படம் | Namathumalayagam

அப்பாவின் இறுதிச்சடங்கில் “முற்போக்காளராக இருந்தும் அப்பாவின் மரண சடங்குகள் அனைத்தையும் மரபு ரீதியாக செய்து அவருக்கு மரியாதை செய்தீர்கள்…” என என் நண்பரும் நெருங்கிய தோழருமான மல்லியப்பூ சந்தி திலகர் வெளியிட்ட ஒரு குறிப்பொன்ற நான் மறுத்து எழுத வேண்டியதாயிற்று.

“….இலக்கிய கூட்டங்களுக்குப் போகும்போது வாசலில் கும்பம் வைத்து விபூதி பூசி, பொட்டு வைத்து நம்மை வரவேற்கும் வழமை உண்டு. சிலநேரங்களில் இந்த முறைமை நம்மை சங்கடப்படுத்துவதாகவும் இருக்கும். ஆனாலும், வரவேற்பவர்களின் மனதை நோகடிக்கக்கூடாது என்பதனால் அதனை ஏற்றுக்கொள்வதுண்டு. ஒரு பாடசாலை அதிபரை பாராட்டும் நிகழ்வுக்குச் சென்றிருந்தேன். அங்கு அதிபர் உரையாற்ற அழைக்கப்பட்டார். பெயர் ‘காதர்’. நெற்றி நிறைய விபூதியும் பொட்டுமாக சுவாரஷ்யமாக அவர் உரையாற்றிக்கொண்டிருந்தார். நெற்றியில் இருந்த பட்டை அவர் வீட்டில் இருந்துவரும்போது வந்திருக்க வாய்ப்பேயில்லை. நிச்சயமாக வரவேற்பில் வைக்கப்பட்ட விபூதிப் பொட்டுத்தான் அது….

நீங்கள் கூறியபடி நிகழ்ச்சிகள் நடக்கும் மண்டபங்களின் வாயில்களில் ஏற்படக்கூடிய தர்மசங்கடங்களை நானும் அனுபவித்திருக்கிறேன். விருப்பு வெருப்புகளுக்கப்பால் அதனை மறுக்க முடியாத நிலைக்கு உள்ளாகிவிடுகிறோம். சென்ற வருடம் மலையகப் பகுதிகளில் அப்படி நேர்ந்தது. அந்த தேயிலைத் தோட்டத்தில் அழகான ஒரு மலை உச்சியில் ஒரே ஒரு பெரிய மரத்தின் நிழலில் ஒரு முனியாண்டி சாமி ஒரு கருங்கல்லாக நிலத்தில் ஊன்றியிருந்தார். அங்கிருந்த தொழிலாளத் தாயார் இன்னும் சில பெண்களையும் அழைத்து அருகில் என்னையும் அழைத்து எனக்கு திருநீர் பூசி, சூடம் சுற்றி, மாலை அணிவித்து ஆசி செய்தார். விருப்ப வெறுப்புகளுக்கப்பால் அந்த அன்பை ஏற்றுகொள்ள வேண்டியேற்பட்டது. ஒரு சந்திப்பொன்றையும் அந்தத் தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஏற்பாடுசெய்திருந்தார்கள். அவர்களிடம் நான் கண்ணீர் மல்க உரையாற்றினேன்.

IMG_2297s IMG_2297

நான் ஏற்பாடு செய்யும் எவற்றிலும் மத சம்பிரதாயங்களை சேர்த்துக் கொள்வதில்லை.

எங்கள் குடும்பங்களின் சாமியும் முடியாண்டி சாமிதான். கொழும்பில் என்வீட்டு சுவற்றோடு உள்ள கிணற்றோடு சேர்த்தாற்போல் அருகாமையிலேயே ஒருமுனியாண்டி சாமி கல்லொன்றை வைத்து அதனை சிறு கோவிலாக கட்டி என் குடுமபத்தவர்கள் இன்னமும் வழிபட்டு வருகிறார்கள். முன்னரெல்லாம் வருடாந்தம் கோழி, கடா வெட்டி திருவிழாவும் செய்து வந்தார்கள். பிரபல ‘கொழும்பு கணேஸ்’ எனும் கரகாட்டக்காரரின் ஆடல் தவறாது இடம்பெறும். எங்கள் ஐந்து தலித்குடும்பங்கள் அப்போது அந்த தோட்டத்தில் இருந்தன. ஆனாலும், அப்போது அந்தத் திருவிழாவை நடத்த அங்குள்ள ஏனைய கிறிஸ்தவ, முஸ்லிம் சமூகத்தவரும் சேர்ந்தே ஒத்துழைப்பர்கள். இன்றும் எங்கள் முனியாண்டி சாமி கோவிலை வழிபடுவதும் அதனை பராமரிப்பதும் அங்குள்ள சிங்களக் குடும்பங்களே. ஆனால் என்ன, இப்போதெல்லால் அதனருகில் ஏனைய உயர் சாதி சாமிகள் ஆக்கிரமித்து எங்கள் அசைவசாமியை சைவ சாமியாக்கிவிட்டார்கள்.

