பட மூலம், Selvaraja Rajasegar Photo
ஆசிரியர் குறிப்பு: வலிந்து காணாமலாக்கப்படுதல் சட்டமூலம் தொடர்பாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹிஸினி கொலொன்னே ‘டெய்லி மிரர்’ பத்திரிகைக்கு வழங்கிய நேர்க்காணலின் தமிழ் மொழிபெயர்ப்பு இங்கு தரப்பட்டுள்ளது. இந்தச் சட்டமூலம் தொடர்பாக முன்னாள் வௌிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் வௌியிட்ட கருத்துக்கு பதில் கருத்து வழங்கும் முகமாகவே மஹிஸினி கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
###
- பலவந்தமாக காணாமலாக்கப்படுவதைக் குற்றமாக்க வேண்டிய தேவை ஏன்?
இலங்கையில் பலவந்தமாக காணாமலாக்கப்படும் சம்பவங்கள், வெள்ளை வான் கடத்தல் சம்பவங்கள் பல ஆண்டுகாலமாக இடம்பெற்றுள்ளது. இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை பல வருடங்களாக விசாரித்து வருகின்ற ஆணைக்குழுக்கள் ஆதாரமாகும்.
எல்லா பிரஜைகளும், நபர்களும் பலவந்தமாக காணாமலாக்கப்படுவதிலிருந்து பாதுகாப்பைப் பெறும் உரிமையைக் கொண்டுள்ளனர்.
இது இலங்கை தன்னுடைய பிரஜைகள் மீது கொண்டுள்ள பொறுப்புகளில் முதன்மையான ஒன்றாக பார்க்கப்படல் வேண்டும். சர்வதேச மாநாட்டில் கையொப்பமிடுவது இரண்டாமிட முக்கியத்துவம் வகிக்க, இலங்கை தனது பிரஜைகள் மீது கொண்டுள்ள பொறுப்பு முதலாமிட முக்கியத்துவம் வகிக்கின்றது.
பலவந்தமாக காணாமலாக்கப்படுவதைக் குற்றமாக்கவேண்டும் என கற்றுக்கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரை செய்ததுடன், அதனை முன்னைய அரசாங்கம் அமுல்படுத்தப்போவதாக உறுதிமொழியும் வழங்கியிருந்தது.
- பலவந்தமாக காணாமலாக்கப்படுதல் என்றால் என்ன?
இக்குற்றமானது சட்டமூலத்தில் பிரிவு 3இல் இவ்வாறு விளக்கப்பட்டுள்ளது:
(1) குறித்த நபர் ஒருவர் அரசாங்க உத்தியோகத்தராக இருந்துகொண்டு அல்லது அரசாங்கத்தின் அதிகாரத்துடன் செயற்படுகின்ற அல்லது அரசாங்கத்தின் அதிகாரத்துடன், ஆதரவாக அல்லது இணங்கியவராக நடக்கும் எந்தவொரு நபரும்
(அ) வேறொரு நபரை கைது செய்தல், தடுப்புக்காவலில் வைத்தல், சட்டத்திற்கு முரணான வகையில் சிறைவைப்பு, கடத்தல் அல்லது வேறு வடிவத்தில் எந்தவொருவரினது சுதந்திரத்தினையும் பறித்தல் மற்றும்
(ஆ) (i) இப்படிப்பட்ட கைது, தடுத்து வைத்தல், சட்டத்திற்கு முரணான சிறைவைப்பு, கடத்தல் அல்லது சுதந்திரத்தை பறித்தல் போன்ற செயலை செய்ததை ஒப்புக்கொள்ள மறுத்தல் மற்றும்
(ii) இதற்குள்ளான ஒருவரின் உண்மை நிலவரத்தை மறைத்தல்
(iii) இதற்குள்ளானவரின் தற்போதைய இருப்பிடத்தை வெளிப்படுத்துவதை தட்டிக்களித்தல் அல்லது மறுத்தல் அல்லது ஏற்றுக்கொள்ளக் கூடிய காரணமின்றி வெளிப்படுத்த முயற்சிக்கும் நபர் பலவந்தமாக காணாமலாக்கப்படுதல் என்ற பெயரில் குற்றவாளியாவார்.
