படம் | படம் | The Associated Press Photo/Eranga Jayawardena, FOX NEWS

தற்போது அரசியல் கட்சிகளின் தனித்துவம் தொடர்பான கேள்விகள் எழுகின்றன. ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் கட்சிகளின் தனித்துவம் பற்றிய சந்தேகங்கள் அரசியல் விமர்சகர்களிடையே அதிகரித்துள்ளன. அரசில் இருந்து விலகி அமைச்சர் மைத்திரிபால சிறிசேன உட்பட பலர் பொது எதிரணியில் இணைந்து கொண்ட பின்னர் மேலும் பலர் அரசில் இருந்து விலகிச் செல்லும் வாய்புள்ளதாகக் கூறப்படுகின்றது.

அடையாளம் என்ன?

பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அன்னம் சின்னத்தில் போட்டியிடவுள்ளார். அதற்கு பொது எதிரணியில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளும் ஆதரவு கொடுத்துள்ளன. பொது எதிரணியில் இணைந்துள்ள கட்சிகளுக்கு இடையே அரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் பொது எதிரணியாக செயற்பட்டு வருகின்றனர். ஆனால், பொது எதிரணி என்ற வரையறைக்குள் நின்று கொண்டு எவ்வாறு தங்களுடைய கட்சியின் தனித்துவத்தை தொடரப் போகின்றனர் என்பதும், பொது வேட்பாளர் வெற்றி பெற்றால் பொது எதிரணியின் அரசியல் சார்ந்த செயற்பாடுகள் எவ்வாறு அமையும் என்பது குறித்தும் சரியான தீர்மானங்கள் இல்லை

ஐக்கிய தேசிய கட்சிதான் பொது எதிரணிக்குள் பெரிய கட்சியாக உள்ளது. அரசில் இருந்து விலகிச் சென்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள் சிறிய குழுவாகவும் மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகள் மற்றுமொரு குழுவாகவும் செயற்படுகின்றன. ஜே.வி.பி. மைத்திரிபால சிறிசேனாவை ஆதரித்தாலும் பொது எதிரணியுடன் தொடர்ச்சியாக செயற்படுவது குறித்து இதுவரை நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. ஏனெனில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் முக்கிய பங்காளிகளாக பொது எதிரணியில் செயற்படுவதால் முதலாளித்துவ மற்றும் மேற்கத்தைய நாடுகளின் சிந்தனைக்குள் அவர்கள் சென்று விடுவார்கள் எனவும், அது இலங்கை அரசின் இறைமைக்கு ஆபத்தானது என்றும் ஜே.வி.பி. கருத இடமுண்டு.

மஹிந்தவுக்கான ஆதரவு

பௌத்த – சிங்கள தேசியவாதம் என்ற கருத்தின் அடிப்படையில் 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஜே.வி.பியும், ஜாதிக ஹெல உறுமயவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஆதரவு கொடுத்திருந்தன. இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் தலையீடுகள் நீக்கப்பட வேண்டும் என்பதும், விடுதலைப் புலிகள் அழிக்கப்பட வேண்டும் என்ற இனவாத சிந்தனையுடனும் அவர்கள் அன்று செயற்பட்டனர். ஆனால், இன்று சிங்கள – பௌத்த தேசியவாத அளவுகோளை உயர்த்துவதிலும், யுத்த வெற்றியை கொண்டாடுவதிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தனியுரிமை பெற்றுவிட்டார் என்ற ஆதங்கத்தில்தான் அவர்கள் அரசிலிருந்து விலகினர்.

ஜே.பி.வி., மஹிந்த ராஜபக்‌ஷ அரசுக்கு ஆரம்பத்தில் ஆதரவு கொடுத்திருத்தாலும் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள்ளேயே அரசின் போக்கை விமர்சிக்கத் தொடங்கி எதிர்க்கட்சியாக மாறிவிட்டது. ஆனால், ஜாதிக ஹெல உறுமய கடந்த மாதம் தான் அரசிலிருந்து விலகியது. இடதுசாரி கொள்கையுடன் முற்போக்குவாதம் பேசிய அமைச்சர் ராஜித சேனாரத்ன போன்ற அமைச்சர்களும் கடந்த மாதம்தான் வெளியேறினர். ஆனால், இவர்களின் அரசியல் கருத்தில் மாற்றங்கள் எற்பட்டதாகத் தெரியவில்லை. மஹிந்த ராஜபக்‌ஷ அரசின் அடக்குமுறை, அராஜகம் என இவர்கள் விமர்சிப்பது பௌத்த – சிங்கள தேசியவாதத்தை கொண்டு செல்வதற்கு ஜனாதிபதியும் அவரது உறவினர்களும் தடையாக இருக்கின்றனர் அல்லது அதற்கான தனியுரிமையை அவர்கள் கையாளுகின்றனர் என்பதுதான்.

