படம் | Wikimedia

இலங்கையில் காலனித்துவத்தின் இறுதிக் காலப்பகுதியில் அரசியல் சீர்திருத்தத்துக்கு வழிகோலிய உடனடி பின்புலக் காரணியாக இருந்தது இரண்டாம் உலக மகா யுத்தமே. இதன்போது பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் ஆட்சிக்குட்பட்டிருந்த நாடுகளில் வெளிக்கிளர்ந்த சுதந்திரப் போராட்டங்களும் உக்கிரம் பெற்றுக் கொண்டிருந்தன. இலங்கையின் அண்மைய நாடான இந்தியாவிலும் சுயராஜ்யப் போராட்டம் வேகமுற்றுக் கொண்டிருந்த போது இலங்கையர்களும் இலங்கைக்கான சீர்திருத்தக் கோரிக்கைகளை உயர்த்திப் பிடித்தனர்.

அன்று அரசாங்க சபையில் அங்கம் வகித்து வந்த உயர் மத்திய தர வர்க்கத் தலைவர்கள் டொனமூர் திட்டம் தொடர்பாகவும் அதிருப்தியுற்றிருந்தனர். அது போதுமானதல்ல என்றும், அதற்கு மாற்றாக மேலதிகமாக சீர்திருத்தக் கோரிக்கைகளையும் வேண்டி நின்ற போது அதனைக் கருத்திற் கொள்ளாமலிருக்க பிரித்தானியருக்கு இயலவில்லை.

வெறும் சீர்திருத்தவாத கோரிக்கைகளை மாத்திரமே முன்வைத்து வந்த இலங்கையை தமது காலனித்துவ நாடுகளிலேயே சிறந்த ”மாதிரிக் காலனி” (Model Colony) என்றே பிரித்தானியா அழைத்து வந்தது. எனவே, சீர்திருத்தக் கோரிக்கைகளில் ஓரளவானதை வழங்கி இலங்கையரை திருப்திப்படுத்திவிட பிரித்தானியாவும் தயாராக இருந்தது. என்ற போதும் 1939 செப்டெம்பரில் ஆரம்பித்த இரண்டாம் உலக மகா யுத்தத்தைக் காரணம் காட்டி அச்சீர்திருத்தக் கோரிக்கைகளைக் கூட பின்போட்டு வந்தது. 1940ஆம் ஆண்டு பிரித்தானிய அரசு தமது அறிக்கையொன்றின் மூலம் போர் நிலை காரணமாக அரசாங்க சபையின் காலத்தை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிப்பதாக அறிவித்தது. அதன் காரணமாக 1941ஆம் ஆண்டு நடத்தப்படவிருந்த பொதுத்தேர்தலும் பின்போடப்பட்டது. இப்படிப் பின்போட்டமைக்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுவதுண்டு. அப்போது மிகவேமாக வளர்ச்சியுற்று வந்த இடதுசாரிகளின் செல்வாக்கானது தமது இருப்புக்கு அச்சுறுத்தலானதென்றும், சீர்திருத்தவாத தேசிய சக்திகளை தமக்குச் சாதகமாகத் தயார்படுத்துவதற்கான அவகாசத்தை ஏற்படுத்துவதற்காகவுமே இத்தேர்தல் பின்போடப்பட்டதும் ஒரு காரணம்.

1941ஆம் ஆண்டு பிரித்தானிய அரசாங்கம் இன்னொரு அறிவித்தலையும் விடுத்தது. யுத்தம் முடிவடைந்தவுடனேயே அரசியல் சீர்திருத்தம் இடம்பெறும் என்பதே அது. சீர்திருத்தவாதத் தலைவர்கள் இம்முறை சீர்திருத்தக் கோரிக்கைகளுடன் மாத்திரம் நின்று விடாது ”டொமினியன்” அந்தஸ்தைக் கோரிநின்றனர்.

உலக மகா யுத்தம் பல நாடுகளுக்குப் பரவி தீவிரமடைந்து கொண்டிருந்த போது பிரித்தானியா தமது நற்குணத்தைக் காட்ட வேண்டியதன் அவசியம் இருந்தது. இந்நிலையில் 1943இல் இன்னொரு அறிக்கையைப் பிரித்தானியா வெளியிட நேரிட்டது.

