படம் மூலம், Getty Images

போருக்குப் பின்னரான நல்லிணக்கம் மற்றும் போர்க்குற்ற விசாரணை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தின் பரிந்துரைகளை நிறைவேற்ற இலங்கை அரசுக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் காலம் அவகாசம் கடந்த மார்ச் மாதம் ஐ.நாவால் வழங்கப்பட்டது.

போர்க்குற்றம் தொடர்பாக விசாரிப்பதற்கு சர்வதேச நீதிபதிகள் அடங்கிய கலப்பு நீதிமன்றமொன்றை அமைப்பதற்காக சட்டத்தை நிறைவேற்றுமாறு மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசேன் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

ஐ.நா. மனித உரிமை பேரவையின் 30/1 தீர்மானத்தின் மூலம்  இலங்கை அரசினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆகக்குறைந்த கடப்பாடுகளிலிருந்து கூட தற்போது இலங்கை அரசாங்கம் விலகியிருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. தாமே இணை அனுசரணையாளராக இருந்து நிறைவேற்றிய, ஐ.நா. மனித உரிமை பேரவையின் 30/1 தீர்மானம், குறிப்பாக நிறைவேற்றுப்பந்தி 6 இல் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் (வெளிநாட்டு நீதிபதிகள், வழக்குத் தொடுநர்கள் உள்ளடக்கப்பட வேண்டும்), எந்த வகையிலும் தம்மை கட்டுப்படுத்தாது என இலங்கை அரசாங்கம், இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட மறுநாளிலிருந்தே தொடர்ச்சியாக பலதடவைகள் வெளிப்படுத்தியிருக்கிறது.

தாங்கள் உள்நாட்டு நீதிப் பொறிமுறை ஒன்றின் ஊடாகவே விசாரிக்கவிருப்பதாகவும், அதற்கேற்ற வகையில் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளவிருப்பதாகவும் அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவம் செய்பவர்கள் கூறிவருகிறார்கள்.

இலங்கையின் கட்டமைப்புகள், உண்மையைக் கண்டறிந்து நீதியை வழங்குவதற்கான அரசியல் விருப்பை கொண்டிராதமையால், இலங்கை அரசாங்கத்தின் உள்ளக நிர்வாகக்கட்டுப்பாட்டின் கீழ் அமைகின்ற எந்தவொரு கலப்புப்பொறிமுறையும் எமக்கான நீதியைப் பெற்றுத் தராது என தமிழ் சிவில் சமூக அமைப்பினர் கூறிவருகிறார்கள்.

குறிப்பாக, ஐ.நா. மனித உரிமை பேரவையின் 30/1 தீர்மானம் நிறைவேற்றபபட்ட பின்பு இலங்கை நீதித்துறையால் வழங்கப்பட்ட குமாரபுரம் மற்றும் அமரர் ரவிராஜ் வழக்குகளின் தீர்ப்புகள், இலங்கை நீதித்துறையில் ஆழமாக வேரூன்றியிருக்கின்ற, குறிப்பாக பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்களாக இருக்கும் பட்சத்தில், குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ளும் வழமையை உறுதிப்படுத்துகின்றன என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

போர் முடிவுற்று 8 வருடங்கள் கடந்துள்ள நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவதாகக் கூறிவந்த நல்லாட்சி அரசாங்கம் மஹிந்த பாணியில் பொறுப்புக் கூறல் விடயத்தில் செயற்பட்டுவருகிறது. கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக போர்க்குற்ற விசாரணை தொடர்பாக தெரிவித்து வருகின்ற கருத்துக்களை காலவரிசை (Timeline) ஊடாக கீழே தரப்பட்டுள்ளதன் ஊடாகவும், இங்கு கிளிக் செய்வதன் ஊடாகவும் பார்க்கலாம்.