படம் | cgijaffna

சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவின் 65ஆவது குடியரசு தின வைபவம், வழமைபோல் வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது. அதேபோன்று, இந்திய துணைத் தூதரகங்கள் அமைந்துள்ள யாழ்ப்பாணம், கண்டி மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளிலும் மேற்படி நிகழ்வு வழமைபோல் இடம்பெற்றிருந்தது. கொழும்பு நிகழ்வில் பேசிய இந்தியத் தூதுவர், இலங்கையிலுள்ள அனைத்து தரப்புகளின் கூட்டு அணுமுறையே நேர்மையான நல்லிணக்கத்திற்கும், அரசியல் தீர்வுக்கும் வழிவகுக்கும் என்று குறிப்பிட்டிருக்கின்றார். மேலும் அவர், உறுதிப்பாட்டோடும் பங்குதாரர்கள் என்ற உணர்வோடும், பரபஸ்பர நல்லிணக்கப்பாட்டோடும், இருதரப்புகளும் செயற்பட வேண்டும். இதனையே இந்தியா விரும்புகிறது என்றும் தெரிவித்திருக்கின்றார். இங்கு குறித்துக்கொள்ள வேண்டியதொரு முக்கியமான விடயம், மேற்படி குடியரசு தின வைபவத்தின்போது வழமைக்கு மாறானதொரு விடயமும் அவதானிக்கப்பட்டுள்ளது. அதாவது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியை பிரதிநிதித்துவப்படுத்தும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தவிர்ந்த எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் மேற்படி நிகழ்வில் பங்குகொண்டிருக்கவில்லை.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி இந்நிழ்வில் பங்குகொண்டிருந்தாலும், அவர் தற்போது கூட்டமைப்பின் ஒரு அங்கம் என்று கணிப்பிடக் கூடிய நிலையில் இல்லை. கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் பிறிதொரு கட்சியான புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன், யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற குடியரசுதின வைபவத்தில் பங்குகொண்டிருக்கின்றார். எனவே, இந்த அடிப்படையில் நோக்கினால், கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் இரண்டு கட்சிகளின் தலைவர்கள் மட்டுமே இந்நிகழ்வில் பங்குகொண்டிருக்கின்றனர். ஆனால், கூட்டமைப்பின் பிரதான அரசியல் கட்சியும், கூட்டமைப்பின் சட்டபூர்வ தகுதிப்பாட்டை நிர்ணயம் செய்துவரும் கட்சியுமான இலங்கைத் தமிழரசு கட்சியை பிரதிநிதித்துவம் செய்துவரும் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் மேற்படி நிகழ்வில் பங்குகொண்டிருக்கவில்லை. இது தவிர்க்க முடியாமல் நிகழ்ந்ததா அல்லது ஏதாவது செய்தியொன்றின் வெளிப்பாடா?

குறித்த குடியரசு தினம் இடம்பெற்ற கடந்த 6ஆம் திகதி தமிழரசு கட்சியின் மத்திய குழுவிற்கான கூட்டமொன்று திருகோணமலையில் இடம்பெற்றிருந்தது. இது பிற்போட முடியாதளவிற்கான ஒரு முக்கிய கூட்டமென்று சொல்லிவிட முடியாது. இந்தியாவின் குடியரசு தினத்தை முக்கியமான ஒன்றாக கருதியிருப்பின், இது பிற்போட முடியாதளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த நிழ்வும் அல்ல. மேலும், குறித்த தினத்தில் இந்தியாவின் குடியரசு தினம் இடம்பெறும் என்பதை ஏலவே அனைவரும் அறிந்தே இருந்தனர். எனவே, இதன் மூலம் ஏதேனும் செய்தியொன்றை மறைமுகமாக கூட்டமைப்பு வெளிப்படுத்த முற்படுகின்றதா?

