பட மூலம், Reuters/Dinuka Liyanawatte, QUARTZ

உள்ளூராட்சித் தேர்தல் களமும், நிகழ்கால அரசியல் பிரசாரங்களும் 2 விடயங்களை பிரதானமாக நிறைவேற்றியுள்ளன.

1. இனத்துவ அரசியலும், அதற்கான நியாயங்களும்

2. தீர்க்கவே முடியாது என்று ஆழப் பதித்துள்ள இன முரண்பாடு

தலைநிமிரிந்து தங்களைத் தாங்களே ஆழவேண்டும் என்ற இனச்சார்பு, தேசியவாதம் மற்றும் வகுப்புவாதமுமே பல பிரதேசங்களில் அரசியல் பிரசாரங்களாக பறக்கவிடப்பட்டுள்ளன.

தனிநபர் மற்றும் கட்சியை முன்னிலைப்படுத்தி அரசியல் பிரசாரங்கள் இருந்ததே அன்றி மக்கள் நலன்களை மையப்படுத்தியதாக சொற்பமான நிகழ்வுகளையே காண முடிந்தது. அரசியல் ரீதியான ஒப்பந்தங்களை மீறிய, அரசியல் ரீதியாக ஒரு இனக் குழுமத்தை ஓரங்கட்டிய அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் கூட இன ரீதியான அடையாள அரசியலாக முன்வைக்கப்படுள்ளன. அரசியல் கட்சிகள் தங்களை தக்கவைத்துக்கொள்ள இன வேறுபாடும், குரோத உணர்வும் சகஜமாக அள்ளி வீசப்படுகின்ற சமராகவே தேர்தல் பிரசார களம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது வேதனை தருகிறது.

இதற்கேற்றாற் போல், நலிந்து, கூனிக்குருகி, திருட்டுப் பட்டங்களோடும், அதே அசமந்த கதியோடும் அரசாங்கம் 2 வருடங்கள் கடந்து பயணிக்கிறது. மக்கள் நிம்மதியாக வாழ்தலே சட்டமும் ஒழுங்கும் என்று பொருள்பட, மக்கள் தினமும் வாழ்விற்காகப் போராடுகிற நிலையை கூட்டு அரசாங்கம் எவ்வளவு தூரம் உணர்ந்துள்ளது என்பது இன்னும் கேள்வியாகவே வந்து நிற்கிறது.

ஊழலில் மீள முடியாத (Transparency International வெளியிட்டுள்ள ஊழல் தொடர்பான சுட்டெண், Corruption Perception Index 91 – CPI 2017), உணவுப் பாதுகாப்புப் பற்றிய முறையான திட்டம் ஒன்று இல்லாத, (Global Food Security Global Index – 66)  நிலையில் நாட்டின் கடன் சுமை மற்றும் மக்களின் வாழ்க்கைச் செலவுச் சுமை தொடர்பில் எப்படி மீள முடியும் என்பது பற்றிய வினைத்திறனான கொள்கை வகுப்பில் கவனம் செலுத்த இயலாத, தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்த இயலாத அரசியல் தலைவர்களைத்தான் அறுதிப் பெரும்பான்மையாக இன்று நாடு கொண்டுள்ளது.

தேசிய ரீதியில் அக்கறைப்பட்டு, ஒருவரை ஒருவர் செவிமடுத்து, மக்கள் விசுவாச அரசியல் ஒன்றை கட்டியெழுப்பும் இலக்கில் இலங்கை அரசியல் பிரதிநிதிகள் ஒரு அடியைத் தானும் முன்வைத்துள்ளார்களா என்பது அவர்களின் மனசாட்சிகளில் அவர்கள் கேட்க வேண்டிய கேள்விகளாகும்.

மேலும் உள்ளூர் அரசியல் மேடைகளில் ஒரு சாராரின் கொந்தராத்து வியாபார அரசியல் மற்ற இனத்தின் அபிவிருத்திக்கு முடக்கமாக பொருள்படுத்தப்பட்டுள்ளது.

வெறுப்பை விதைத்துவிட்டு, மோதலை ஏற்படுத்தும் இனவாத காடையர்கள் கடவுளின் பணிகளை செய்வதாக சமூக ஊடகங்களில் இனவாதமும், வெறுப்பும், குரோதமும், பகையும் தினமும் பரப்பி வருகிறார்கள். ஆனால், வெறுப்பை இல்லாமல் செய்வதிலோ அல்லது ஒருமைப்பாட்டை வளர்ப்பதிலோ எந்த அக்கறையும் அற்ற அரசியல் நிலையில் நாடு இருக்கின்றது என்பதுதான் உண்மை.

சகவாழ்வை கேள்விக்குறியாக்கும் சூழலில் இந்தத் தேர்தல் முடிவடைந்ததோடு, மக்களின் நீண்டகால பிரச்சினைகள் பெரிதாக உள்ளூர் மட்டத்திலும் கூட அக்கறையோடு பிரசாரங்களில் முதன்மைபடுத்தப்பட்டதாக இல்லை.

