பட மூலம், Selvaraja Rajasegar

யாழ்ப்பாணம் மார்க்கெட்டில் வைத்து ஒரு வியாபாரி சொன்னார், “தம்பி, மைத்திரி வந்ததுக்குப் பிறகுதான் சுதந்திரமா கதைக்கேலுமா இருக்கு. இயக்கப்பாட்டு எல்லாம் போட முடியுது.” பக்கத்திலிருந்தவர் இவரை நிமிர்ந்து பார்த்துவிட்டு, “அத வச்சு சாப்பிட முடியுமே” என்று.

எல்லா இடங்களிலும் இப்படியான வார்த்தைகள் வந்து விழுவதைப் பார்க்க முடிகிறது. சாதாரண மக்கள் பெருமளவில் பொருளாதார நிலைமைகளினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அன்றாடக் கூலிகள், சிறு வணிகர்கள், நடுத்தர வர்க்க குடும்பங்கள் என்று எல்லாத் தரப்பும் ஒரு பெரிய பொருளாதார அழுத்தத்திற்குள் தங்களை உணருகிறார்கள். மெல்ல மெல்ல வளர்ந்து வந்த பல்வேறு காரணிகள், அவர்களை உள்ளிருந்தது அரித்து வருகிறது, புற்று நோய் போல.

பிரதானமான பொருளாதாரப் பிரச்சினைகளில் முக்கியமானது நுண்கடன். நுண்கடன் பற்றி ஏராளமான விமர்சனங்கள் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், எவற்றாலும் வளர்ந்து செல்லும் அதன் போக்கை முற்றிலுமாக நிறுத்திவிட முடியவில்லை. ஒரு சில கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தும் கூட, இன்று வரை அதன் வளர்ச்சி வேகமும், கடன் வாங்குவோரின் எண்ணிக்கையும் குறைந்ததாகத் தெரியவில்லை. அண்மையில் நடந்த ஒரு கலந்துரையாடலில், பொருளியல் ஆய்வாளர், அகிலன் கதிர்காமர், கிட்டத்தட்ட ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம் பேரளவில் கடன் வாங்குவோர் இருக்க வாய்ப்புண்டு என்றும், அவர்களிடமிருந்து இந்தக் கம்பெனிகள் குறைந்தபட்சம் எழுநூறு கோடி ரூபாய்க்கு மேல் சுரண்டியிருப்பார்கள் என்றும் தெரிவித்தார்.

குறித்த கலந்துரையாடலில் உரையாடப்பட்ட வேறு சில கருத்துக்களையும் இங்கு தொகுத்துப் புரிந்துகொள்ள முயற்சிக்கலாம். இவ்வளவு பெரிய சுரண்டலாக உள்ள, இவ்வளவு பேர் தற்கொலை செய்துகொள்கின்ற பிரச்சினையாக இருக்கின்ற, இவ்வளவு பேர் ஓடி ஓடி வட்டி கட்டுகின்ற நுண்கடன்கள் ஏன் பெரியளவிலான சமூக எதிர்ப்புணர்வாக மாறவில்லை?

வடக்குக் கிழக்கில் தொடர்ந்து இடம்பெற்று வரும் மக்கள் போராட்டங்கள் ஏன் ஒரு அரசியல், சமூக, பொருளாதார விடுதலைக்கான போராட்டங்களாக மாறவில்லை?

இந்தக் கேள்விகளுக்கு பதிலளித்துப் பார்க்கலாம். முதலாவது, இதனை எல்லா மக்களும் ஒரு சுரண்டலாகப் புரிந்து கொள்ளவில்லை. வட்டியைக் கட்டக்கூடிய மக்கள் இதனை, தமக்கது நல்லதொரு நடவடிக்கையென்றே கருதுகிறார்கள், இது தொடர்பில் ஒரு சிறிய கள ஆய்வினைப் பார்க்கலாம். கடந்த வருடம் இடம்பெற்ற பிலக்குடியிருப்பு மக்களின் காணி விடுவிப்பிற்கான போராட்டம் பரந்தளவிலான வெகுஜன எழுச்சியையும், பிறகு வெற்றியையும் அடைந்தது. அதன் பின்னர் சில மாதம் கழித்து நானும் சில நண்பர்களும் இணைந்து அங்குள்ள நுண்கடன் தொடர்பில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அறிய அவர்களின் வீடுகளுக்குச் சென்றிருந்தோம். அன்று அவர்கள் நுண்கடன் செலுத்தும் நாள். பலரும் வீட்டிலில்லை. நுண்கடன் கட்டிவிட்டு வந்து கொண்டிருந்தவர்களைச் சந்தித்து சாதாரணமாக உரையாடிப் பார்த்தோம். நுண்கடன் எடுக்காமல் வாழவே முடியாதென்பதைப் போல் அவர்கள் உரையாடினார்கள். பல்வேறு தொழில்களை செய்யக்கூடிய நிலமான அங்கு, ஒரு பருவத்திற்கு மீன்பிடியும் இன்னொரு பருவத்திற்கு விவசாயமென்றும் மாறி மாறி வேலை செய்பவர்கள் உண்டு. மீதிப்பேர் கூலிகள். அதனால், அவர்களுக்கான கருவிகளை அதிகம் வாங்க வேண்டியிருக்கும், போகங்கள் பொய்த்துப் போனால் வருமானம் இல்லாமலாகும். ஆகவே, நுண்கடனென்பது அவர்களின் வாழ்க்கையோடு கலந்து இணைந்து விட்ட, இலகுவான நிதி பெறும் வழியென்ற எண்ணம் அவர்களுக்குள் ஆழமாக ஊன்றி விட்டது.

