படம் | Selvaraja Rajasegar Photo

இந்தக் கட்டுரை எழுதுவதற்காக அமர்கின்ற போது தென்னிலங்கையில் ஒரு சூடான விவாதம் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த விவாதத்தின் தலைப்பு, யார் புத்திஜீவிகள்? அவர்கள் எங்கே இருக்கின்றனர்? அண்மையில் தென்னிலங்கையில் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்த அமைப்பின் பெயர் – சிறந்த இலங்கைக்கான தொழில் வல்லுனர்கள் (professionals for a better Sri Lanka). உங்களுக்கு நினைவிருக்கலாம், அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனல்ட் ட்ரம்ப் வெற்றிபெற்றமை தொடர்பில், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டபாய ராஜபக்‌ஷ என்ன கூறினாரென்று. அவர் இவ்வாறு கூறினார், ட்ரம்பின் வெற்றியானது, அமெரிக்க மக்கள் தொழில் முறை அரசியல்வாதிகளை நிராகரித்திருக்கின்றனர் என்பதையே உணர்த்துகின்றது. இதன் மூலம் அவர் கூற வந்த விடயம் வேறு. அதாவது, அதே போன்றுதான் தானும் ஒரு தொழில்முறை அரசியல்வாதியல்ல. ஆனால், என்னைப் போன்ற ஒருவரால் இந்த நாட்டை திறம்பட வழிநடத்த முடியும். இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் தற்போது மேற்படி அமைப்பு உதயமாகியிருக்கிறது. இந்த அமைப்பின் அங்குரார்ப்பன வைபவத்தின் போது முன்வரிசையில் கோட்டபாயவும், அவரது பிறிதொரு சகோதரரான பசில் ராஜபக்‌ஷவும் அமர்ந்திருந்தனர். இதிலிருந்து இது கோட்டபாயவை அதிகாரத்திற்குக் கொண்டுவருவதற்கான அல்லது மஹிந்த ராஜபக்‌ஷவை அதிகாரத்திற்குக் கொண்டுவருவதற்கான ஒரு வேலைத்திட்டம்தான் என்பதை விளங்கிக்கொள்ளவதில் சிரமப்படவேண்டியதில்லை.

இப்போது தமிழ் சூழலுக்கு வருவோம். தமிழ் சூழலிலும் இவ்வாறான முயற்சிகள் ஆங்காங்கே தலைநீட்டாமல் இல்லை. தமிழ் சிவில் சமூகம், தமிழ் மக்கள் பேரவை ஆகியனவும் கூட, அவ்வாறானதொரு முயற்சிதான். அதாவது, பிரதான அரசியல் தலைமையான கூட்டமைப்பை வழிப்படுத்துவது, ஒருவேளை, அது முடியாது போகுமானால், புதிய ஒன்றிற்கு ஆதரவளிப்பது. ஆனால், இவ்வாறான அமைப்புக்களால் பரந்தளவில் செயற்பட்டு தங்களை ஒரு வலுவான சக்தியாக உருமாற்ற முடியவில்லை. இந்த நிலைமையே தொடர்ந்தும் கூட்டமைப்புக்கு அல்லது தமிழரசு கட்சிக்குச் சாதமாகவும் இருக்கிறது. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான், ஜ.நாவை எதிர்கொள்ளுவது தொடர்பில் அனைவரது பார்வையும் திரும்பியிருக்கிறது. இதுவும் ஒரு வகையான காலம் தழுவிய விவாதங்கள்தான். இந்த மார்ச் மாதம் முடிந்ததும் இவ்வகையான விவாதங்கள் அடுத்த மார்ச்சில்தான், மீளவும் உயிர்பெறும். அதுவரை உறங்குநிலையில் இருக்கும்.

