படம் | DBSJeyaraj

இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள்; அரசாங்கம் என்பதையும் தாண்டி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீது அதீத நம்பிக்கையும் விசுவாசமும் வைத்திருப்பதை வவுனியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு எடுத்துக் காட்டியது. வாக்களித்த மக்கள் தங்கள் பிரதிநிதிகளை கேள்வி கேட்கும்போது அதற்குப் பொறுப்பான முறையில் பதில் வழங்க வேண்டியது கடமை. ஆனால், வவுனியாவில் இடம்பெற்ற சந்திப்பில் கேள்விகளுக்கு வழங்கப்பட்ட பதில் நாங்கள் செய்வதை நீங்கள் பார்த்துக் கொண்டிருங்கள் என்ற தொனியில் அமைந்திருந்தது.

ரணில் கிளித்தெறிந்த தீர்வு 

மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஒருவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது 1996ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா கொண்டுவந்த தீர்வுப் பொதியை நாடாளுமன்றத்தில் கிளித்தெறிந்ததை ஞாபகப்படுத்தினார். இனப்பிரச்சினைத் தீர்வில் ரணிலுக்கு உண்மையில் அக்கறை இருந்திருந்தால் அந்தத் தீர்வுப் பொதியை கிளித்தெறிந்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஆகவே, தீர்வுப் பொதியை கிளித்தெறிந்த ரணில் எவ்வாறு தீர்வை முன்வைப்பார் என்றும் அந்த அன்பர் சந்தேகம் வெளியிட்டார்.

இனப்பிரச்சினை விவகாரங்களில் தமிழரசுக் கட்சிக்கு நீண்ட அனுபவம் உண்டு. ஏமாற்றமடைந்த வரலாறுகளை அவர்கள் மறந்துவிடவும் முடியாது. குறிப்பாக சட்டத்தரணி சுமந்திரனைவிட கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு நீண்ட அனுபவம் உண்டு. அஹிம்சைப் போராட்டம் இடம்பெற்ற 30 ஆண்டுகாலத்திலும் அதற்கு அடுத்து 30 ஆண்டுகள் இடம்பெற்ற ஆயுதப் போராட்ட காலத்திலும் அரசியலில் ஈடுபட்டவர். ஆகவே, மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட அந்த அன்பர் தொடுத்த கேள்விக்கு நேர்மையான பதில் ஒன்றை மாவை சேனாதிராஜா வழங்கியிருக்க வேண்டும்.

மக்கள் பிரதிநிதிகளின் உரிமை

ஆனால், கேள்வி கேட்கப்படும்போதே குறுக்கீடுகளும் கையை நீட்டி அச்சுறுத்துகின்ற தொனியிலும் பதில் வழங்கப்பட்டது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அரசாங்கத்தின் மீது அல்லது தனிப்பட்ட முறையில் ஜனாதிபதி, பிரதமர் மீது நம்பிக்கை வைத்திருப்பதில் தவறில்லை. பாதிக்கப்பட்ட சமூகத்தின் விடிவுக்காக எந்த வழியிலேனும் அரசியல் தீர்வு ஒன்றை கொண்டுவர வேண்டும் என்ற நோக்கில் ஒப்பாசாரத்துக்கேனும் நம்பிக்கை, விசுவாசம் என்பதை காண்பித்து செயற்படுவதற்கு மக்கள் பிரதிநிதிகளுக்கு உரிமை உண்டு. அதனை ஒருவகையில் அரசியல் சாணக்கியம், அல்லது இராஜதந்திரம் என்று கூட சொல்லாம்.

ஆனால், வாக்களித்த சாதாரண மக்களின் உணர்வுக்கும் அவர்கள் ஏமாற்றமடைந்த வரலாறுகளை சுட்டிக்காட்டும்போதும் அதனை மக்கள் பிரதிநிதிகள் மறுதலிக்கவோ மறுக்கவோ முடியாது. ஏனெனில், மக்கள் நம்பிக்கை வைத்திருப்பது தாங்கள் வாக்களித்த பிரதிநிதிகளில்தான் என்று சட்ட ஆட்சி பற்றிய எழுதிய அறிஞர் டைசி சொல்கின்றார். 30 ஆண்டுகால போரினால் சகலவழிகளிலும் பாதிக்கப்பட்ட சமூகம் தற்போதுள்ள ஜனநாயக இடைவெளியில் குறைந்தபட்சம் தமிழ் பிரதிநிதிகளைத்தான் நம்பியிருக்கின்றது. நாடாளுமன்ற அரசியலில் தமிழ் மக்களுக்கு 60 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நம்பிக்கை என்பது இல்லாமல் போய்விட்டது.

மக்களின் நம்பிக்கை

ஆனாலும், 2009 ஆண்டு மே மாதம் யுத்தம் நிறைவடைந்ததில் இருந்து அதற்குப் பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் மக்கள் உற்சாகமாக வாக்களித்து வடக்கு – கிழக்கு மாகாணத்தில் இருந்து அதிகப்படியான உறுப்பினர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பினார்கள். விடுதலைப் புலிகளுக்கு பின்னர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தான் தங்கள் அரசியல் தலைமை என்று மக்கள் நம்பினார்கள். குறைந்தபட்சம் வடக்கு – கிழக்கு இணைக்கப்பட்ட சமஸ்டி அரசியல் தீர்வு ஒன்றை மக்கள் எதிர்ப்பார்தார்கள். ஆனால், யுத்தம் அழிக்கப்பட்டு ஏழு ஆண்டுகள் சென்ற நிலையில் எந்த ஒரு சிறிய மாற்றங்களையேனும் காணமுடியவில்லை.

