படம் | Lakruwan Wanniarachchi/AFP via Getty Images, BLOOMBERG

மனித முன்னேற்றமானது தானாகவே நிகழ்வதுமல்ல, தவிர்க்க முடியாததுமல்ல. நீதிக்கான ஒவ்வொரு படிமுறையும் அதற்கென அர்ப்பணித்த தனிநபர்களின் தியாகங்கள், வேதனைகள், தத்தளிப்புக்கள், சோர்ந்திடாது விடுக்கும் அழுத்தங்கள் மற்றும் பரிவுநிறைந்த கரிசனை போன்றவைகளை வேண்டிநிற்கும்.

மார்டின் லூதர் கிங், ஜூனியர்

கடந்த வார ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் எதிர்பாராத ஒன்றாவே​ அமைந்தது. அந்த திடீர் மாற்றமானது சிறிசேனவுக்கு தம் வாக்குகளை அள்ளிக்கொடுத்த தமிழ் பேசும் மக்களுக்கு எந்தவித பிரதிபலனை கொண்டுவரும் என்ற கேள்வி எல்லா மக்களினது மனங்களில் முக்கியத்துவம் வகிக்கின்றது. குறிப்பாக, யுத்தக் குற்றங்களுக்கு பொறுப்புக்கூறும் விடயத்தில் எந்தவித மாற்றங்கள் இடம்பெறவுள்ளன? சிறிசேனவின் தேர்தல் பிரசாரங்களில் முன்னாள் ஜனாதிபதியையோ, இராணுவ வீரர்களையோ தான் சர்வதேச நீதிமன்றங்களுக்கு கையளிக்கமாட்டார் என்ற உறுதிமொழியினை பல தடவைகள் வழங்கியிருக்கின்றார். ஆனால், அதே பிரச்சாரங்களில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு உள்நாட்டு பொறிமுறையை அமுல்படுத்துவார் என்ற விடயத்தையும் குறிப்பிட்டிருக்கின்றார். இருந்தாலும், 2002ஆம் ஆண்டுக்கும் 2011ஆம் ஆண்டுக்கும் இடையில் இலங்கையில் இழைக்கப்பட்ட சர்வதேச குற்றங்களைப் பொறுத்தவரையில் ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்ட ஒரு சர்வதேச விசாரணையொன்று இயங்கிக்கொண்டிருக்கின்றதை அனைவரும் அறிவார்கள்.

மார்ச் 2014, மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தின்படி மேற்கொள்ளப்பட்டுவரும் சர்வதேச விசாரணையின் அறிக்கையானது மனித உரிமைகள் பேரவையிடம் மார்ச் 2015இல் சமர்ப்பிக்கப்படவுள்ளது. சர்வதேச விசாரணை நடாத்துவது என்ற தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதே ஒரு பெரிய சாதனைதான். தமிழர்கள் மனதிலே தற்போது உள்ள கேள்வி, “அடுத்து என்ன?” என்பதே.

யுத்தத்துக்குப் பின்பதான நீதி மற்றும் உண்மை ஆகியவற்றையிட்ட தத்தளிப்பில் மார்ச் 2014 தீர்மானமானது ஒரு திருப்புமுனையாக அமைந்தது. யுத்தம் முடிந்த பின் இடம்பெற்ற மே 2009 கூட்டத்தொடரிலே இலங்கை அரசு அதன் யுத்த முயற்சிகளைப் பாராட்டும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவதை உறுதிசெய்யும் ஒரு இராஜதந்திர வெற்றியைப் பெற்றுக்கொண்டது. ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க மற்றும் ஆசியப் பிராந்தியங்கள் முழுவதுமாக இலங்கை அரசுக்கு ஏறத்தாழ ஏகோபித்த ஆதரவை உறுதிசெய்தன. அரச வெற்றியின் பின்புலத்திலே ஒரு சர்வதேச விசாரணை என்பது துளியும் சாத்தியமற்றதாகவே அன்று தென்பட்டது. ஆனால், 2009இல் ஜக்கிய அமெரிக்கா மனித உரிமைகள் பேரவையினுள் மீள்நுழைந்து இலங்கை பற்றிய ஐ.நா. தனது இராஜதந்திர வல்லமைமையப் பயன்படுத்தி, லத்தீன் அமெரிக்க, ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளின் ஏகோபித்த ஆதரவுக்கோலங்களுக்குள் ஊடுருவிட மனித உரிமைகளுக்குச் சார்பான பல தீர்மானங்கள் பேரவையிலே நிறைவேற்றப்படுவது சாத்தியமாயிற்று. சிரியா தொடர்பான தீர்மானம், லிபியா தொடர்பான தீர்மானம், வட கொரியா தொர்பான தீர்மானம் போன்றவைகள் ஒரு சில உதாரணங்கள். இவற்றுள் ஒன்றுதான் மார்ச் 2012இலே இலங்கை தொடர்பாக மேற்கொண்ட தீர்மானம்.