ஆனால், இன்று 100% அதிகரிக்கப்படுள்ள உள்ளூராட்சி சபைகளின் பிரதிநிதித்துவம், அந்தந்த பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் நீண்டகால பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தவேண்டியது மிக இன்றியமையாத விடயமாகும்.

ஏற்கனவே, அரசியல் ரீதியாக தீர்வுகளை வரைய முடியாத தேசிய பிரச்சினைகள் இருக்கும் நிலையில், இதே கையாலாகாத தனத்தை உள்ளூர் சபைகள் முன்மாதிரியாக எடுத்து கூடிக்கலையும் சபைகளாக இருந்துவிடக்கூடாது என்பதுதான் தேசிய ரீதியில் நலவுகளை நாடும் பொதுமக்களின் மனோநிலையாக இருக்கும்.

வீதி அபிவிருத்திகளை மொத்த அபிவிருத்தியாக பொருள்படுத்தி பொது வாக்காளர்களை திருப்திப்படுத்தும் மோசடி அரசியலை தொடராமல், மக்களை பலப்படுத்துகின்ற, மக்களை வளப்படுத்துகின்ற சமூக, பொருளாதார விடயங்களிலும், நாளாந்த வாழ்வின் அம்சங்களை இலகுவாக்கிக்கொடுக்கும் விடயங்களிலும் உள்ளூர் சபைகள் கவனம் செலுத்தினால் அதுவே புதிய அரசியல் கலாசாரத்தை தோற்றுவிக்கும் ஒரு படியாக அமையும்.

பெரும்பாலும் பல்கட்சி ஆட்சி ஒன்றை வேண்டி நிற்கும் உள்ளூர் சபைத் தேர்தல் முடிவுகளின் படி சமூக, பொருளாதார இலக்குகளை மையமாக வைத்து சபைகளை தலைமைத்துவப்படுத்த வேண்டுமே தவிர பதவிகளை வைத்து ஒப்பந்தங்களை செய்யும் தனிமனித​, கட்சி நலன்களை முதன்மைப்படுத்திவிடக்கூடாது.

வெறுப்பும் தேசியவாதங்களும் இன மைய அரசியல் பிரசாரங்களும் இவற்றை தடுக்க முடியாத சிவில் பாதுகாப்பு சட்டங்களும், ஆகக்குறைந்தது இருக்கும் சட்டங்களை நடைமுறைப்படுத்த இயலாத சிவில் பாதுகாப்பு கொமிசனும் உள்ளடங்கிய உள்ளூர் தேர்தல் நிலவரமும் மற்றும் சபைகளை அமைப்பதில் உள்ள கட்சிகளுக்கிடையிலான பேரம் பேசுதல்களும், மொத்தத்தில் பொது அரசியல் இலக்குகள், மக்கள் நல அரசியல் என்பவற்றை கண்டுகொள்ளாத யதார்த்தத்தை புலப்படுத்தி நிற்கிறது.

இந்தப் பின்னணியில் பிரதேச முன்னேற்றம், நாட்டு மக்களின் எதிர்கால நலன், தேசிய ரீதியான கொள்கை வகுப்பும் அவற்றை நடைமுறைப்படுத்தலும், சகவாழ்வுக்குரிய அர்ப்பனித்த பணிகள் என்கின்ற மிக முதன்மையாக நாடு வேண்டி நிற்கும் விடயங்கள் எப்படி அரசியல் தலைவர்களின் அரசியல் இலக்குகளாக கொள்ளப்படப்போகின்றன என்பது நடைபெறாமலே இருந்துவிடப் போகின்ற விடயங்களாவே இருக்கும் என்கின்ற கவலைதான் கண்முன் காட்சியாக வந்து செல்கின்றது.

பொதுத்தளத்தில் வெளிப்படையாக மக்கள் விடயங்களை பேசுகின்ற, அதற்குரிய தீர்வுகளைப் பொதுவாக எட்டுகின்ற பொதுப்பணியாக உள்ளூர் அரசியல் பயணித்து, கூட்டுக் கட்சிகளின் கூட்டு செயற்பாடாக சபைகள் செயற்பட வேண்டும். அது நீண்டகால நன்மைகளை இந்த நாட்டில் அரசியலால் தோற்றுவிக்கும் முன்மாதிரியான பணியாக உருவாக வேண்டும் என்பதே கனவாகும்.

பட்டினியும், பயமும், நோயுமில்லாத ஒரு நாட்டை உருவாக்கும் மகத்தான பணியை உள்ளூரில் இருந்து தொடங்கும் மகத்தான பணியை அரசியல் பிரதிநிதித்துவம் செய்யுமாக இருந்தால், இந்த நாட்டில் அனைவரும் ஒருவரை ஒருவர் புரிந்துணர்ந்து பரஸ்பரம் உடன்பாட்டோடும், விட்டுக்கொடுப்போடும், மனிதர்கள் என்ற பொது இலக்கில் பயணிக்க மிக நீண்ட நாட்கள் எடுக்காது என்பது திண்ணம்.

அஹமட் ரிப்கான்