பலவந்தமாக காணாமலாக்கப்பட்ட சம்பவமாக இருப்பதற்கு பின்வரும் இரண்டு கூறுகளும் கட்டாயம் இருக்க வேண்டும்:
- மேற்படி (அ) பகுதியில் சுட்டிக்காட்டியபடி குறித்த நபர் ஒருவரின் சுதந்திரம் பறிக்கப்பட்டிருக்க வேண்டும் (இங்கே கவனிக்கப்பட வேண்டியது யாதெனில் இது தேடிக்கண்டுபிடிக்க முடியாத காணாமல்போன அனைவருக்கும் பொருந்தாது. இது திடீரென காணாமல் போனோர் மற்றும் சுதந்திரம் பறிக்கப்பட்டோருக்கு மட்டுமே பொருந்தும்) மற்றும் சுதந்திரத்தைப் பறிப்பதை ஏற்றுக்கொள்ள மறுத்தல், அல்லது நபரை மறைத்து வைத்தல் அல்லது காணாமல்போனவர் இருக்குமிடத்தைப் பற்றி அறிய முடியாமை.
- அரசாங்கத்துடன் தொடர்புபடாதவர்களும், தனக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் பலவந்தமாக காணாமலாக்கப்படும் சம்பவங்கள் தொடர்பாக வேண்டுமென்றே கவனத்தில் எடுக்காமை அல்லது அதை தடுப்பதற்கு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கத் தவறுகின்றமையினால் கீழுள்ள அதிகாரிகள் மேற்கொள்ளும் செயற்பாடுகளுக்கு அவர்களுக்குப் பொறுப்பான மேலதிகாரிகளும் பொறுப்புக்கூற வேண்டியவர்களாவர் என பிரிவு மூன்றில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
- இந்தச் சட்டமூலம் சுதந்திரத்தை பறித்தல் என்பதன் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளதற்கு ஏற்ப தீவிரவாதத்துடன் தொடர்புடையவர்கள் அல்லது வேறு குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என்ற சந்தேகநபர்களின் கைதையும் தடுக்குமா?
இச்சட்டமூலத்தின் மூலம் மேற்கொள்ளப்படவிருக்கும் விசாரணைகளில் தடையேற்படும் என ஒரு சிலர் அச்சம் வெளியிட்டுள்ளனர். சுதந்திரத்தை பறித்தல் என்றால் ஒருவரை ஓரிடத்தில் அவருடைய சம்மதமின்றி சிறை வைத்தலாகும்
ஆனால், சுதந்திரத்தை பறித்தல் இச்சட்டமூலம்த்தின் கீழ் குற்றமாகவோ அல்லது தடுக்கப்பட்டதாகவோ கருதப்படவில்லை. பிரிவு 3இல் குறிப்பிடப்படும் விளக்கத்திற்கேற்ப சுதந்திரத்தை பறித்தலை ஏற்றுக்கொள்ள மறுத்தல் அல்லது நபரை மறைத்து வைத்தல் அல்லது காணாமலாக்கப்பட்டவரின் இருப்பிடத்தை வெளிப்படுத்த தவறுதல் ஆகியவற்றுடன் இணைந்ததான சுதந்திரத்தை பறித்தல் என்பதே குற்றமாக நிறுவப்படும்.
சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகள் சட்டத்திற்கு உட்பட்டு கைது செய்யும் உரிமையைக் கொண்டுள்ளனர். இருப்பினும், சிறைப்படுத்தப்பட்ட நபர் துஷ்பிரயோகத்துக்கு, சித்திரவதைக்கு மற்றும் சட்டவிரோதமாக கொலைசெய்யப்படக் கூடிய ஏதுநிலை இருப்பதால் அவரை இரகசிய இடத்தில் தடுத்துவைக்க முடியும் என இது அர்த்தப்படுத்தவில்லை.
- இச்சட்டமூலத்தினால் மோதல் நடைபெற்ற காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பாக பாதுகாப்புப் படையினர், பொலிஸார் மீது வழக்குத் தாக்கல் செய்வதற்கு வழிவகுக்குமா?
இல்லை.
இச்சட்டமூலம் கடந்தகால சம்பவங்களுடன் பொருந்தக்கூடிய நடவடிக்கைகளை கொண்டிருக்காது. இச்சட்டமூலம் அமுலுக்கு வந்தபின் பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்களை விசாரிப்பதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும். எதிர்காலத்தில் பலவந்தமாக காணாமலாக்கப்படுவதைத் தடுப்பதே இந்த சட்டமூலத்தின் நோக்கமாகும்.