அதன்படி யுத்தம் முடிந்ததன் பின் பொறுப்புடன் கூடிய அரசியலமைப்பொன்று வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டது. அவ் ஆட்சி முறையானது பிரித்தானிய முடிக்குட்பட்ட சுயாட்சி முறையாக இருக்குமென்றும், இதனை உருவாக்குவதற்கான ஒரு நகலொன்றை அமைச்சரவையை உருவாக்கும்படி பிரித்தானிய அரசு வேண்டியது. இதனை 1943க்குள் தயாரிக்கும்படியும் நான்கில் மூன்று பெரும்பான்மை பகுதியினரின் ஒப்புதலைப் பெற்ற பின் இதனை நடைமுறைக்கு கொண்டு வரலாமென்றும் அதிலிருந்தது.

”அமைச்சர்களின் நகல்” (Minister’s Draft) எனும் பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நகல் உண்மையிலேயே அமைச்சர்களால் உருவாக்கப்பட்டது அல்ல. இதனை உருவாக்கியவர் அன்றைய இலங்கைப் பல்கலைக்கழக (பேராதனைப் பல்கலைக் கழக) உபவேந்தராகவிருந்த சேர். ஐவர் ஜெனிங்ஸ் என்பவரே. இது தன்னாலேயே உருவாக்கப்பட்டது என பிற்காலத்தில் சேர்.ஐவர் ஜெனிங்ஸ் எழுதிய ”இலங்கையின் அரசியலமைப்பு” (Constitution of Ceylon) எனும் நூலில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நகலுக்கு சிறுபான்மை இனத்தவர்களின் ஆதரவு கிடைக்கவில்லை. குறிப்பாக தமிழ்த் தலைவர்கள் இதனை எதிர்த்தனர். தம்மிடமிருந்து எந்தவித யோசனைகளையும் கேட்டறியாமல் தயாரிக்கப்பட்ட இந்நகல் சிறுபான்மையினங்களுக்கு எதிரானவை என அவர்கள் தெரிவித்தார்கள்.

ஆனாலும், இந்நகலை மீளப் பரிசீலிக்கும்படி அமைச்சர்களால் குடியேற்ற நாட்டுக் காரியதரிசியிடம் கோரப்பட்டது. இந்நகலைப் பரிசீலிப்பதற்குப் பதிலாக பிரித்தானிய அரசு இன்னொரு அறிவித்தலை விடுத்தது. ”1944 அறிக்கை” எனும் பெயரில் அழைக்கப்படும் இவ்வறிக்கையில் ”அமைச்சர்களின் நகலை” நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியப்பாட்டை ஆராய்வதற்காக ஒரு ஆணைக்குழு இலங்கைக்கு அனுப்பப்படுமென்றும், யுத்தம் இன்னமும் தொடர்ந்து கொண்டிருப்பதால் அரசாங்க சபையின் காலத்தை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

”1944 அறிக்கை”யை அமைச்சர்கள் எதிர்த்தார்கள். அதனை அரசாங்க சபைக்கு முன்வைக்கு முன்பே அதனை நிராகரித்தார்கள். ஆனாலும், அமைச்சர்களின் எதிர்ப்பின் மத்தியிலும் அது நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதன் பிரகாரம் 1944 செப்டம்பர் மாதம் அரசியலமைப்பு சீர்திருத்தத்தைப் பரிசீலிப்பதற்கென சோல்பரி ஆணைக்குழு 1944 யூலை 5இல் அமைக்கப்பட்டது. இக்குழு டிசம்பர் 22 இலங்கை வந்தது.

சோல்பரி ஆணைக்குழுவினருக்கு செய்வதற்கு ஒன்றுமில்லை. ”அமைச்சர்களின் நகல்” எனும் பெயரில் சொல்லப்பட்ட ஐவர் ஜெனிங்ஸ் தயாரித்திருந்த அதே திட்டத்தையே தமது ஆணைக்குழுவின் சிபாரிசாக முன்வைத்தது. செனட் சபை எனும் பேரில் மேற்சபையொன்றும் உருவாக்கப்பட வேண்டுமென்றும் அவ்வாணைக்குழு கூறியிருந்தது. சிறுபான்மை இனங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அம்மேற்சபை அனுகூலமாக இருக்குமென சோல்பரி குழு நம்பியது. வேறும் சில சிறு சிறு திருத்தங்கள் செய்தபோதும் ஜெனிங்ஸின் அடிப்படையான திட்டத்தில் பாரிய மாற்றமெதனையும் இது செய்யவில்லை. இறுதியில் ஜெனிங்ஸ் திட்டமானது சோல்பரித் திட்டமாக 1945 ஒக்டோபர் 09இல் முன்வைக்கப்பட்டது.