ஒரு சில தமிழர்கள் மென்போக்கான இந்தத் தீர்மானத்தையிட்டு தமது கண்டனங்களைத் தெரிவித்தனர். ஒரு சர்வதேச விசாரணைக்கு உத்தரவிடாமல், யுத்த காலத்திலே இடம்பெற்ற குற்றச் செயல்கள் பற்றி விசாரணையை மேற்கொண்டு கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் சிபாரிசுகளை அமுல்படுத்தும்படி இலங்கைக்கு வேண்டுகோள் விடுப்பதாக இந்தத் தீர்மானம் இருப்பதையிட்டு அவர்கள் ஆட்சேபித்தனர். ஆனால், உண்மைநிலை என்னவெனில், 2013 மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரிலே அதைவிட வலிமையான ஒரு தீர்மானம் மேற்கொள்வது என்பது சாத்தியமற்றதாக இருந்தமையே. அப்போது பேரவையிலே இலங்கை தொடர்ந்தும் கணிசமான ஆதரவைக் கொண்டிருந்தது. ஆனால், அடுத்த இரண்டு ஆண்டுகளிலே யுத்தக் குற்றச்செயல்களையிட்டு நேர்மையான ஆய்வை மேற்கொள்வதிலும், எல்.எல்.ஆர்.சி. அறிக்கையின் சிபாரிசுகளை இலங்கை அமுல்படுத்துவதிலும் தவறியமையானது ஐக்கிய அமெரிக்கா மற்றும் அதன் தோழமை நாடுகள் ஆகியன இலங்கைக்கு எதிரான வலிமையான தீர்மானம் மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையிட்ட வலிமையான வாதத்துக்கு வலுச்சேர்த்தது.

எனவே, மென்போக்கான 2012 தீர்மானமானது 2014இலே வலிமையான சர்வதேச தீர்மானமாக வளர்வது சாத்தியமாயிற்று. ஆயினும், தொக்கிநிற்கும் கேள்வி: மார்ச் 2015இன் பின்பு என்ன? உண்மையிலேயே மனித உரிமைகள் பேரவையினால் சர்வதேச விசாரணைக்கும் அப்பால் அதிகம் செல்ல அதிகாரமற்றது. மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகரிடம் இலங்கை தொடர்பான நிலவரங்கலையிட்டு அறிக்கை சமர்ப்பிப்பதைத் தொடரும்படியாகக் கேட்டுக்கொள்ளலாம். ஆயினும், அது ஒரு முனைப்பான படியாக அமையுமா என்பது கேள்விக்குரியது. மனித உரிமைகள் பேரவை சர்வதேச குற்றவியல் மன்றத்திடம் (ஐ.சீ.சீ.) இதுவரை அங்கத்துவம் பெறாத இலங்கை போன்ற நாடுகளைப் பொறுத்த விடயத்திலே அவற்றையிட்ட குற்றத் தாக்கல் ஒன்றைக் கோரமுடியாது. ஜ.சீ.சீயினை அமைத்த ரோமப் பிரமாணத்தின்படி இப்படியான ஒரு கோரிக்கையை நியூயோர்க்கிலே அமைந்துள்ள பாதுகாப்புப் பேரவையினால் மாத்திரமே தீர்மானிக்க முடியும்.

