படம் | Slate

அமெரிக்கவின் 45ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் ஜனவரி 20 பதவியேற்றுக் கொண்டார். அமைச்சரவை உறுப்பினர்கள் நியமனமும் உயர் மட்ட நிர்வாக பதவிகளுக்கான நியமனங்களும் செய்யப்பட்டு அவரது அரசாங்கம் இயங்க ஆரம்பித்து இருக்கின்றது. நல்லதோ கெட்டதோ டொனால்ட் ட்ரம்ப் சர்வதேச ரீதியாக பெரும் தாக்கத்தை கொண்டிருக்கப் போகின்ற ஒரு வரலாற்று முக்கியத்துவமுடைய ஒரு ஆள். ஒவ்வொரு நாடும் மாத்திரமல்ல, ஒவ்வொரு தனிநபரும் கூட, ட்ரம்பின் கொள்கைகளினால் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்படப்போகிறார்கள். சிலர் பயனடையலாம். வேறு சிலர் இழப்புக்களைச் சந்திக்கலாம். இலங்கையும் அதற்கு விதிவிலக்கு அல்ல. விளைவுகள் இருக்கவே செய்யும்.

ட்ரம்ப் வாய்ப்பாடு

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் கடந்த நவம்பரில் உறுதி செய்யப்பட்ட உடனடியாகவே சிலர் இலங்கைக்கு அமெரிக்க யதார்த்தங்களைப் பிரயோகிக்க தொடங்கினார்கள். அரசியலைத் தொழிலாக கொண்டவர்கள் மீது மக்கள் வெறுப்படைந்து இருப்பதாலேயே ட்ரம்ப் தேர்தலில் வெற்றிப் பெற்றார் என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்‌ஷவும் கூறினார். அரசியல் வர்க்கத்துக்கு வெளியே தலைவர்களைத் தெரிந்தெடுப்பது குறித்து இலங்கை மக்களும் பரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் யோசனை கூறினர். கோட்டபாய ராஜபக்‌ஷ அரசியலைத் தொழிலாகக் கொண்டவரல்ல. அவர் தனது ருவிட்டர் பதிவொன்றில் “நாம் எமது தேசத்தை மீளப்பெறுவோம்” என்ற ட்ரம்பின் செய்தியை பாராட்டியிருந்தார். இந்த இரு செய்திகளும் ஆழமான அர்த்தத்தைக் கொண்டிருக்கின்றன.

ட்ரம்ப் பாணியிலான தீவிர தேசியவாதத்தை இலங்கையில் பரீட்சித்துப் பார்ப்பதற்கு இலங்கையின் சில அரசியல்வாதிகள் ஆசைபடக்கூடும். ட்ரம்ப் அடிப்படையில் அனேகமாக அமெரிக்காவின் சகல சிறுபான்மையினக் குழுக்களையும் அவமதித்து புண்படுத்தி தேர்தலில் பெருவெற்றி பெற்றார். இலங்கையின் சனப்பரம்பல் அமைப்பை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது அதே வாய்ப்பாடு இங்கு பயன் தரும் என்பது சந்தேகமே. சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த மக்கள் மிக மிக தீவிரமான பகையுணர்வுடன் பிரதிபலிப்பை வெளிக்காட்டும் பட்சத்திலேயே ஒரு தீவிர தேசியவாதியினால் சிங்கள வாக்குகளினால் மாத்திரம் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற முடியும். இலங்கையில் ஒரு கட்சி அல்லது ஒரு வசீகரமான தலைவர் ஜனாதிபதித் தேர்தலொன்றில் சிங்கள வாக்குகளில் 70 சதவீதத்தை பெறுவதென்பது பெரும்பாலும் சாத்தியமல்ல. ஒரு குறிப்பிட்ட அளவுக்கு 2015 ஜனாதிபதித் தேர்தலில ட்ரம்ப் வாய்பாட்டை முயற்சித்து பார்த்தது. அது சரிப்படவில்லை.

