பட மூலம், AP photo, The Business Times
பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தங்கள் என்ற போர்வையில் உலகம் முழுவதிலும் வன்முறைகளையும் படுகொலைகளையும் கட்டவிழ்த்துள்ள அரசுகளிற்கெதிரான குரல் என்பது உலக மன சாட்சியின் குரல். அப்படியொன்று இருக்கிறதா என்றால்? ஓம். அது எங்களையும் சேர்த்த குரல்தான். அது சாதாரண மக்களின் குரல். அறத்தின் குரல்.
சிரியாவின், கிழக்கு கூட்டா (Ghouto) பகுதியில் உதவிப் பொருட்கள் வழங்கவும் மருத்துவ ரீதியான தேவை உடையவர்களை வெளியேற்றவும் 30 நாட்கள் யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தும் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதலும் தரை வழித்தாக்குதலும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களும் “எங்களைக் கொல்வது உங்களின் மௌனம்தான்” என்ற சிறுவர்களின் குரலும் சமூக வலைத்தளங்களில் பரவியோடுகிறது, சிரியத்தெருக்களில் பெருகிப்பரவும் இரத்தத்தைப் போல்.
ஈழத்தமிழர்கள் இந்த நூற்றாண்டில் நிகழ்ந்த மாபெரும் இனப்படுகொலைகளில் ஒன்றிற்கு நேரடி சாட்சிகள். சிரியப் பெண்களின் கதைகளையும் சிரியச் சிறுவர்களின் கதைகளையும் கேட்கும் பொழுது யுத்தம் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி நிகழ்கிறது, ஒரே மாதிரிக் கொல்கிறது, ஒரே மாதிரி நியாயப்படுத்தப்படுகிறது. படுகொலைகளை நிறுத்து என்ற பொதுமக்கள் கோரிக்கைக்குக் காதுகொடுக்காத அரசுகள்தான் உலகை ஆளுகின்றன, ஆகவே படுகொலைகளுக்கு எதிரானவர்கள் இப்பொழுது என்ன செய்ய வேண்டும்? என்ன செய்ய முடியும்?
ஒவ்வொரு முறையும் படுகொலைகள் நிகழும்போது அதனை நினைத்து அழுவதும் அந்தக் கோபத்தை சமூக வலைத்தளங்களிலோ உரையாடல்களிலோ கோபம் தெறிக்கப் பேசுவது மட்டும்தானா செய்யப் போகிறோம்? அதனைத் தாண்டி சில தடவைகள் வீதியிலிறங்கி எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறோம். அதுவும் ஒவ்வொரு தடவையும் ஒரு நூறு பேர். இதுதான் எங்கள் எதிர்ப்பா?
ஏன் எங்களால் எங்களுக்கு மிக நெருங்கிய அனுபவமான, மிக உருக்கிய கொடுமையான இனப்படுகொலைகளை நிறுத்த பெருமளவில் திரள முடியவில்லை, நாங்கள் என்ன செய்துவிட முடியும் என்ற மனக்கசப்பா? நம்பிக்கையீனமா?
முதலாவது நாம் உணர வேண்டியது, எங்களுக்கு நிகழ்ந்ததுதான் இப்பொழுது அவர்களுக்கும் நிகழ்கிறது, நாங்கள் கைவிடப்பட்டது போல்தான் அவர்களும் கைவிடப்பட்டிருக்கிறார்கள், இதற்காக நாம் அவர்கள் அப்பொழுது மௌனமாக இருந்தார்கள், ஆகவே நாமும் மௌனமாக இருக்கவேண்டுமா? உலகில் எங்கு நடக்கும் இனப்படுகொலைக்கு எதிராகவும் பேசவேண்டியது ஒவ்வொரு மனிதரினதும் அடிப்படை தர்மம். அப்படிப் பார்த்தால் இனப்படுகொலைக்கு உள்ளாகிய, உள்ளாகிக்கொண்டிருக்கிற ஈழத்தமிழர்களுக்கு இது சொந்தப் பிரச்சினை. ரோஹிங்கியா மக்களுக்கும் இப்பொழுது சிரிய மக்களுக்கும் இன்னும் இன்னும் படுகொலை செய்யப்பட்டுக்கொண்டிருக்கும் மக்களுக்கும் எங்களுக்கும் என்ன இணைப்பு என்றால் நாம் படுகொலை செய்யப்படுத்தலின் நேரடி சாட்சிகள், படுகொலைகளின் விளிம்பில் நிற்பவர்கள், அதற்காக இன்னமும் நீதி கிடைக்காதவர்கள். நீதிக்காகத் தொடர்ந்து போராடுபவர்கள். நாம் அவர்களுக்காக எம்மாலான எல்லா வழிகளிலும் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டியவர்களாயிருக்கிறோம்.
