படம் | petergeoghegan

இங்கு நாங்கள் வட மாகாணசபை பிரதம செயலாளரை மாற்றுவதற்கே படாதபாடு பட்டுக்கொண்டிருக்க, அங்கே பிரித்தானியாவில் அங்கம் வகிக்கின்ற 50 இலட்சம் மக்களைக் கொண்ட ஸ்கொட்லாந்து,  2014ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் தனது நாட்டினை சுதந்திரமான நாடாகப் பிரகடனம் செய்வதா இல்லையா என்கின்ற கேள்வியுடன் ஒரு சர்வஜன வாக்கெடுப்புக்குத் தயாராகிக்கொண்டிருக்கின்றது. 307 வருடகாலமாக தொடர்ந்து வந்த அரசியல் இணைப்பு ஒரு முடிவுக்கு வரும் வாய்ப்பு எழுந்திருக்கின்றது. ஆம் என்று அம்மக்கள் வாக்களித்தார்களாயின் அது பிரித்தானியாவின் ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர உறுப்புரிமையையும் ஐரோப்பிய ஒன்றியத்தில் அதன் அந்தஸ்தையும் பாதிக்கும் அளவிற்குப் போகலாம் என்று அரசியல் அவதானிகள் எதிர்வு கூறுகின்றனர். அந்த அளவுக்கு ஸ்கொட்லாந்து இங்கிலாந்திற்கான பொருளாதார வலுவினையும் அரசியல் பலத்தையும் கொடுத்திருந்திருக்கின்றது. அங்கு இருக்கும் எண்ணெய் வளம் மற்றும் அங்கு நிலைகொண்டிருக்கும் அணுவுந்தி நீர்மூழ்கிக் கப்பற்படையும் இதற்கான முக்கிய காரணங்களாகும்.

ஸ்கொட்லாந்தின் தேசிய இயக்கம் ஈழத் தேசிய இயக்கத்தைப் போன்று என்றும் உக்கிரமாக எழுந்ததில்லை, போராடப்பட்டதும் இல்லை. இன்றும்கூட சுதந்திர ஸ்கொட்லாந்துக்கு ஆதரவான வாக்குகள் 29 வீதத்திலிருந்து 37 வீதம் வரைதான் இருக்கலாம் என்கின்றனர். பிரித்தனியாவுடன் தொடர்ந்து இணைந்திருக்க ஆதரவான வாக்குகளோ 44 வீதமாக இருக்கின்றன. அப்படியிருந்தும்கூட அம்மக்களுக்கு தமது விருப்பைச் சொல்வதற்கான அடிப்படை உரிமை வழங்கப்பட்டிருக்கின்றது. இப்படியொரு நாகரீகமான அரசியல் முறைவழியைப் பார்ப்பதே மனதுக்கு ஆறுதலான விடயம். அத்துடன், ஸ்கொட்லாந்து தேசிய இயக்கத்தின் வளர்ச்சி பொதுவாக நாம் நாடுகளில் அவதானிப்பதைப் போன்றல்லாது புதுமையான வரலாறாகும்.