சோல்பரி அரசியலமைப்பு டொமினியன் அந்தஸ்தை விட சற்றுக் குறைந்திருந்தது. இரண்டாவது உலக யுத்தத்துக்குப் பின் நடந்த தேர்தலில் பிரித்தானியாவில் தொழிற்கட்சி பதவியிலமர்ந்தது. இலங்கைக்கான சீர்திருத்தமும் இந்தத் தொழிற் கட்சி அரசாங்கத்தாலேயே பரிசீலிக்கப்பட்டது.

”சோல்பரித் திட்டம்” பற்றி அன்றைய சபைத் தலைவர் டி.எஸ்.சேனாநாயக்கவுடன் பிரித்தானிய அரசு பேச்சுவார்த்தை நடாத்தியது. அதன் பின் இது ஒரு பிரேரணையாக பிரகடனப்படுத்தப்பட்டது. இந்தப் பிரேரணை 1945ஆம் ஆண்டு நவம்பர் 8 இல் அரசாங்க சபையில் வாக்குக்கு விடப்பட்ட போது 51 வாக்குகள் ஆதரவாகவும் 3 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது (எஸ்.நடேசன், பீ.தியாகராஜா, ஏ.மகாதேவா ஆகியோர் இதற்கு ஆதரவளித்திருந்தனர்).

1947ஆம் ஆண்டு அது இலங்கைக்கு அனுப்பப்பட்டது. “1947 அரசியல் திட்டம்” என அழைக்கப்படுவது இது தான்.

ஜூன் 18ஆம் திகதி அரசாங்க சபை கூடியபோது பிரித்தானியா இலங்கைக்கு சுயாட்சி (டொமினியன்) வழங்கும் தனது திட்டத்தை அறிவித்தது. அடுத்த மாதமே 4ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. ஓகஸ்ட் 15-20 வரை பொதுத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சிக்குள் (ஐ.தே.க.வானது இலங்கை தேசிய காங்கிரசும், பண்டாரநாயக்காவின் சிங்கள மகா சபை உட்பட சில அமைப்புக்களையும் இணைத்தே அமைக்கப்பட்டிருந்தது) இருந்த சிங்கள மகா சபையைச் சேர்ந்தவர்கள் கூடிய ஆசனங்களைக் கைப்பற்றியிருந்த போதும் இறுதி நேரத்தில் பண்டாரநாயக்காவால் டி.எஸ்.சேனநாயக்கா பிரதமராக ஆவதற்கு ஆதரவளிப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இத்தேர்தலில் சோல்பரி அரசியல் திட்டத்துக்கு ஆதரவு வழங்கிய எஸ்.நடேசன் யாழ்ப்பாணத்தில் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தினால் தோற்கடிப்பட்டார். ஏ.மகாதேவா (சேர்.பொன் அருணாசலத்தின் மகன்) ஜி.ஜி.பொன்னம்பலத்தினால் தோற்கடிக்கப்பட்டார்.

செப்டெம்பர் மாதம் 24 அன்று டி.எஸ். பிரதமராகப் பதவியேற்றார். ஒக்டோபர் மாதம் முதலாவது நாடாளுமன்றம் கூடியது. அதே மாதம் பிரதமர் யாழ்ப்பாணம் விஜயம் செய்தபோது அங்கு கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதுடன், பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.

இதேவேளை, 1947 டிசம்பர் ஆளுனர் சேர். ஹென்றி மொங்க் மேசன் மூர் மற்றும் டி.எஸ். சேனநாயக்க ஆகியோருக்கிடையில் மூன்று ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்பட்டது. இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அல்லது அமைச்சரவையுடன் எவ்வித கலந்துரையாடலையும் செய்யாமல் இந்த ஒப்பந்தம் தன்னிஷ்டப்படி பிரித்தானிய விசுவாசியாக தன்னைக் காட்டிக் கொள்வதற்காக செய்து கொண்டார் சேனநாயக்கா. பாதுகாப்பு, வெளிநாட்டலுவல்கள், அரசாங்க நிர்வாகம் ஆகியன தொடர்பாக 3 ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன. அவ்வொப்பந்தங்கள் 1948 பெப்ரவரியிலிருந்து நடைமுறைக்கு வரும்படி செய்து கொள்ளப்பட்டது. இதன் பிறகே 1947 நவம்பர் 26 அன்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் ”சதந்திரச் சட்டம்” (The Ceylon Independence Act 1947) நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் இலங்கையில் 1947 டிசம்பர் 1ஆம் திகதி நாடாளுமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டு 3ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்துக்கு 59 வாக்குகள் ஆதரவாகவும், 11 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டன. 29 பேர் வாக்களிப்பிலிருந்து தவிர்த்துக் கொண்டனர். அவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. (பார்க்க அட்டவணை)