கடனைக் கொடுக்க வருபவர்களும் நமது மக்கள் தானே, கொடுக்க வரும் ஊழியருக்கு ‘டார்கெட்’ முடிக்க வேண்டும், வாங்குவோருக்கு காசு கிடைத்தாக வேண்டும். எதைத் தொட்டாலும் கை சுடும், அவ்வளவு விலை. இந்த லட்சணத்தில் மக்களை விழிப்புணர்வூட்டுவது எவ்வளவு பெரிய துன்பம் என்பது இப்பொழுது அதனைச் செய்துவரும் செயற்பாட்டாளர்களிடம் கேட்டால் தெரியும். குடும்பங்கள் தற்கொலை செய்து கொள்ளும்போதும், கடன் கட்ட முடியாதவர்கள் அவமானப்படுத்தப்படும் போதும் உச்சுக் கொட்டிவிட்டு நகரும் நாம், நமது பொருளாதாரம் யுத்தத்திற்குப் பின் எப்படி மாறியிருக்கிறதென்பதைப் பற்றியும், பொருளாதாரம், மக்களை அரசியலுணர்வு பெற முடியாதளவிற்கு எப்படி சங்கிலியிட்டிருக்கிறதென்பதைப் பற்றியும் சிந்திக்க வேண்டியவர்களாயிருக்கிறோம்.

உரையாடலில் நியந்தினி, எப்படி தெற்கில் இந்த நுண்கடன்கள் அல்லது பொருளாதாரச் சுமைகள், தெற்கில் உள்ள தொழிற்சங்கங்களை இயங்கவிடாமல் செய்கின்றதென்பதை பற்றிக் குறிப்பிட்டார். ஒரு கிழமைக்கு தொழிற்சங்கம் பணி முடக்கத்தை அறிவித்தால், கிழமை லோன் கட்டுபவர்கள் என்ன செய்வார்கள்? உடனடியாக ஒரு அமைதியின்மை தோன்றி, அன்றாடச் சிக்கல்கள் போராடும் எண்ணத்தைக் குலைக்கும். அதுதான் நடந்து வருகிறது அங்கு.

இதேபோல் வடக்குக் கிழக்கைப் பற்றி நாம் சிந்தித்துப் பார்த்தல், இந்தப் பொருளாதாரப்  பிரச்சினைகள், வீதியிலிருக்கும் ஒரு போராட்டப் பந்தலை நிமிர்ந்து பார்க்குமளவுக்காவது பொதுமக்களை விட்டு வைத்திருக்கிறதாவெனப் பார்க்க வேண்டும். யுத்தத்திற்குப் பிறகான வாழ்க்கைச் சூழலில், பெண்களை நோக்கிப் படையெடுத்த கம்பெனிகள் நிகழ்த்திய, நிகழ்த்திக்கொண்டிருக்கின்ற சுரண்டல்கள் கொஞ்ச நஞ்சமில்லை. பணச் சுரண்டல், பாலியல் சுரண்டல், அவமானம், நிம்மதியின்மையென்று எல்லாவற்றையும் அவர்களின் மேல் நிகழ்த்துகிறது. ஏராளமான செய்திகளை இதுவரைக்கும் அறிந்திருக்கிறோம். குடும்பமாகத் தற்கொலை, பெண்களிடம் பாலியல் தொல்லை செய்யும் கடன் கொடுப்போர், பணத்தினைக் கட்ட முடியாதவர்களை கடன் கொடுப்போர் எப்படி நடத்துவர் என்று எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருக்கிறோம். ஆனால், இதற்கான எதிர் நடவடிக்கையாக எதனைச் செய்யப்போகிறோம். சில பெண்கள் அமைப்புகளும், சில செயற்பாட்டாளர்களும் மட்டுமே பொருட்படுத்தும்படியான எதிர்ப்பை வெளிக்காட்டியிருக்கின்றனர்.

