படம் | Selvaraja Rajasegar Photo

 

வெப்பத்தை உமிழும் சூரியன்

கடைசியாக‌ வெளிப்பட்டிருந்தான்,

நகரம் கோடையின் தழுவலுக்குள்

நழுவிக்கொண்டிருந்தது;

உலகமயமாக்கப்பட்ட‌ தட்டுக்களிலே

கொழுப்பு நீக்கிய பாலைத் தேடிக் கொண்டிருந்தபோது

கால முடிவுத் திகதி கண்களைக் குத்தி நின்றது:

MAY 18.

 

மனக் கமரா பின்னோக்கிச் செல்கின்றது,

எட்டு வருடங்களுக்கு முன்னர்

எரியுண்டு போயிருந்த எலும்புகளின் தேசத்துக்கு.

பாடுகின்ற ஆறு ஒன்றின் கரையிலே இருந்த‌

தேநீர்க் கடையின் தொலைக்காட்சியில்

காட்சிகள் ஒவ்வொன்றாக‌ அவிழ்கின்றன.

உயரமான, கண்ணாடி அணிந்த, தேடப்பட்ட‌ மனிதனினால்

தட்டச்சு செய்யப்பட்ட எழுத்துக்கள்

நூல்நிலையக் கொம்பியூட்டரின் திரையிலே

கறுப்பு மையிலே தோன்றுகின்றன.

துவைக்காத ஆடைகளினால் நிரம்பியிருந்த‌

வாடகை அறை ஒன்றிலே

நொடிந்து போன, முறிந்து போன

நண்பர்கள் பற்றி நண்பர்கள் நண்பர்களுக்குச் சொல்லுகிறார்கள்.

வெளியில் மக்கள் பாற் சோறு பரிமாறிக்கொண்டிருந்த வீதிகள்

கொண்டாட்டக் குரல்களினால் ஆர்ப்பரிக்கின்றன‌.

 

கிழக்கே உள்ள கடலிலே,

நம்பிக்கையினாலும், வாழ்க்கையினாலும்

ஊதப்பட்ட ரயர் ஒன்றினை

இறுகப்பற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

முப்பது வயதுகளில் இருக்கும் ஒரு பெண்ணும் இரண்டு சிறு பையன்களும்.

வடுக்களைச் சுமந்த

மீதமுள்ள உடலினாலும், ஆவியினாலும்

கோபங்கொண்ட கடலினை

நடையாகக் கடந்து கொண்டிருக்கிறார்கள்.

நடக்கிறார்கள், நீந்துகிறார்கள்

இரண்டுக்கும் இடைப்பட்ட செயல்களையும்,

இன்னும் பலவற்றையும்

பயணப் பாதையின் முடிவு வரை

இடைவிடாது செய்கிறார்கள்

வாழ்வதற்காக.

 

இருட்டுப் படத் தொடங்கிய வேளையிலே,

உப்புக் கரிக்கின்ற காற்று வீசும்

மேற்கிலே இருக்கும் ஓர் ஊரில்

அவர்கள் வெளிப்படுகிறார்கள்.

நீண்ட ஒரு கணப் பொழுதின் அமைதி

கடலினையும் நிலத்தினையும்

உறைந்து போகச் செய்கின்றது.

தலையிலே சுற்றி இருந்த சேலையினை

ஒழுங்குபடுத்தி விடுகின்ற‌ அந்தப் பெண்

கையில் இருக்கும் தாள்களைக் கவனமாக எண்ணுகிறாள்,

முகத்திலே திருப்தி படர்கிறது

அனுமதிக்கப்பட்ட பணத்திலே இன்னும் கொஞ்சம் மிச்சம் இருக்கிறது.

கடலிலே சத்தி எடுத்துக்

களைத்துப் போயிருந்த பிள்ளைகள் இரவு சாப்பிடுவதற்குப் போதும்.

புத்தளத்தில் இன்று நவம்பர் மாதம் முத‌லாம் திகதி 1990ஆம் ஆண்டு.

 

மகேந்திரன் திருவரங்கன்

(“As They Unfolded” என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட மூலக் கவிதையின் தமிழாக்கம்)