படம் | Milly West, Sfgate

இன்று எர்னஸ்டோ சேகுவேராவின் பிறந்ததினமாகும். அதனை முன்னிட்டு ‘மாற்றம்’ தரும் பதிவிது.

1960ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5ஆம் திகதி ஹவானாவின் இடம்பெற்ற நினைவுக்கூட்டமொன்றில் படம் பிடிக்க 32 வயதான அல்பர்டோ கோர்டா அவர் வேலை பார்க்கும் பத்திரிகை சார்பாக அனுப்பப்படுகிறார். கியூப விடுதலை போரின்போது ஆயுதம் ஏற்றப்பட்டிருந்த கப்பல் மீது பிடல் காஸ்ட்ரோவை எதிர்க்கும் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 135 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தின் நினைவு தினத்தில் இடம்பெறுவனவற்றை படம் பிடிக்கவே கோர்டா அனுப்பப்பட்டார். அன்று அவர் எடுக்கப்போகும் படம் எதிர்காலத்தில் உலகெங்கிலுமுள்ள புரட்சிகர இளைஞர்களின் உணர்வுகளில் மின்சாரம் பாய்ச்சப்போகிறது என்பதை அறிந்திருக்கவில்லை. இந்தப் படத்துக்குக் கிடைக்கப்போகும் அபரிதமான அங்கீகாரம் குறித்து கூட எண்ணவில்லை.

வாழ்நாள் புரட்சியாளர் எர்னஸ்டோ சேகுவேராவையே அன்று அவர் படம் பிடித்தார். கோர்டா எடுத்த அந்தப் படமே உலகெங்குமுள்ள புரட்சியின், புரட்சியாளர்களின் பிரதான சின்னமாக, குறியீடாக இருந்து வருகிறது. அவர் தனது லெய்கா எம் 2 என்ற கமராவிலேயே இந்தப் படத்தைப் எடுத்தார்.

அல்பர்டோ கோர்டா 1928ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 14ஆம் திகதி கியூபாவின் ஹவானாவில் பிறந்தார்.
உலகின் தலைசிறந்த படத்தை எடுத்த சந்தர்பத்தை கோர்டா இவ்வாறு நினைவுகூர்கிறார்,

“பிடல் காஸ்ட்ரோ பேசிக்கொண்டிருக்கும்போது அவர் பின்னால் சே இருந்ததை நான் கண்டேன். அவர் அவ்வேளை கமராவுக்குத் தெளிவாக தென்படாமல் இருந்தார். திடீரென மேடையின் முன் நுனிக்கு வந்து மக்களை நோட்டமிட்டார். நான் சுதாகரித்துக்கொண்டு தட்டுத்தடுமாறி இரண்டு படங்களை பிடித்துக்கொண்டேன். பின்னர் அவர் இருந்த இடத்திற்கே சென்றார்.”

இளவயதுடைய கோர்டாவுக்கு அவரது தந்தை கொடெக் 35 ரக கமராவொன்றை பரிசளித்துள்ளார். அதைக் கொண்டு அவரது காதலியை விதவிதமாக படமெடுத்து மகிழ்ந்துள்ளார் கோர்டா. இதன் மூலம் பின்னர் 1950ஆம் ஆண்டுகளில் பெஷன் புகைப்படப்பிடிப்பாளராக வளர்ச்சி பெற்றார்.

பிடல் காஸ்ட்ரோவின் தலைமையின் கீழ் கியூபா வந்ததும் கோர்டாவின் புகைப்படப் பாணியிலும் மாற்றம் ஏற்பட்டது. புரட்சியின் பின்னர் அரசியல், கரும்பு அறுவடை, கரும்புத் தொழிற்சாலை ஆகிய காட்சிகளை படம்பிடிக்கவேண்டிய நிலை கோர்டாவுக்கு ஏற்பட்டது. இந்த அனுபவம் பின்னொரு காலத்தில் பிடல் காஸ்ட்ரோவின் பிரத்தியேக புகைப்படப்பிடிப்பாளராக தகுதிபெறவும் உதவியது.

அலுவலகம் திரும்பியவுடன் 135 பேர் கொல்லப்பட்ட சம்பவ நினைவுதினத்தில் தான் எடுத்த அனைத்து படங்களையும் ஆசிரியருக்கு கோர்டா காண்பித்துள்ளார். நிச்சயமாக சேவின் படத்தையே ஆசிரியர் தெரிவுசெய்வார் என எதிர்பார்த்திருந்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அந்த நிகழ்வுக்கு அதிதிகளாக வந்திருந்த பிரான்ஸ் எழுத்தாளர்களான ஜீன் போல் மற்றும் சிமோன் டி பீவொய்ர் ஆகியோருடன் பிடல் காஸ்ட்ரோ காட்சியளிக்கும் படமே அடுத்த நாள் பத்திரிகையின் முன் பக்கத்தை அலங்கரித்திருந்தது. தனக்கு மிகவும் பிடித்த சேவின் படத்தை தனது ஸ்டூடியோவில் உள்ள சுவரில் தொங்விட்டார் கோர்டா. பின்னர் அந்தப் படத்தில் சேவின் உருவம் மட்டுமே இருக்கவேண்டுமென எண்ணிய கோர்டா, இரு புறமும் இருந்த காட்சிகளை கத்தரித்தார்.