இச்சட்டத்தின் பின் தான் 1948 பெப்ரவரி 4ஆம் திகதி ”சுதந்திரம்” என்ற கேலி நாடகம் அரங்கேற்றப்பட்டது. காலனித்துவத்திலிருந்து நவ காலனித்துவத்திற்கு பரிமாறப்பட்டது. ஒட்டுமொத்தத்தில் சிங்கள – பௌத்த கொவிகம – ஆணாதிக்க – சுரண்டும் – வர்க்கத்துக்கு கைமாறப்பட்டது. உலக ஏகாதிபத்திய முதலாளிய நவகாலனித்துவத்திற்கும் படிப்படியே இலங்கை பலியாக்கப்பட்டது இந்த சக்திகளினாலேயே.

  பெயர் தொகுதி
1. டி.எஸ்.சேனநாயக்க மினுவாங்கொட
2. S.W.R.D.பண்டாரநாயக்க வேயங்கொட சுகாதார, உள்ளூராட்சி அமைச்சர், சபைத்தலைவர்
3. R.S.S.குணவர்தன கம்பஹ
4. டி.பி.ஜாயா மத்திய கொழும்பு
5. ஜே.ஆர்.ஜெயவர்தன களனி
6. ஜே.எல்.கொத்தலாவல தொடங்கொஸ்லந்த
7. ஈ.ஏ.நுகவெல கடுகன்னாவ
8. ஏ.ரத்நாயக்க வத்தேகம
9. டட்லி சேனநாயக்க தெடிகம
10. சீ.சித்தம்பலம் மன்னார்.
11. சீ.சுந்தரலிங்கம் வவுனியா
12. ஜீ.ஆர்.டி.சில்வா கொழும்பு வடக்கு
13. ஏ.ஈ.குணசிங்க மத்திய கொழும்பு
14. எச்.எஸ்.இஸ்மயில் புத்தளம்
15. பீ.பி.புலன்குலம் அனுராதபுரம்
16. ஏ.பி.ஜயசூரிய ஹொரண
17. எம்.எஸ்.காரியப்பர் கல்முனை
18. வீ.நல்லையா கல்குடா
19. H.D.Z.சிறிவர்தன நீர்கொழும்பு
20. A.R.A.M.அபுபக்கர் மூதூர்
21. சீ.ஈ.ஆட்டிகல ரத்னபுர
22. எம்.டி.பண்டா மத்துரட்ட
23. பீ.எல்.பௌத்தசார பொலன்னறுவை
24. ஐ.டி.தசநாயக்க வாரியபொல
25. ஆர்.ஏ.டி.மெல் கொழும்பு தெற்கு
26. ஜீ.ஏ.டி.சொய்ஸா அம்பலங்கொட
27. எம்.எம்.இப்பிராகிம் பொத்துவில்
28. S.U.எதிர் மன்னசிங்கம் பதிரிப்பு
29. ஜே.ஜே.பெர்ணாண்டோ சிலாபம்
30. லியோ பெர்ணாண்டோ புத்தல
31. ஈ.ப்.என்.கிரேஷன் நியமனம்
32. எப்.எச்.கிரிபின் நியமனம்
33. டி.எஸ்.குணசேகர உடுகம
34. டி.பி.ஜயசூரிய ஜாஎல
35. மொன்டேகு ஜயவிக்கர நியமனம்
36. டி.டி.கருணாரத்ன கம்பஹ
37. என்.எச்.கீர்த்திரத்ன கேகாலை
38. S.H.மஹாதிவுல்வெவ கலாவெவ
39. ஜே.ஒப்ரெ மார்டின் நியமனம்
40. ஈ.டபிள்யு.மெதிவ் பலங்கொட
41. வீ.டி.நாணயக்கார மாத்தளை
42. து.று.ஒல்பீல்ட் நியமனம்
43. எஸ்.எஸ்.பேக்மன் நியமனம்
44. டி.பி.பானபொக்க கலஹா
45. எல்பட்.எப்.பீரிஸ் நாத்தாண்டியா
