பட மூலம், REUTERS/Dinuka Liyanawatte, thinkglobalhealth

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குடெரெஸ் (Antonio Guterres) கூறுகிறார், இரண்டாம் உலகயுத்தத்தைத் தொடர்ந்து ஐ.நா. உருவாக்கப்பட்டதன் பின்னர் எதிர்நோக்கும் மாபெரும் நெருக்கடி இதுதான் என்று. இதற்கான காரணம், இது ஒரு உலகளாவிய மருத்துவ  நெருக்கடியாக இருக்கும் அதேநேரம் உலகப்பொருளாதாரத்திலும் ஒரு பெரும் நெருக்கடியைக் கொண்டுவரப்போகிறது என்பதுதான். இந்த மிகப்பெரும் தொற்றுநோயின் தாக்கத்தால் எத்தனை இலட்சம் மக்களுக்கு இழப்பு வரும் என்பதை நாம் தற்போது கூறமுடியாவிட்டாலும் அடுத்த இரு வருட காலத்தில் ஒரு பெரும் பொருளாதார வீழ்ச்சியைக் கொண்டுவரும் என்பதில் எதுவித சந்தேகமுமில்லை. மேலும் பூலோக அரசியல் பொருளாதாரக் கட்டமைப்பில் மாபெரும் மாற்றங்களைக் கொண்டுவரும் ஒரு காலமாகவும் இது அமைகிறது.

இந்தப் பொருளாதார நெருக்கடியை பொறுத்தவரை முதலில் பொருட்கள் வழங்குவதில் (supply) பெருமளவு குழப்பத்தைக் கொண்டு வந்துள்ளது. குறிப்பாக ஊரடங்குச்சட்டம், மக்களுடைய நடமாட்டத்தை குறைத்தல், கப்பல் விமானப்போக்குவரத்தின் கட்டுப்பாடு போன்ற நோய்பரவும் வேகத்தைக் கட்டுப்படுத்தும் முறைகளால் பெருமளவில் உற்பத்தி குறைவடைந்துள்ளது, மறுபக்கத்தில் கேள்வியும் (demand) மிக வேகமாக குறைந்து வருகிறது. கேள்வியைப் பொறுத்தவரையில், உற்பத்தி குறையும் பொழுது மூலப்பொருட்களுக்கான கேள்வி குறைகிறது; மக்கள் நடமாட்டம் குறையும் பொழுது நாளாந்த நுகர்ச்சி குறைகிறது; மேலும் மக்கள் வேலைகளில் இருந்து நீக்கப்பட்டு வருமானம் குறையும் பொழுது ஒட்டுமொத்தமாக கேள்வி பெருமளவில் குறைகிறது.

ஆகவே, கடந்த தசாப்தங்களில் வந்த உலகப்பொருளாதார நெருக்கடிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது இது விசேட தன்மைகளைக் கொண்ட இரட்டை நெருக்கடியாக அமைகிறது. அதாவது கேள்வி, நிரம்பல் இரண்டும் குறைவடையும் ஒரு நெருக்கடியாகவும், மேலதிகமாக இவை ஒன்றை ஒன்று பாதிக்கும் பின்னூட்டத் தாக்கத்தைக் கொண்டதாகவும் இருப்பதால் ஒரு பெரும் பொருளாதார வீழ்ச்சியை உலகெங்கும் உருவாக்கும். குறிப்பாக இந்தப் பொருளாதார நெருக்கடியின் உடனடித் தாக்கத்தை எடுத்துப்பார்க்கும் போது கடந்த தசாப்தங்களில் காணாத உலக பங்குச்சந்தைகளின் வீழ்ச்சியைக் காண்கிறோம். எண்ணெயின் விலை பெருமளவில் வீழ்ச்சியடைந்துள்ள அதேநேரத்தில் உலகப்பொருளாதாரத்தின் நிதி ஸ்திரத்தின் மிக முக்கிய  எடுதுகோளாக அமையும் தங்கத்தின் விலை பல ஆண்டுகளிற்கு பின் தற்போது உச்சக்கட்ட நிலையில் உள்ளது.

இந்தப் பொருளாதார நெருக்கடி அபிவிருத்தியடையாத நாடுகள், உழைக்கும் மக்கள் மற்றும் வறுமையில் இருக்கும் மக்களினுடைய பொருளாதாரத்தின் மீதும் எதிர்மாறான தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக உலகப் பொருளாதாரத்தை எடுத்துப் பார்க்கும் பொழுது நாளாந்த தேவைக்கான உணவுப் பொருட்கள் கூட வெவ்வேறு நாடுகளில் உற்பத்தி செய்யப்படுவதால் ஏற்றுமதி இறக்குமதிப் பொருளாதாரத் தடைகள் ஏற்படும் பொழுது மக்களுடைய உணவுப் பாதுகாப்பையும் பாதிக்கும்.

நவதாரளவாத உலகமயமாக்கல்

எந்த ஒரு நெருக்கடியும், நிலைத்திருக்கும் அரசியல் பொருளாதாரக் கட்டமைப்பைப் பொறுத்தே அதன் விளைவுகள் இருக்கும். இங்கு கடந்த நான்கு தசாப்தங்களாக முன்வைக்கப்பட்ட நவதாராளவாத உலகமயமாக்கல் கொள்கைகள் ஊடாக உருவாக்கப்பட்டிருக்கும் பொருளாதாரம் என்பது வர்த்தக தாராளமயமாக்கத்தின் அடிப்படையில் நாடுகளுக்கிடையிலான உற்பத்தி மற்றும் நுகர்ச்சி உலக சந்தையால் தீர்மானிக்கப்படுகிறது.  இவ்வாறான கொள்கைகள் ஏற்கனவே பல்நாட்டுக் கம்பனிகளின் இலாபத்தை அதிகரிக்கும் அதேநேரம் நாடுகள் மத்தியிலும் மற்றும் மக்கள் மத்தியிலும் இருக்கும் ஏற்றத்தாழ்வை அதிகரித்திருந்தது.

