(நம் காலதிருப்பாடல்)
எம் விடுதலையாளரே!
எம் கடவுளே!
என் செய்வோம்…?
புலம்பலை மட்டும்
தந்து விட்டு – தூர
விலகி நிற்பதேன்…?
கண்ணீருக்குள் தள்ளிவிட்டு
மறைந்திருந்து
பார்ப்பதேன்…?
எங்கள் குரல்கள்
மலைகளில் மோதி
ஒலிக்கின்றன…
தினம் தினம்
‘காடி’யை கொடுக்கின்றார்கள்…
மயங்கி விழுந்தோர் மீது
ஏறி நடக்கின்றார்கள்…
எம் கடவுளே!
குரல் உயர்த்துவோர்
தொண்டையை
நசுக்குகின்றார்கள்…
சிறுத்தைகளும் புலிகளும்
வேட்டை வெறியோடு
சுற்றித் திரிகின்றன…
மண்ணின் மைந்தர்களை
வேரருக்க
மிருகமான மனித கூட்டம்
சிலுவையோடு
நிற்கின்றார்…
அந்தி வானில்
சூரியனாய்
துன்பத்தில் அமர்கின்றோம்…
கூடிழந்த பறவையாய்
இருளுக்குள்
தத்தளிக்கின்றோம்…
நரிகளின்
ஊளை சத்தம்
அண்மித்து கேட்கின்றது…
நாம் காணும்
மலையெல்லாம்
கல்வாரி மலைகளாகவே
தெரிகின்றன…
விடுதலையின் கடவுளே!
எதுவரைக்கும்
பொறுத்திருப்பீர்…?
கடலை இரண்டாக
பிளந்தவர் நீர்!
பாலை நிலத்தில்
நீரூற்றை புறப்பட
பண்ணியவர் நீர்!
ஏன் எம்மை
கைவிட்டீர்?
நின் திருமகனுக்கோ
உயிர்ப்பின் நாள்
குறித்தீர்.
நாமோ
தொழிற்சங்கம், கட்சிகள்,
அரசியல்வாதிகள், ஆட்சியாளர்,
அரச சார்பற்ற நிறுவனங்கள்,
சமய நிறுவனங்கள்
எனும் ஆறு
ஆணிகளால்
வாழ்வு துளைக்கப்பட்டு
இரத்தம் கொட்டுகின்றோம்.
மரணம் தெரிகின்றது
உயிர்ப்பின் நாள்
தெரியவில்லை…
காணிக்கையாக
எம் வியர்வையை
படைக்கின்றோம்…
அது எமது
“உழைப்பின் புனிதம்
வாழ்வின் புனிதம்”
இது
மரியாவின்
வாசனைத் தைலமல்ல
மலை மண்ணின்
வாசனைத் தைலம்
அருட்தந்தை மா. சத்திவேல்
ஆசிரியர் குறிப்பு: தொடர்புபட்ட கட்டுரைகள், “மலையக மக்களை அரசியலிலிருந்தும் அவர்களது பூமியிலிருந்தும் பிடுங்கியெறிய பாரிய திட்டம்”, “மலையக மக்களின் ஜனநாயகத் தோல்வி”