படம் | Getty Images, BUDDHIKA WEERASINGHE, TIME

ஜனாதிபதி சிறிசேன நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றப் போகின்றார் என்கின்ற அறிவிப்பு வெளிவந்த நாள் முதல் நாடு முழுவதும் ஒரு பரபரப்பு. ராஜபக்‌ஷவை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன் கொண்டுவரக் கூடாதென்ற நாடகம் நாடாளுமன்றத்தில் அரங்கேறிக்கொண்டிருந்த நேரத்தில் அது கலைக்கப்படப் போகின்றது என்பதுதான் எல்லோருடைய அனுமானமுமாக இருந்தது. ஆனால், இப்பொழுது தேர்தல்களைக் கொண்டு வருவது ஐக்கிய தேசியக் கட்சிக்கு மட்டுமே அனுகூலமானது என்பதும் பிளவுபட்டுக்கொண்டிருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இது பிரதிகூலமானது என்பதும் ஜனாதிபதி அறியாதவர் அல்ல. எனவே, என்னதான் செய்தி வரப்போகின்றதோ என எல்லோரும் காத்திருந்தனர். ஆனால், கடைசியில் பார்த்தால் ஆற்றப்பட்ட உரையோ இந்த அரசின் 100 நாள் வேலைத்திட்டம் பற்றியதாகவே இருந்ததைக் கண்டோம்.

புதிய அரசு வாக்குறுதி தந்த 100 நாள் வேலைத்திட்டத்தினைப் பற்றிப் பலவிதமான விமர்சனங்கள் நாடு பூராக எழுந்திருந்த வேளையிது. குற்றஞ் செய்தவர்கள் விரைவாகத் தண்டிக்கப்படவில்லை என்கின்ற அதிருப்தி. நல்லாட்சி எனக் கூறிக்கொண்டு வந்தவர்களே தங்கள் உறவினர்களையும் நண்பர்களையும் முன்னைய அரசிற்கு கூஜா தூக்கினவர்களையும் இந்த அரசில் முக்கிய பணிகளில் அமர்த்தியிருக்கிறார்களேயென்கின்ற ஆத்திரம். அவன்ட்கார்ட் பாதுகாப்பு நிறுவனத்தினர் போன்ற கண்ணுக்கு முன்னாலேயே சட்டபூர்வமற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் சுதந்திரமாக நடமாட எமது நீதித்துறை அனுமதித்து விட்டது என்கின்ற ஆவேசம். நிறைவேற்று ஜனாதிபதி முறையை அகற்ற வந்தவர்கள் 19ஆம் திருத்தச் சட்டம் என்கின்ற பெயரில் அந்த அதிகாரங்களை முழுவதுமாக அகற்றாதது மட்டுமல்லாது அவற்றை அப்படி அப்படியே பிரதம மந்திரியின் பதவிக்கு மாற்ற முயற்சி செய்ததும் கொடுத்த எரிச்சல். இதுகூட இப்போது உயர் நீதிமன்றத்தினால் தடுக்கப்பட்டு விட்டது. இவ்வாறு பலதரப்பினர் மத்தியில் எழுந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்க ஜனாதிபதி விரும்பினார் போலும். எது காரணமெனினும் அவரது உரையின் தொனி மிகவும் சுவாரசியமாக இருந்தது.

முதலாவதாக, அது உத்தியோகபூர்வ உரையென்பதைவிட நாட்டு மக்களுடனான சம்பாஷணை போன்றிருந்தது. ஒழுங்காகப் படிக்காமல் குழம்பித் திரிகின்ற தனது விடலைப் பருவ மகனுக்கோ மகளுக்கோ ஒரு பெற்றார் எப்படிப் பேசுவாரோ அப்படியிருந்தது. “இந்த நேரத்தில் இதுதான் எனக்கு ஞாபகம் வருகின்றது…” “நான் இப்படிச் செய்தால் அது தவறா?”, “பலர் இப்படி என்னைப் பற்றி விமர்சனங்கள் முன்வைக்கிறார்கள்… ஆனால், வேறு யார் என்னைப் போல் இப்படிச் செய்ய முன்வருவார்… உண்மையில் எனக்குத் தெரியாது…” “நான் சென்ற இடங்களில் இவரைச் சந்தித்தேன், அவரைச் சந்தித்தேன். எல்லோரும் எவ்வளவு பாசமாகப் பழகினார்கள் தெரியுமா?” என்பது போன்ற சாதாரண சம்பாஷணைத் தொனி உரை முழுவதும் விரவியிருந்தது. சிங்கள மக்களின் அரசியல் அறிவுக்கு இப்படித்தான் பேச வேண்டுமாக்கும் என உள்ளூர நகைச்சுவையாக இருந்தாலும், அவரது உரை மனதைத் தொடும் வகையில் இருந்ததை நிராகரிக்க முடியாது. ஒரு ஜனாதிபதியாக இல்லாமல் உண்மையாகவே நாட்டு மக்களினால் நியமிக்கப்பட்ட சேவகனாக அவர் நின்றிருந்தார்.

