படம் | Wodumedia

ஊறுகாய். நம் மத்தியில் மிகவும் பிரபலமான சுவையூட்டி. சமைக்கும் உணவில் காரமில்லாவிட்டாலோ, உப்பில்லாவிட்டாலே சுவையேற்றிக் கொள்வதற்காக தமிழன் கண்டுபிடித்த அரிய பண்டம். தேசிக்காய், மாங்காய், நெல்லிக்காய், நார்த்தங்காய், பூண்டு, இஞ்சி போன்றவற்றைக் கொண்டு இது தயாரிக்கப்படும்.

2009இற்குப் பின்னர் புதியதொரு ஊறுகாயும் சந்தைக்கு வந்திருந்தது. அதற்கு நான் புலி ஊறுகாய் என்று பெயரிட்டிருக்கிறேன். இது சாப்பாட்டு மேசைகளிலோ, போத்தல்களிலோ அடைத்து விற்கப்படுவதல்ல. திரவத்தன்மையோ அல்லது திண்மத் தன்மையோ உடையதும் அல்ல. கருத்துத் தன்மையானது. அதனால்தான் காலப்பதிவிலும், மலிவான அரசியல் சந்தைகளிலும் முக்கிய விற்பனைப் பொருளாக மாறியிருக்கின்றது. கீழ்வரும் இடங்களில் புலி ஊறுகாய் அவசியப்பட்டிருக்கிறது.

முப்பது வயதைக் கடந்தவர்களும், வீட்டில் பெண் பிள்ளைகள் வைத்திருப்பவர்களும் இப்போதெல்லாம் புலி ஊறுகாயை அடிக்கடி தொட்டுக் கொள்கின்றனர். அதாவது, கட்டுக்கடங்கா காளையர்கள் வயதுப் பெண்கள் மீது சேட்டைவிடும்போதும், வயதானவர், படித்தவர், பெரியவர் என்றும் பாராது இளசுகள் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தும்போதும், இரவில் இனந்தெரியாத திருடர்கள் வீட்டு யன்னலில் சன்னம் வைக்கும்போதும் ‘இதெல்லாம் அவங்கள் இல்லாத குறை’ என்று நம் மத்தியில் புலி ஊறுகாய தொட்டுக் கொள்ளப்படுகிறது.

இதற்கடுத்து, வாராந்த பத்தியெழுத்துக்களில், கட்டுரைகளில் சுவாரஷ்யத்தைக் கனதியாக்க புலி ஊறுகாய் அவசியமாகிறது. கடந்த காலத்தின் செழுமையைக் காட்டவோ, நிகழ்காலத்தின் அரசியல் வறுமையைக் காட்டவோ, அரசியல் தோல்வியைக் காட்டவோ நேரடியாக புலி ஊறுகாய் தொடப்படாவிட்டாலும், ‘30 வருட ஆயுத போராட்டம்’ அல்லது ‘3 தசாப்தகால ஆயுதப் போராட்டம்’ என்கிற சொற்களில் புலி ஊறுகாய் தொடப்படும். இதையும்தாண்டி அவ்வப்போது நினைவு நாட்களில் தீவிரமாகவே புலி ஊறுகாய் சுவைக்கப்படும்.

2009இற்குப் பின்னர் இலக்கிய உலகத்திற்கு வந்தவர்களும், அதற்கு முன் புலி அமிர்தம் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களும் தாராளமாக சுவைக்கும் ஒரே சுவையூட்டியாக புலி ஊறுகாய் மாறியிருக்கின்றது. இறுதிப் போரில் நடந்தவை, ஆள்பிடிப்பு, புலிகளிடம் இவர்கள் எதிர்பார்க்கும், அமெரிக்காவை மிஞ்சிவிடும் உள்ளக, வெளியக ஜனநாயகம் என பல கோசங்களுக்கும், கதைகளுக்கும் புலி ஊறுகாய் மனமாக தொடப்படுகிறது. இதைவிட முன்னாளில் புலிகளின் அவைக்களப் புலவர்களாக இருந்து பொன்னும் பொருளும் வாங்கியவர்களும், பின்னாளில் எதிரணிக்குத் தாவி இலக்கியம் படைக்க ஆரம்பித்தவர்களும் தேவைக்கதிகமாகவே புலி ஊறுகாயில் கையை நனைத்துக் கொள்கின்றனர். இத்துடன் சீனாவின் சனத்தொகையை மிஞ்சிவிடும் அளவுக்கு பெருக்கெடுத்துப்போன கவிப் பெருமக்கள் சமூக வலைதளத்திலும், பருவ இதழ்களிலும் கவிதை புனைவதற்கு தேவைக்கு அளவான வகையில் பயன்படுத்திக் கொள்கின்றனர். தொடர்ந்தும் ஜனநாயகம், மனித உரிமைகள், வன்முறை அற்ற உலகத்தை நோக்கி  பயனிக்கும் கருத்தியல் வன்முறையாளர்களுக்கும் அவ்வப்போது புலி ஊறுகாய் தேவைப்படுகிறது.