ஆகவே, இலங்கையை ஐ.சீ.சீயிடம் ஒப்புவிக்கும்படிக்கான தீர்மானத்துக்கான சாத்தியங்கள் எதிர்காலத்திற்குள் சாத்தியமற்றதாகவே உள்ளது. பாதுகாப்புப் பேரவையின் விதிகளுக்கு அமைய அதன் நிரந்தர அங்கத்துவ நாடுகளான சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் வீட்டோ அதிகாரத்தைக் கொண்டவை. அதாவது, குறித்த ஒரு தீர்மானத்தை பெரும்பான்மையான அங்கத்துவ நாடுகள் ஆதரவளித்தாலும்கூட அதை நிறைவேற்றுவதை அவை தடுத்து நிறுத்தலாம். மேலும், பாதுகாப்புப் பேரவை அவ்வாறு ஐ.சீ.சீக்கு அனுப்பிவைப்பதானால், இலங்கையிலுள்ள நிலவரமானது சர்வதேச சமாதானத்துக்கும் பாதுகாப்புக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று கூறும் பிரேரணையொன்றின் அடிப்படையிலே மட்டும்தான் சாத்தியப்படலாம். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஒரு ஜனநாயக ஆட்சி ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் அவ்வாறான ஒரு பிரேரணையானது முற்றிலும் சாத்தியமற்றதாகவே தென்படுகின்றது. அப்படியாயின், ஐ.சீ.சீயிற்கு வெளியே நீதிக்கான சாத்தியங்கள் என்ன? ஒரு தெரிவு, ‘தேசிய சட்ட அதிகாரம்’ என அழைக்கப்படும். இதன்படி ஒரு தேசத்தின் பிரஜாவுரிமையைப் பெற்றுள்ள நபர்கள் வேறு ஒரு நாட்டிலே குற்றம் புரிந்தாலும் அவர்களுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படலாம். முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ போன்றோருக்கு அமெரிக்காவில் இவ்வகையான சட்டங்கள் பொருந்தக் கூடும். இன்னொரு தெரிவு, ‘சர்வதேச சட்ட அதிகாரம்’ என அழைக்கப்படும். யுத்தக் குற்றங்கள் மனுக்குலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இன அழிப்பு போன்றதான சர்வதேச குற்றங்களை உலகின் எந்த ஒரு நாடும் விசாரித்துத் தீர்ப்பு வழங்கும் வழிமுறை இது. இதற்காக அவற்றின் நாடாளுமன்றங்கள் அதுபற்றிய சட்டத்தை ஏற்றுக்கொண்டு அமுலாக்கம் செய்திருக்கவேண்டும். இந்த இரண்டு தெரிவுகளுக்கும் இலங்கை அரசின் அங்கீகாரமோ அல்லது ஈடுபாடோ தேவையானதல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நாடுகளிலே பாதிக்கப்பட்டவர்கள் நீதிக்கான தடைகளை கடக்க மேற்கொண்ட முயற்சிகளையிட்டுப் பல்வேறு பாடங்களை நாம் கற்றுக்கொள்ளலாம். குறிப்பாக இரண்டு பாடங்கள் தெளிவாகின்றன; அவையாவன, 1 – இந்தக் குற்றங்களைப் பற்றி மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொணர்வதற்கு பலதரப்பட்ட பொறிமுறைகளைப் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்தக்கூடுமாய் இருந்துள்ளது. 2 – அத்துடன், குற்றங்களுக்கு அதிகம் பொறுப்பானவர்கள் தமது அதிகாரத்தை இழக்கும் வரைக்கும் பாதிப்புற்றோர் பொறுமையாகக் காத்திருந்து நீதிக்கான தமது கோரிக்கையை அயராது மேற்கொண்டனர். எனவே, ஆர்ஜென்ரீனாவிலே பாதிக்கப்பட்டோர் உள்ளூர் உண்மையறியும் ஆணைக்குழுக்களையும் ஆக்கபூர்வமாக பயன்படுத்தி இராணுவச் சர்வாதிகாரத்தின் குற்றங்களை வெளிக்கொணர்ந்தனர். குற்றங்கள் வெளிக்கொணரப்பட்டு சர்வாதிகாரத்தின் ஆதிக்கம் முடிவுக்கு வந்ததும் உள்ளூர் நீதிமன்றங்களில் நீதி எய்தப்பெற்றது. கம்போடியாவில், அமெரிக்கப் பல்கலைக்கழகமொன்றாலும், உள்ளூர் அரசசார்பற்ற நிறுவனமொன்றினாலும் சாட்சியங்களைத் திரட்டும் முனைப்புகளிலே பாதிக்கப்பட்டோர் பெருமளவிலே சான்றுபகரும் நிகழ்வுகளில் கலந்துகொண்டனர். கெமரூச் அமைப்பானது இராணுவ ரீதியில் பலவீனப்பட்டதும், நீதி உண்மையாகியது. பாதிக்கப்பட்டோரின் பொறுமையும் சிவில் அமைப்புகளின் தீர்க்கமான செயலாற்றங்களும் நீதிக்கான தடையை எதிர்கொள்வதிலே முக்கியமானவைகளாகும்.

இலங்கைத் தமிழரின் நீதிக்கான பாதையானது இலகுவானதாய் இருக்குமெனத் தோன்றவில்லை. நீதி விரைவாக அடையப் பெறும் என்றும் தோன்றவில்லை. ஆனால், நீதி ஒரு நாள் அடையப் பெறவேண்டுமானால் பாதிக்கப்பட்டவர்கள் ஏமாற்றங்களை எதிர்கொண்டு தந்திரோபாயத்தின் மூலம் படிப்படியான மாற்றங்களை விளைவிப்பதைத் தொடர்வதினாலேயே ஆகும். இதற்குப் பொறுமையும், நிதானமும், தீர்க்க மனநிலைப்பாடும், பெரும் தந்திரோபாயத்திறமையும் தேவை. நீதியை அடைவதற்கான எமது இயல்பானது நாம் இரு தெரிவுகளிலே எவற்றைத் தெரிவு செய்கிறோம் என்பதிலேயே பெரிதும் தங்கியிருக்கும்: சர்வதேச அமைப்புக்களிலே நம்பிக்கையிழந்து அனைத்தையும் கைவிடுவதா அல்லது உறுதியாக நின்று நீதி உண்மையாகும் வரைக்கும் பொறுமையுடனும் அறிவுடனும் செயற்படுவதா? இந்த முயற்சியிலே தடைகளை எதிர்கொண்டு நீதியை அடையப்பெற்ற பிற நாடுகளில் உள்ள பாதிக்கப்பட்டோரின் அனுபவங்கள் எமது சிந்தைகளை வழிநடாத்தவேண்டும்.