படம் | TAMIL GUARDIAN

யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பாக எனது கருத்துப் பகிர்வு.

ஒன்று –

தமிழ் அடையாளத்தைப் பாதுகாப்பதற்கு மற்றைய அடையாளங்களுக்கும் அதன் வெளிப்படுத்தல்களிற்கும் இடமளிக்கக் கூடாது என்று நினைப்பது தவறு. இதனைத் தமிழ் தேசியவாத நிலைப்பாட்டில் இருந்து நியாயப்படுத்துவது தமிழ்த் தேசிய விடுதலைச் சிந்தனைக்குச் செய்யும் அநியாயம். தமிழ்த் தேசிய விடுதலை என்பது தமிழ் மக்களின் விடுதலை சம்பந்தப்பட்டது. வடக்கு கிழக்கில் தமிழ் இனத் தனித்துவம், கலாசாரத் தூய்மைவாதம் பற்றியதல்ல. பிற கலாசார வடிவங்களிற்கு பொது வெளியில் இடம்கொடுத்தால் எமக்கு ஒரு குறைவும் ஏற்படாது. அவர்கள் தமது பல்கலைக்கழகங்களில் எமக்கு இடமளிப்பதில்லை, அதனால் நாங்களும் விடக்கூடாது என்பது சிறுபிள்ளை வாதம்.

தனித் தமிழ் பல்கலைக்கழகமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைப் பார்ப்பது தெற்கின் பல்கலைக்கழகங்களை தனிச் சிங்களப் பல்கலைக்கழகங்களாகப் பார்ப்பதற்கு ஒத்த தன்மையானது. அந்தத் தவறை நாம் செய்யக்கூடாது. எமக்கு இழைக்கப்பட்ட அநியாயங்களை நாம் செய்யும் அநியாயங்களுக்கு வக்காலத்து வாங்க அழைக்கக் கூடாது. அது அநியாயங்களுக்கு எதிராக குரல் கொடுப்பதற்கான தார்மீக அடிப்படையின் வலுவைக் குறைக்கும். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு தமிழ் சுயநிர்ணயப் போராட்டத்தில் முக்கிய பங்கு உண்டு. ஆனால், மற்றைய சமூகங்களை விலக்கி வைத்துதான் அந்தப் பங்களிப்பைச் செய்யலாம் என நினைப்பது தவறு. அப்படி நினைப்பது எமது அரசியலின் மீது எமக்கிருக்கும் பாதுகாப்பற்ற, சுய நம்பிக்கையற்ற உணர்வையே வெளிப்படுத்தி நிற்கும்.

இரண்டு –

அதேவேளையில், வடக்கு கிழக்கில் பெரும்பான்மையின அடையாளத் திணிப்பு தொடர்பில் நாம் கரிசனை கொள்வது சரியானதே. அந்தத் திணிப்பு அரச அதிகாரத்தின் ஆதரவில், முயற்சியில் இடம்பெறுவதை அனுமதிக்க முடியாது. அண்மைக் காலத்தில் இத்திணிப்பு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்குள்ளும் விரிவடைந்தமையும் உண்மையே. நடைபெற்ற வன்முறை சம்பவத்திற்கும் அரச அதிகாரத்திற்கும் இடையே நேரடித் தொடர்பு இருந்ததா என்பது ஆராயப்பட வேண்டும். இதுவும் ‘எங்கள் பிரதேசம், எங்கள் பல்கலைக்கழகம்’ என்ற பெரும்பான்மையின விஸ்தரிப்புப் பார்வை நிச்சயமாக எதிர்கொள்ளப்பட வேண்டியதே. இந்த அணுகுமுறையில் கண்டிய நடனம் உள்ளடக்கப்பட வேண்டும் என சிங்கள மாணவர்கள் சிந்தித்திருந்தால் அது முற்றிலும் தவறானது. விஞ்ஞான பீடத்தில் பெரும்பாலானவர்கள் சிங்கள மாணவர்கள்தான். ஆனால், எண்ணிக்கை சார்ந்து யார் பெரியவர்? யார் சிறியவர்? என்ற வகையில் இவ்விடயம் அணுகப்படுவது பெரும்பான்மையின பேரினவாத சிந்தனையின் நீட்சியே.

எனி,

அ. மேற்சொன்னவற்றில் முதலாவதை பேச விரும்பாத ‘தமிழ் தேசியவாதி’களாலும் துன்பம். அதனை மட்டும் பேசும் ‘முற்போக்குவாதி’களாலும் துன்பம்.

ஆ. இரண்டாவதை பற்றி மட்டும் பேசும் ‘தமிழ் தேசியவாதி’களாலும் இரண்டாவதை பற்றி பேச விரும்பாத ‘முற்போக்குவாதி’களாலும் துன்பம்.

இ. இந்தப் பிரச்சினை முளையில் இருக்கும் போதே இரு தரப்பையும் இருத்தி இரு தரப்பாலும் மதிக்கப்படும் ஆசிரியர்களைக் கொண்டு உரையாடியிருக்க வேண்டும். பிரச்சினையை சமாளிப்பதற்கான, ‘நீயும் சரி – நானும் சரி’ வகை உரையாடலில் எந்தப் பயனும் இல்லை. மேற்சொன்ன முதலாவதையும் இரண்டாவதையும் சம காலத்தில் ஒரே களத்தில் முன்வைத்து எமது மாணவ சமூகங்கள் மத்தியில் வெளிப்படையான ஒளிவு மறைவு இல்லாத, சடையல்கள் இல்லாத உரையாடல் ஒன்றை நாம் இன்னும் தொடங்காமல் இருப்பது பல்கலைக்கழக சமூகத்தின் துன்பம். 2009க்குப் பின் சிங்கள, முஸ்லிம் மாணவர்களின் மீள் வருகையைத் தொடர்ந்து ஏற்படக்கூடிய சவால்களை நாம் ஒரு பல்கலைக்கழகமாக எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி எனக்குத் தெரிந்து நாம் இது வரை உரையாடியதில்லை. இனியாவது செய்வோமா?

குமாரவடிவேல் குருபரன்