சுதந்திரத்திற்கு பிற்பட்ட இலங்கையின் உள்விவகாரங்களில் நேரடியாக தலையிட்ட ஒரெயொரு நாடு இந்தியாவாகும். இதன் மூலம் இலங்கை நிலைமைகளைப் பொறுத்தவரையில், இந்தியா என்பது எந்தவொரு தரப்பினராலும் தவிர்த்துச்செல்ல முடியாதவொரு சக்தியென்பது நிரூபணமான ஒன்று. பிரபாகரன் – பிரேமதாச உடன்பாட்டின் மூலமான இந்திய படைகள் வெளியேற்றம், பின்னர் ராஜீவ் காந்தியின் படுகொலை ஆகியவற்றால் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் இந்தியா யுத்தகால இலங்கையின் விவகாரங்களில் அதிகம் தலையிடாதிருந்த போதிலும் கூட, இந்தியாவுடனான பரிசீலனையின்றி எந்தவொரு விடயமும் நடந்துவிடவில்லை. பிரபா – ரணில் உடன்பாட்டின்போது வெளித்தோற்றத்தில் இந்தியா மௌனமாக இருந்தது போன்று தெரிந்தாலும் கூட, உண்மையில் போர்நிறுத்த காலத்தின் ஒவ்வொரு நகர்வுகளும் இந்தியாவின் மேற்பார்வையிலேயே நிகழ்ந்தேறியது எனலாம். ஆரம்பத்தில் இரகசியம் போல் பேணப்பட்ட மேற்படி இந்தியாவின் பங்களிப்பு சமாதான முன்னெடுப்புக்கள் மீதான நோர்வேயின் மீள்பார்வை அறிக்கை வெளியான பின்னர் அனைத்தும் பரகசியமானது.

சமாதான காலத்தின் ஒவ்வொரு நகர்வுகளும் இந்தியாவிற்கு தெரிவிக்கப்பட்டே மேற்கொள்ளப்பட்டன. இந்தியா தெற்காசியாவின் பிராந்திய சக்தி என்னும் வகையில், இலங்கையில் ஆர்வம் காட்டும் சீனா தவிர்ந்த எந்தவொரு தரப்பும் முதலில் இந்தியாவின் ஆலோசனையே செவிமடுக்கும். இதுவே இலங்கை தொடர்பான தெற்காசிய யதார்த்தம். இது புவிசார் அரசியல் குறித்து அவதானமுள்ள அனைவருக்கும் நன்கு தெரிந்த விடயமும் கூட. தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதனை, மற்றவர்களை காட்டிலும் நன்கறியும். விடுதலைப் புலிகள் தமிழர் அரசியல் அரங்கிலிருந்து அகற்றப்பட்ட பின்புலத்தில், தமிழர் அரசியலை தீர்வு நோக்கி முன்கொண்டுசெல்ல வேண்டிய பொறுப்பு கூட்டமைப்பின் வசமானது. புலிகளுக்கு பின்னர் உருப்பெற்ற ஒரேயோரு அரசியல் ஸ்தாபனமாக நோக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு, விடுதலைப் புலிகளால் தொடர்பறுந்துபோன இந்திய – தமிழர் அரசியல் உறவை உடனடியாகவே புதுப்பித்துக் கொண்டது. அதுவரை விடுதலைப் புலிகளின் எதிர்ப்பால், மாகாணசபை குறித்து வாய்திறக்காத கூட்டமைப்பின் தலைவர்கள், மாகாணசபை முறைமையை ஒரு அரசியல் தளமாகப் பயன்படுத்திக் கொள்ளும் முடிவை வந்தடைந்தனர்.

