கடந்த வாரம் வவுனியாவில் தடுமாறும் தமிழ்த் தலைமைகளால் – தளர்வடைகிறார்களா தமிழ் மக்கள்? அடுத்தது என்ன? – என்னும் தலைப்பில் முழுநாள் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. தமிழ்ச் சூழலில் இயங்கிவரும் முன்னணி தமிழ்த் தேசிய கருத்தியலாளர்கள், சிவில் சமூக தலைவர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோர் இதில் பங்குகொண்டிருந்தனர். இந்த நிகழ்வை மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தது. அவர்களின் தவல்களின்படி மேற்படி நிகழ்விற்காக கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்துவரும் நான்கு கட்சிகள் மற்றும் கூட்டமைப்பிற்கு எதிர் நிலையிலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால், இதில் இலங்கை தமிழரசு கட்சி மற்றும் தமிழ்த் தேசிய முன்னணி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் நிகழ்வில் பங்குகொண்டிருக்கவில்லை. முக்கியமாக சம்பந்தன் பங்குகொண்டிருக்கவில்லை. ஆனால், ஏற்பாட்டாளர்களின் தவல்களின்படி, சம்பந்தனுடன் பேசி, அவரது அனுமதி பெறப்பட்ட பின்னர்தான் குறித்த சந்திப்பிற்கான திகதி தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

எனினும், சம்பந்தன் இந்த சந்திப்பை தவிர்த்திருக்கிறார். கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்துவரும் இரண்டு கட்சிகளின் தலைவர்களான சித்தார்த்தன் மற்றும் சுரேஸ் பிறேமச்சந்திரன் ஆகியோர் இதில் பங்குகொண்டு தங்களின் நிலைப்பாடுகளை பகிரங்கப்படுத்தியிருந்தனர். டெலோ சார்பில் அதன் மத்திய குழு உறுப்பினர்கள் பங்குகொண்டிருந்தனர். அதேவேளை, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி இதில் பங்குகொண்டிருந்தார். அவரும் குறித்த சந்திப்பிற்கு அழைக்கப்பட்டிருந்தார். ஒப்பீட்டடிப்படையில், அனைத்து தரப்பினரும் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கானதொரு ஜனநாயக அரங்காக மேற்படி நிகழ்வு அமைந்திருந்தது. இதில் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் அரசியலை முன்நோக்கி நகர்த்துவதற்குப் பயன்படக்கூடியவை அல்ல. தனிப்பிட்ட அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் போது, அது மற்றவர்களை குற்றம் காணுவதாகவே சுருங்கிவிடுகிறது. இவ்வாறான அரங்குகளில் காணப்படும் பலவீனமும் இதுதான்.

இதே அமைப்பு இதற்கு முன்னரும் மன்னாரில் தடம்மாறுகிறதா தமிழ்த் தேசியம் என்னும் தலைப்பில் சந்திப்பொன்றை ஒழுங்கு செய்திருந்தது. அதில் சம்பந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோரும் பங்குகொண்டிருந்தனர். அது அவர்களது ஜனநாயகப் பண்பிற்கு சான்றாக நோக்கப்பட்டது. ஆனால், அவர்கள் அதனைத் தொடர விரும்பவில்லை போலும். ஒருவேளை தங்களை நோக்கி கேள்வி எழுவதை சம்பந்தன் தரப்பினர் தவிர்க்க விரும்பியிருக்கலாம். ஏனெனில், அண்மைக்காலமாக வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், தங்கள் காணிகளை இராணுவத்திடம் இழந்திருப்பவர்கள் தொடர்ந்தும் போராடி வருகின்றனர். இந்த நிலையில் இவ்வாறானதொரு அரங்கத்தை எதிர்கொள்வது தங்களுக்கு மேலும் நெருக்கடிகளை ஏற்படுத்தலாம் என்று சம்பந்தன் கருதியிருக்கலாம். காரணங்கள் எதுவாக இருப்பினும் தலைவர்கள் என்பவர்கள் ஜனநாயக அரங்குகளை எதிர்கொள்ள வேண்டியவர்களாவர். இதில் பங்குகொண்ட தலைவர்களை நோக்கி பல கேள்விகள் எழுப்பப்பட்டன. முக்கியமாக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சித்தார்த்தன் தனது நிலைப்பாடு தொடர்பில் பேசிய போது, அவரை நோக்கி சபையோராலும் ஏனைய அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களாலும் கேள்விகள் தொடுக்கப்பட்டன. ஆனால், சித்தார்த்தன் எவ்வித தடுமாற்றமும் இன்றி தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியிருந்தார்.