- இச்சட்டமூலத்தினால் சர்வதேச வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதற்கு வழிவகுக்கப்படுமா?
அந்தந்த நாடுகளில் சட்டத்தில் ஏற்பாடுகள் இருக்குமிடத்து எந்தவொரு நாட்டுக்கும், குற்றத்துக்கும் எதிராக வழக்குத் தாக்கல் செய்யமுடியும். சட்டமூலத்திற்கும் இதற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை.
சர்வதேச சட்டத்தில் கூறப்பட்டுள்ளதன்படி, உள்நாட்டில் வழக்கானது நம்பகத்தன்மை அடிப்படையில் நடைபெறுமாயின் வெளிநாட்டில் வழக்கு தொடுக்கப்படாது.
இந்தச் சட்டமூலத்தின் கீழ் வரும் வழக்குகளை விசாரிக்கும் அதிகாரத்தை உயர் நீதிமன்றம் கொண்டிருப்பதாக 6 பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகவே, இச்சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலமாக, இலங்கையில் பலவந்தமாக காணாமலாக்கப்படும் சம்பவங்கள் தொடர்பான வழக்குகளை மேற்கொள்வதற்கும், விசாரணைகளை நடத்துவதற்கும் இலங்கை பொறுப்புக் கொண்டுள்ள வேளையில் இவ்வழக்கு சர்வதேச மன்றங்களின் முன்னிலையில் எடுக்கப்படமாட்டாது.
- பாதிக்கப்பட்டவர் யார்?
- காணாமலாக்கப்பட்ட நபர்
- பலவந்தமாக காணாமலாக்கப்பட்டதால் நேரடியாக பாதிக்கப்பட்ட எந்தவொரு நபரும் (பிரிவு 25)
- பாதிக்கப்பட்டவரின் உரிமைகள் என்ன?
- எவ்வாறு பலவந்தமாக காணாமலாக்கப்பட்டேன் என்பது தொடர்பான உண்மைகளை அறிதல்
- பலவந்தமாக காணாமலாக்கப்பட்டமைக்கான வழக்கு விசாரணைகள் தொடர்பான முன்னேற்றங்கள் பற்றிய தகவல்களை பெறல்
- காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிதல் (பிரிவு 4)
- சுதந்திரம் பறிக்கப்பட்ட நபரின் உரிமைகள் என்ன?
- இரகசியமான தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்படாமலிப்பதற்கான உரிமை. (சட்டவிரோதமான தடுப்பு முகாம்களில்)
- சட்ட வரையறைகளின் கீழ் உறவினரால், சட்டத்தரணியினால் அல்லது அவரின் (ஆண்/ பெண்) தெரிவில் வேறொருவரினால் அவரைச் சென்று பார்ப்பதற்கு, கலந்துரையாடுவதற்கு உள்ள உரிமை.
- சட்டத்தை அமுல்படுத்துவோர் கைது செய்து வைக்கப்பட்டோர் தொடர்பான பதிவேடுகளை வைத்திருத்தல் (இது இரகசிய தடுப்பு நிலையங்களையும்/ நீதிக்கு புறம்பான கொலைகளினதும் சம்பவங்களை குறைக்கும்
- குற்றவியல் நடைமுறைச் சட்ட ஏற்பாடுகள் ஏன் போதுமானவையாக இல்லை?
குற்றவியல் நடைமுறைச் சட்டமானது சட்டவிரோத கட்டுப்பாடு மற்றும் சிறைவாசம் என்பவற்றைக் கையாள்கின்றது.
ஆயினும், இச் சட்டத்தின் நோக்கம் வித்தியாசமானதாகும். அது, ஆரம்பக் கைதானது சட்டபூர்வமாக (அல்லது இல்லாத) சந்தர்ப்பங்களுடன் ஈடுபடுகின்றது. மற்றும், கைது செய்யப்பட்டவர் இரகசியமாக தடை முகாமில் வைக்கப்படக்கூடாது. அதாவது அவருடைய இருப்பிடம் மறைக்கப்படக்கூடாது என்றும் அது கூறுகின்றது. ஆகவே, பலவந்தமாக காணாமலாக்கப்படல் மற்றும் சட்டவிரோத கட்டுப்பாடு/ சிறைவாசம் ஆகியவற்றின் நோக்கு வித்தியாசமானவையாகும்.