முதலில் காளி வந்தார். பின்னர் முருகன், பிள்ளையார், சரஸ்வதி என வந்து இறுதியில் முனியாண்டி சாமி கல்லை சிவலிங்கமாக்கி விட்டார்கள். இப்போது எங்கள் கவிச்சி சாமி போய் முற்றிலும் சைவ சாமிதான் எஞ்சியிருக்கிறது. பழைய முனியாண்டி சாமியாகவே இன்னமும் நம்பி அந்த சிறு கோவிலை சுத்தம் செய்து, பராமரித்து வணங்கி வந்த எங்கள் பெரியம்மா மகள் ஜீவா அக்கா புற்றுநோயால் இறந்து போனார். இறுதியில் அவரை சைவ சாமியும், எங்கள் கவிச்சி சாமியும் சேர்ந்து கைவிட்டுவிட்டார்கள்.

என் பாட்டி தலைக்கியும், என் மாமி வள்ளியும் சாமியாடி குறி சொல்வார்கள். நாங்கள் வாழும் பகுதிகளில் அவர்களின் குறி கேட்கவென, தேங்காய், சூடம், வெற்றிலை என எடுத்துக்கொண்டுவந்து சாமியாடவைப்பது வழக்கம். “…வெக்கமா இருக்குது, நம்மல நாமலே யாருன்னு காட்டிகொடுக்குது, இனி இதெல்லாம் பண்ணவேணாம்…” என்று கூறி அவர்கள் இருவரையும் என் உறவினர்கள் தடுத்துவிட்டார்கள்.

கொழும்பில் தலித்துகள் வாழும் எங்கள் பகுதிகளுக்கு உறவினர்களை பலவருடங்களுக்குப் பின்னர் சென்ற ஆண்டு சந்திக்க சென்றபோது அங்கெல்லாம் முன்னர் இருந்த முனியாண்டி சாமி, மதுரைவீரன் சாமி, சுடலைமாடன் சாமி போன்ற சிறுகோவில்களெல்லாம் இப்படித்தான் மாற்றம் கண்டிருந்தன. அவற்றைப் பற்றி பதிவுசெய்ய வேண்டுமென்பதற்காக பல புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டு வந்தேன். இந்தப் பதிவை பின்னர் ஒரு முறையான கட்டுரையாக எழுதும்போது அதனை பகிர்கிறேன்.

மாத்தளை நகரத்தில் அருந்ததியர்கள் வாழும் நகரசுத்தி தொழிலாளர்களின் பெரிய குடியிருப்பொன்று உண்டு. நகரத்தின் ஒதுக்குபுறமாக உள்ள சுடலையை அண்டியேஅந்தக் குடியிருப்பு உள்ளது. இலங்கையில் பல நகரங்களில் வாழும் அருந்ததியர்களுக்கிடையில் உறவு வலையமைப்பு உள்ளது. அடிநிலை தலித்துகள் என்பதால் அவர்களுக்கிடையில் மட்டும்தான் திருமணம் புரிய வாய்ப்பு அதிகமுண்டு. இந்த அகமணமுறையில் விதிவிலக்காக உள்ள மாற்றங்களை கணக்கில் எடுக்காதீர்கள். சில அருந்ததியர் குடியிருப்புகளில் இடம்பெறும் திருவிழாக்களில் ஏனைய பிரதேசங்களில் உள்ள அருந்ததியர்களும் வந்து கலந்துகொள்வார்கள். திருவிழா காலத்தில் தங்கியிருப்பவர்கள் மத்தியில் காதல்வரும், பெரியவர்களுக்கிடையில் கல்யாண பேச்சுகள் நடக்கும். மாத்தளையில் உள்ள குடியிருப்பில் சுடலைமாடன் சாமி பெரிய ஆலமரத்தினடியில் சிறிதாக இருந்தார். வருடாவருடம் கொழும்பிலிருந்தும் அந்த திருவிழாவுக்கு போவோம். திருவிழாவில் சுடலைமாடனை அந்த குடியிருப்பு எல்லையை சுற்றி (சுடலையும்சேர்த்துத்தான்) கொணர்வது வழக்கம். சகல வீட்டு ஒழுங்கைகளுக்கிடையிலும் இறவிரவாக வரும் சுடலைமாடன் அனைத்து வீட்டு வாசல்களிலும் தரித்து நின்று ஆசிவழங்குவது வழக்கம். இப்போது அது ஒரு பெரிய கோவில். மிகச் சமீபத்தில் சுடலைமாடன் ஓரங்கட்டப்பட்டு அம்மன் கோவிலாக மாற்றப்பட்டுவிட்டது. இத்தனைக்கும் ஒரு நடை தூரத்தில்தான் பிரசித்திபெற்ற மாத்தளை முத்துமாரியம்மன் கோவில் இருக்கிறது.