உண்மையில் ட்ரம்ப் வாய்ப்பாடு அமெரிக்காவிலும் கூட வேலை செய்யவில்லை. தேசிய மட்டத்தில் மக்களின் வாக்குகளில் சுமார் 30 இலட்சத்தினால் அவர் தோல்விகண்டார். தேர்தல் முறையில் உள்ள நுணுக்கம் காரணமாவே இவர் வெற்றி பெற்றார். இலங்கை ஜனாதிபதிகள் தேசிய அளவிலான மக்கள் வாக்குகளினாலேயே தெரிவு செய்யப்படுகிறார்கள்;. அதிர்ஷ்டவசமாக இலங்கையில் தேர்தல் மன்ற (Electoral College) முறை நடைமுறையில் இல்லை.

ஜெனிவா தீர்மானம்

இலங்கையைப் பொறுத்தவரை டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவில் ஜனாதிபதியாக இருப்பதன் விளைவான முக்கிய உடனடி தாக்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் தொடர்பானதாகவே  இருக்கும். போரின் இறுதிக்கட்டத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும் என்று அந்தத் தீர்மானம் தொடக்கத்தில் கோரியிருந்தது.

விடுதலை புலிகளுடனான ராஜபக்‌ஷ அரசாங்கத்தின் (இறுதிப்) போரை அமெரிக்கா உண்மையில் ஆதரித்ததுடன் குடிமக்களின் உயிரிழப்புக்களை அது கண்டும் காணாமல் இருந்தது. எதிர்பாராத விதமாக ராஜபக்‌ஷ வாஷிங்டனை ஓரங்கட்டிவிட்டு முற்றுமுழுதாக சீனா பக்கம் சாய்த்தார். அதேவேளை, ஆசியப் பிராந்தியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒபாமா நிர்வாகத்தின் விருப்பம் காரணமாகவே இலங்கை கூடுதல் முக்கியத்துவத்தைப் பெற்றது. ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் அனுசரணையுடன் இலங்கை தொடர்பில் (எதிராக?) கொண்டுவரப்பட்ட தீர்மானம் இலங்கை மீது வாஷிங்டன் ஓரளவு கட்டுப்பாட்டைத் தொடர்ந்தும் கொண்டிருப்பதற்கு உதவியது. மேலும், மனித உரிமை விவகாரங்களில் ஹிளாரி கிளின்டனுக்கு இருந்த அக்கறை காரணமாக ஜெனிவா தீர்மானத்தில் அவரும் முக்கியமானவராக பங்கையாற்றினார்.

இப்போது ஒபாமா நிருவாகம் இல்லை. ஹிளாரி கிளின்டனும் போய்விட்டார். ஒபாமா நிர்வாகத்தின் முடிவுடன் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் ஆசியாவுக்குக் கொடுக்கப்பட்டுவந்த மேலதிக முக்கியத்துவமும் அருகிப் போகும் சாத்தியம் இருக்கிறது. திரும்பவும் அமெரிக்கா மத்திய கிழக்கிற்கும்  ஐரோப்பாவிற்குமே முக்கியத்துவம் கொடுக்கும். ஜனாதிபதி ட்ரம்ப் ஒரு பரந்த உலகப் பார்வை கொண்டவரல்ல. அமெரிக்க வெளியுறவுக் கொள்ளை பெருமளவுக்கு ‘எண்ணெயை மையமாகக்’ கொண்டதாகவே இருந்துவந்திருக்கிறது. அமெரிக்க எண்ணெய் மற்றும் எரிவாயு கம்பனியான எக்சொன் மொபிலின் முன்னாள் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியான றெக்ஸ் ரில்லெர்சன் ட்ரம்ப் நிர்வாகத்தின் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில் வெளியுறவுக் கொள்கையில் எண்ணெய் காரணி மேலும் வலுப்படுத்தப்படுகிறது. எனவே, எண்ணெய் உற்பத்தி செய்யாத சின்னஞ் சிறிய நாடான இலங்கை ட்ரம்பின் வெளியுறவுக் கொள்ளை வியூகங்களில் எங்காவது உருக்கொள்வதற்கான சாத்தியம் இல்லை. ஆசியாவில் சீனாவும் இந்தியாவுமே கூடுதல் கவனத்தைப் பெறும்.