இன்னமும் ராஜபக்‌ஷ ஆட்சியினை ஆதரிப்போர் பற்றிய சூசகமான வினக்கத்துடன் அவரது உரை ஆரம்பமானது. இந்த உலகில் புரட்சி மாற்றங்கள் நிகழ்ந்த நாடுகளிலெல்லாம் எதிர்ப்புரட்சியும் நடந்திருக்கின்றது. ஜனநாயகமும் சுதந்திரமும் வழங்கப்பட்டால்கூட அடிமை வாழ்வையே திரும்ப அவாவும் சிலர் இருக்கும் இயல்பு சமூகத்தில் சர்வ சாதாரணமானதே என ராஜபக்‌ஷ ஆதரவாளர்களைப் பட்டும் படாமலும் கடித்தார். இதுதான் அவரது உரையின் அறிமுகமாக இருந்தது. அடுத்து, தனது அரசு என்ன செய்தது எனப் பலரும் வினவுதாக எங்களுக்குக் கூறினார். “கண்ணால் காணமுடியாத, கையால் தொடமுடியாத” பல சாதனைகள் இருக்கின்றன என்பதே அவரது வாதமாக இருந்தது. அதில் முதன்மையாக, சர்வதேச சமூகத்தின் அங்கீகாரம் மீண்டும் எங்கள் நாட்டுக்கு கிடைத்தது எடுத்துக் கூறப்பட்டது. திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயகவின் காலத்துக்குப் பின்னராக முதன் முறையாக சகல நாடுகளினதும் மரியாதைக்குரிய அணி சேராக்கொள்கையைக் கடைப்பிடிக்கும் அரசாக தனது அரசை எடுத்துக்காட்டினார். இந்தக் கருத்து இந்திய சீனா உறவுகளை சமப்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்டிருக்கலாம். அடுத்து, முன்னைய ஆட்சியில் பய உணர்வினால் ஆட்கொள்ளப்பட்டவர்களாக மக்கள் இருந்ததை சுட்டிக் காட்டினார். “தேர்தலுக்கு முன்பு நான் தொலைபேசியில் யாராவதொரு அலுவலருடன் பேசினால், சேர் என்னுடைய தொலைபேசியில் ஒட்டுக் கேட்கிறார்கள், உங்களுடன் பேச முடியாது என அவர்கள் என்னிடம் கூறினார்கள்” என்று பழைய கதைகளை நினைவூட்டினார். தன்னைப் பலர் வலுவற்ற தலைவராகக் காண்கின்றனர் என்பதையும் ஒளிவு மறைவின்றி அவர் கூறினார். “எனக்கு நீங்கள் அதிகாரம் கொடுத்ததே எனது அதிகாரத்தைப் பகிர்வதற்காகத்தான். எனவேதான் அந்த அதிகாரத்தை நான் பிரயோகிக்காமல் விட்டேன். தனக்கு மக்களால் வழங்கப்பட்ட அதிகாரத்தை தானே விட்டுக்கொடுப்பதற்கு இந்த உலகில் முன்வந்த வேறெவரையும் எனக்குத் தெரியாது…” என்று புன்சிரிப்புடன் கூறி திரும்ப சிங்கள மக்களின் மனதை ஈர்த்தார். அதே போலவே வடக்கில் காணிகளைத் தமிழ் மக்களுக்குக் கொடுத்தது பற்றிய விமர்சனங்களை எடுத்துக்கொண்டார். “இங்கும் கொழும்பில் அலரி மாளிகையைச் சுற்றி ஜனாதிபதி மாளிகையைச் சுற்றி பல தனியார் காணிகள் இராணுவத்தினரால் எடுக்கப்பட்டிருந்தன. இராணுவத்தினருக்குப் பாதிப்பேற்படாவகையில், பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படா வகையில் நாம் அவற்றை உரியவர்களிடம் சேர்ப்பது தவறா?” என மக்களிடமே கேள்வியைத் திருப்பிப் போட்டார். மொத்தத்தில​இதுவரைகாலமும் ஜனாதிபதிப் பதவி வகித்த அரசியல்வாதிகளிடமிருந்து இவர் வேறுபட்டு காணப்படுவது தெளிவாகத் தெரிகின்றது. ஆயினும், பௌத்த சிங்களக் கட்டமைப்பினைத் துறந்து கொண்டு முழுப்புரட்சிக்கு இவர் முன்வருவாரா என்பது கேள்விக்குரிய விடயமாகும்.

