பட மூலம், TIME
அண்மைக்காலமாக இலங்கையில் ருவிட்டரில் ஏற்பட்டுவரும் சந்தேகத்துக்குரிய மாற்றங்கள் குறித்து Groundviews இன் இணை ஆசிரியரும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் சிரேஷ்ட ஆய்வாளருமான சஞ்சன ஹத்தொட்டுவ, தரவு ஆய்வாளரான (Data scientists) யுதன்ஜய விஜேரத்ன மற்றும் ரேமன்ட் செராடோ ஆகியோர் ஆய்வொன்றை மேற்கொண்டிருக்கின்றனர்.
கடந்த மார்ச் மாதம் கடைசியிலிருந்து பாரிய எண்ணிக்கையில் புதிதாக ருவிட்டர் கணக்குகள் ஒரு சுனாமி அலை போன்று உருவாக்கப்பட்டுவருவதை இவர்கள் அவதானிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். இந்த ருவிட்டர் கணக்குகள் சுயவிபர விளக்கங்கள், ருவிட்டுகள் மற்றும் ப்ரொபைல் படம் எவையும் இல்லாமல் இருப்பதையும் கண்டறிந்திருக்கிறார்கள்.
2018 மார்ச் மாதத்தில் திகன மற்றும் கண்டிப் பிரதேசத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்த வன்முறைச் சம்பவங்களை அடுத்து வெளியாகியிருந்த பல ருவிட்டுக்களுக்கு மத்தியில் வித்தியாசமான ஒரு ருவிட் பதிவாகியிருந்தது. இதனையடுத்து உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தாமல் வெளியாகும் செய்திகளுக்கு சமூக வலைத்தளங்களில் எதிர்வினையாற்றுவது அல்லது பதிலளிப்பது குறித்து ‘கிரவுண்ட்விவ்ஸ்’ ருவிட்டரில் எச்சரிக்கையொன்றை விடுத்தது.
2018 மார்ச் மாதம் 7ஆம் திகதி தொடக்கம் இன்னமும் ஒன்லைனில் இருந்துவரும் இந்த ருவிட் இதுவரையில் 110 பேரினால் விரும்பப்பட்டிருப்பதுடன், 23 தடவைகள் மீண்டும் ருவிட் செய்யப்பட்டுள்ளது. இந்த ருவிட் முஸ்லிம் ஆண்களில் ஒரு கும்பல் சிங்கள மக்களை தாக்குவதற்காக வீதிகளில் நின்றிருக்கின்றார்கள் என்ற விடயத்தை குறிப்பிடுகின்றது. களத்தில், ஊடகங்களில், பொலிஸ் அல்லது அரசாங்கத்திலிருந்த எந்தவொரு நபரும் இந்தச் செய்தியை உறுதிப்படுத்தியிருக்கவில்லை. அல்லது அச்சந்தர்ப்பத்தில் அல்லது அதன் பின்னர் அதே பிரச்சினையை அல்லது சம்பவம் குறித்த ஓர் அறிக்கையைக் கூட யாரும் வெளியிட்டிருக்கவில்லை. உண்மையில் இந்த ருவிட் ஜேர்மனி பிரான்ஸ்பேட் நகரிலிருந்து பிரசுரிக்கப்பட்டிருந்தது. மொபைல் தொலைபேசியில் அல்லது டெஸ்ரொப் கணணியில் இந்த ருவிட் செய்திக்கு பதிலளித்த பெருந்தொகையானவர்கள் இந்த விடயத்தை அவதானித்திருக்கமாட்டார்கள். நாட்டிற்குள்ளே என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்ற விடயம் குறித்து இலங்கைக்கு வெளியில் வாழும் ஒருவர் செய்தியொன்றை வெளியிடுவது சாத்தியமானதாக இருந்துவந்தாலும் கூட குறித்த ருவிட்டர் கணக்கை மேலோட்டமாகப் பார்க்கும்போது திகனை சம்பவத்துடன் தொடர்புடைய ருவிட்டை பாரதூரமாக எடுக்கவேண்டிய அவசியமில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. அந்தக் கணக்கினூடாக குப்பைகள், பூனைக்குட்டிகள், கரடி பொம்மைகள் மற்றும் உணவு போன்றவற்றின் புகைப்படங்களே பெரும்பாலும் ருவிட் செய்யப்பட்டிருக்கின்றன.
அறிக்கையை முழுமையாக வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்.
ஆசிரியர் குறிப்பு: தொடர்புபட்ட கட்டுரை, “நாமல் ராஜபக்ஷ, பொட்ஸ்களும் டிரோல்களும்: இலங்கையில் டிஜிட்டல் பிரச்சாரம் மற்றும் ஒன்லைன் கருத்தாடலின் புதிய வரையறைகள்”