படம் | AP Photo/Eranga Jayawardena, NEWS.YAHOO

ஈழத்தமிழ் மக்களது கூட்டு மனித உரிமைத் தேவைகளை (Collective Human Right Needs) சர்வதேசமும் இலங்கை அரசும் புரியா தன்மை காணப்படுகின்றது. இதனை வெளிப்படுத்த முனையும் ஈழத்தமிழ் மக்களிற்கு எதிராக இராஜதந்திர அடக்குமுறை பிரயோகிக்கப்படுகின்றது. இதனை எதிர்கொள்ள எமது சமூக நிலை, அரசியல் நிலை, இராஜதந்திர நிலைகளில் எமக்கு இதுகாறும் ஏற்பட்ட அழிவுகளையும் அதன் விளைவுகளையும் எடுத்துக் காட்ட வேண்டும். தமிழ் மக்களது கூட்டு மனித உரிமைப் பருப்பொருளாக தமிழீழம் விளங்குகின்றது.

தமிழ் மக்களது கூட்டு மனித உரிமைத் தேவைகள், தமிழ் மக்கள் மீதான இன அழிப்பிற்கு வெளிப்படையான சர்வதேச விசாரணைகளையும் சிபாரிசுகளையும் எதிர்பார்த்து உள்ளது. இலங்கையின் இறைமை பிரித்தானியரால் சிங்களவரிடம் கையளிக்கப்பட்ட ஆண்டான 1948 முதலே தமிழ் மக்களை அரசியல் ரீதியாக சிறுபான்மையாக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு வருகின்றனர். உலகின் தமிழ் அடையாளத்தைப் பாதுகாக்க இலங்கையின் வடக்குக் கிழக்கில் சுதேச ஆட்சி அலகு மிகவும் அவசியமானதாகும். இலங்கையில் ஆயுதத்தினை அரசியல் காப்பாகப் பயன்படுத்தல் தவிர்க்கப்படல் வேண்டும். நட்பு ரீதியான அரசியல் பரிவர்த்தனைகள் தமிழ், சிங்கள மக்களுக்கு இடையே உருவாக்கப்படல் வேண்டும். தமிழ் மக்கள் மீதான இன அழிப்புத் தொடர்பான விழிப்பினை கூட்டு மனித உரிமைத் தேவைகள் என்ற தொனிப்பொருளில் மேற்கொள்ள வேண்டும்.

கூட்டு மனித உரிமைத் தேவைகளை அணுகுவதால்,

  • தொடர்ந்தும் தமிழினம் அழியாது இருக்கும்.
  • உலக நியதிக்கு ஏற்ப பாதுகாப்பினை பெறும்.
  • சுய அரசியல் ஆளுகையை ஐ.நா. அனுசரணையுடன் பெறும்.
  • தமிழின அழிப்பில் ஈடுபட்ட, ஈடுபடும் குற்றவாளிகள் அடையாளமிடப் படுவர்.
  • தமிழ் மக்களிற்கு மனிதத்துவம் கிடைக்கும்.

ஈழத்தமிழின அழிப்பின் கடந்த காலங்களை அணுகும்போது, அரசியல்வாதிகளின் ஊழல்களை மறைக்க தமிழினம் அழிக்கப்பட்டது. போபஸ் பீரங்கி ஊழலை மறைக்க இந்தியப் பிரதமர், வட கிழக்கில் இராணுவ நடவடிக்கையை எடுத்தார். தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சியில் ஈழத்தமிழினம் மீது அனுதாபத்தை தெரிவிக்காது இருக்க ஜெயாவின் சொத்துக்குவிப்பு, மத்திய அரசால் பிரயோகிக்கப்பட்டு இலங்கைக்கு உதவியது. அவ்வாறே 2009 அழிவின்போது கருணாநிதியை 3G அலைக்கற்றை ஊழல் மூலம் மௌனம் ஆக்கிய மத்திய அரசு இலங்கைக்கு இராணுவ, தொழில்நுட்ப உதவிகளை வழங்கியது.

இலங்கையின் தமிழின அழிப்பிற்கான சிங்கள மக்களின் ஆதரவே மஹிந்த பில்லியன் கணக்கில் ஊழல் புரியக் காரணமாக அமைந்தது. மஹிந்தவின் ஊழல்களின் பெறுமதி என்பது ஈழத்தமிழ் மக்களது மறைக்கப்பட்ட கூட்டு மனித உரிமைத் தேவைகளாகும்.

எதிர்வரும் ஜெனிவா மனித உரிமைக் கூட்டத் தொடரின் இலங்கை அரசின் போர்க்குற்றம் தொடர்பான விசாரணையில் மஹிந்த அரசின் அளவு கடந்த ஊழல்களின் பெறுமதியே தமிழ் மக்கள் மீதான கூட்டு மனித உரிமை மீறல்களிற்கான வெகுமதி என்பதை ஐ.நா. விசாரணையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இதனை பின்வரும் வரைபின் கணித வடிவில் காட்டலாம்.

சர்வாதிகாரிகள் தமது சட்டவிரோதச் செயல்களை மறைக்க சிறுபான்மையினரை மேலும் ஒடுக்கி உள்ளனர். இதுவே தமிழர்களிற்கு நடைபெற்றது. மஹிந்த அரசின் ஊழல் தொடர்பான விசாரணையின் பரிமாணம், ஈழத்தமிழரின் இன அழிப்பின் சார்பில் தங்கி உள்ளது. எனவே, மஹிந்த அரசின் ஊழல் மோசடிகளிற்கும் தமிழின அழிப்பிற்கும் உள்ள தொடர்பினை 2015 ஜெனிவா கூட்டத் தொடரில் இலங்கைப் பிரதிநிதிகள் எடுத்துக்கூறல் வேண்டும். 2009 தொடக்கம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இலங்கை அரசு மீது நடவடிக்கை எடுக்கத் தவறியமையே 2015 தை எட்டு வரை மஹிந்த ஊழல் புரியச் சுலபமாகியது. ஆனால், தமிழ் மக்களது வாக்குகள் அதனை தற்காலிகமாக நிறுத்தி உள்ளது. ஆனால், பதவி ஏற்றுள்ள புதிய அரசும் தமிழ் விரோத செயல்களை செய்யாது இருப்பதற்கு ஐ.நா. மனித உரிமைப் பேரவை விஞ்ஞான ரீதியில் இலங்கைக்கு அறிவுறுத்த வேண்டும். தமிழ் மக்களது கூட்டு மனித உரிமைத் தேவைகளிற்கு உடனடித் தீர்வு கிடைக்க வேண்டும்.

ஈழத்தமிழர்களுக்கான ஒளிமயமான அரசியல், பொருளாதார, வாழ்வியல் முன்னேற்றத்தினை பெற வட கிழக்கின் உள்ள சிங்கள ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்படல் வேண்டும். இதற்குரிய இராஜதந்திர நகர்வுகள் முற்றரையில் விரிக்கப்பட்ட சேலையினை சேதம் இல்லாது எடுத்து உடுத்தல் போன்றதே. இதற்கு தமிழ் மக்கள் இராஜதந்திர அடக்கு முறையில் இருந்து விடுபடல் இன்றியமையாததாகும்.

டாக்டர். சி. யமுனானந்தா