.

ஆதாரங்கள்: புனித ஜேம்ஸ் தேவாலய காப்பகங்கள், 1993ஆம் ஆண்டுக்கான ஊடக அறிக்கைகள், உயிர் தப்பியவர்களின் சாட்சியங்கள், நேரில் கண்ட சாட்சிகள், பாதிக்கப்பட்ட குடும்பங்கள், கத்தோலிக்க பாதிரியார்கள் மற்றும் தேவாலயப் பணியாளர்கள்

ருக்கி பெர்னாண்டோ