ஜ.நாவை முன்வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஒரு விவாதம் நடைபெற்றது. பின்னர் அந்த விவாதம் வவுனியாவில் இடம்பெற்ற கூட்டமொன்றின் வாயிலாக முடிவுக்கு வந்தது. கால அவகாசம் என்னும் சொற்தொடரை தவிர்த்து விடயங்கள் அமுல்படுத்தப்பட வேண்டும். அதனை கண்காணிப்பதற்கென ஜ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகம் இலங்கையில் அமைக்கப்பட வேண்டும் என்றவாறான கோரிக்கைகளில் அனைவரும் உடன்படுவதான தகவல் வெளிப்படுத்தப்பட்டது. இதில் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்துவரும் ஈ.பி.ஆர்.எல்.எப். உடன்படவில்லை. இந்த நிலையில், யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்டு இயங்கிவரும் தமிழ் சிவில் சமூகம் வெளியிட்ட அறிக்கையிலும் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்துவரும் தமிழரசு கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள் தங்களது ஆதரவை தெரிவித்திருக்கின்றன. அதிலிருந்து அதனுடனும் தாங்கள் உடன்படுவதாக அறிவித்திருக்கின்றனர். குறித்த அறிக்கையில் அரசாங்கம் தொடர்பில் மட்டுமன்றி, ஜ.நா.மனித உரிமைகள் பேரவையின் நம்பக்கத்தன்மை தொடர்பிலும் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கை வெளிவருவதற்கு முன்னரே பிறிதொரு அறிக்கையும் ஜ.நா.மனித உரிமைகள் ஆணையாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது. அதிலும் பலரும் கையெழுத்திட்டிருக்கின்றனர். அதில் கையெழுத்திட்டிருக்கிற சிலர் பின்னர் தமிழ் சிவில் சமூகம் வெளியிட்ட அறிக்கையிலும் கையெழுத்திட்டிருக்கின்றனர். மொத்தத்தில் இப்போது எவர் எந்த நிலைப்பாட்டுடன் இருக்கின்றனர் என்பதை கண்டறிவதற்கே தனியாக ஒரு ஆய்வு தேவை.

தமிழ்ச் சூழலில் இவ்வாறு எதனை நோக்கி, எவ்வாறு பயணிப்பது என்பது தொடர்பில் குழப்பங்கள் நிலவுகின்ற சூழலில், இன்னொரு புறம், இலங்கை அரசாங்கமோ சர்வதேச சமூகத்தை மேலும் தங்களை நோக்கி ஈர்க்கும் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் நாடுகள், சர்வதேச சமூகத்திற்கு வாக்குறுதி வழங்குவதென்பது புதிய விடயமல்ல. இது பொதுவாக நாடுகள் கடைப்பிடிக்கும் ஒரு வழமையான அணுகுமுறைதான். இந்த அடிப்படையிலிருந்தே, அரசாங்கம் விடயங்களை கையாண்டு வருகிறது. இலங்கையில் இன முரண்பாடு மோதலாக உருவெடுத்த காலத்திலிருந்து, கொழும்பு சர்வதேசம் என்று சொல்லப்படும் ஒன்றிற்கு பல வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறது. அவற்றை வெற்றிகரமாக மீறியுமிருக்கிறது. இந்த அனுபவங்களிலிருந்து சிந்தித்தால் இப்போதும் கூட தங்களால் வழங்கப்படும் வாக்குறுதிகளை நிறைவேற்றாது விட்டால், அது தொடர்பில் ஜ.நாவால் எந்தளவிற்கு செல்ல முடியும் என்பதும் அவர்கள் அறியாததல்ல.

இலங்கைக்கு ஜ.நாவை எதிர்கொள்ளுவதில் ஏனைய சிறிய நாடுகளை விடவும் சிறந்த அனுபவம் இருக்கிறது. இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் ஜ.நாவின் அதிகாரிகளை ஒரு பகட்டான கழுதை என்று வர்ணித்ததை இன்று பலரும் மறந்திருக்கலாம். அவர் அதற்கு மேலாக இப்படியும் கூறியிருக்கிறார். இலங்கையின் நுளம்பு தொல்லையையும் அதனால் ஏற்படும் மலேரியா பிரச்சினையை கட்டுப்படுத்துவதற்கும் ஜ.நா. தங்களின் சிறந்த ஆலோசனையை வழங்கமுடியும் – எங்களது பிரச்சினைகளை நாங்களே பார்த்துக் கொள்வோம். இப்படியானதொரு இராஜதந்திர பாரம்பரியமும் இலங்கைக்கு உண்டு. இவை எல்லாம் ஜ.நாவும் அறியாததல்ல. இவற்றை ஒருவேளை நமது படித்த தமிழர்கள் அறியாதிருக்கலாம்.

