படம் | AP Photo/Eranga Jayawardena, Dhakatribune

இனப்பிரச்சினைக்கான தீர்வு இன்னமும் முன்வைக்கப்படவில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த தகவல். 13ஆவது திருத்தச்சட்டத்தில் எந்த அதிகாரமும் இல்லை என்பதும் அந்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினாலும் இலங்கை அரசியலமைப்பின் ஏனைய சட்டதிட்டங்கள் அதற்கு இடையூறாக அமையும் என்பதும் ஏற்கனவே இந்த பத்தியில் சொல்லப்பட்ட விடயம். ஆகவே, தமிழ்த்தரப்பு எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது இங்கு கேள்வியாகும் நல்லிணக்கம், சர்வதேச விசாரணை என்ற பேச்சுக்களை தவிர வேறு நகர்வுகள் எதனையும் காணவில்லை.

காலம் பிந்திய அரசியல் தெளிவு?

2009ஆம் ஆண்டு யுத்தத்திற்குப் பின்னர் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் வடக்கு – கிழக்கு மக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு மாத்திரமே வாக்களித்தனர். விடுதலைப் புலிகளுக்கு பின்னரான காலகட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை மக்கள் நம்பினர். விரும்பியோ விரும்பாமலே தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்ததன் மூலம் அரசுக்கு எதிரான தமது நிலைப்பாட்டை மக்கள் வெளிப்படுத்தினர். இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை இலங்கையின் அரசியலமைப்புக்குள் நின்று பெறமுடியாது என்ற காரண காரியத்தின் அடிப்படையில் தான் தமிழ்த் தேசியம் என்ற கோட்பாடு எழுந்தது.

13ஆவது திருத்தச்சட்டத்தை நிராகரிப்பதற்கு அன்று விடுதலைப் புலிகள் கூறிய காரணத்தை தற்போது உள்ள பல தலைவர்கள், அரசியல் விமர்சகர்கள் அன்று ஏற்றுக் கொள்ளவில்லை. 1983இல் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன காலத்தில் இருந்து இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ வரை முன் முன்வைக்கப்பட்ட தீர்வுகள், யோசனைகளை புலிகள் நிராகரித்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மாற்று அரசியல் கருத்துடையோர் என்று அழைக்கப்பட்ட பலர் விமர்சித்தனர். விடுதலைப் புலிகள் இராணுவ தீர்வில் மாத்திரமே நம்பிக்கை வைத்துள்ளனர் என குற்றம் சுமத்தினர். ஆனால், இன்று அவர்களில் பலர் 13ஆவது திருத்தச்சட்டத்தில் அதிகாரங்கள் இல்லை என்றும் அரசியல் தீர்வை எந்த அரசும் முன்வைக்காது என்றும் கூறி அழுது புலம்புகின்றனர்.

தமிழ்த் ​தேசிய கூட்டமைப்பு

ஆயுதப் போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னரும் அயுதப் போராட்டம் நடைபெற்ற 30 ஆண்டு காலத்திலும் வாழ்ந்தவர்கள், அரசியலில் ஈடுபட்ட பல தலைவர் இன்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றனர். அதாவது, 1983இற்கு முன்னர் இடம்பெற்ற 30 ஆண்டுகால அஹிம்சைப் போராட்டத்தில் பங்குபற்றிய பல தலைவர்கள், விடுதலைப் புலிகள் யுத்தம் நடத்திய காலத்தில் ஆயுதப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி விமர்சித்த தலைவர்கள், அரசின் பாதுகாப்பு வாகனத்தில் உலா வந்த பல தமிழ் தலைவர்கள் – இன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றனர். 2002ஆம் ஆண்டு நோர்வேயின் மத்தியஸ்த்தத்துடன் அமைதிப் பேச்சு ஆரம்பிக்கப்பட்ட பின்னர் இவர்கள் வன்னி சென்று புலிகளோடு சமாதானம் பேசி ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்தமையும் வரலாறு.