அதாவது, சம்பந்தன் தலைமையில் முன்னெடுக்கப்படும் அரசியல் தீர்வு முயற்சிகள் ஒரு முடிவுக்கு வரும் வரையில் தாம் கூட்டமைப்பிலிருந்து வெளியேறப் போவதில்லை. இது தொடர்பில் பலரும் குறுக்கிட்டு அவரை குழப்பமுயன்ற போதிலும் கூட, சித்தார்த்தன் தனது நிலைப்பாட்டிலிருந்து எவ்விதத்திலும் அசையவில்லை. பலரும் கேள்வி எழுப்புகின்றார்களே என்பதற்காக தனது நிலைப்பாடு தொடர்பில் தடுமாறவில்லை. உண்மையில் இந்தப் பண்பு தலைவர்களுக்கு அவசியம். ஒரு நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தால் அந்த நிலைப்பாட்டை எந்தவொரு சபையிலும் நியாயப்படுத்தத் தயங்க வேண்டியதில்லை. உண்மையில் சம்பந்தன், விக்னேஸ்வரன், மாவை சேனாதிராஜா, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இவ்வாறான அரங்குகளில் பங்குகொண்டு, தங்களின் நிலைப்பாடுகளை வெளிப்படுத்த முயற்சிக்க வேண்டும். அத்தோடு, மற்றவர்களின் கேள்விகளை, கருத்துக்களை பொறுமையாக செவிசாய்த்து, அது தொடர்பில் தங்களின் நிலைப்பாடுகளை வெளியிட வேண்டும். இவ்வாறான அரசியல் கலாசாரம் தமிழ்ச் சூழலில் வலுப்பெறும் போதுதான், அரசியல் தொடர்பில் ஒரு ஆரோக்கியமான சூழல் உருவாகும். தலைவர்கள் என்பவர்கள் தங்களது நிலைப்பாட்டில் தெளிவாக இருந்தால் எந்தவொரு சபையை பார்த்தும் அஞ்ச வேண்டியதில்லை. அவ்வாறு சபைகளைப் பார்த்து சில தலைவர்கள் அச்சம் கொள்கிறார்கள் என்றால், அவர்களது நிலைப்பாடு தொடர்பில் அவர்களுக்குள்ளேயே குழப்பங்கள் காணப்படுகின்றன என்றுதானே பொருள்.