இந்த நிலையை மலையகப் பகுதிகள் எங்கும் காணலாம். இது வெறுமனே சிறு தெய்வ வழிபாட்டு முறையில் ஏற்பட்டுவரும் மாற்றம் மட்டுமல்ல அவர்களின் பண்பாட்டு பழக்க வழக்கங்களிலும் மாறுதலைக் கொண்டுவந்துள்ளது. சமூக மேனிலையாக்கத்துக்கான நடையுடைத் தோற்றத்தில் மாற்றம் கண்டிருக்கிறது. வழமையான பேச்சு வழக்கில் மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. யாழ். பேச்சு மொழிகலந்து பேசுதல் என்பது பேஷனாக ஆகியிருக்கிறது. இந்துக்கள் மத்தியில் பிரபலமான, அதேவேளை மலையகத்தில் பெரிதாக அறியப்படாத விரதங்கள், மதச்சடங்குகள் வெகுவாக உள்நுளைந்துள்ளன. இதுவரை இருந்த பாரம்பரிய முறைகளெல்லாம் அதன் தகுதியை, அந்தஸ்தை குறை நிர்ணயம் செய்யும் ஒன்றாகக் கருதப்படத் தொடங்கியிருக்கிறது. இதன் நீட்சியாக இதுவரை இல்லாத தீட்டு, துடக்கு உள்ளிட்ட ஐதீகங்களையும் வீட்டுக்குள் கொண்டுவந்து சேர்த்துவிட்டிருக்கிறது. சில இடங்களில் பூசாரிகளின் இடங்களை ஐயர்கள் பிரதியீடு செய்யப்பட்டிருக்கிறார்கள். வீட்டு சடங்குகளில் ஐயர்கள் வரவழைக்கப்படுகிறார்கள்.

சிறுதெய்வ வழிபாட்டை பெருதெய்வ வழிபாட்டு நிலைக்கு மாற்றமுறும்போது தேர்கொணரப்படுகிறது. கோவிலும் வழிபாட்டு முறையும் நவீனம் பெறும்போது கோவிலுக்கென்று ஒரு கட்டமைப்பு உருவாகிவிடுகிறது. அந்த இடத்திலிருந்து வர்க்க ரீதியிலும் சாதி ரீதியிலும் பக்தர்கள் பிளவுபடுத்தப்படுகிறார்கள். அதுவரை அவ்வளவு கவனிக்கப்படாத சாதியம்கூட வெளிப்படையாக கூர்மை பெற்றுவிடுகிறது.

10 வருடங்களுக்குப் பின் ஊர் போனால், என் வீட்டில் செவ்வாயும், வெள்ளியும் கவிச்சி இல்லையென்கிறார் அம்மா. சரி, முதல் நாளே இரண்டு கருவாட்டு துண்டை எனக்காக பொறித்து முன்னமே வைத்து விடுங்கள். செவ்வாய், வெள்ளிகளில் நான் சமாளித்துக்கொள்கிறேன் என்று கெஞ்சவேண்டியிருக்கிறது.

சாதிய அடையாளங்களை மறைத்து சமூக மேனிலையாக்கத்திற்கான முயற்சியில் தலித் மக்கள் தங்களை மட்டுமல்ல தங்கள் சாமிகளின் அடையாளங்களையும் மாற்ற முயன்று இறுதியில் உயர்சாதி சாமிகளின் ஆக்கிரமிப்புகளுக்கு வழிவிட்டு தலித் சாமிகளைஅவர்களின் சொந்த கோவில்களிலிருந்தே விரட்டியும் விட்டனர்.

சாதிய தற்கொலை எனும் உப தலைப்பில் சரிநிகரில் நான் அருந்ததியன் எனும்பெயரில் எழுதி வந்த ‘தலித்தியகுறிப்பு’ தொடரில் இது பற்றி நிறையவே எழுதியிருக்கிறேன்.

நகராக்கம், உலகமயாதலின் நீட்சியாக விளிம்பு நிலையினரின் மேனிலையாக்க முனைப்பு, தவிப்பு அதன் போக்கு என்பவற்றிலுள்ள சாதக பாதக அம்சங்களை விரிவாக மதிப்பீடு செய்யும் புதிய தலைமுறை இன்று தேவைப்படுகிறது.

நன்றி | நமது மலையகம்

என்.சரவணன்

Profile