படம் | விகல்ப, A9 வீதி புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கும் குடும்பத் தலைவிகளாக உள்ள பெண்கள்.

பெண்களுக்கான சமவுரிமையானது பல நேர் விளைவுகளை உண்டாக்கும் சாத்தியங்கள் உண்டு. ஆனாலும், இன்று உலகில் பெண்களுக்கு சமவுரிமை வழங்கப்படவில்லை. சமூக, பொருளாதார மற்றும் அரசியலில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும். இது குறித்து உலகலாவிய ரீதியில் பல மாற்றங்கள் முன்னெடுப்படல் வேண்டும் எனும் அடிப்படையில் இவ்வாண்டின் உலக பெண்கள் தினத்திற்கான தொனியாக ‘மாற்றங்களை ஊக்குவித்தல்’ என்பதாக அமைந்திருக்கின்றது.

‘மாற்றங்களை ஊக்குவித்தல்’ என்பதன் அர்த்தம் என்ன? அன்று வீட்டுவேலைகளுடன் அடுப்படியில் மட்டும் நின்றுகொண்டிருந்த பெண்களை இன்று அலுவலகத்துள் அனுமதித்து விட்டோம் என்பதா? இல்லை சமவுரிமை கேட்கின்றீர்கள் ஆகவே, சரிசமனாக போராடுங்கள் என அறைகூவல் விடுப்பதா?

சமூக கட்டமைப்பின் மிக முக்கியமான கூறு மனிதன். ஆண் – பெண் என்ற பால் அடிப்படையிலான பாகுபாடு எவ்வாறு பார்க்கப்படுகிறது என்பது இன்று ஆராய வேண்டியதொரு முக்கிய அம்சம். ஒரு தாய் கர்ப்பம் தரிக்கும்போதே அது ஆணா அல்லது பெண்ணா என அறிந்திட ஆசைப்படுகின்றோம். அது ஒரு ஆண் குழந்தை என்றால் ‘வாரிசு’ என்று தலையில் வைத்து கொண்டாடுகின்ற நாம் அதுவே ‘பெண்’ என்றால் எதிர்காலம் குறித்த பயம் அந்த தாய் முதல் குடும்பத்தில் உள்ள அனைவரையும் பீடித்துக்கொள்கிறது.

பிறந்த குழந்தைக்கு ஆணாயின் நீலத்திலும் பெண்ணாயின் இளஞ்சிகப்பிலும் தெரிவுசெய்வதிலிருந்து ஆரம்பிக்கின்றது நமது பாகுபாடுகள். பெண் குழந்தைக்கு வீட்டுவேலைகளையும் ஆண் பிள்ளைக்கு வெளிவேலைகளையும் கொடுப்பது முதல் நிற்பது, நடப்பது, சிரிப்பது என அனைத்து நடவடிக்கைகளிலும் இந்த பாகுபாடு தொடர்கின்றது. அடுத்து பாடசாலை போக தொடங்கியவுடன் ஆண் குழந்தைகளுக்கு விளையாட்டுத் துறையில் ஊக்குவிப்பதுடன் பெண் குழந்தைகளுக்கு அழகியல் துறைகளை வலிந்து புகட்டுகின்றோம். பெண் குழந்தை என்றால் இருட்டுவதற்கு முன் வீட்டிற்குள் வந்திட வேண்டும். ஆணென்றால் எத்தனை மணிக்கும் வரலாம், நண்பர்களுடன் ஊர் சுற்றலாம் என்ற சட்டங்களையும் நாம் உருவாக்கி வைத்திருக்கின்றோம். ஏன் இன்றும் கூட இரவென்பது பெண்ணுக்கு மறுக்கப்பட்டதொன்றாகவே இருக்கின்றது. இன்னும் பல நூற்றாண்டுகள் கடந்தாலும் அது நடவாத ஒன்றாக இருக்கப்போகிறது.