che

சி.ஐ.ஏ. உதவியுடன் எர்னஸ்டோ சேகுவேரா பொலிவிய இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு பின்னர் கொல்லப்பட்டு சில மாதங்கள் கழிந்தநிலையில் தன்னை அறிமுகம் செய்துகொள்ளாமல் ஸ்டூடியோவுக்கு வந்த நபரொருவர் கடிதமொன்றை கோர்டாவுக்குக் கொடுத்தார். கியூப அரசின் உயர் பீடத்திலிருந்தே அந்தக் கடிதம் கோர்டாவுக்கு எழுதப்பட்டிருந்தது. அதில், இந்தக் கடிதத்துடன் வரும் நபருக்கு எர்னஸ்டோ சேகுவேராவின் புகைப்படமொன்று தேவைப்படுவதால் சிறந்த படமொன்றை வழங்கி உதவும் படி கோர்டாவிடம் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. இவருக்கு உடனடியாக சுவரில் தொங்கிக்கொண்டிருந்த படமே நினைவுக்கு வந்தது. ஏழு வருடங்களாக பாதுகாத்து வந்த படத்தைப் பார்த்து, “என்னிடம் இருக்கும் சேவின் படங்களிலேயே சிறந்த படம் இதுதான்” என வந்திருந்த நபரிடம் கூறினார் கோர்டா. அவருக்கும் பிடித்துப்போய் 2 பிரதிகள் தனக்கு தேவையென தெரிவித்துள்ளார். இந்தப் படங்களுக்கான பெறுமதி குறித்து அந்த நபர் வினவியுள்ளார். சேவின் படத்தை விரும்புபவர் நிச்சயம் புரட்சியின் தோழனாகத்தான் இருக்கமுடியும் என எண்ணி பணம் வாங்காமல் மறுநாள் இரண்டு பிரதிகளை கிடைக்கச் செய்தார்.

tumblr_lw4zkgEEoh1r5fc00o1_1280

வந்திருந்தவர் இத்தாலி நாட்டின் சிறந்த நிருபரும், வெளியீட்டாளருமான கியான்கியாகோமோ பெல்ட்ரினெலி என்பதை கோர்டா அறிந்திருக்கவில்லை.

இந்தப் படத்தைக் கொண்டு போஸ்டர், பெனர்களை பெல்ட்ரினெலி வெளியிட்டார். இதன் மீதான அபரிதமான கேள்வியை அவர் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. அப்போதுதான் சேவினுடைய படத்தின் பெறுமதியை அவர் உணர்ந்தார். அதன் மூலம் துரிதமாக வருமானம் ஈட்டவும் முற்பட்டார். மில்லியன் கணக்கில் போஸ்டர்களை அச்சிட்டு உலகெங்கிலும் விநியோகித்தார். அந்த போஸ்டர்களில் “இது பெல்ட்ரினெலிக்குச் சொந்தமானது” எனவும் உரிமம் கோரப்பட்டிருந்தது.

அல்பர்டோ கோர்டா வெளியீட்டாளர் மீது கோபம் கொள்ளவில்லை. அவருக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. “நான் அவரை மறந்துவிட்டேன். ஏனென்றால், அவரால்தான் இந்தப் படம் இந்த அளவுக்கு பிரபலமடைந்துள்ளது” என கோர்டா தெரிவித்துள்ளார்.

அதேவேளை, கியூபா நாடுகளுக்கிடையிலான ‘பர்ன்’ அறிவுசார் சொத்துக்கள் தொடர்பான சட்டத்தில் கைச்சாத்திட்டிருக்கவில்லை. இதனால் கோர்டாவால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கமுடியாமல் போனது. இந்தச் சட்டத்தில் கியூபா 1990ஆம் ஆண்டே கைச்சாத்திட்டிருந்தது.

அல்பர்டோ கோர்டா எடுத்த சேவின் படம் உலகின் தலைசிறந்த படமென்றும் – 20ஆம் நூற்றாண்டின் குறியீடு என்றும் அமெரிக்காவில் இயங்கும் மேரிலேண்ட் கலைக் கல்லூரி அறிவித்தது.