இங்கிலாந்தும் ஸ்கொட்லாந்தும் வேறு வேறு நாடுகளாக இருந்து 1707ஆம் ஆண்டுதான் ஸ்கொட்லாந்தின் நாடாளுமன்றம் இங்கிலாந்தின் நாடாளுமன்றத்துடன் ஒன்று சேர்க்கப்பட்டது. அப்போது இங்கிலாந்தின் நாடாளுமன்றத்தில் ஸ்கொட்லாந்துக்கான 71 ஆசனங்கள் ஒதுக்கப்பட்டன. நாடாளுமன்றம் இல்லாதொழிக்கப்பட்டதாயினும், ஸ்கொட்லாந்து தனக்கேயுரிய நாணயப் பெறுமதி, திருச்சபை, சட்டங்களும் நீதித்துறையும், உள்ளுராட்சி மன்ற முறைமைகள், கல்விக் கட்டமைப்புகள் போன்றவற்றைத் தொடர்ந்து பேணி வந்தது. இதனால், ஸ்கொட்ச் என்னும் ஸ்கொட்லாந்தைச் சேர்ந்தவர் என்கின்ற சுய அடையாளம் இக்காலந்தோறும் பேணப்பட்டு வந்தது எனலாம். 18ஆம் நூற்றாண்டிற்குப் பின்னான காலகட்டத்தில் பிரித்தானியாவுடன் இணைந்திருந்தது ஸ்கொட்லாந்திற்கு சாதகமாகத்தான் இருந்தது. அக்காலத்தில் உலகத்தையே ஆண்டது பிரித்தானியா. பிரித்தானிய காலனித்துவ நாடுகளிலெல்லாம் அரச நிர்வாகிகளாகவும், அங்குள்ள தொழில் துறைகளை நடத்துபவர்களாகவும் ஸ்கொட்லாந்தியர்களே இருந்தனர். ஆங்கிலேயர் உலகை ஆண்டனர், ஸ்கொட்லாந்தியர்கள் அதனை நடத்தினர் என்று நகைச்சுவையாக இதனைச் சொல்லுவர். எங்கள் நாட்டிலும் முதன்முதலாகத் தேயிலைத் தோட்டங்களை உருவாக்குவதற்குப் பாடுபட்டவர் ஒரு ஸ்கொட்லாந்தியராகும். அது மட்டுமல்லாது, அக்காலத்தில் இங்கிலாந்துக்கும் ஏனைய காலனித்துவ நாடுகள் அனைத்திற்கும் ஸ்கொட்லாந்து தனது உற்பத்திகளை விற்கக்கூடியதாகவும் இருந்தது. உலக சந்தை இவ்வாறு கிட்டிய காரணத்தினால் உலகிலேயே இரண்டாவது கைத்தொழில் மயப்படுத்தப்பட்ட நாடாக ஸ்கொட்லாந்து அன்று திகழ்ந்தது. இவ்வாறு உலகின் ஆட்சியாளர்களாக இருந்த பெருமையும் தொழில் வளர்ச்சியும் ஒருங்குசேர ஸ்கொட்லாந்தின் தேசிய உணர்வு அடங்கியிருந்தது.

இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின்னர், காலனித்துவ நாடுகள் ஒவ்வொன்றாக சுதந்திரம் பெறவும், அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஒரு பொருளாதார சக்திகளாக உயரவும், ஸ்கொட்லாந்தின் பொருளாதாரம் வீழ்ச்சி காணத் தொடங்கியது. 1970களில் வடகடலில் எண்ணெய் முதன் முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டபோது, இது ஸ்கொட்லாந்தின் எண்ணெய் என்றே அங்குள்ள அரசியல் கட்சிகள், ஸ்கொட்லாந்துத் தேசியக் கட்சி (SNP),  அதனைப் பற்றிப் பெருமையாகப் பேசின. அப்படியிருந்தும் அம்மக்களின் தேசிய உணர்வுகள் கிளர்ந்தெழவில்லை. ஜேம்ஸ் கலகன், தொழிற்கட்சியின் அரசில் பிரதம மந்திரியாகவிருந்த காலத்தில், 1979ஆம் ஆண்டு ஸ்கொட் மக்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களடங்கிய சட்டவாக்க சபையினை அளிப்பதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இவ்வாக்கெடுப்பில் 52.9 விதமானோர் அதிகாரப்பகிர்வுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தும் 40 வீதமான மக்கள் மட்டுமே வாக்கெடுப்பில் கலந்துகொண்டார்கள் என்பதனால் சட்டப்படி அது செயலற்றதாகியது. தொழிற்கட்சி அரசு தன்னை ஏமாற்றிவிட்டது என்கின்ற ஆத்திரத்தில் SNP, தொழிற்கட்சி அரசுக்கு தான் வழங்கிய ஆதரவினை வாபஸ் வாங்கியது. அரசு கவிழவே தொடர்ந்து நடந்த பொதுத்தேர்தல்களில் நாடாளுமன்றத்தில் தான் வைத்திருந்த 11 ஆசனங்களில் 9 ஆசனங்களை SNP இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  ஸ்கொட்லாந்தின் தேசிய இயக்கம் எந்த அளவுக்கு அணைந்திருந்தது என்பதற்கு இது நல்லதொரு உதாரணமாகும்.