சமூக வலைத்தளங்களிலோ, பொது வெளியிலோ எங்கும் எமது எதிர்ப்பை வெளிப்படுத்த முடியும். குறைந்தபட்சம், பதிவுசெய்ய முடியும். முடிந்த வரை கூடிய விரைவில் தங்களால் இயன்ற அளவில் ஒவ்வொரு பிரதேசங்களிலுமுள்ள இளைஞர்களும் பொதுமக்களும் அரசியல் தலைமைகளும் சமூக இயக்கங்களும் சிரிய மக்களின் மேல் நிகழ்ந்துகொண்டிருக்கும் படுகொலைகளை நிறுத்தக்கோரி எதிர்ப்புப் போராட்டங்களை நிகழ்த்த வேண்டும். நம் மௌனம் கலைய வேண்டும். இதனால், அங்கே என்ன மாற்றம் நிகழ்ந்துவிடும் என்று அவநம்பிக்கையுடன் இருக்க முடியுமா? முடியாது, ஈழத்தமிழர்கள் மேல் இனப்படுகொலை நிகழ்ந்தபோது உலகம் முழுவதிலுமிருந்து ஈழத்தமிழர்களும், அவர்களுக்காகப் பேசுபவர்களும் தெருக்களில் இறங்கி செய்த போராட்டம் வீணானதா? இல்லை. குரல்கொடுக்க யாருமே இல்லையென்றிருந்தால், இன்று எஞ்சியவர்கள் என்று முள்ளிவாய்க்காலை எத்தனை பேர் கடந்திருப்பர். யார் அரசுகளை நிர்ப்பந்தித்தது? எது நிர்ப்பந்தித்தது? போராட்டங்கள் மீது நாம் நம்பிக்கையிழக்கக் கூடாது.
நாம் நேரடியாக இறங்கி வீதியில் நின்று எதிர்ப்பை வெளிப்படுத்துவது இப்பொழுதுள்ள ஆகச் சிறந்த வழி. நம் எதிர்ப்பை பதிவு செய்வதோடு, நாம் எதிர்ப்பை நிகழ்த்தியதன் காரணத்தையும் வெளிப்படுத்த வேண்டும், அந்தக் காரணம் மேற்சொன்ன எந்த வகையில் இது எங்களுடைய பிரச்சினை என்பதை அடிப்படையாகக் கொண்டது. அதனை நாம் உலகத்தின் பிற மக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும், ஊடகங்களின் ஊடாக. அதுவொரு கூட்டு மன எழுச்சியை உண்டாக்கும். ரோஹிங்கியர்களும் இதற்காகப் பேச வேண்டியவர்கள், ஈழத்தமிழர்களும் இதற்காகப் பேச வேண்டியவர்கள்.
நாம் யுத்தத்திற்கு எதிராகப் பேசாமல் விட்டால், படுகொலைகளுக்கு எதிராக எழுந்து நிற்காவிட்டால், குழந்தைகளும் பெண்களும் ஆண்களும் கொல்லப்படுவதை வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தால் நாம் மனிதர்களா? மானுட அறத்தின் கூட்டு மனசாட்சியில் நாமும் இணைந்து நின்று எதிர்க்க வேண்டும். நம்மால் படுகொலைகளை நிறுத்த முடியாமல் போனாலும் போகலாம். ஆனால், படுகொலை நிகழும்போது பார்த்துக்கொண்டிருந்தவர்களாக இருப்பதை விட நிறுத்த முயற்சி செய்தவர்களாக இருப்போம்.
கிரிஷாந்த்