இதனை இப்படியொரு நோய் என்று மக்களை உணர வைப்பது அல்லது அவர்கள் இதை நோய் என்று அறிந்துகொண்டாலும் இதனை மாற்ற முடியாமல் இருப்பதை எப்படி மாற்றுவது?

நான் ஒரு பொருளாதார நிபுணன் அல்ல. ஆகவே, துறைசார்ந்த கணிப்புகளையோ, அல்லது முன்மொழிவுகளையோ என்னால் கண்டடைய முடியாது. ஆனால், சில அவதானிப்புகளை முன்வைக்க விரும்புகிறேன்.

* மட்டக்களப்புப் பிரதேசத்தில், பல வருடங்களுக்கு முன் இருந்த சடங்கொன்றைப் பற்றி அறிந்தேன். அதன் பெயர் “எண்ணைச் சிந்து”. ஊரில் தமக்குப் படிப்பிக்கின்ற வாத்தியாருக்கு பணம் கொடுப்பதற்காக மாணவர்கள் இணைந்து வீடு வீடாக நிதி சேகரிப்பார்கள். நிதி சேர்க்கும் போது அவர்கள் பாடும் பாடலுக்குப் பெயரே எண்ணைச் சிந்து. அதனைப் பிறகு தமது வாத்தியாருக்கான சம்பளமாகக் கொடுப்பார்கள். இது ஒரு உள்ளூர் வழிமுறை. உள்ளூர் பொருளாதாரத்தைக் கட்டமைப்பதில் நாம் கடந்த கால நிதி சேர்ப்பு முறைகளிலிருக்கின்ற “சிந்தனை முறைகளை” நவீனப்படுத்த வேண்டும். உள்ளூர்ப் பணத்தை உள்ளூரிலேயே சுழல வைக்கின்ற, கூட்டு உழைப்பு, கூட்டு நிதியமைப்புகளை கண்டடைகின்ற வழிமுறைகளை அறியமுடியுமாவென்று நாம் உரையாட வேண்டும். கிழக்குப் பல்கலைக் கழகத்தில் நிகழ்ந்த ஆய்வு மாநாடொன்றில் “எண்ணைச் சிந்து” பற்றி பல்வேறு கட்டுரைகளும் விவாதங்களும் முன்வைக்கப்பட்டன. கிழக்கில் பெரும் பிரச்சினையாக வளர்ந்திருக்கும் நுண்கடன் பிரச்சினைக்கான தீர்வுகளாக உள்ளூர்ப் பொறிமுறைகளை வளர்த்தெடுக்க முடியுமாவென்ற உரையாடல் நீண்டிருந்தது.

இந்த இடத்தில், நவதாரளவாத உலகிற்கு எதிராக உள்ளூர் அறிவு முறையையும், பண்பாட்டிலிருந்து பெற்றுக்கொள்ளக் கூடிய நுட்பங்களையும் பயன்படுத்த முடியுமாவென்ற உரையாடலை நீட்டிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

* இந்த முறை நிகழ்ந்திருக்கும் உள்ளூராட்சித் தேர்தலில், மக்களுடன் நேரடியாக நெருங்கிப் பழகக்கூடிய, பிரதேசத்தின் பிரச்சினைகளை உணரக்கூடிய வாய்ப்பு வெற்றி பெற்ற மற்றும் தேர்தலில் நின்ற அனைத்து வேட்பாளர்களுக்கும் உண்டு. ஆகவே, நுண்கடனை உங்களது பிரதேசத்திற்குள் அனுமதித்து மக்களை உறிஞ்சும் அதனுடன் கைகோர்க்கப் போகிறீர்களா? அல்லது பிரதேச மக்களுக்கு விழிப்புணர்வூட்டி அதேநேரம் அதற்குப் பதிலீடான “பொருளாதாரப் பாதுகாப்பினை” மக்களுக்கு வழங்கும் திட்டங்களை, பிரதேச அளவில் கண்டுபிடித்து நடைமுறைப்படுத்தி, மக்களை இந்தப் பள்ளத்திலிருந்து மீட்கப்போகிறீர்களா?

