பட மூலம், Scroll

2017 ஒக்டோபர் மாத இறுதிப் பகுதியில் நூறு (100) பாரிய ஜாக்கொட்டு வலைகளுக்கு சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்குமாறு மீன்பிடி அமைச்சின் பணிப்பாளர் நாயகத்தினால் மன்னார் கடற்றொழில் பணிப்பாளருக்குப் பணிக்கப்பட்டுள்ளது.

நிபந்தனைகள்:

நூறு (100) பொறிவலைகளுக்கு இரு வருட தற்காலிக அனுமதி.

வங்காலை கரையிலிருந்து 6 கி.மீ. தொலைவில் (6 கி.மீ ஆரம்) 100 ச.கி.மீ பரப்பளவில் பயன்பாடு.

இருவலைகளுக்கிடையிலான இடைவெளி 300 மீற்றர்

வலையின் கண் அளவு 1.1/4 அங்குலம்

வேலிவலையின் நீளம் 75மீ.

வங்காலை மீனவர்கள் பயணிப்பதற்கு 250 மீ. நீளமான பாதை?

ஒவ்வொரு பொறிகளிலும் இரவு நேர வெளிச்சம் போடுதல்வேண்டும்.

பகுத்தறிவுக்கு ஒவ்வாததும், நடைமுறைச்சாத்தியமுமற்ற மேற்குறித்த  நிபந்தனைகளைக் கொண்ட இந்த அனுமதியினை ஏற்றுக்கொள்ள முடியாது  என  மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இத்தகைய ஒரு முடிவானது மீனவர்களிடையே ஏற்கனவே தோன்றியுள்ள முறுகல் நிலைமைகள்  தீராத ஒரு பகையினை வளர்த்தெடுக்கவே உதவப்போகிறது எனவும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் கூறுகின்றனர். இலங்கையின் தெற்குப் பகுதிகளில் திறந்த கடலில் எப்பாகத்திலும் இந்த மீன்பிடி நடைமுறையில் இல்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. எனினும், சில வருடங்களாக மன்னார் (Gulf of Mannar) தென்கடலில் ஆழமான கடற்பரப்பில் மன்னார் பட்டின கரையோரப் பகுதி சார்ந்த சில மீனவர்கள் வலைகளின் அடியிலே கூரான இரும்புக்கம்பிகள் மற்றும் மண்மூடைகளைக்கொண்டு கட்டுவலை எனப்படும் (ஜாக்கொட்டு/ Jakkottu) முறையற்ற இப்பொறிகளை நிலை நிறுத்தி  மீன்பிடியிலே ஈடுபட்டுவருவது ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதனால், வழிச்சல் வலை மற்றும் கரைவலை மேற்கொள்ளும் தாழ்வுபாடு, வங்காலை நறுவிலிக்குளம், அரிப்பு, அச்சங்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பெருந்தொகையான மீன்பிடியாளர்களின் வாழ்வாதாரம் மிக மோசமாகப் பாதிப்படைந்துள்ளதாகவும் அறியமுடிகிறது.

இப்பொறியின்  அடியில் பல கூரான இரும்பு கம்பிகளும், பல மண்மூடைகளும் பொருத்தப்பட்டுள்ளதால் அப்பகுதியிலுள்ள பவளப்பாறைகளுக்கும் பலத்த சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதுடன் அருகிவரும் உயிரினமான கடல் ஆமைகளும் இப்பொறிகளுக்குள் அகப்பட்டு அழிவடைவதையும் அவதானிக்கமுடிந்துள்ளது.

கடற்றொழில் கட்டளைச்சட்டம் 1996 இல.2 பிரிவு 1அ.இன்படி ஆபத்து விளைவிக்கும் (Harmful substance) பொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடியில்  ஈடுபடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. அத்துடன், 2008ஆம் ஆண்டு  35ஆம் இலக்க கட்டளைப்படி கம்பிகள்கொண்ட வலைகள் அமைப்பதுவும் தடுக்கப்பட்டுள்ளது. இப்பொறிவலைகளினால் பாதிப்புற்ற இப்பகுதி மீனவர்களின் முறைப்பாட்டையடுத்து 2013இல் மன்னார் நீதிமன்று இரும்புக்கம்பி பொருத்திய பட்டிகளை அகற்ற பணித்திருந்தது. இதற்கப்பால் மன்னார் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டங்களில் (21.07.2015 மற்றும் 15.10.2015 ஆகிய திகதிகளில் நடைபெற்றவை) இத்தகைய பட்டிகளை அகற்றுமாறும் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. ஆயினும், இத்தகைய ஆபத்தான முறையற்ற  மீன்பிடிச்செயற்பாடுகளை நிறுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் இப்பகுதி அரசியல்வாதிகளும் தவறியிருந்தனர். இத்தொழில் இன்றும் தங்கு தடையின்றி தொடருகின்றது.


