இலங்கையின் 2018ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தல்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்திற்கு 25 வீத கோட்டா முறைமையினை அமுல்படுத்தியமை வரவேற்கத்தக்க ஒரு நகர்வாகும். கடந்த பல வருடங்களாக பெண்கள் உரிமை குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட பிரசார செயற்பாடுகள், போராட்டங்கள் காரணமாக இந்த நிலையினை எட்ட முடிந்தது. இருந்த போதிலும் பெண் வேட்பாளர்களுக்கு எதிராக துன்புறுத்தல்கள், பழிகூறுதல், தொந்தரவு ஆகிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதாக தேர்தல்கள் தொடர்பாக கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் போன்ற அமைப்புக்கள் அவதானித்துள்ளன.
வேட்பாளர் நியமனத்துக்காக எதிர்பார்த்து செயற்பட்டவர்களைத் தடுப்பதற்கான முயற்சிகள் முதல் கட்சிகளின் வேட்பாளர் பட்டியலில் பெயர் இடம்பெற்ற பின்னர் நேரடியாக அவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வன்முறைகள் வரை இந்த துன்புறுத்தல்கள் இடம்பெற்றுள்ளன. இது எந்தவொரு கட்சியையும் இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.
இருந்தபோதும் சில வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது. எம்பிலிபிட்டியவில் உள்ள ஒரு வேட்பாளர் தனது வீட்டின் மீது கல் வீசி தாக்குதல் நடத்துவதை கண்டுள்ளார். அதேபோல வெலிகந்தவில் ஆதரவாளர் ஒருவரால் பாலியல் ரீதியிலான தாக்குதலுக்கு உள்ளானதை அடுத்து வேட்பாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வலிகாமத்தில் சுகாதாரத்துறையில் அதிகாரியாகப் பணியாற்றும் ஒரு வேட்பாளரை ஒரு பணியாளர் அச்சுறுத்தியுள்ளார். பொது சுகாதார தாதியான ஒரு பணியாளர் ஒருவர் தனது வேட்புமனு காரணமாக தனது நிரந்தர பணியினை தொடரமுடியாத நிலை காணப்பட்டது. கோட்டே மாநகர சபைக்கு போட்டியிட்ட ஒரு வேட்பாளர் மற்றொரு பெண் வேட்பாளருக்கு எதிராக பொய்யான வழக்கு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். கடந்த காலத்தில் அவர் செய்த தவறுகளை சுட்டிக்காட்டி அந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டதால் விசாரணை ஒன்று இடம்பெற்றது. முல்லைத்தீவில் வீடொன்றில் வேட்பாளர் ஒருவர் பிராந்திய எம்.பி ஒருவரின் ஆதரவு குழுவினரால் தாக்கப்பட்டதுடன் குறித்த பெண் வேட்பாளர் தனது வேட்புமனுவை வாபஸ் பெறாத நிலையில் அவரதும் மகளதும் அச்சுறுத்தப்பட்டார்.
அதேபோல ஆண் வேட்பாளர்களால் பெண் வேட்பாளர்கள் மீது ஒரு தொகைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டது என்று தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். தேர்தலில் பெண்கள் போட்டியிடுவதற்கு எதிராக மதத் தலைவர்கள் பிரசாரம் செய்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன. தேர்தலுக்குப் பின்னர் இடம்பெற்ற வன்முறைகளில் பதிவு செய்யப்பட்ட 47 முறைப்பாடுகளில் 20 முறைப்பாடுகள் பெண்களை இலக்கு வைத்து நடத்திய சம்பவங்களாக இருந்துள்ளன. அரசியலில் பெண்கள் பிரதிநிதித்துவத்தின் முக்கியத்துவத்தை சீர்குலைக்கும் நோக்குடனையே இவ்வாறான வன்முறைகள் முன்னெடுக்கப்படுவதாக உரிமைக்குழுக்கள் வன்மையாக தமது கண்டனத்தை பதிவு செய்திருந்தன.
இதேவேளை நேரடியான தாக்குதல்கள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் போன்ற சம்பவங்கள் பரவலானளவில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. தொழில்நுட்ப ரீதியிலான வன்முறைகளும் இந்தத் தேர்தல் சம்பவங்களில் வன்முறைகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன என்று முற்போக்கு தொடர்புகளுக்கான அமைப்பு (APC) கூறுகிறது.
சமூக ஊடகங்கள் உள்ளிட்ட தளங்களிலும் தொலைபேசி மூலமாக மேற்கொள்ளப்பட்ட அழைப்புக்கள் மூலமாகவும் இந்த அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன என்று அந்த அமைப்பு மேலும் கூறுகிறது.
இணையம் மூலமான வன்முறைச் சம்பவங்களுக்கு மத்தியில் அதற்கு மாறாகவும் நேரடியான வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுரையினை உருவாக்கும் செயற்பாட்டிற்காக கிரவுண்ட்விவ்ஸ் கூட்டு எதிரணி மற்றும் கூட்டணி அரசாங்கத்தரப்புடன் பேசியபோது பரவலாக துன்புறுத்தல்கள் இடம்பெற்றமை உறுதிப்படுத்தப்பட்டது. ஆனால், அவர்களில் பெரும்பாலானவர்கள் அவற்றை பதிவு செய்ய விரும்பவில்லை. இருந்தபோதிலும் தொழில்நுட்ப ரீதியாகவும் சமூக ஊடகங்கள் ஊடாகவும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் மற்றும் அச்சுறுத்தல் தொடர்பாக சிலர் எம்மோடு பேசினார்கள்.
ஆசிரியர் குறிப்பு: கிரவுண்ட்விவ்ஸ் தளத்துக்காக ரய்ஸா விக்ரமசிங்க மற்றும் அமலினி டி செய்ரா எழுதிய “An Uneven Playing Field” என்ற கட்டுரையின் தமிழாக்கமே கீழே தரப்பட்டுள்ளது.
கட்டுரையை இங்கு கிளிக் செய்வதன் மூலமும் கீழே தரப்பட்டுள்ள Sway ஊடாகவும் முழுமையாக வாசிக்கலாம்.