கூட்டமைப்பின் மாகாணசபையை ஏற்றுக்கொண்டு பயணிப்பது என்னும் முடிவானது யதார்த்த பூர்வமானதும், புத்திசாதுர்யமானதுமான முடிவென்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது. மாகாணசபை முறைமையை நோக்கி தமிழர் தரப்பு திரும்புவதானது, தங்கள் மீதான இந்தியாவின் அழுத்தத்தை அதிகப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்கிவிடக் கூடுமென்னும் அச்சத்தின் காரணமாகவே, கொழும்பு வடக்கு மாகாண சபைக்கான தேர்தலை, முடிந்தவரை பிற்போட்டு வந்தது. தெற்கின் அடிப்படைவாத சக்திகள் வடக்கு மாகாணசபைக்கு எதிராக மேற்கொண்டு வந்த பிரச்சாரங்களும் மேற்படி அரசின் முடிவிற்கு காரணமாகும். ஆனாலும், இந்தியாவின் தொடர்ச்சியான அழுத்தங்களால் இறுதியில் வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்துவதை தொடர்ந்தும் பிற்போட முடியாத நிலைமை அரசிற்கு ஏற்பட்டது. இந்தியாவின் வெளிப்பாடானது, ஆரம்பத்திலிருந்தே பரஸ்பர விட்டுக்கொடுப்புடன் கூடிய ஒரு அணுகுமுறையின் மூலமே பிரச்சனைகள் அணுகப்பட வேண்டும் என்பதாகவே இருந்தது. கூட்டமைப்பின் முதலமைச்சர் விக்னேஸ்வரன், ஜனாதிபதி ராஜபக்‌ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் எடுத்தமையானது அவ்வாறானதொரு எதிர்பார்ப்புடன் ஒத்துப் போவதாகவே அமைந்திருந்தது. ஆனால், மாகாண சபையை பொறுப்பேற்ற பின்புலத்தில் வடக்கு நிர்வாகத்தின்போது இடம்பெற்ற விடயங்களானவை, கூட்டமைப்பு இந்திய அணுகுமுறைக்கு அமைவாக பயணிக்கும் என்னும் எதிர்பார்ப்பை பெரியளவில் வெளிப்படுத்தி நிற்கவில்லை.

குறிப்பாக வடக்கு மாகாண சபையை ஒரு அரச எதிர்ப்புக்கான பிரச்சாரக் களமாக பயன்படுத்திக்கொள்ளும் உபாயமானது, இந்தியாவைப் பொறுத்தவரையில் விரும்புக்குரிய ஒன்றாக இருந்திருக்காது. சில தினங்களுக்கு முன்னர் போர்க் குற்றங்கள் மற்றும் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி போன்றவை தொடர்பான சபைத் தீர்மானங்கள், நிச்சயமாக இந்தியாவினால் மகிழ்சியுடன் நோக்கப்பட்டிருக்காது. முள்ளிவாய்க்கால் தொடர்பில் தமிழ் நாட்டில் நிறுவப்பட்டிருந்த ‘முள்ளிவாய்க்கால் முற்றம்’ கூட இடிக்கப்பட்டுள்ளது என்பதை இந்த இடத்தில் நினைவுகொள்ளலாம். இந்த பின்புலத்தில் நோக்கினால், கூட்டமைப்பின் சமீபகால அணுகுமுறைக்கும் இந்தியாவின் எதிர்பார்புக்கும் இடையில் ஒரு விரிசல் தோன்றியிருப்பதான ஒரு தோற்றப்பாடே தெரிகிறது. இது குறித்து இந்திய தூதரக அதிகாரிகள், தங்கள் அதிருப்திகளை நாசுக்காக வெளிப்படுத்தியுள்ளனர் என்ற தகவலும் உண்டு. இந்த பின்புலத்தில் நோக்கினால், ஆரம்பத்தில் புலிகளால் தொடர்பறுந்து போன இந்திய – தமிழர் அரசியலுக்கு மீண்டும் புத்துயிரளித்த கூட்டமைப்பு, தொடர்ந்தும் இந்தியாவின் செல்வாக்கெல்லைக்குள் மட்டுமே இருப்பது பொருத்தமல்ல என்று கருதுகிறதா? குறிப்பாக அமெரிக்கா இலங்கையின் மீதான அழுத்தங்களை தொடர்ந்துவரும் நிலையில், இந்தியாவை மட்டுமே நம்பி நிற்பது பயணற்ற ஒன்றென்று கூட்டமைப்பு கருதுகின்றதா? ஒன்றின் முக்கியத்தும் குறைந்து செல்லும் போதுதான், அதன் மீதான ஈடுபாடும் குறைவடைந்து செல்லும். கூட்டமைப்பின் பிரதான கட்சியும், அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களை கட்டுப்படுத்தும் ஆற்றலைக் கொண்டதுமான தமிழரசு கட்சி, குடியரசு தினமன்று அதன் மத்திய குழுக் கூட்டத்தை நடத்தியிருப்பதை, நான் மேலே குறிப்பிட்டவாறான சாதாரணமான ஒன்றின் மீதான ஈடுபாடு குறைவடைந்து செல்லும் என்னும் எடுகோளுடன் ஒப்பிட முடியுமா? அல்லது இது தற்செயலாக நடந்துவிட்ட ஒன்றுதானா? குறிப்பாக மாகாணசபை முறைமையை அரசுடன் ஊடாடுவதற்கான ஒரு களமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்னும் எதிர்பார்பை இந்தியா கொண்டிருப்பதற்கு மாற்றான ஒரு நிலைப்பாட்டையே அமெரிக்கா வெளிப்படுத்தி வருகின்றது.