இழுவைமடித் தடைச்சட்டம்: பாக்கு நீரிணையில் அண்ணன் – தம்பி மோதலை முடிவுக்குக் கொண்டுவருமா?


தொடர்ந்தும் பாதிப்புற்ற  மீனவர்களின் வேண்டுகோளின்படி கடந்த 23.12.2015 அன்று மீன்பிடி அமைச்சு அதிகாரிகள் மன்னார் பகுதிக்கு வருகை தந்து கடலில் கள நிலைமைகளை நேரில் அவதானித்து அதன் ஆபத்துக்களை மதிப்பீடு செய்து 15.01.2017க்கு முன்னர் முறையற்ற அப்பொறி வலைகளை அகற்ற பணித்துச் சென்றனர். ஆயினும், கடற்றொழில் திணைக்களம் இதிலும் உரிய  நடவடிக்கைகளை எடுக்கத்தவறியிருந்தது. மாவட்டத் திணைக்களத்தின் அசமந்தமான  செயற்பாடுகளில் அதிருப்தியுற்ற மீனவர்கள் கடற்றொழில் அமைச்சுக்குச்சென்று செய்த முறைப்பாட்டையடுத்து அமைச்சின் அதிகாரிகளும் ‘நாரா’ நிறுவன அதிகாரிகளும் மீண்டும் பாதிப்புற்ற பகுதிக்கு வருகை தந்து கடலில் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டதுடன், பாதிப்புறும் மீனவர்களையும் சந்தித்து அவை தொடர்பாக தகவல்திரட்டி அமைச்சுக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தது.

அதனடிப்படையில் கடற்றொழில் அமைச்சு மாவட்டத் திணைக்களப் பணிப்பாளருக்கு சுற்றுநிருபம் ஒன்றை 21.12.2016இல் அனுப்பியிருந்தது. அதிலே 1996 இல.2இல் உள்ளவாறு (17) பதினேழு வகையான தடைசெய்யப்பட்ட மீன்பிடிமுறைகளுக்குள் குறித்த ஜாக்கொட்டு முறையினைச்  சேர்க்குமாறு பணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதன் பாதிப்புக்கள் பற்றி அறிந்திருந்தும் 2017 ஒக்டோபர் மாத இறுதிப் பகுதியில் சில நிபந்தனைகளுடன் நூறு (100) பாரிய ஜாக்கொட்டு வலைகளுக்கு அனுமதி வழங்குமாறு மீன்பிடி அமைச்சின் பணிப்பாளர் நாயகத்தினால் மன்னார் கடற்றொழில் பணிப்பாளருக்குப் பணிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர் (அனுமதிக்கான ஆவணம் கீழே இணைக்கப்பட்டுள்ளது).

குறித்த நிபந்தனைகள் எவையும் பகுத்தறிவுக்கு ஒவ்வாததும், நடைமுறையில் சாத்தியப்படக்கூடியதுமல்ல. ஆயினும், சம்பந்தப்பட்ட மன்னார் திணைக்கள அதிகாரியினால் அவசர அவசரமாக குறித்த பொறிவலை மீனவர்களுக்கு பாஸ் வழங்கியதாகவும், அனுமதிபெற்ற மீனவர்கள் துரிதமாக மீண்டும் மன்னார் தென்கடலில் பொறிவலைகளை அமைத்துள்ளதாகவும், இதனால் பாதிப்படைந்த அப்பகுதி சிற்றளவு மீன்பிடியாளர்கள் கடற்றொழில் அமைச்சின் இந்தப் பொறுப்பற்ற செயலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி பிரதேச செயலாளரிடமும் முறையிட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

மன்னார் தென்கடலில் 100 ஜாக்கொட்டு வலைகளுக்காக ஒதுக்கப்பட்ட பிரதேசம்

கடந்த 20.12.2016இல் கள ஆய்வின்போது நூற்றுக்கு மேற்பட்ட பொறிகளும் வலைகளின் அடியிலே பொருத்தப்பட்டுள்ள இரும்புக்கம்பிகளும், பெருந்தொகையான மண்மூடைகளும் வலைகளின் அடியிலிருந்து வெளியே எடுக்கப்பட்டன (படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன).