தேர்தல் காலங்களில் தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகள் மக்களை ஏமாற்றவும், வாயைப் பிளக்கவைக்கவுமான வாக்குறுதிகளை முன்வைக்க புலி ஊறுகாயை முன்வைக்கின்றனர். மாவீரர் துயிலுமில்லங்களை அமைப்பதே எம் பிரதான இலக்கு என்ற கோசத்தை முன்வைத்து கதிரை பிடித்தவர்கள் புலி ஊறுகாயை தொட்டுக்கொண்ட விதத்தை மறந்துவிடவும். இதே அணியில் எதிரணியில் நின்று பேசுபவர்கள் ‘புலிப் பாசிசம்’ எனப் பெயரிட்டு சற்று வித்தியாசமாக புலி ஊறுகாயை தொட்டுக் கொள்கின்றனர். அதற்குப் பெயர் மாற்று அரசியல் சக்திகள் என்ற வித்தியாசமான பெயருமுண்டு.

தமிழக ஊடக, பதிப்பு சூழலில் புலி ஊறுகாய்க்கு எப்போதுமே பெரியளவிலான மவுசு உண்டு. அங்கு வாடிக்கையாளர்கள் அதிகம் இருப்பதாலும் புலி ஊறுகாயின் எவ்வடிவத்தையாவது (தோல், துண்டு, சுளை) அல்லது எப்பாகத்தையாவது பெரியளவில் படமாகவோ, கொட்டெழுத்துக்களிலோ எழுதினால் இன்னும் விறுவிறுப்பாக பரபரப்பாக விற்பனையாகும். எவ்வளவு குரூரமான புகைப்படங்கள் கிடைத்தாலும் அழகூட்டி விற்பனைசெய்துவிடுவதில் அவர்கள் கில்லாடிகள். அதேபோலத்தான், தமிழக அரசியல் சந்தையிலும். புலி ஊறுகாயை நேரில் காட்டாவிட்டாலும், அதன் சுவையைச் சொல்லியே லட்சக்கணக்கான கற்பனையாளர்களை வாய்பிளக்க வைத்துவிடுவார்கள். இப்போது புதிய வடிவமொன்றையும் புலி ஊறுகாய் பிடித்திருக்கிறது. சினிமாவில் புதிய வடிவமொன்றில் புலி ஊறுகாயை பயன்படுத்துதல் என்ற வியாபார உத்தியை கையாள்கிறார்கள். புலி ஊறுகாய் பற்றி தாம் அறிந்த அல்லது கற்பனையில் ஊகித்த ஏதாவது ஒரு கசப்பான சுவையை திரையில் பதிவிட்டு எதிர்ப்பைக் கிளப்பி இலவச விளம்பரத்தையும், வியாபாரத்தையும் தேடிக்கொள்தல் இதன் நோக்கமாகும். தமிழக எழுத்துலகிலும் மாற்று படைப்பிலக்கியம் அல்லது போரிலக்கியம் என்ற வகைக்குள் வைத்து புலி ஊறுகாய் தொட்டு எழுதப்படும் நாவல்கள், சிறுகதை தொகுப்புகள் சக்கை போடு போடுகின்றன. அவை போரில் நேரில் பங்கெடுத்தவர்கள், போரை பார்த்துக் கொண்டிருந்தவர்கள், ஈழப் போரை கூகிளில் தேடி படம் பார்த்தவர்கள், போரியல் ஆய்வுகளை அறைகளுக்குள் இருந்து நிகழ்த்தியவர்கள் என பல தரப்பட்டவர்களாலும் எழுதப்படுகின்றது. அவ்வப்போது புலி ஊறுகாய் தொட்டவர்களுக்கான விருதுகளும் வழங்கப்படுகின்றன.

புலம்பெயர்தளத்தில் புலி ஊறுகாய் நிரந்தர வதிவிட அனுமதிக்காகவும், தம் அரசியல் அடையாளத்தை துரோகி – மாவீரர் என்ற ஏதாவது ஒரு வகைக்குள் அடையாளப்படுத்திக் கொள்ளவும் பயன்படுத்திக்கொள்ளப்படுகிறது. 2009இற்கு முற்காலத்தில் “ஊருக்கு போனா புலி சுட்டுப்போடும்” என்றும் 2009இற்கு பிற்பட்ட காலத்தில் “புலி சுட்டதால் வந்த காயம். புலியில் இருந்ததால் நாட்டுக்கு போக முடியாது” என்ற காரணங்களை காட்டவும் புலி ஊறுகாய் தொடப்படுகிறது.

இறுதியாக, ஜெனீவா தீர்மானங்கள் வரும் வேளையில் அழுத்த குறைப்பு அல்லது கவனசிதைப்பு கருவியாக புலி ஊறுகாய் தேவைக்கேற்ற அளவில் சம்பந்தப்பட்ட தரப்பினரால் சுவைக்கப்படுகிறது. சுற்றிவளைப்பு, கைதுகள் போன்றவற்றுக்கு காரணம் காட்ட இத்தீவுக்கு இதுபோன்ற புலி ஊறுகாய் கிடைத்திருப்பது எவ்வளவுபெரிய தவம்.

ஜெரா

Jera