அமெரிக்காவினால் எதிர்வரும் மார்ச்சிலும் இலங்கையின் மீதான ஒரு பிரேரணை கொண்டுவரப்படும் என்பது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கின்ற நிலையிலேயே, வடக்கு மாகாணசபையில் போர்க் குற்றங்கள் தொடர்பான தீர்மானமொன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் தெற்கின் அடிப்படைவாத சக்திகள் வடக்கின் மாகாணசபை ஆட்சியை சிங்கள மக்களுக்கு எதிரான ஒன்றாக சித்தரிப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இது மேலும் வடக்கு மாகாண நிர்வகாத்திற்கும் கொழும்பிற்கும் இடையில் விரிசலை ஏற்படுத்தலாம். யுத்ததிற்கு பின்னரான சூழலில் பரஸ்பர புரிதலை நோக்கிப் பயணிப்பதற்கு மாற்றாக, இனத்துவ விரிசலை ஏற்படுத்துவதற்கான ஒரு களமாக மாகாணசபையை மாற்றும் உபாயமானது, இந்தியாவினால் எவ்வாறு நோக்கப்படும்?

வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் நிச்சயமாக புதுடில்லியால் மகிழ்சியுடன் நோக்கப்படமாட்டாது. எனவே, இந்த பின்புலத்தில் நோக்கினால் கூட்டமைப்பின் அரசியல் நகர்வுகளானவை இந்தியாவின் விருப்பங்களுடன் ஒத்துப்போவதிலும் பார்க்க, அமெரிக்க நகர்வுகளுடன்தான் அதிகம் ஒத்துப்போவதாகத் தெரிகிறது. இத்தகையதொரு பின்னனியில், இந்தியா மட்டும் நமக்குப் போதாது என்னும் மனோநிலை எற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். இந்தக் கணிப்பு சரியாக இருக்குமிடத்து, கூட்டமைப்பினர் மத்தியில் இந்தியா குறித்த கரிசனை குறைவடைந்து செல்லுகிறது என்று குறிப்பிடுவதும் சரியானதாகவே அமையும். ஆனால், இது குறித்து இந்தியா பெரியளவில் அலட்டிக்கொள்ள மாட்டாது. ஒரு சிறிய புன்னகையுடன் கூட்டமைப்பினரை நோக்கலாம். ஏனெனில், எங்கு சென்றாலும், இறுதியில் புதுடில்லியின் கதவைத்தானே தட்டியாக வேண்டும்.

யதீந்திரா  

DSC_4908