எவ்வாறாயினும் இங்கு கேள்வி என்வென்றால், இவர்களின் அரசியல் பட்டறிவு எங்கே என்பதுதான் தான். அத்துடன், ஆயுதப் போராட்டத்திற்கு முந்திய 30 வருடகால அஹிம்சைப் போராட்ட அரசியல், ஆயுதப் போராட்டம் நடைபெற்ற 30 ஆண்டுகாலம்என்று 60 ஆண்டுகால போராட்ட அனுபவங்களும் இவர்களுக்கு உண்டு. காலத்துக்கு காலம் கருத்துக்களையும் கொள்கைகளையும் மாற்றி மாற்றி நடத்திய அரசியல் திருகுதாளங்கள் எல்லாவற்றையும் தற்போது சீர்தூக்கிப் பார்த்து ஒரு சீரான அரசியலை ஏன் இவர்களினால் செய்ய முடியாமல் உள்ளது? யுத்தம் முடிவடைந்து ஐந்து ஆண்டுகள் சென்ற பின்னரும் கூட 60 ஆண்டுகளுக்கு முன்னர் எவ்வாறு அரசியல் பேசினார்களோ அல்லது அந்தக் காலப் பகுதிகளில் எவ்வாறு சந்தர்ப்பவாத அரசியல் நடத்தினார்களோ, அதேபோன்ற ஒரு அரசியலைத்தான் இத்தனை அழிவுகளுக்குப் பின்னரும் இவர்கள் செய்கிறார்கள் என்பது குற்றச்சாட்டு.

புலிகளை நியாயப்படுத்தல் அல்ல

இவ்வாறு 60 ஆண்டுகால அரசியல் போராட்ட காலங்களில் வாழ்ந்து தற்போதும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் பதவிகளில் உள்ள பல தலைவர்கள் தற்போது விடுதலைப் புலிகளின் போராட்டத்தை நியாயப்படுத்த முற்படுவதன் மூலமாக மீண்டும் மற்றுமொரு 30 ஆண்டுகாலத்திற்கு தமிழ்த் தேசிய உணர்ச்சி அரசியலை தூண்டி விடுகின்றனர். மாறாக கடந்த கால அனுபவங்கள் – அன்று விடப்பட்ட தவறுகள் போன்றவற்றை சீர்தூக்கிப் பார்த்து தீர்வுக்கான மாற்று வழி ஒன்றை அல்லது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கான மாற்றுத் திட்டங்களை இவர்கள் செய்யவில்லை. 30 ஆண்டுகால அஹிம்சைப் போராட்டமும் 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டமும் நியாப்படுத்தப்பட வேண்டியவைதான். ஆனால், அந்த போராட்டங்கள் ஏன் தோல்வியடைந்தன; சர்வதேசம் ஏன் இன்னும் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்கான காரணங்கள் ஆராயப்படவில்லை.

ஜெனீவா மனித உரிமை பேரவையின் சர்வதேச விசாரணை என்பது இனப்பிரச்சினை தீர்வுக்கோ அல்லது தமிழர்களின் 60 ஆண்டுகால அரசியல் போராட்டத்தை நியாயப்படுத்தவோ அல்ல. அது வெறுமனே இறுதிப் போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை மட்டும் விசாரித்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பதற்காக உருவாக்கப்பட்ட விசாரணைக்குழு. ஆனால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் உள்ள மூத்த தலைவர்கள் பலர் சர்வதேச விசாரணைக்குழு வருவதன் மூலம் ஏதோ தமிழர்களுக்கு சர்வதேச அரங்கில் நியாயம் கிடைக்கும், நேர்மையான அரசியல் தீர்வு ஒன்று அமையும் என எதிர்பார்க்கின்றனர்.

சிறப்புரிமைகளை பெற முயற்சி

13ஆவது திருத்தச்சட்டத்தின் மூலமான மாகாண சபைகளில் எதுவும் இல்லை எனத் தெரிந்தும் மாகாண சபைகளுக்குரிய சிறப்புரிமைகள் மற்றும் சலுகைகளை பெறுவதில் வட மாகாண – கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் முற்படுகின்றனர். வடக்கு கிழக்கில் உள்ள 38 உள்ளூராட்சி சபைகளிலும் உள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினாகளும் சலுகைகளைப் பெறுகின்றனர். ஆனால், 60 ஆண்டுகால அரசியல் போராட்டத்தின் விளைவுகள் என்ன என்பது பற்றியும், அதற்கான மாற்று வழிகள் தொடர்பாகவும் அவர்கள் சிந்திக்கவில்லை. 24 மணிநேர அஹிம்சைப் போராட்டத்தை தமது வசதிக்கு எற்ப ஒரு மணிநேர போராட்டமாக மாத்திரம் மாற்றியமைத்துள்ளனர்.

இந்த இடத்தில் மூத்த தலைவர்களின் பலவீனமான செயற்பாடுகளை கருத்தில்கொண்டு மாற்று வழிகள் பற்றி சிந்திக்கவேண்டிய பொறுப்பு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட மாற்று அரசியல் கட்சிகளுக்கு உண்டு? கொள்கை என்பது தமிழ்த் தேசிய கூட்டமைப்பிடம் அல்ல தமிழ் மக்களிடம் உண்டு. அதனை கடந்த தேர்தல்கள் வெளிப்படுத்தியுள்ளன.

தினக்குரல் பத்திரிகைக்காக அ. நிக்ஸன் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.