ஹிளாரி கிளின்டனைப் போலன்றி, ட்ரம்ப் நல்லாட்சி மற்றும் மனித உரிமைகளின் ஒரு பெரிய ரசிகன் அல்ல. சித்திரவதைகள் செய்யப்படுவதை அவர் பெரிய தவறு என்று நம்பவில்லை. சித்திரவதைகளை அவர் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையிலும் ஊடக அகராதியிலும் ‘மேம்பட்ட விசாரணை நடைமுறை நுட்பங்கள்’ என்று புதுப்பாணியில் குறிப்பிடுகிறார். பயங்கரவாதம் தொர்பில் தனது இடையறாத உறுதிப்பாட்டை வெளிக்காட்டியிருக்கும் ட்ரம்ப் இஸ்லாமிய அரசு இயக்கத்தை (ISIS) குண்டுவீசி நாசஞ் செய்து கற்காலத்துக்கு கொண்டு போய் விடுவதற்கு விரும்புகிறார். போர் வலயங்களில் குடிமக்களின் பாதுகாப்பு தொடர்பில் அவர் இதுவரையில் எந்தவிதமான அக்கறையையும் வெளிப்படுத்தியதாக எவரும் அறியவில்லை. எனவே, இலங்கையில் போரின் இறுதிக்கட்டங்களில் இடம்பெற்ற சம்பவங்களை ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று அவர் நோக்கப்போவதில்லை. ஜெனிவா தீர்மானத்துக்கோ அல்லது சர்வதேச விசாரணைக் கோரிக்கைக்கோ ட்ரம்ப் நிர்வாகத்தின் ஆதரவு இருக்க போவதில்லை. மறுபுறத்தில், ஜெனிவா தீர்மானம் தொடர்பில் அமெரிக்காவுடன் சேர்ந்து செயற்பட்ட ஐரோப்பிய நாடுகள் இலங்கை அரசாங்கத்தை தொல்லைப்படுத்த கூடிய தந்திரோபாயங்களை பயன்படுத்துவதை விடுத்து ஒத்துழைத்து செயற்படத்துவதிலேயே நம்பிக்கை கொண்டிருப்பதையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.

ட்ரம்ப் பலம்பொருந்திய உறுதியான தலைவர்கள் மீது நாட்டத்தைக் கொண்டவராகவும் இருக்கின்றார். ஜனாதிபதி ஒபாமாவை பலவீனமான தலைவர் என்று அடிக்கடி விமர்சித்து வந்த ட்ரம்ப் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினையும் வட கொரிய ஜனாதிபதி கிம் யொங் உன்னையும் புகழ்ந்திருக்கிறார். அதனால், அவருக்கு ஜனாதிபதி ராஜபக்‌ஷவின் அரசியலும் கொள்கைகளும் கண்டனத்துக்குரியவையாக இல்லாமல் கவர்ச்சியானவையாக இருக்கக்கூடும். தற்போதைய அமெரிக்க அரசாங்கம் ராஜபக்‌ஷ அரசாங்கத்தை கண்டிக்கின்ற அதேவேளையில், விடுதலை புலிகளை எவ்வாறு இவர்கள் அழித்தொழித்தார்கள் என்பதை கற்றுக்கொள்ள முயற்சிக்கக் கூடும் என்று நான் நம்புகிறேன். ராஜபக்‌ஷ அரசாங்கம் கையாண்ட தந்திரோபாயங்களில் சில மத்திய கிழக்கில் நெருக்கடியான நிலவரங்களை கையாளுவதற்கு மேற்குலக அரசாங்கங்களுக்கு பயனுடையவையாக இருக்கலாம். பாசாங்குத்தனத்தைக் கைவிட்டுவிட்டு ட்ரம்ப், மோதல்களுக்குத் தீர்வைக் காண்பதில் இலங்கையின் வகைமாதிரியை வெளிப்படையாகவே தழுவக்கூடும்.