மார்கரெட் தச்சரின் கன்சர்வேடிவ் கட்சியின் ஆட்சியே ஸ்கொட்லாந்தின் தேசிய உணர்வுகளை முதன் முதலாகக் கிளாந்துவிட்டது எனலாம். கைத்தொழில் மயப்பட்ட நாடாகையால், தொழிலாளர்களின் நலன் பேணும் பண்பாடு கொண்டிருந்தது ஸ்கொட்லாந்து. அங்கு தொடர்ந்து பிரித்தானியாவின் தொழிற்கட்சியே வெற்றிபெற்றதற்கும் இது ஓர் காரணமாகும். ஆனால், இரும்புப் பெண் மார்கரெட் தச்சரோ தொழிற் சங்கங்களை உடைத்து, தொழிலாளர்களுக்கு அதுவரை கிடைத்து வந்த சமூகப் பாதகாப்பு நலன்புரித் திட்டங்களையெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக இல்லாதொழிக்க ஆரம்பித்தார். கல்விக்கும் சுகாதாரத்துக்கும் ஒதுக்கப்பட்ட நிதிகள் அரைவாசியாகக் குறைந்தன. இவருடைய ஆட்சிக்கு எதிரான குரல்கள் ஸ்கொட்லாந்தில் ஒலிக்க ஆரம்பித்தன. குறிப்பாக, தொழிலாளர்களுக்கான வீடமைப்புத் திட்டங்கள் அமைக்கப்படுவதிலேயே பெரும் முரண்பாடுகள் எழலாயின. ஸ்கொட் சட்டங்களின்படியன்றி பிரித்தானியாவின் சட்டங்களின்படி இத்திட்டங்கள் செயற்படுத்தப்படவே ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்தன. அப்போதைய கன்சர்வேடிவ் அரசு இவற்றை சட்டை செய்யவேயில்லை. தமக்கு ஏற்புடையதல்லாத சட்டங்களுக்கும் கொள்கைத் திட்டங்களுக்கும் தாம் ஏன் தலை சாய்க்க வேண்டும் என்கின்ற கேள்விகளுடன் ஸ்கொட்லாந்தின் தேசிய இயக்கம் தலைதூக்க ஆரம்பித்தது. தனது வரலாற்றிலேயே  முதன் முதலாக SNP மக்கள் ஆதரவைத் திரட்ட ஆரம்பித்தது. ஐரோப்பிய ஒன்றியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்கூட இதற்கு உந்து சக்தியாக இருந்தது. இப்பொழுது இங்கிலாந்துடன் இணைந்திருப்பது அவ்வளவு முக்கியமான காரணியாகத் தென்படவில்லை. மேலும், 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிகளில் ஏற்பட்ட தொழில்துறை மாற்றங்களில் உருவான மென்தொழில்களின் ஆய்வுகள் மற்றும் அபிவிருத்திகள் யாவும் இங்கிலாந்திலேயே நிகழ, அவற்றின் கிளை ஸ்தாபனங்களே ஸ்கொட்லாந்தில் தாபிக்கப்படுகின்றன என்கின்ற குறையும் ஸ்கொட் தேசிய இயக்கத்தின் வளர்ச்சிக்குத் தூபம்போட்டது.

