படம் | Selvaraja Rajasegar Photo

இலங்கையில் அமுலிலுள்ள 1951ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க முஸ்லிம் திருமண, விவாகரத்துச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்ற குரல் முன்னரை விட தற்போது வீரியமாக இலங்கையில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

குறிப்பாக இந்தச் சட்டத்தினால் முஸ்லிம் பெண்கள் பாரபட்சமாக நடத்தப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு பெருமளவில் முன்வைக்கப்படுகிறது. இச்சட்டத்தில் காணப்படும் பெண்கள் திருமணம் செய்துகொள்வதற்கான வயதெல்லை, பெண்கள் காதி நீதிபதிகளாக நியமிக்கப்படாமை, திருமணத்தின்போது பெண்களின் விருப்பம் கருத்திற் கொள்ளப்படாமை மற்றும் பலதார மணம் மூலம் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் போன்ற பால்நிலை சமத்துவமற்ற, குறைபாடுகளைக் கொண்ட சட்டம் திருத்தப்படவேண்டும் என்பதில் முஸ்லிம் பெண்களே முன்னின்று செயற்பட்டுவருகிறார்கள்.

இச்சட்டத்தை திருத்தம் செய்வதற்காக கடந்த அரசாங்கங்களினால் 1956, 1984 மற்றும் 1990ஆம் ஆண்டுகளில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்தக் குழுக்கள் ஆக்கபூர்வமாக எதனையும் செய்யவில்லை.

அதன்பின்னர், இச்சட்டத்தை திருத்தம் செய்வதற்கான தேவை முஸ்லிம் சமூகத்திற்குள் எழுந்ததன் காரணமாக 2009ஆம் ஆண்டு நீதியமைச்சராக இருந்த மிலிந்த  மொரகொடவினால் நீதியரசர் சலீம் மர்சூப் தலைமையில் மூன்று முஸ்லிம் பெண்கள் உள்ளடங்கலாக 16 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழு ஆறு மாதங்களுக்குள் குறித்த சட்டத்தை திருத்தம் செய்வதற்கான பரிந்துரைகளை சமர்ப்பித்திருக்க வேண்டியிருந்த போதிலும், பல வருடங்கள் கடந்தும் இன்று வரை முன்வைக்கவில்லை.

இந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் முஸ்லிம் தனியாள் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு அமைச்சரவை உப குழுவொன்றை அமைப்பதற்குத் தீர்மானித்திருப்பதாக அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சரவையின் ஊடகப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அரசாங்கத்தின் முடிவை அழைப்பாகக்​ கருத்திற்கொண்டு பெண் உரிமை செயற்பாட்டாளர்களும், இந்தச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட பெண்களும் சட்டத்திருத்த விடயத்தில் தீவிரமாக செயற்பட ஆரம்பித்திருக்கின்றனர். இந்த நிலையில், அவர்களை இழிவுபடுத்தும் வகையிலும், அச்சுறுத்தும் வகையிலும் சிலர் பொதுவெளியிலும் மறைமுகமாகவும் செயற்பட்டு வருகிறார்கள். இதனால், தாங்கள் உறவினர்களால் கூட ஓரங்கட்டப்படுவதாக தெரிவிக்கிறார்கள். வழமைபோன்று தாங்கள் வாழும் பிரதேசங்களில் நடமாடக்கூட முடியாத நிலையை எதிர்கொள்வதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

இந்த நிலையில் முஸ்லிம் திருமண, விவாகரத்துச் சட்டத்தால் பாதிக்கப்பட்டு நிர்க்கதி நிலைக்கு உள்ளாகியிருக்கும் பெண்களைச் சந்தித்துப் பேச அவர்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்றேன். அவர்களில் எவருமே பேசுவதற்குப் பின்நிற்கவில்லை. ஆனால், தங்களையோ, தாங்கள் வாழும் பிரதேசத்தையோ அடையாளம் காணக்கூடிய வகையில் எதனையும் வெளிப்படுத்த, தெரியப்படுத்த வேண்டாம் என்று என்னைக் கேட்டுக்கொண்டார்கள். அவர்கள் அனைவரும்: சட்டம் திருத்தப்பட வேண்டும், எதிர்காலத்தில் தங்களைப் போன்று வேறு எந்தப் பெண்ணும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர்.

இன்றிலிருந்து தொடர்ந்து வரும் நாட்களில் அவர்களது குரல் ‘மாற்றம்’ தளத்தில் பதிவுசெய்யப்படும்,


செல்வராஜா ராஜசேகர்

 

 

 

###

சமூக ஊடகங்களில் மாற்றம்:

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : மாற்றம் பேஸ்புக் பக்கம்

ருவிட்டரில் மாற்றத்தைத் பின்தொடர : மாற்றம் ருவிட்டர் தளம்

இன்ஸ்டகிராமில் கருத்து/விருப்பம் தெரிவிக்க : மாற்றம் இன்ஸ்டகிரம்