இவ்வாறான பொருளாதார சூழலின் மத்தியில் இந்த கொவிட்-19 அனர்த்தத்தால் ஏற்படும் பொருளாதார நெருக்கடி மேலதிகமான குழப்பங்களை கொண்டுவருவதற்கான வாய்ப்புகள் உண்டு. அதாவது ஒரு தன்னிறைவு பொருளாதாரம் இருக்குமாயின் நெருக்கடியின் தாக்கம் ஓரளவு குறைவாக இருந்திருக்கும். இந்த நெருக்கடியின் மத்தியில் உலகமயமாக்கல் கொள்கைகளை உள்வாங்கிய நாடுகளும் கூட தங்கள் எல்லைகளைப் பலப்படுத்தி விமானநிலையங்கள் மற்றும் துறைமுகங்களை மூடி மக்கள் நடமாட்டம் மற்றும் நாடுகளுக்கிடையிலான பொருட்களின் பரிவர்தனை என்பவற்றை கட்டுப்படுத்தி வைத்துள்ளன. உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தில் ஒரு பொருளினுடைய (value chain) உற்பத்தி பொருளாதார முறை இந்த நெருக்கடியுடன் பெருமளவில் குழப்பமடைந்துள்ளது.

அதேபோல் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் கூட உலகத்தின் பல இடங்களில் இருந்துதான் இறக்குமதி செய்யவேண்டியிருக்கிறது. உதாரணமாக கோதுமை மாவு, தானியங்கள், பாற்பொருட்கள் போன்ற உணவுப்பொருட்களைக்கூட அந்தந்த நாடுகள் பதுக்கி வைப்பதனால் எதிர்வரும் மாதங்களில் அத்தியவசியப்பொருட்களுக்கான விலை அதிகரிப்பு அல்லது தட்டுப்பாடு போன்றன ஏற்பட்டு உணவுப் பாதுகாப்புப் பிரச்சினையையும் கொண்டுவரலாம்.

தீர்வுகளும் நீடிக்கும் நெருக்கடியும்

வல்லரசுகள் மற்றும் உலகத்தலைவர்கள் எல்லோரும் தற்போது இந்த நெருக்கடியின் தாக்கத்தை விளங்கிக்கொண்ட போதும் இதற்கேற்ப பொருளாதாரக் கொள்கைகளை முன்வைப்பதாகத் தெரியவில்லை. உதாரணமாக, இந்த மருத்துவ நெருக்கடியில் மூழ்கிப்போயிருக்கும் அமெரிக்கா, தனது மொத்த தேசிய உற்பத்தியில் 10% இற்கான (2 ரில்லியன் அமெரிக்க டொலர்) திட்டத்தை முன்வைத்த போதும் அதன் பெரும்பங்கு நிதி வங்கித்துறையில் ஏற்பட்ட வீழ்ச்சியை சீர்செய்ய யோசிக்கின்றதே தவிர எதிர்காலத்தில் எவ்வாறு பொருளாதாரத்தை முழுமையாக இயங்கவைக்கக்கூடிய கொள்கைகள் பற்றிய தெளிவு குறைவாகத்தான் இருக்கிறது. இது வெறுமனே நிதி மூலமாக மட்டும் சீர்செய்யக்கூடிய ஒரு  பொருளாதார நெருக்கடியல்ல.

இங்கு சமூக ரீதியாகவும் மக்களைத் திரட்டி பொருளாதாரத்தை இயங்கவைக்கக் கூடிய கொள்கைகள் தேவைப்படுகின்றன.  அதாவது கேள்வி, நிரம்பல் மற்றும் தன்னிறைவு அடிப்படையிலான பொருளாதார மாற்றங்களைக் கொண்டுவரவேண்டிய காலமாக உள்ளது. ஆனால், கடந்த நான்கு தசாப்தங்களாக நவதாராளவாத உலகமயமாக்கலைப் பேணிய சர்வதேச மற்றும் வல்லரசுகளுடைய பொருளாதாரக் கொள்கைகளை முழுமையாக திசைதிருப்புவது என்பது ஒரு பெரும் சவாலாகத்தான் இருக்கப்போகிறது.

இறுதியில் இந்த  உலகப்பொருளாதார நெருக்கடி என்பது உலகமயமாக்கப்பட்ட இலங்கையின் பொருளாதாரத்திலும் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது. அதாவது எமது சுற்றுலாத்துறையிலும் சரி, மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று பணிபுரிபவர்கள் மூலமாக ஈட்டப்படும் வருமானமும் சரி, ஆடை உற்பத்தித்துறையிலும் சரி, தேயிலை உற்பத்தியிலும் சரி இறப்பர், தேங்காய், கடல் உணவுகள் போன்றவற்றின் ஏற்றுமதியிலும் சரி, அன்னிய செலாவணி திரட்டலில் பெரிய பாதிப்பு வரப்போகிறது. கடனில் மூழ்கிப்போயுள்ள எம் நாடு மிக வேகமாக வரும் இந்நெருக்கடிக்கு முகம்கொடுக்க வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.

கலாநிதி அகிலன் கதிர்காமர்
சிரேஷ்ட விரிவுரையாளர்,
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்