மிகச்சிலரால் மேற்கொள்ளப்பட்டுவருகின்ற முறையற்ற, ஒழுங்குபடுத்தப்படாத (Unregulated) இத்தகைய மீன்பிடி முறையினால் பின்வரும் பாதிப்புக்கள் ஏற்படுவது அவதானிக்கப்படடுள்ளது.

பாதிப்புக்கள்

 1. குறித்த கரையோரத்தில் வழிச்சல் வலை (Drift net) மற்றும் கரைவலை (Beach seine) மீன்பிடியில் ஈடுபடுவோரின் உற்பத்தி பாதிப்படைகிறது. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்படைகிறது.
 2. வழிச்சல்வலைகள் நகரும்போது நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ள பொறிவலைகளில் சிக்குண்டு போவதால் அவ்வழிச்சல் வலைகள் சேதமடைகின்றன, இதனால் பெரும் நஸ்டத்திற்குள்ளாகின்றனர்.
 3. குறித்த கடற்பரப்பிலுள்ள பவளப்பாறைகளும் (Vankalai reef and Arippu reef) அருகிவரும் உயிரினமான கடல் ஆமைகளும் (Turtle) பெரும் அழிவுக்குள்ளாகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
 4. கரையோரத்தில் மண் அகழப்பட்டு அவை மூடைகளாக கட்டப்பட்டு பொறிவலைகளுக்குப் பாதுகாப்பு அரணாகப் பயன்படுத்தப்பட்டு வருவதால் கரையோரப்பகுதிகள் அரிப்புக்குள்ளாகிறது.
 5. இரவுவேளைகளில் மீனவர்கள் கடலில் பயணம்செய்யமுடியாத நிலை.
 6. மீனவர்களுக்கிடையே முறுகல்நிலையும் கடலில் கைகலப்புக்கள் ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களும் இடம்பெறுவதாக மீனவர்கள் கூறுகின்றனர்.

கொள்ளைப் போகும் மீன் வங்கி


ஆகவே இத்தகைய மீன்பிடிமுறையினை உடனடியாகத் தடைசெய்யப்பட்ட 17 வகை மீன்பிடிமுறைகளுக்குள் உள்வாங்கி மீனவர்களையும் கடல்வளங்களையும் பாதுகாக்கவேண்டியது அவசியமாகிறது.

பரிந்துரைகள்

மாவட்ட கடற்றொழில் திணைக்களமானது,

 1. குறித்த பொறிவலைகள் மன்னார் குடாக்கடலிலுள்ள (Gulf of Mannar) பவளப்பாறைகள் மற்றும் கடல் ஆமைகள் போன்றவற்றுக்கு அச்சுறுத்தலாக உள்ளதால் களப்புக்கள் தவிர்ந்த ஏனைய திறந்த வெளிக்கடலில் முற்றிலும் இதனை தடைசெய்து தடைசெய்யப்பட்ட மீன்பிடிமுறைகளுக்குள் இதனை உள்வாங்க ஆவன செய்தல் வேண்டும்.
 2. இதனைப் பயன்படுத்தும் பாதிப்படையும் மீனவர்களுக்கு நஸ்டஈடு வழங்கி இதனைக்கைவிட ஏற்பாடு செய்தல். அல்லது மாற்றுத்தொழில் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்படல் வேண்டும்.
 3. தடையை மீறுவோருக்கெதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுத்தல்.
 4. இப்பொறிவலைகளினால் உண்டாகும் பாதிப்புக்கள் குறித்து விழிப்புணர்வுக் கருத்தரங்குகள் உரியவர்களுக்கு வழங்குதல்.
 5. கண்காணிப்பு நடவடிக்கைகள் ஏற்பாடுசெய்யப்படல் வேண்டும்.

பேராசிரியர் ஏ.எஸ். சூசை