படம் | Selvaraja Rajasegar Photo

இந்தக் கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் போது வவுனியாவில், கிளிநொச்சியில், திருகோணமலையில் என பல மாவட்டங்களிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சுழற்சி முறையில் உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு முன்னரும் இது போன்ற பல உண்ணாவிரதங்களும் ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றிருக்கின்றன. ஆனாலும், அவை எவையும் ஒரு மக்கள் எழுச்சியாக மேலெழவில்லை. இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் அடையாள எதிர்ப்புக்களும் கூட, ஒரு கட்டத்துடன் முடங்கிவிடும். இதற்கு முன்னர் தமிழ் மக்கள் பேரவையின் தலைமையில் இடம்பெற்ற எழுக தமிழ் பேரணிகளும் ஒரு நாள் நிகழ்வாகவே சுருங்கிவிட்டன. அது அவ்வாறுதான் முடிவுறும் என்பதை இப்பத்தியாளர், ஏலவே எதிர்வு கூறியிருந்ததையும் இந்த இடத்தில் நினைவு கொள்ளலாம். ஆக மொத்தத்தில் வடக்கு – கிழக்கு தழுவிய பெரும் மக்களெழுச்சி ஒன்று ஏற்படுவதற்கான வாய்ப்பு எதனையும் எதிர்வு கூற முடியவில்லை. ஆனாலும், ஆங்காங்கே மக்கள் அவ்வப்போது ஒன்று கூடுகின்றனர். தங்களால் முடிந்தவரை ஒரு எதிர்ப்பை காண்பித்துவிட்டு பின்னர் கலைந்து செல்கின்றனர். ஆனால், இவ்வாறான நிகழ்வுகள் அனைத்தும் ஏதோவொரு வகையில் சமூகத்தை அசைத்துக் கொண்டிருக்கிறது. அந்த அசைவு, ஒரு எழுச்சியாக அல்லது ஒரு பரந்துபட்ட மக்கள் விழிப்புணர்வாக உருமாற வேண்டுமாயின் அதற்கு ஒரு வலுவான, கொழும்பிடம் சரணாகதி அடைவதன் மூலம் எதனையும் பெற முடியாதென்னும் நிலைப்பாட்டைக் கொண்ட, ஒரு தலைமை அல்லது கட்சிகளின் கூட்டு அவசியம். அவ்வாறானதொரு தலைமைக்கான சகல ஆற்றலும் கூட்டமைப்பிடம் உண்டு. ஆனால், அதனால் தனது ஆற்றலை ஒன்றுதிரட்டி அதனை ஒரு மக்கள் சக்தியாக மாற்ற முடியாதிருக்கிறது. இப்படி நாம் கூறுகின்ற போது சிலர் கேட்கலாம் – அப்படியென்றால் அரசாங்கத்துடன் பேச வேண்டியதில்லையா? நிச்சயம் பேச வேண்டும். பேசாமல் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், பேசுவது என்பதற்கும், எப்படிப் பேசுவது என்பதற்கும் இடையில் பெரிய வேறுபாடுண்டு. இந்த விசயங்களை கவனியுங்கள் என்பதற்கும் நீங்கள் இந்த விடயத்தில் தொடர்ந்தும் பொறுப்பற்று நடந்துகொள்வீர்களானால், நாங்கள் இவ்வாறான சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டிவரும் – என்று பேசுவதற்கும் இடையில் பெரிய வித்தியாசம் உண்டல்லவா?