1997ஆம் ஆண்டு தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்தபோது, ஸ்கொட் தேசிய இயக்கத்தினை தீவிரமடையாமல் செய்யும் பொருட்டு காத்திரமான அதிகாரப் பகிர்வுத் திட்டத்தினை வழங்க அது முடிவு செய்தது. சுகாதாரம், கல்வி போன்ற துறைகளில் சுயாதீனமாக இயங்கவும், தனது பொருளாதாரத்திற்குப் பொருத்தமான முறையில் வரிகளை அறவிடவும் அதிகாரங்கள் அடங்கிய நாடாளுமன்றத்தினைத் தாபிப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பு ஸ்கொட்லாந்தில் நடத்தப்பட்டது. ஸ்கொட் நாடாளுமன்றத்திற்கு ஆதரவாக 74 வீதம் மக்கள் வாக்களித்தார்கள். அதன்படி ஸ்கொட்லாந்தின் நாடாளுமன்றம் 1999ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதிலும் தொழிற்கட்சியே முதன்மையான இடம் வகித்தது. இதன் பிறகு பல புதிய சட்டங்கள் அங்கு நிறைவேற்றப்பட்டன. இன்று இங்கிலாந்தின் பல்கலைக்கழகங்களில் கற்பதற்கு தலையை அடகுவைத்த பணம் செலவழிக்க வேண்டிய காலத்தில், ஸ்கொட்லாந்தின் பல்கலைக்கழகங்கள் பல மானிய உதவிகளை பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்குவது இப்புதிய கொள்கைத் திட்டங்களுக்கு ஓர் உதாரணமாகும். 2001ஆம் ஆண்டின் பின்னர் ஈராக் யுத்தத்தைப் பற்றிய விவாதங்கள் ஆரம்பித்தன. டோனி பிளேயரின் தொழிற்கட்சி அரசு, அமெரிக்காவின் அடிவருடியாகச் செயற்பட்டு மக்களின் எதிர்ப்புகளையும் மீறி ஈராக்கிற்குப் படைகளை அனுப்பியது. இதுவும் ஸ்கொட்லாந்தின் வெறுப்பினை இங்கிலாந்திற்கு சம்பாதித்தது எனலாம். 2007ஆம் ஆண்டு நிகழ்ந்த பொதுத்தேர்தல்களில் SNP 47 ஆசனங்களைக்கைப்பற்றி ஸ்கொட்லாந்துப் நாடாளுமன்றத்தின் ஆட்சியைக் கைப்பற்றியது. தொழிற்கட்சியும் 50 வருடங்களாகத் தக்கவைத்திருந்த தனது முதன்மையான இடத்தை இழந்தது. 2011ஆம் ஆண்டு திரும்பவும் SNP ஆட்சியைக் கைப்பற்றியிருக்கின்றது. அதன் முதலமைச்சர் அலெக்ஸ் சமன்ட் 2014ஆம் ஆண்டு தனிநாட்டிற்கான சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுவதன் அடிப்படையிலேயே இத்தேர்தல்களில் போட்டியிட்டார்.

ஸ்கொட்லாந்துடன் ஒப்பிட்டு நோக்கும்போது எமது நிலைமைகளில் பல பொதுத் தன்மைகள் இருப்பதைக் காணலாம். தென்பகுதிக்கு வருகின்ற அபிவிருத்தித் திட்டங்கள் வட கிழக்குப் பகுதிகளுக்கு வருவதில்லை என்பது ஒரு புறம். தென்பகுதியில் வழங்கும் அரசியல் நடைமுறைகளை நாமும் ஏன் தலையில் சுமக்கவேண்டும் என்கின்ற கேள்வியும் இங்கு கூடவே எழுகின்றது. சுதந்திரமடைந்த காலந்தொட்டு சிங்கள மக்களினதும் தமிழ் மக்களினதும் அரசியல் நடவடிக்கைகள் மிக வேறுபட்டனவாகக் காணப்பட்டிருக்கின்றன. சிங்கள பௌத்தவாதத்தின் அடிப்படையிலான சர்வாதிகார அரசு அவர்களுக்குத் தேவையாக இருக்கலாம், ஆனால் அதனை கட்டியாழவேண்டும் என்கின்ற தேவை தமிழ் மக்களுக்குக் கிடையாது. குடும்ப ஆட்சியுடனான ஊழல் மலிந்த ஆட்சி அவர்களுக்குப் பொருத்தமாக இருக்கலாம், ஆனால் அப்படித்தான் நாங்களும் எங்கள் அரசியலைச் செய்ய வேண்டுமென்கின்ற கட்டாயம் இல்லையே. தமிழ்த் தந்தை செல்வநாயகத்தின் மகன் என்கின்ற அடிப்படையிலோ அல்லது ஜி.ஜி பொன்னம்பலத்தின் மகன் என்கின்ற அடிப்படையிலோ கூட வாக்களிக்காதவர்கள் நாம். தகுதியின் அடிப்படையில் வாக்களித்து வந்திருக்கின்றோம். இன்று தென்பகுதி முழுவதுமே இந்த அரசிலிருந்து கிடைக்கக்கூடிய சலுகைகளுக்காக வாக்களித்துக் கொண்டிருக்கும்போது எவ்வளவுதான் கஷ்டங்கள் என்றாலும்கூட உரிமைகளுக்காக வாக்களித்து அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கின்றோம். ஸ்கொட்லாந்து மக்களைப் போலவே நாமும் எமக்குரிய சுயாதீனமான அரசியல் பாதையை வகுக்கும் நாள் எப்போது வருமோ?

அடி என்னடி உலகம், இதில் எத்தனை கலகம்

தினக்குரல் பத்திரிகைக்காக சாந்தி சச்சிதானந்தம் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.