அரசியலில் பல நிலைப்பாடுகள் இருக்க முடியும். அவ்வாறான நிலைப்பாடுகளே தேர்தல்கள் மூலமாக நிறுத்துப் பார்க்கப்படுகின்றன. அது எத்தகைய நிலைப்பாடுகளாகவும் இருக்க முடியும். அதன் சரி பிழை என்பது காலத்தால்தான் தீர்மானிக்கப்படுகிறது. ஒரு காலத்தில் சரியென்று ஏற்றுக்கொள்ளப்படும் ஒன்று பிற்காலத்தில் பிழை என்றாகிறது – பிழையென்று கருதப்பட்ட ஒன்று பின்னர் சரியென்று ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஒரு கட்சி தேர்தல்களில் ஒரு கட்சி பெறும் முடிவுகளின் அடிப்படையிலேயே, மக்களின் ஆதரவு அளவிடப்படுகிறது. அவ்வாறு மக்களின் ஆதரவை தன்வசப்படுத்திக் கொள்ளும் கட்சியானது, அந்த மக்கள் ஆணைக்கு அமைவாக செயற்படுகின்றதா அல்லது இல்லையா என்று நிறுத்துப் பார்ப்பதே, அந்தச் சமூகத்தில் இயங்கிவரும் அரசியல் சிந்தனையாளர்களதும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களினதும் பிரதான பணியாகும். அவ்வாறானதொரு பணியையே மேற்படி மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியமும் மேற்கொண்டிருந்தது. இது ஒரு ஜனநாயக நெறிமுறை. இதற்குக் கட்டுப்பட வேண்டியது ஜனநாயக தலைவர்களின் கடமையாகும். நாங்கள் எதனையும் செய்வோம். ஆனால், அது தொடர்பில் எவரும் கேள்வியெழுப்ப முடியாதென்று கூறுவது, ஒரு சர்வாதிகாரப் போக்கின் அடையாளமாகும். இது எங்கள் நிலைப்பாடு – நீங்கள் எதிர்த்தாலும் இதுதான் எங்களின் நிலைப்பாடு – என்று பகிரங்கமாக கூறினால் அதுதான் ஒருவர் ஜனநாயகத்தை எதிர்கொள்ளும் பண்புநிலை. மேலும், அது அந்த தலைவரின் ஆளுமைக்கும் சான்றாகும். தொலைக்காட்சிகளில் தோன்றி ஆவேசமாக பேசும் தலைவர்களால் பலதரப்பட்டவர்கள் பங்குகொள்ளும் அரங்குகளில் பங்குகொள்ள முடியவில்லை. இது அவர்களது பலவீனத்தையும் தடுமாற்றத்தையுமே காண்பிக்கின்றது.

ஆனால், சம்பந்தனை பொறுத்தவரையில் தனக்கு சரியென்று கருதும் ஒன்றை செய்துமுடிக்க வேண்டுமென்பதில் அவர் உறுதியாக இருப்பதாகவே தெரிகிறது. தான் நம்பும் ஒன்றை செய்துமுடிப்பதற்கான உரிமை சம்பந்தனுக்குண்டு. அதன் பொருத்தப்பாடு தொடர்பில் கேள்வியெழுப்பும் உரிமை ஏனைய தலைவர்களுக்கும் அரசியல் செயற்பாட்டாளர்களுக்கும் உண்டு. ஆனால், சம்பந்தன் தான் நினைக்கும் ஒன்றை செய்து முடிப்பதில் உறுதியாக இருந்தால், அதனை மக்கள் முன்னால் பகிரங்கமாக முன்வைப்பதற்கு தயங்க வேண்டியதில்லை. அதேவேளை ஏனையவர்களும் தங்களது நிலைப்பாடுதான் சரியென்று கருதினால், அதனை மக்கள் பகிரங்கமாக முன்வைக்க வேண்டும். அதனடிப்படையில் செயற்பட வேண்டும். இந்தக் கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் போது புதிய கட்சிகளைப் பதிவு செய்வதற்கான நேர்காணல்களில் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இதில் சில புதிய தமிழ் கட்சிகளும் அடக்கம். இந்த நிலையில், சம்பந்தன் பிளவுகளை தவிர்க்கும்; வகையில் புத்திசாதுர்யமாக அனைவரையும் அரவணைத்துச் செல்லும் வகையில் முடிவுகளை எடுக்க வேண்டும். தன்னை நோக்கி கேள்வி எழுப்புவர்கள் அனைவரையும் எதிரியாக பார்க்காமல் அவர்களை எவ்வாறு தன்னை நோக்கி ஈர்த்தெடுப்பது என்று சிந்திக்க வேண்டும். அதில் சம்பந்தன் தோல்வியடையும் போது புதிய அரசியல் சக்திகள் தோற்றம் பெறுவதையும் தடுக்க முடியாது.

யதீந்திரா

 

 


சமூக ஊடகங்களில் மாற்றம்:

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : மாற்றம் பேஸ்புக் பக்கம்

ருவிட்டரில் மாற்றத்தைத் பின்தொடர : மாற்றம் ருவிட்டர் தளம்

இன்ஸ்டகிராமில் கருத்து/விருப்பம் தெரிவிக்க : மாற்றம் இன்ஸ்டகிரம்