ஏனைய சமூகங்களுக்காக அல்ல

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் அராஜகம், அடக்குமுறை என்பதும் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும் என அவர்கள் கூறுவதும் நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் உள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வை முன்வைக்க வேண்டும் என்ற நோக்கில் அல்ல. மாறாக, தற்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கையாளுகின்ற சிங்கள இனவாதத்தை கைமாற்றி எடுப்பதே பிரதான நோக்கம். இந்த இடத்திலேதான் அவர்கள் தங்கள் கட்சிகளுக்குரிய தனித்துவத்தைக் கூட சிந்திக்காது பொது எதிரணியில் இணைந்து கொண்டனர் என்ற முடிவுக்கு வரலாம். பொது எதிரணிக்குள் இருக்கக் கூடிய இடதுசாரி கட்சிகளை தவிர ஐக்கிய தேசிய கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும், ஜாதிக ஹெல உறுமயவும் ஜனாதிபதித் தேர்தலின் பின்னரும் கூட தொடர்ந்து செயற்படக் கூடிய நிலைமைகள் உண்டு.

ஏனெனில், சிங்கள – பௌத்த தேசியவாதமே தற்போது வெற்றிக்கான அரசியல் மூலதனமாக இருப்பதால் விரும்பியோ விரும்பாமலோ கட்சிகளின் தனித்துவம் என்பதை விட முதலில் ஆட்சியை கைப்பற்றி பின்னர் வேறு அரசியல் நாகர்வுகள் பற்றி யோசிக்கலாம் என இந்தக் கட்சிகள் முடிவு செய்திருக்கின்றன. சமஷ்டி முறை பற்றி பேச முடியாது என பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். ஆனால், 13 பிளஸ்தான் தீர்வு என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா உறுதியளித்துள்ளார். ஆக, இனப்பிரச்சினை விடயத்தில் முன்னுக்கு பின் முரணான கருத்துக்கள்தான் பொது எதிரணயிடம் உண்டு

வெற்றி பெற்ற பின்னர்?

ஆகவே, பொதுவேட்பாளர் வெற்றிபெற்ற பின்னர் இரண்டு விடயங்கள் தொடர்பான கேள்விகள் எழவுள்ளன. ஒன்று – ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கூறுவது போன்று இனப்பிரச்சினை என ஒன்று இல்லை என்பதும், இருக்கின்ற அரசியல் யாப்பில் உள்ள நிர்வாக அதிகாரங்களைத் தவிர வேறு எதனையும் ஏனைய சமூகங்கள் கோர முடியாது என்றும் பொது எதிரணி நிபந்தனை விதிக்கலாம். இரண்டாவது – அரசியல் கட்சிகளின் தனித்துவம் இல்லாமல் போய் சிங்கள – பௌத்த தேசியவாதத்தை தனியுரிமை இல்லாமல் ஒரு தேசிய மட்டத்தில் செயற்படுத்தக் கூடிய வலுவான ஒரு சிங்களத் தேசிய இயக்கம் ஒன்று உருவாகலாம். இந்த இரண்டு விடயங்களும் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்ற பின்னர் சாத்தியப்படலாம் என்பதை அவர்களுடைய செயற்பாடுகள் கோடி காட்டுகின்றன.

பொது எதிரணியின் இந்த முயற்சியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ முறியடிக்க வேண்டுமானால் யுத்த வெற்றி மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் போன்றனவற்றை தன்னை சூழவுள்ள ஒரு குழுவிடம் மையப்படுத்தி தனியுரிமை கொண்டாடாமல் கட்சி அரசியலுக்குள் அவற்றை வரையறை செய்தால் மாத்திரமே பொது எதிரணியின் மேற்படி அரசியல் நகர்வுகளை முறியடிக்க முடியும். ஆனால், அரசுக்குள் அதற்கான சூழல் வலுவிழந்துவிட்டது. அதேவேளை, சிங்கள – பௌத்த தேசியவாதம் என்பதை அரசியல் மூலதனமாகக் கொண்டு பொது எதிரணி செயற்படுவது போன்று தமிழ் மக்களுக்கான அரசியல் அபிலாஷைகள் என்பதை முன்னிலைப்படுத்தி தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் தேசிய இயக்கமாக செயற்பட வேண்டும். நான்கு கட்சிகளை மையப்படுத்தி தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எவ்வாறு செயற்பட்டு வந்ததோ, அதேபோன்ற ஒரு அரசியல் நகர்வைத்தான் பொது எதிரணி முரண்பாட்டிலும் ஓர் உடன்பாடாக மேற்கொண்டு வருகின்றது என்பதை தமிழ்த் தரப்பு உணர வேண்டும்.

தினக்குரல் பத்திரிகைக்காக அ.நிக்ஸன் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.