புரட்சிகர பெனர்களில் சேவின் படத்தை காணக்கிடைப்பது சந்தோஷமாக இருக்கிறது என கோர்டா தெரிவித்துள்ளார். ஆனால், எப்போது ‘வொட்கா’ (மதுபானம்) கம்பனி விளம்பரத்துக்காக சேவின் படத்தை உபயோகித்ததோ அப்போதே அந்தப் படம் பயன்படுத்தப்படுவதற்கான ஒரு வரையறையை நிர்ணயிக்கவும் கோர்டா முடிவு செய்தார்.
அதன்படி பிரித்தானியாவில் இயங்கும் கியூப ஒருமைப்பாட்டு இயக்கத்தின் உதவியுடன் லண்டனில் வொட்கா கம்பனிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் நஷ்ட ஈடாக 50,000 அமெரிக்க டொலர்கள் வொட்கா நிறுவனத்தால் கோர்டாவுக்கு வழங்கப்பட்டது. அந்தப் பணத்தை கியூபாவின் வைத்தியத் துறைக்கு வழங்கினார் கோர்டா.

“சே உயிரோடு இருந்திருந்தால் நான் செய்திருந்ததையே அவரும் செய்திருப்பார். சேவின் படத்தை மதுபான விளப்பரத்துக்கு உபயோகிப்பது மூலம் அவரையும் அவரின் அர்ப்பணிப்பையும் அவமரியாதைக்கு உட்படுத்துகிறோம். அவர் மது அருந்த மாட்டார். அருந்தியதும் இல்லை” என கோர்டா வழக்கில் வெற்றிபெற்ற பின் தெரிவித்தார்.

“எர்னஸ்டோ சேகுவேராவின் படத்தை பாதுகாக்குமாறும், அது தொடர்பான வழக்குகள், விசாரணைகள் ஆகியவற்றை கவனித்துக்கொள்ளுமாறு கோர்டாவின் குடும்பத்தினர் எம்மிடம் கேட்டுக்கொண்டனர். 2000ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கோர்டா தனது படங்களை பெருந்தொகைக்கு விற்பனை செய்தார். அதில் கிடைத்த பணத்தை சிறுவர்களுக்கான நோய் எதிர்ப்பு மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக கியூப சுகாதார அமைச்சுக்கு கையளித்தார். அத்தருணம் எப்பொழுதும் எமது நினைவில் இருக்கும்” என தேசிய குழு என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஸ்டீபன் வில்கின்சன் தெரிவித்துள்ளார்.

புரட்சியின் பின்னர் ஹவானாவை நோக்கி சே உட்பட பிடல் வரும் காட்சி, மின்விளக்கு கம்பம் ஒன்றின் மீது உட்கார்ந்து பிடலின் உரையை கேட்கும் நபர், சே மற்றும் பிடல் கோல்ப் விளையாடுவது, மீன்பிடிப்பது ஆகியன அல்பர்டோ கோர்டாவின் மிகப் பிரபலமான புகைப்படங்கள்.

Photographer Alberto Korda Che Guevara by Ricardo Malta

புகைப்பட கண்காட்சியொன்றை ஏற்பாடு செய்ய பிரான்ஸ் நாட்டிற்கு சென்றிருந்தவேளை தனது 72ஆவது வயதில் 2001 மார்ச் 25ஆம் திகதி மாரடைப்பு காரணமாக அல்பர்டோ கோர்டா இறந்தார்.

கோர்டா உலகுக்கு அளித்த சேவின் படத்தை வைத்து பலர் பணம் சம்பாதிக்கின்றனர். இளைஞர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு ‘சே’வை வணிகக் கருவியாகப் (Marketing Tool) பயன்படுத்துகின்றனர்.

2009ஆம் ஆண்டு சேகுவேராவின் 80ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது அவரது மூத்த மகள் அலெய்டா அறிக்கையொன்றை வெளியிட்டார்.

“எனது தந்தையின் பெயரையும், படத்தையும் வணிக முத்திரையாக்காதீர்கள். வோட்காவிற்கும், பிஸ்ஸி பானத்திற்கும், சுவிஸ் கைப்பேசிக்கும் எனது தந்தையின் படத்தை விளம்பரச் சின்னமாக பயன்படுத்துவது அவரை அவமதிக்கும் செயலாகும். முதலாளித்துவத்துக்கு எதிராகப் போராடியவரை அதே முதலாளியம் பணத்துக்காக பயன்படுத்துவது முறண்பாடானது. எங்களுக்கு பணம் தேவையில்லை. மரியாதைத்தான் தேவை.”

சேகுவேராவின் புகழ் வணிகநோக்கங்களுக்காக பயன்படுவதை அருவருத்தார் அவரது மகள்.

காமத்திற்கு கண் இல்லை என்பது போல முதலாளியப் பண மோகத்திற்கும் முறை கிடையாது. ‘சே’வை முதலாளியமே வேட்டையாடியது. அவரது தியாகம், புகழ், பெயர் உலகெங்குமுள்ள இளைஞர்களின் உணர்வுகளில் ஒன்றே கலந்துள்ளது. இதைத் தெரிந்துகொண்ட பின் அவரை விளம்பர சின்னமாக பயன்படுத்துகிறது அதே முதலாளியம்.
அல்பர்டோ கோர்டா எமக்கு அளித்த சொத்தை பாதுகாப்போம். பகிர்ந்தளிப்போம்.

செல்வராஜா ராஜசேகர்