இச்சட்டத்தின் நோக்கமானது புதுக் குற்றமொன்றை உருவாக்குவதற்கு அல்ல. மாறாக பலவந்தமாக காணாமலாக்கப்படும் குற்றம் நிகழாதிருப்பதற்கான ஒரு கலாச்சாரத்தினை உருவாக்குவதாகும்.
- சுருக்கம்
சுருங்கக் கூறின், பலவந்தமாக காணாமலாக்கப்படாமலிருப்பதை உறுதிசெய்யவதே இந்தச் சட்ட மூலத்தின் நோக்கமாகும். சட்டத்துட்பட்டு கைதுகள் இடம்பெறவேண்டும் என்பதோடு, கைதுசெய்யப்படுபவர்கள் சட்டரீதியான தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்படல் வேண்டும். அத்தோடு, அவர்களது பதிவுகள் பராமரிக்கப்படல் அவசியம். இது சித்திரவதை, துஷ்பிரயோகம் மற்றும் சட்டத்திற்குப்புறம்பான படுகொலை போன்றவற்றை தடுப்பதற்கு உதவும்.
நீதிக்குப் புறம்பான வெள்ளை வான் கலாசாரம் அல்லது சட்டத்திற்கு முரணான கடத்தல்கள் மற்றும் கொலைக் கலாசாரத்தை ஆதரிக்காத ஒருவர் இந்தச் சட்டமூலத்திற்கு எதிர்ப்பை வெளியிடமாட்டார்.
###
காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான சட்டமூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தென்னிலங்கையில் காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பாக செயற்பட்டு வந்த நேரம் நாடாளுமன்றில் தெரிவித்த கருத்துக்களின் ஹர்சார்ட் பதிவு.
ஹர்சார்ட், அக்டோபர், 25, 1990. பக்கம் 366: “நாட்டிலுள்ள தாய்மார்களின் அழுகையை, துக்கத்தை நான் எடுத்துச் சென்றேன். அவர்கள் பற்றி கதைப்பதற்கு எனக்கு சுதந்திரம் இல்லையா? தாய்மார்களின் அழுகையை, துக்கக் கதைகளை 12 நாடுகள் காதுகொடுத்து கேட்டன.”
ஹர்சார்ட், டிசம்பர், 04, 1989. பக்கம் 941: நாட்டிற்குள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் வருவதற்கு அனுமதித்த அரசாங்கத்திற்கு நன்றி. அதேபோல, பலவந்தமாக அல்லது விருப்பமில்லாமல் காணாமலாக்கப்படுவது தொடர்பான ஐக்கிய நாடுகளின் செயற்பாட்டு குழுவுக்கும், சர்வதேச மன்னிப்புச் சபைக்கும் இலங்கைக்கு விஜயம் செய்ய அனுமதி வழங்கவேண்டும்.
ஹர்சார்ட், அக்டோபர், 25, 1990. பக்கம் 941: “நன்கொடை வழங்கும்போது ஏன் நிபந்தனைகளை விதிக்க முடியாது என அந்த நாடுகளிடம் கேட்டோம், அவ்வாறு செய்யுமாறும் கேட்டோம். அதுதான் இன்று நிறைவேறியுள்ளது.”
ஹர்சார்ட், ஜனவரி, 25, 1991. பக்கம் 941: “நன்கொடை வழங்கும் நாடுகளுக்குச் சென்று இவற்றை அனுப்புவதை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டோம். அந்த நாடுகளிடம் இலங்கை மக்களின் மனித உரிமையைப் பாதுகாக்கும்படி கூறுமாறு தெரிவித்தோம்.”
ஹர்சார்ட், அக்டோபர், 25, 1990. பக்கம் 424: “இந்த அரசாங்கம் மனித உரிமைகளை மறுக்குமாயின் ஜெனிவாவுக்கு அல்ல, தேவையானால் உலகத்தில் உள்ள எந்த இடத்திற்கும், ஏன் நரகத்துக்கும் சென்று இந்த அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுவோம். உலகில் எங்கிருந்தாலும் இந்த அப்பாவி மக்களின் துக்கத்தை கூறவேண்டும்.”