சில நாட்களாக ஜெனிவாவிற்குச் சென்றிருக்கும் நம்மவர்கள், அங்கிருந்து வெளியிடும் கருத்துக்களை உற்றுநோக்கினால், ஜ.நா. தொடர்பில் எந்தளவிற்கு குழந்தைத் தனமாக இருக்கின்றனர் என்பதை அவதானிக்க முடிகிறது. இது தொடர்பில் முன்னணி புலம்பெயர் அமைப்பின் தலைவர் என்னுடன் பேசுகின்ற போது இவ்வாறு தெரிவித்தார். புலம்பெயர் சமூகத்தை குறை கூறுவது தொடர்பில் பேசுகின்ற போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். எங்களை பிழை சொல்லுகின்றவர்களிடம் கேட்கிறேன். ஜ.நா. மனித உரிமைகள் பேரவையில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளில் எத்தனை நாடுகள் எங்களுடன் இருக்கின்றன? ஒரு நாடு இருக்கிறதா? நாடுகளை எங்கள் பக்கமாக திருப்புவதற்கு இவர்கள் செய்த பணியென்ன? உண்மையில் அவர் கூறுவது சரி. ஜ.நாவை எதிர்கொள்ளுதல் என்பது அதில் அங்கம் வகிக்கும் பலம்பொருந்திய நாடுகளை எதிர்கொள்ளுவதாகும். ஜ.நா. மனித உரிமைகள் பேரவை என்பது அதில் அங்கம் வகித்துவரும் நாடுகள்தான். அந்த நாடுகள் அனைத்தும் கண்டங்களின் அடிப்படையில் உறுப்புரிமையை பெற்றிருக்கின்றன. உதாரணமாக ஆசியாவிற்கு இத்தனை உறுப்பினர்கள் – ஆபிரிக்காவிற்கு இத்தனை உறுப்பினர்கள் என்னும் அடிப்படையிலேயே அங்கு உறுப்பு நாடுகள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றன. இந்த நாடுகளிலும் குறித்த பிராந்தியங்களில் செல்வாக்குச் செலுத்தும் பெரிய நாடுகளே சிறிய நாடுகள் மீது செல்வாக்குச் செலுத்துகின்றன. இந்த நிலையில், இந்த நாடுகளை நோக்கி பணியாற்றாது மனித உரிமைகள் பேரவைக்குள் செல்வாக்குச் செலுத்த முடியாது என்னும் நிலைமையே தற்போதைக்கு நிலவுகிறது. இந்தக் கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் போது குடியரசு கட்சியின் அமெரிக்க இராஜாங்கச் செயலர் றெக்ஸ் ரில்லர்சன் ஜ.நா. மனித உரிமைகள் பேரவையிலிருந்து வெளியேற நேரிடும் என்று எச்சரித்திருக்கின்றார். பேரவை மறுசீரமைக்கப்படாது விட்டால் அதில் தொடர்ந்தும் பங்குபற்றுவதில் பயனில்லை என்று அவர் தெரிவித்திருக்கின்றார். இது தொடர்பில் இந்தப் பத்தியாளர் முன்னரே குறிப்பிட்டிருந்தமை வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். இந்த நிலைமைகள் அனைத்தையும் கொழும்பு துல்லியமாக மதிப்பிட்டே பணியாற்றி வருகின்றது. அந்த வகையில் நோக்கினால் நிலைமைகள் கொழும்பிற்கு மிகவும் சாதகமாகவே இருக்கிறது.

இந்த நிலையில், நாம் எவ்வாறு பணியாற்றுவது என்பது மிகவும் சிக்கலானதுதான். இதற்கு களமும் புலமும் சில விடயங்களில் ஒருமித்து பணியாற்ற வேண்டியிருக்கும். இதில் தமிழ் நாட்டை எந்தளவிற்கு எங்களின் பக்கமாக கொதிநிலையில் வைத்திருக்க முடியுமென்று தெரியவில்லை. அது சாத்தியமென்றால் அதுவும் விடயத்தை கொதிநிலையில் பேணிக்கொள்வதில் வலுவானதொரு செல்வாக்கை செலுத்த முடியும். ஆக மொத்தத்தில் விடயங்களை கொதிநிலையில் வைத்துக் கொள்வது ஒன்றுதான் தற்போதைக்கு தமிழர்களால் செய்யக் கூடிய ஒன்று. இவ்வாறு விடயங்களை கொதிநிலையில் பேணிக்கொள்கின்ற அதேவேளை கிடைத்திருக்கும் ஜனநாயக வெளியைப் பயன்படுத்தி செய்ய வேண்டியவைகளையும் செய்துகொள்ள வேண்டும்.

யதீந்திரா

 

 

 

###

சமூக ஊடகங்களில் மாற்றம்:

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : மாற்றம் பேஸ்புக் பக்கம்

ருவிட்டரில் மாற்றத்தைத் பின்தொடர : மாற்றம் ருவிட்டர் தளம்

இன்ஸ்டகிராமில் கருத்து/விருப்பம் தெரிவிக்க : மாற்றம் இன்ஸ்டகிரம்