பட மூலம், மரிசா டி சில்வா
மன்னார் மாவட்டத்தின் தென் எல்லையோரமாக கடற்கரையோரத்தில் மன்னார் பட்டினத்திலிருந்து சுமார் 50 கிலோமீற்றர் தொலைவில் கடற்கரையோரமாக முள்ளிக்குளம் என்ற கத்தோலிக்கத் தமிழ்க்கிராமம் இடஅமைவு பெற்றுள்ளது. 1990 இல் இராணுவ நகர்வு ஒன்றின் காரணமாக சுமார் 300க்கும் அதிகமான குடும்பங்கள் இக்கிராமத்தை இழந்து வெளியேறி பல்வேறு இடங்களிலும் தஞ்சம் புகுந்திருந்தனர். 2009இல் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின் தமது சொந்த இடத்திற்கு மீளத்திரும்பலாம் என எதிர்பார்த்திருந்த இக்கிராம மக்களுக்கு இதுவரையில் இரண்டு தசாப்தங்கள் கழிந்த நிலையிலும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இக்கிராமத்திற்கு சமீபமாக உள்ள பூக்குளம் என்ற சிங்கள கிராம மக்கள் சகல வசதிகளுடனும் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்டு விட்டனர். ஆயினும், முள்ளிக்குளம் மக்கள் மட்டும் மீளக்குடியமர கடற்படை மறுப்புத் தெரிவித்து வருகின்றது. முள்ளிக்குள கிராமம் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டு வடமேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகம் என மாற்றப்பட்டுள்ளதுடன், இப்பகுதி மக்களை முள்ளிக்குளத்திலிருந்து வடக்காக 20 கிலோமீற்றர் தொலைவிலுள்ள கரையோரத்தில் குடியேற்ற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆட்சியின்போது ‘காயாக்குழி’ என்ற இடத்தில் குடியமரும் முள்ளிக்குள மக்களுக்கு (குடும்பம் ஒன்றிற்கு) 50 ஆயிரம் ருபாவும் 1 ஏக்கர் வயல் காணியும் வழங்கப்படுமென பத்திரிகைச் செய்திக்குறிப்பு ஒன்று முன்பு கூறியிருந்தது. முள்ளிக்குள மக்களுக்கு காயாக்குழியில் வெட்டும் சவக்குழிக்கான முன்அறிவிப்பு இது என்றே அன்று இது கருதப்பட்டது. இப்போது காயாக்குழியில் சில குடும்பங்களும், முள்ளிக்குளத்திற்குச் சமீபமாக (3 கி.மீ) உள்ள காட்டுப் பகுதியில் சில குடும்பங்களும் அவலவாழ்வு வாழ்ந்து வருகின்றனர். இன்னும் சிலர் இந்தியாவிலும் சிலர் மன்னார் தீவப்பகுதியிலும் தாம் எப்போது தமது சொந்த இடம் திரும்புவோம் என்ற ஏக்கத்திலும் வாழ்ந்து வருகின்றனர். அங்குள்ள பாடசாலை மிகச்சொற்ப மாணவர்களுடனேயே போதிய ஆசிரியர்களின்றி இயங்குவதாகவும், மிகச்சொற்பமான நிலத்திலேயே விவசாயம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், துறையிலிருந்து தொலைதூரத்திலேயே சென்று மீன்பிடியில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்குள்ளவர்கள் கூறுகின்றனர். பெரும்பாலான தமது சொந்த வீடுகளில் படையினரே குடும்பம் நடாத்திவருவதாகவும் கூறுகின்றனர். இவைகள் எல்லாம் இந்த நல்லாட்சியின் இலட்சணங்கள். தேசிய பாதுகாப்புக்கு இவையெல்லாம் அவசியமாம்?
சிங்கள (பூக்குளம்) குடியிருப்புக்களுக்கு அனுமதியளித்து விட்டு தமிழ்க் கிராமமான முள்ளிக்குள மக்களை மட்டும் வேறு இடத்திற்கு இடமாற்றுவதற்கான சதியின் பின்னணி என்ன? முள்ளிக்குளத்தை முழுவதும் கடற்படை கட்டளைத் தலைமையகமாக மாற்றியதன் நோக்கம் என்ன? என்பதைக் கண்டறிவது அவ்வளவு கடினமல்ல. மன்னார் மாவட்டத்தின் தென் எல்லையில் முஸ்லிம் பிரதேச செயலகப் பிரிவில் அடங்கும் முள்ளிக்குளம் என்ற கிராமம் வளமிக்கதும் (விவசாயம், மீன்பிடி, காட்டுவளம்) முற்றிலும் தமிழ் கத்தோலிக்கர்களைக் கொண்ட ஓர் எல்லையோரக் கிராமமாகும். இத்தமிழ்க் கிராமத்கைக் கையகப்படுத்தி இங்குள்ள மக்களை வேறு இடத்திற்கு குடியமர்த்தி விட்டால் முசலிப்பகுதியில் கடந்த கால அரசு ஏற்கனவே திட்டமிட்டுவந்த சிங்களப் பிரதேச செயலகப் பிரிவுக்கு சௌகரியமாக அமையும் என்ற அடிப்படையிலேயே இக்கிராமம் இன்று கடற்படைத்தளமாக மாற்றப்பட்டுள்ளது போல் தெரிகிறது.
இப்போது தேர்தல் சூடுபிடித்துள்ளது. கட்சிக்காரர்களின் (அகோர) முகங்களையும் அவர்களது தூள்பறக்கும் (பொய்) வாக்குறுதிகளையும் அங்குள்ளவர்கள் இனி கேட்கலாம். கேவலம் சிறிய முள்ளிக்குளத்தை விடுவிக்க லாயக்கற்றவர்கள் அரசியல் தீர்வைப் பெற்றுத்தருவார்கள், மீளக்குடியமரச் செய்வார்கள், எமக்கெல்லாம் இனி விடிவுகாலம் பிறக்கும் என இனி யாராவது நம்பினால் அது மகாபாவமாகவே இருக்கும் என்பது எமது கருத்து.
நீண்டகாலத்தின் பின்னர் மாவட்டத்திற்கு புதிய ஆயர் ஒருவர் வந்திருக்கிறார். முன்னைநாள் ஆயர் வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களின் விடாமுயற்சியின் விளைவாகவே முள்ளிக்குளம் இன்னும் தப்பிப்பிழைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அவரது பாணியில் புதிய ஆயரும் மிக மோசமாக பாதிப்புற்றிருக்கும் முள்ளிக்குளம் மக்களின் விடுதலைக்காக நடவடிக்கை எடுப்பார், எடுக்கவேண்டும் என முள்ளிக்குள மக்களோடு சேர்ந்து நாங்களும் நம்புகின்றோம். மன்னாரில் கத்தோலிக்க மக்களின் விடுதலையுடன் முள்ளிக்குள கத்தோலிக்க மக்களின் விடுதலையும் அவரின் முக்கிய பணிகளில் ஒன்றாக இருக்கவேண்டும். அவரது முயற்சியும் வெற்றிபெற வேண்டும் எனவும், அதற்கான வல்லமையை இறைவன் அவருக்குக் கொடுக்கவேண்டும் எனவும் நாம் வேண்டிநிற்கின்றோம்.
பேராசிரியர் ஏ.எஸ். சூசை