படம் | Michael Hughes Photographer

 

உழைக்கும் வர்க்கத்தின்

உரிமைக்குரலோ

விண்ணதிர முழங்கும்

வீர நாளாம் மேதினம்…

 

அலைகடலென திரண்டு

அநீதிகளை எதிர்ந்து

அஹிம்சை வழியில் தொழிலாளர் பலம்காட்டும்

ஒற்றுமையின் திருநாளாம்…

 

ஆனாலும், எம்இனமோ

இன்னமும் அடிமைத்தானே

உரிமைகளற்று வாழும்

நாடோடி சமூகம்தானே…

 

இருநூறாண்டுகள் கடந்தும்

இருப்பதற்கு இடமில்லையே

இழப்பதற்கும் உயிரைத்தவிர

இனி எதுவும் இல்லையே…..

 

கொளுத்தும் வெளியிலும்

கொழுந்து மாலை அணிந்து

கம்பீரமாக கோஷமெழுப்பி

போலிபாசம்காட்டும்

ஒருநாள் வேஷம் மட்டும் எதற்கு ஐயா?

உறுதிமொழிகள்தான் காற்றாக பறந்திடுமே….

 

கூட்டு ஒப்பந்தமோ – இன்று கூத்து ஒப்பந்தமாகிட்டதே

ஆயிரம் ரூபா சம்பளமோ அநாதையாகிவிட்டதே….

நிலைமை இப்படியிருந்தும்

நீதிக்காக குரல் எழுப்பி

நீங்கள் கூறப்போகும் செய்திதான் என்ன?

 

ஆட்சிதானே மாறியுள்ளது

ஆவலங்கள் மாறலையே

எம் மக்களின் அழுகுரல்

நல்லாட்சி அரசுக்குகூட இன்னும் கேட்கலையே….

 

வழமைபோல் அல்லாது

வாழ்வை உயர்த்தும் வரலாறுபோற்றும்

மலையகத்துக்கு மாற்றதம் தரும்

ஏற்றம்மிகு நாளாக மேதினம் அமையட்டும்…..

 

சனத்