தனது அரசின் 100 நாள் வேலைத்திட்டத்திலொன்றாக தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான செயலகத்தை தாபித்தது பற்றியும் ஜனாதிபதி குறிப்பிட்டார். இந்த செயலகம் தற்போதுதான் தாபிக்கப்பட்டு வரும் நிலையில் அவரால் அதனைப் பற்றி விலாவாரியாக விளக்க முடியாமல் போனது. ஆனால், உண்மையில் வழக்கம் போலில்லாது இதய சுத்தியுடன் இது இயங்கினால் அந்தச் செயலகம் சாதிக்கக்கூடிய பல விடயங்கள் இருக்கின்றன. இதற்கு இப்பொழுது சந்திரிகா அம்மையாரைத் தலைமையாக நியமித்திருக்கின்றார்கள். இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வை ஆழப்படுத்தி இன மோதல்களைத் தவிர்த்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும். இவ்வாறு இடைமாறுபாட்டுக்கால நீதியின் இழப்பீடு மற்றும் மீண்டும் முரண்நிலை நிகழாது தடுத்தல் என்னும் பின்னிரண்டு அம்சங்களை இது கருத்தில் கொள்ளுகின்றது. அதனடிப்படையில், காணிப்பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தல், மொழிக்கொள்கையை சரிவர அழுலாக்கல், கல்வி அபிவிருத்திக்கு உதவுதல், போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பொருத்தமான பொருளாதாரத் திட்டங்களை முன்னெடுத்தல் போன்ற பரந்த திட்டங்களை செயற்படுத்த ஆயத்தமாகின்றது.

காணி செயற்திட்டத்தின் கீழ் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்பட்ட காணிகள் மட்டுமன்றி ஆங்காங்கே சிங்களக் குடியேற்றங்களின் பயனாக சிங்கள சமூகத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளையும் கருத்தில் எடுத்து அம்முரண்பாடுகளையும் தீர்ப்பதற்கு இச்செயலகம் முன்வந்துள்ளது. அதேபோன்றே வடக்கில் குடியமர முயற்சிக்கும் முஸ்லிம் மக்களின் காணிகள் ஆயுதப் படையினராலும் தமிழ் பிரதேச வாசிகளினாலும் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதும் கருத்தில் கொள்ளப்படவிருக்கின்றன. காணி பகிர்ந்தளிக்கப்படும்போது அது குடும்பத்தலைவன் என்கின்ற ரீதியில் கணவனுக்கு மட்டும் அளிக்கப்படாமல் கணவனுக்கும் மனைவிக்கும் இணையுறுதியை வழங்கவும் ஏற்பாடு செய்ய இதனால் முடியும். கல்வித்துறையில் தமிழ் மூல பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கான பரிகாரங்கள் தேடப்படவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. அதேபோல, அரச நிறுவனங்களிலும் கல்வி நிறுவனங்களிலும் தமிழ் மொழியில் பணி செய்யக்கூடிய அலுவலர்களை நியமிக்கவும் சிபாரிசுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பொருளாதாரத் திட்டங்களை வழங்குவதற்கு அம்மக்களுடன் சந்தித்து கலந்துரையாடி அவர்கள் பங்கேற்புடன் இத்திட்டத்தினை நிறைவேற்றவும் நோக்கமிருக்கின்றது. தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான இந்த செயலகத்துடன் தமிழ் மக்கள் முழுதாக ஒத்துழைத்து அழுத்தக் குழுவாகவும் செயற்பட்டு அதனை பயனுறுதி மிக்க திட்டமாக மாற்றவேண்டும். இப்படிப் பார்க்கப் போனால், எத்தனையோ வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படாமலிருந்தாலும்கூட இந்த அரசின் 100 நாள் ரெக்கோர்ட் பரவாயில்லைத்தானே.

சாந்தி சச்சிதானந்தம்