முதற் கட்டமாக, இந்த நுண்கடன் கம்பெனிகள், கண்டபடிக்கு ஊரிற்குள் அலைவதை நிறுத்த வேண்டும். உள்ளூரளவில் எந்தெந்தக் கம்பெனிகள் வருகின்றன? அவை எவ்வளவு வட்டி வீதம் வாங்குகின்றன? அதனால், மக்களுக்கு வரும் பிரச்சினைகள் என்பன பற்றிய முழுமையான அவதானிப்பினை செய்து, அதன் பின்னர் அதனைப் பற்றிய கலந்துரையாடலை பிரதேச, மாநகரசபை உரையாடல்களுக்குள் கொண்டு செல்ல வேண்டும். இதுவொரு உள்ளூர்க் கண்காணிப்பாகவும், மக்களை கண்டபடி ஏமாற்றும் செயல்களுக்கொரு தடையாகவும் இருக்கும்.

அதன் பின்னர், அவற்றினை ஒழுங்குபடுத்த வேண்டும். இரண்டு மூன்று லோன்களை மக்களுக்கு வழங்கும் நிறுவனங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். மக்களை இதிலிருந்து மீட்பதற்கான வாழ்வாதார நடவடிக்கைகளை உருவாக்கி அவற்றை செயற்படுத்த வேண்டும்.

இனி, மக்களை சமூக, பொருளாதார, அரசியல் விடுதலை நோக்கிய பயணத்தில் ஒன்றிணைப்பதிலுள்ள  பிரச்சினைகளைப் பார்ப்போம். முதலாவது பிரச்சினை, ஒவ்வொரு பொதுப் போராட்டத்திற்குமுள்ள மையக் குவிவு ஒன்றுதான். அதுதான் அந்தப் போராட்டங்களின் அழுத்தப் புள்ளி. அதனைத் தாண்டி மக்கள் சிந்திப்பதில்லை, அது ஒன்றுதான் அவர்கள் இலக்கு, உதாரணத்திற்கு பிலக்குடியிருப்பில் நிகழ்ந்த நுண்கடன் பற்றிய உரையாடலை மேலே பார்த்தோம். அதேபோன்றுதான் எல்லா இடங்களிலும், காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டத்திலோ, காணி விடுவிப்புப் போராட்டத்திலோ வேறு விடயங்கள் பேச முடியுமா என்ன? ஆனால், அரசியற் போராட்டங்கள் தொடர்பில் மக்களிடம் முன்னேற்றமான பார்வை வந்திருக்கிறது. உதாரணத்திற்கு இரண்டு பிரதேசங்கள், புத்தூரில் இடம்பெற்ற, மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியிலுள்ள மயானங்களை அகற்றக் கோரிய போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், பிலக்குடியிருப்பு காணி விடுவிப்பு, கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டங்களுக்குச் சென்றனர். அவர்களுக்கு அமைப்பு ரீதியிலான, வழிகாட்டலும் இருப்பதால் தமக்காக மட்டுமின்றி பிற போராட்டங்களுக்கும் செல்ல ஆரம்பித்திருக்கின்றனர். இதேபோல், பிலக்குடியிருப்பு மக்களும், மற்றைய காணிப் போராட்டங்களுக்கும் காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டங்களுக்கும் ஆதரவு தெரிவித்திருந்தனர். இவையெல்லாம் ஆரோக்கியமான புள்ளிகள். ஆனால், அதேநேரத்தில் நமக்கு முன்னாலுள்ள பணியோ, பிரமாண்டமானது.

அரசியல் இயக்கங்களோ, பரவலாக அறியப்பட்ட முன்னோடியான செயற்பாட்டு இயக்கங்களோ இல்லாத நமது சமூகத்தில் நாம் நமது பயணத்தை உருவாக்க இந்த மூன்று தளங்களிலும் செயற்படவேண்டியிருக்கிறது. சமூக, பொருளாதார, அரசியல் வெளிகள் மூன்றும் ஒன்றுடன் ஒன்று இணைந்தவை. இவற்றைத் தனித்தனியான வெளிகளாக கையாள முடியாது. இவற்றுக்கிடையிலிருக்கும் இணைப்பினை நாம் உணரவும், அதனைச் சமூகத்தின் பிற உறுப்பினருடன் பகிரவும் வேண்டும். யுத்தத்திற்குப் பின்னரான எல்லா வகையான நெருக்கடிகளிலிருந்து எழுந்து நாம் ஒரு ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதற்கு, மூன்று தளங்களிலும், முற்போக்கான, விடுதலைக்கான அரசியலை உரையாடுவோம், செயற்படுத்துவோம்.

கிரிஷாந்த்