பட மூலம், Vox

விரல்கள் என்னும் இந்தக் கவிதை ஜமால் கஷோக்கி அவர்களுக்கு அர்ப்பணம். ஜமால் சௌதி அரேபியாவைச் சேர்ந்த எழுத்தாளர்/ ஊடகவியலாளர். கருத்து/ எழுத்துச் சுதந்திரப் போராளி. துருக்கியிலுள்ள சௌதி அரேபியத் தூதரகத்துள் வைத்துக் கைவிரல்கள் துண்டிக்கப்பட்டுப் பலத்த சித்திரவதையின் பின்னர் ஒக்டோபர் 2, 2018 அன்று கொல்லப்பட்டார். அவருடைய உடல் துண்டாடப்பட்டது எனவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

###

என் சிறு விரலை முதலில் வெட்டினான்

வாள் வீச்சின் வேகத்தில்

வலி தெரியவில்லை

ஒவ்வொருவிரலாக வெட்டி

என் வாய்க்குள் திணித்தபோது

குருதி கொப்பளித்தது

வாயிலும் கையிலும்

மனதிலும்

பிறகு

பல நாட்களாகக் கனவிலும்

குரூர முகமும் வேற்று மொழியும்

படையணித் தலைவன் என்கிற

இறுமாப்பும்

விரலற்ற என் கைகளிலிருந்து

சொட்டும் கண்ணீரில் வளம் பெற

அவன் வெற்றிக் கொடி ஏற்றியபோது

பெருங்குரலில் அலறியது கடற்காகம்

துண்டிக்கப்பட்ட என் விரல்களோ

சிறகுகளாயின.


சேரன்