உண்மையில் மக்கள் அவ்வப்போது வீதிக்கு வருகின்றனர் என்றால், அவர்களை பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டிருக்கின்ற தலைமையின் மீதான நம்பிக்கையை, அவர்கள் இழந்து செல்கின்றனர் என்பதுதான் அதன் பொருள். அதற்காக மக்கள் பிறிதொரு அமைப்பை நோக்கி ஈர்க்கப்படவும் இல்லை. ஏனெனில், அவ்வாறானதொரு வேலைத்திட்டத்துடன் எந்தவொரு அரசியல் கட்சியும் வடக்கு கிழக்கில் இல்லை. மக்கள் தாங்களாக கூடுகின்ற இடங்களில் போய் நிற்பதே தற்போது அரசியல் கட்சிகளின் பிரதான பணியாக மாறியிருக்கிறது. அரசாங்கத்தை பொறுத்தவரையில் தமிழ் தலைமைகளில் இயலாமை, அத்துடன் அவர்கள் தங்களுக்குள் ஒன்றுமையாக இல்லை போன்ற காரணங்களிலிருந்தே விடயங்களை கையாள முற்படுகின்றது. அதில் அவர்கள் வெற்றியும் பெற்றுவருகின்றனர். நிலைமைகள் இப்படியிருக்கின்ற சூழலில்தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் மீளவும் குத்துவெட்டுக்கள் முன்னரை காட்டியிலும் சற்று வீரியத்துடன் தலைநீட்டியிருக்கிறது. தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏனைய கட்சியின் தலைவர்களின் ஆற்றல் தொடர்பில் கூட பகிரங்கமாக பேசுகின்ற நிலைமை தோன்றிருக்கிறது. இது எந்த வகையிலும் ஆரோக்கியமானதல்ல. தற்போது கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்துவரும் கட்சிகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு ஒரு கடந்தகாலம் உண்டு. அந்தக் காலமென்பது சரிகளோடும் பிழைகளோடும் அவர்கள் பயணித்த காலமாகும். சரிகளை விட்டுவிட்டு, பிழைகளை மட்டும் பிரித்தெடுத்து விவாதங்கள் செய்ய நேரிட்டால், அது தற்போது கூட்டமைப்பின் தலைவராக இருக்கின்ற சம்பந்தனையும் விட்டுவைக்காது. தமிழரசு கட்சியின் தலைவராக இருக்கின்ற மாவை சேனாதிராஜாவையும் விட்டுவைக்காது. எனவே, ஒரு அங்கத்துவ கட்சியின் தலைவரை பற்றி பிறிதொரு கட்சியின் தலைவர் பகிரங்க தளங்களில் விமர்சிப்பது, குறைசொல்லுவதானது, அனைத்து வழிகளிலும் அரசாங்கத்தின் நிகழ்ச்சிநிரலையே பலப்படுத்த உதவும். ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்னும் ஒரு பழமொழியுண்டு. எனவே, கூட்டமைப்பின் தலைவர்கள் தங்களுக்குள் கூடி தெளிவானதொரு முடிவை எடுக்க வேண்டிய தங்களின் பொறுப்பை இனியும் தட்டிக்கழிக்க முடியுமா?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம் எவ்வாறு நிகழ்ந்ததென்று, அதில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு கட்சியின் தலைவர்களும் நன்கறிவர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் சர்வதேச மத்தியஸ்தம் ஒன்றின் ஊடான பேச்சுவார்த்தை மேசையில் அமர்கின்ற போது, எங்களுக்குள் பேதங்களை காண்பித்துக் கொண்டு செல்லக் கூடாது என்னும் அடிப்படையில்தான் இவ்வாறானதொரு கூட்டமைப்பை உருவாக்கியது. இதற்கு அப்பாலும் சில காரணங்கள் அவர்களுக்கு இருந்திருக்கலாம் ஆனால், மேற்படி காரணமே முதன்மையானது. ஆனால், இன்று அரசாங்கத்துடன் உறுதியாக பேச வேண்டிய தருணத்தில், கூட்டமைப்பு தங்களுக்குள் தெளிவானதொரு கொள்கைசார் பிளவை வெளிப்படுத்தியிருக்கிறது. அரசாங்கத்திற்கு கால அவகாசம் கொடுக்கும் விடயத்தில் முதன் முதலாக கூட்டமைப்பிலுள்ள மூன்று கட்சிகளும் ஒருமித்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கின்றன. இது ஒரு தெளிவான அரசியல் செய்தியை வெளிப்படுத்தியிருக்கிறது. அதாவது, தொடர்ந்தும் தமிழரசு கட்சியின் முக்கியமாக சம்பந்தன் – சுமந்திரன் ஆகியோரின் நிலைப்பாட்டுடன் ஒத்தோடிக் கொண்டிருக்கும் பணியை நாம் செய்யப் போவதில்லை. உண்மையில் இதுவரை தமிழசு கட்சியின் தன்னிச்சையான நிலைப்பாட்டிற்கு செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான டெலோவும் ஒரு காரணம் என்றவாறான கருத்தொன்று நிலவியது. ஆனால், அதனை பொய்ப்பிக்கும் வகையில் செல்வம், பொருத்தமானதொரு தருணத்தில் தங்களின் கட்சிக்கென ஒரு நிலைப்பாடுண்டு என்பதை தெளிவாக வெளிப்படுத்தியிருக்கின்றார். டெலோ ஒருபோதும் எந்தவொரு கட்சியினதும் தன்னிச்சையான எதேச்சாதிகார செயற்பாட்டிற்கு இடமளிக்கப் போவதில்லை என்பதை செல்வம் தெளிவாக பதிவு செய்திருக்கின்றார். இது தொடர்பில் டெலொவின் செயலாளர் நாயகம் சிறிகாந்தா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “டெலோ ஒருபோதும் தமிழரசு கட்சியின் தன்னிச்சையான போக்கை ஏற்றுக்கொள்ளாது” என்பதைத் தெளிவாக வலியுறுத்தியிருக்கின்றார். மேலும், தமிழசு கட்சி தொடர்ந்தும் இவ்வாறு தன்னிச்சையாகத்தான் செயலாற்றப் போகின்றதென்றால், அதனை தமது கட்சி ஒரு அரசியல் சவாலாக ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்திருக்கின்றார். இதன் மூலம் எதிர்காலத்தில் மூன்று கட்சிகள் மட்டுமே, கூட்டமைப்பாக செயற்பட நேரிடும் என்னும் எச்சரிக்கையும் பொதிந்திருக்கிறது. அவ்வாறான ஒரு முடிவு எடுக்கப்படுமாயின், சம்பந்தன் கூட்டமைப்பின் தலைவராகவும், சுமந்திரன் கூட்டமைப்பின் பேச்சாளராகவும் செயற்பட முடியாத நிலைமையும் ஏற்படும்.