வடக்கு கிழக்கில் நீடித்துள்ள இராணுவ பிரசன்னம் மக்கள் சந்திக்கின்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணம் என ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் ரீட்டா இஷாக் கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியியுள்ளார். அது மாத்திரமல்ல இரகசிய இராணுவ முகாம்கள் தொடர்ந்து செயற்படுவதாகவும் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் தொடர்ந்து விசாரணைகளை எதிர்கொண்டு வருவதாகவும் ஐ.நா பிரதிநிதிகள் கூறியிருக்கின்றனர். இந்த நிலையில், நல்லாட்சி அரசாங்கத்திலும் நம்பிக்கை வைக்க முடியாமல் தங்கள் பிரதிநிதிகளிடம் மக்கள் கேள்வி கேட்பதில் நியாயம் உண்டு.

உறுதியளித்த மக்கள்

வடக்கு கிழக்கில் பாரம்பரிய காணிகளை படையினர் ஆக்கிரமிப்பது, புத்தர் சிலை வைப்பது போன்ற செயற்பாடுகளும் நல்லாட்சி அரசாங்கம் மீதான நம்பிக்கையீனத்தை வெளிப்படுத்தியுள்ளது. இந்த நிலையிலும் பிரதமர் ரணில் விக்கரமசிங்க மீது விசுவாசம் வைத்து மேலும் இரண்டுமாத கால அவகாசத்தை மாவை சேனாதிராஜா, சட்டத்தரணி சுமந்திரன் ஆகியோர் வவுனியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கோரியிருக்கின்றனர். சந்தேகத்தோடும் ஆத்திரத்தோடும் கேள்வி தொடுத்த மக்களும் அந்தக் காலஅவகாசத்தை ஏற்றுக்கொண்டனர்.

ஆனால், புதிய அரசியல் யாப்பில் இனப்பிரச்சினைக்கான தீர்வு இல்லை என்று மக்களுக்கு புரிந்துவிட்டது என்பதைவிட ஏமாற்றப்படப்போகின்றோம் என்பதை சட்டத்தரணி சுமந்திரன் நன்கு உணர்ந்துள்ளார். இதனை அவரின் பேச்சுக்கள் வெளிப்படுத்துகின்றன. புத்தசமயத்துக்கு யாப்பில் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதற்கும் பாயங்கரவாதத் தடைச்சட்டத்திற்குப் பதிலாக உருவாக்கப்பட்டுள்ள புதிய சட்டத்திற்கும் அவர் வெளிப்படுத்தும் எதிர்ப்பு அதனை கோடிட்டு காண்பிக்கின்றது. ஆனால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீது சுமந்திரன் வைத்துள்ள நம்பிக்கை என்பது தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகள், தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றின் அரசியல் செயற்பாடுகளுக்கு எதிரான நோக்கம் கொண்டவை என்றுதான் மக்களில் அநேகமானோர் கருதுகின்றனர்.

நெல்சன் மண்டேலா வழி

ஆகவே, அஹிம்சைப் போராட்டத்தினாலும் ஆயுதப் போராட்டத்தினாலும் அரசியல் உரிமைகளை பெறமுடியாத நிலை ஏற்பட்டு களைத்தப்போயுள்ள தமிழச் சமூகத்தின் மத்தியில், அரசியலில் ஈடுபடுகின்ற மக்கள் பிரதிநிதிகள் சாதாரண கட்சி அரசியல் செயற்பாடுகளில் இருந்து விலகி அரசியல் உரிமையை உறுதிப்படுத்தக்கூடிய ஒருமித்த கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வடக்கு – கிழக்கு மாகாணத்தில் சுதந்திரமாக வாழக்கூடிய ஏற்பாடு ஒன்றைத்தான் மக்கள் கோருகின்றனர். சுவிஸில் உள்ள கன்ரன் அரசியலமைப்பு முறைதான் இனப்பிரச்சினைக்கு தீர்வு என்று சம்பந்தன் கூறுகின்றார்.

அவ்வாறான ஒரு தீர்வைத்தான முதலமைச்சர் விக்னேஸ்வரன் வலியுறுத்துகின்றார். தமிழ் மக்கள் பேரவையும் அவ்வாறுதான் கூறுகின்றது. ஆனால், புதிய அரசியல் யாப்பு அந்த அபிலாஷைகளை கொண்டிருக்கவில்லை என்பதை முன்கூட்டியே மக்கள் அறிந்துள்ளனர். இந்த நிலையில் புதிய யாப்புத் தொடர்பான மக்களின் கேள்விகளும் சந்தேகங்களும் நியாயமானவை என்பதை தமிழரசுக் கட்சி ஏற்கத்தான் வேண்டும். அத்துடன், நெல்சன் மண்டேலாவின் வழியில் போராட்டத்தை நியாப்படுத்த வேண்டும். வரியில்லாத சொகுசு வாகனங்கள், நாடாளுமன்ற கதிரைகள் உரிமைகளைப் பெற்றுத்தராது என்றுதான் மக்கள் கூறுகின்றனர்.

அ. நிக்ஸன்