எனவே, ட்ரம்பின் வெள்ளை மாளிகை பிரவேசம் ஜெனிவா தீர்மானத்துக்கும் சர்வதேச விசாரணைக்கும் முடிவைக் கட்டுவதற்கான சாத்தியப்பாடுகள் இருக்கின்றன. இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்படுகின்ற அரசியலமைப்புச் சீர்த்திருத்தச் செயன்முறையைப் பொறுத்தவரை, இது எந்தவகையான தாக்கத்தை ஏற்படுத்தும்?

அரசியலமைப்புச் சீர்திருத்தம்

அரசியலமைப்புச் சீர்திருத்தத்தினுடாக இனநெருக்கடிக்குத் தீர்வொன்றை காணவேண்டியதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இடையறாது வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஜெனிவா தீர்மானத்துக்கும் அரசியலமைப்புச் சீர்த்திருத்தச் செயன்முறைகளுக்கும் இடையில் எந்தத் தொடர்பும் இல்லை என்று கருதுவது விவேகமானதல்ல. சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையைத் தணிப்பது சீர்த்திருத்த செயன்முறைகளின் (வெளியில் சொல்லபடாத) இலக்குகளில் ஒன்றாக இருந்து வருகின்றது. இந்த விவகாரத்தில் நழுவிச் செல்வதற்கு வாய்ப்பு இல்லை. அதன் தந்திரோபாயம் பயனளித்திருக்கிறது. 2015ஆம் ஆண்டு இந்த அரசாங்கம் பதவிக்கு வந்த பிறகு ஜெனிவா தீர்மானத்தில் தளர்வுகள் செய்யப்பட்டதை நாமெல்லோரும் கண்டோம்.

இப்போது, ஜெனீவா செயன்முறையோ அல்லது கோரிக்கையோ முற்றாக இல்லாமல் போகக்கூடிய சூழ்நிலைகள் தோன்றக் கூடுமென்பதால், அரசியலமைப்பு சீர்திருத்தச் செயன்முறைகளில் அரசாங்கம் அக்கறைக்காட்ட வேண்டியிருந்ததற்கான அழுத்தங்கள் ஒன்றும் இல்லாமல் போகப் போகிறது. வேறு வார்தையில் சொல்வதானால் சர்வதேச நெருக்குதல்களை  சமாளிப்பதற்கு உருப்படியான சீர்திருத்த திட்டமொன்றில் நாட்டம் காட்ட வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இல்லாமல் போகும். உள்நாட்டில் குறிப்பாக தமிழ் அரசியல் சக்திகளிடமிருந்து அரசாங்கத்துக்கு பாரதூரமான எந்த நெருக்குதல்களும் இல்லை. அதனால், இலங்கையில் அரசியலமைப்பு சீர்த்திருத்தங்களின் வெற்றி முற்றுமுழுதாக அரசாங்கத்தினதும் சிங்கள மக்களினதும் நல்லெண்ணத்திலேயே தங்கியிருக்கிறது. இரக்க மனப்பான்மையும் பரந்த உள்ளமும் கொண்ட பெரும்பான்மையினங்கள் உலகில் இருக்கின்றனவா?

கலாநிதி எஸ்.ஐ.கீதபொன்கலன்

(கலாநிதி எஸ்.ஐ.கீதபொன்கலன் அமெரிக்காவின் மேரிலாண்ட் மாநிலத்தின் சிலிஸ்பரி பல்கலைகழகத்தில் முரண் நிலைத் தீர்வு (Conflict Resolution) திணைக்களத்தின் தலைவராகப் பணியாற்றுகிறார்.