உண்மையில் இந்த விடயங்களை தொகுத்து நோக்கினால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் தமிழரசு கட்சிக்கும் இடையில் ஒரு தெளிவான பிளவு தோன்றிவிட்டது. ஆனால், சம்பந்தனுக்கோ கூட்டமைப்பின் இருப்பு மிகவும் அவசியம். கூட்டமைப்பின் தலைவராக இருப்பதால்தான் சம்பந்தனால் தமிழ் மக்களின் தலைவராக இருக்கமுடிகிறது. அவர் தொடர்ந்தும் தமிழ் மக்களின் தலைவராக இருக்க வேண்டுமாயின், அவருக்கு கூட்டமைப்பு அவசியம். ஆனால், சுமந்திரனுக்கோ அவ்வாறான தேவைகள் எதுவுமில்லை. அதனால்தான் சுமந்திரன் வெளிப்படையாகவே மற்றவர்களை விமர்சிக்கின்றார். சில விடயங்களை பேச வேண்டிவரும் என்றும் அவர் ஏனைய கட்சிகளை எச்சரித்திருக்கின்றார். ஏனைய கட்சிகளின் தலைவர்களின் தகுதிநிலை தொடர்பில் கேள்வி எழுப்புகின்றார். சுமந்திரனைப் பொறுத்தவரையில் அவர் தமிழரசு கட்சி தனித்து இருப்பதுதான் சரியானதென கருத இடமுண்டு. எனெனில், சம்பந்தனுக்கு அடுத்து, தமிழரசு கட்சியை வழிநடத்தும் பொறுப்பு அவரிடமே வரவுள்ளது. தற்போதைய சூழலில் சுமந்திரனில்லாத ஒரு தமிழரசு கட்சியை, கற்பனை செய்ய முடியாதளவிற்கு நிலைமைகள் அவருக்குச் சாதமாக இருக்கின்றன. மேலும் கூட்டமைப்பாக இருக்கின்ற போது பலருக்கும் பதில் சொல்ல வேண்டிய தேவையும் எழலாம். இதனைத் தவிர்க்க வேண்டுமாயின் தமிழரசு கட்சி தனியாக இருப்பதே சரியானதென அவர் கருத இடமுண்டு. இந்த விடயங்களை ஏனைய கட்சிகளின் தலைவர்கள் விளங்காமலில்லை. இந்தக் கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் போது, தமிழரசு கட்சி வரவுள்ள உள்ளூராட்சித் தேர்தலை இலக்குவைத்து, தங்களது கட்சி கிளைகளைப் பலப்படுத்தும் பணியை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது. தமிழரசு கட்சிக்கென ஒரு பத்திரிகையையும் வெளிக்கொண்டுவரும் பணிகளிலும் அது ஈடுபட்டுவருகிறது. தமிழரசு கட்சியின் கனடா கிளையினர், இதற்கான நிதியை வழங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அவ்வாறானவர்களும் கூட்டமைப்பு தேவையில்லை என்னும் நிலைப்பாட்டையே வெளிப்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலைமை தவிர்க்க முடியாமல் டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், டி.பி.எல்.எப் (புளொட்) ஆகிய கட்சிகள் ஓரணியாக செயற்பட வேண்டிய புறச் சூழலை கனியவைத்திருக்கிறது. தமிழரசு கட்சி தனக்கென ஒரு தனியான பாதை இருப்பது சரியென்று கருதினால், ஏனையவர்கள் தங்களின் பாதையைத் தீர்மானிப்பது அவசியம்தானே! அதனை எவ்வாறு தவறென்று கூற முடியும்? ஆனால், தீர்மானிக்கும் ஒவ்வொரு பாதையும் மக்களுக்கு நன்மையைக் கொண்டுசேர்பிக்கக் கூடிய பாதையாக இருக்கிறதா என்பதை சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்க வேண்டியிருக்கிறது. இது அரசியல் கூட்டுக்கான காலமே தவிர தனிக்கட்சிப் பெருமைகள் பேசுவதற்குரிய காலமல்ல.

யதீந்திரா