46. டி.பி.பொஹொலியத்த ஹொரவ்பதான
47. எச்.ஆர்.யு.பிரேமசந்திர கடுகன்னாவ
48. டி.ஏ.ராஜபக்ஷ பெலிஅத்த
49. ஜே.ஏ.ரம்புக்பொத்த அலுத்நுவர
50. எச்.பி.ரம்புக்வெல்ல மினிபே
51. ஏ.பு.று.ரத்நாயக்க தெனியாய
52. எச்.எல்.ரத்வத்தே மாவனெல்ல
53. எம்.சேனநாயக்க மதவாச்சி
54. ஆர்.ஜி.சேனநாயக்க தம்பதெனிய
55. ஏ.சின்லெப்பை மட்டக்களப்பு
56. கே.வீ.டி.சுகததாச வெலிமட
57. எச்.பிங்தென்னே தம்புல்ல
58. ஜீ.ஆர்.விக்கி நியமனம்
59. சைமன் அபேவிக்கிரம பத்தேகம
எதிராக வாக்களித்தவர்கள்.
1. எச்.டி.அபேகுணுவர்தன மாத்தறை
2. டபிள்யு தஹநாயக்க காலி
3. கலாநிதி கொல்வின் வெல்லவத்தைகல்கிஸ்ஸை
4. பீ.ச்.டபிள்யுடி.சில்வா அம்பலங்கொடபலபிட்டிய
5. சம்லி.குணவர்தன களுத்துறை
6. பீட்டர் கெனமன் மத்திய கொழும்பு
7. ஜே.சீ.டி.கொத்தலாவல பதுளை
8. பீ.குமாரசிறி ஹக்மன
9. எம்.ச்.பீரிஸ் பானந்துறை
10. எல்.ராஜபக்ஷ ஹம்பாந்தொட்டை
11. W.P.A.விக்கிரமசிங்க அக்குரெஸ்ஸ
வாக்களிப்பத்திலிருந்து தவிர்த்துக் கொண்டவர்கள்
1. சோமவீர சந்திரசிறி மொரட்டுவ
2. S.J.V.செல்வநாயகம் காங்கேசன்துறை
3. டி.பி.ஆர்.குணவர்தன கோட்டே
4. டி.பி.ஆர்.குணவர்தன அவிஸ்ஸாவெல்ல
5. கே.ஹேரத் நிக்கவரெட்டி
6. டி.எல்.ஹெட்டிஆராச்சி நிவிட்டிகல
7. I.M.R.A.ஈரியகொல்ல தண்டகமுவ
8. கே.கனகரத்னம் வட்டுக்கோட்டை
9. வீ.குமாரஸ்வாமி சாவக்கச்சேரி
10. கே.குமாரசுவாமி கொட்டகல
11. ஜீ.ஆர்.மொ மஸ்கெலியா
12. கே.வி.நடராஜா பண்டாரவெல
13. என்.எம்.பெரேரா ருவன்வெல்ல
14. ரெஜினோல்ட் பெரேரா தெஹிவிட்ட
15. வில்மட் ஏ.பெரேரா மத்துகம
16. ஜி.ஜி.பொன்னம்பலம் யாழ்ப்பாணம்
17. கே.ராஜலிங்கம் நாவலபிட்டிய
18. டி.ராமலிங்கம் பருத்தித்துறை
19. டி.ராமானுஜம் அலுத்நுவர
20. புளோரன்ஸ் கிரிஎல்ல
21. எஸ்.ஏ.சில்வா அகலவத்த
22. எஸ்.சிவபாலன் திருகோணமலை
23. எச்.ஸ்ரீ நிஷ்ஷங்க குருணாகலை
24. டி.பி.சுபசிங்க பீ.கிரிய
25. எஸ்.எம்.சுப்பையா பதுளை
26. ஏ.எல்.தம்பையா ஊர்காவற்துறை
27. எஸ்.தொண்டமான் நுவரெலியா
28. சீ.வன்னியசிங்கம் கோப்பாய்
29. சீ.வி.வேலுப்பிள்ளை தலவாக்கலை

என். சரவணன்