பதின்ம வயதினை தாண்டி இருபதுகளில் காலடி வைக்க தொடங்கும்போது அடுத்த பிரச்சினையாக உயர்கல்வி உருவெடுக்கிறது. ஆண்கள் எவ்வளவு வேண்டுமானாலும் படிக்கலாம் என்று அவர்களது கல்வியில் முதலீடு செய்பவர்கள் அதுவே பெண்ணுடைய கல்வி என்று வரும் போது தயங்குகின்றார்கள். இந்த பாகுபாடு எமது நாட்டில் சற்று குறைந்திருந்தாலும் முற்றிலுமாக நீக்கப்பெறவில்லை என்றே கூறலாம். காரணம், பெண்களை அதிகம் படிப்பித்துவிட்டால் வரன் தேடும்போது அதற்கு தகுந்தவகையில் பல லட்சங்களை சீதனமாக கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அல்லது, பெண்களை வெளியிடங்களுக்கு படிக்க அனுப்புமிடத்து சமூகம் எவ்வாறு அப்பெண்கள் குறித்து விமர்சிக்குமோ என்கின்ற பயம். அடுத்து, அவர்களுக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டால் தம் கடன் முடிந்துவிட்டது என்கின்றதுடன் திருப்திபட்டுக்கொள்கின்றார்கள். பழைய படி 21ஆம் நூற்றாண்டிலுள்ள பெண்ணும் பழமையான அதே வாழ்க்கை வட்டத்தில் சுழல ஆரம்பிப்பார். மீண்டும் மீண்டும் இதே வட்டங்கள் எம் சமூகங்களில்.

ஒருவேளை இந்த வட்டத்தில் சிக்கிகொள்ளாமல் சுயசிந்தையுடன் இயங்க ஆரம்பிக்கும் ஆணாகவிருக்கட்டும் பெண்ணாகவிருக்கட்டும் அவர்களை சமூகம் விமர்சிக்க ஆரம்பித்துவிடும். அவர்களது சுயவிடயங்கள் கூட அலசப்படும்.

ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான வேறுபாடு என்ன? பெண்ணுக்கு உடலளவில் மட்டும் தான் சில வேறுபாடுகள் காணப்படுகின்றன. கர்ப்பப்பை, மாதவிடாய், முலைப்பாலூட்டல் என்ற காரணிகளால்தான் பெண்ணானவள் ஆணிலிருந்து வேறுபிரித்தறியப்படுகின்றாள். ஆக, அவளுக்கென்று உடலளவிலான மாற்றங்கள் இருப்பினும், புறக்காரணிகளை எடுத்து நோக்கும் போது ஆணுக்கு நிகரானவளாகவே இருக்கின்றாள்.

எனவே, மாற்றங்கள் என்பது சமூக ரீதியாகவும் சிந்தனை ரீதியாகவும் ஏற்பட வேண்டிதொன்றானதே. ஆகவே, மாற்றங்களை ஊக்குவித்தல் என்பது புற காரணிகளால் அவளுக்கு ஏற்படும் தடைகளிலிருந்து மீண்டெழுந்து புதிய பாதையில் அவள் பயணிப்பதற்கு வழிசமைத்தலேயாகும்.

தனக்குள்ளான மாற்றங்களை குறித்து ஒவ்வொரு பெண்ணும், பெண்ணடிமை தளைகளிலிருந்து அவளை விடுவிப்பது குறித்து ஒவ்வொரு ஆணும் சமூக ஒடுக்குமுறைகளிலிருந்து அவளை மீட்டெடுப்பது குறித்து சமூகமும் சிந்திக்கவேண்டும். பின் அற்கான மாற்றங்களை உருவாக்க ஒவ்வொரு பெண்களையும் ஊக்குவிப்போம். இதற்காக அணிதிரள்வோம். அனைவருக்கும் மாற்றங்களை தோற்றுவிக்க கூடியதான பெண்கள் தின வாழ்த்துக்கள்.

கேஷாயினி எட்மண்ட்