படம் | News.Yahoo

அரசியல் தீர்வும் தமிழர்களும் என்னும் தலைப்பு பல தலைமுறைகளை கண்டுவிட்ட போதிலும் அதன் மீதான கவர்ச்சி இப்போதும் முன்னரை போல் பிரகாசமாகவே இருக்கிறது. ஒவ்வொரு தேர்தல் மேடைகளிலும் அது வீரியம் கொண்டெழுகிறது. பொதுவாக உள்ளூராட்சி மன்றங்கள் என்பவை, மக்களுக்குத் தேவையான அடிப்படையான வசதிகளை மேம்படுத்துவதற்கான ஒரு ஏற்பாடு. ஆனால், தமிழ்ச் சூழலில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போது கூட சுயநிர்ணயம், சமஸ்டி, மனித உரிமை, வடக்கு – கிழக்கு இணைப்பு – இப்படியான சொற்கள்தான் உச்சரிக்கப்படுகிறன்றன. இத்தனைக்கும் இதனை உச்சரிக்கும் பல வேட்பாளர்களுக்கு இவை தொடர்பில் ஆகக்குறைந்த புரிதல் கூட இல்லை. இப்படியான விடயங்களை உச்சரிப்பதன் மூலம்தான் தாங்கள் தமிழர்களாக இருக்கிறோம் என்பதை நிரூபிக்க முடியும் என்றே பலரும் நம்புகின்றனர் போலும். இது ஒரு போதை போன்று தமிழ் சமூகத்திற்குள் ஊட்டப்படுகின்றது. மக்கள் பொதுவாக குறைவான ஞாபகங்களுடன் இருப்பவர்கள். இதனால், அரசியல்வாதிகள் முன்னர் சொன்னதில் எதனை நிறைவேற்றினார்கள் அல்லது நிறைவேற்றக் கூடியவைகளைத்தான் இவர்கள் கூறுகின்றார்களா? இப்படியான கேள்விகளின் வழியாக மக்கள் சிந்திப்பதில்லை. இதற்கு அவர்களது குறைவான ஞாபகசக்தியே காரணம். இது தமிழ் மக்களுக்கு மட்டுமே உரித்தான ஒன்றாக எவரும் அவசரப்பட்டு எண்ணிவிட வேண்டாம். இது உலகப் பொதுவானது. இதன் காரணமாகத்தான் அரசியல்வாதிகளால் மக்களை இலகுவாக கட்டுப்படுத்த முடிகிறது.

1949ஆம் ஆண்டு இலங்கை தமிழரசு கட்சி உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து இன்று நாம் வந்துநிற்கும் காலம் வரையில், நாம் அடைந்தது என்ன என்று கேள்வி எழுப்பினால் எவரிடமுமே பதில் இருக்கப் போவதில்லை. 1987 இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலமாக கிடைக்கப்பெற்ற மாகாண சபை ஒன்றைத்தான் சொல்ல முடியும். ஆனால், அதனையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கூறிவிட்டோம். அப்படிக் கூறியபோதிலும் கூட அதில் பங்குகொள்ளவோ, அமைச்சர் பொறுப்புக்களை ருசிக்கவோ நாம் பின்நிற்கவில்லை. அதன் மூலமான சலுகைகளை அனுபவித்துக் கொண்டே அதில் ஒன்றும் இல்லை என்னும் பிரச்சாரங்கள் முன்னெடுப்படுகின்றன. மாகாண சபையின் அதிகாரங்களில் போதாமை இருக்கிறது என்பது அனைவரும் அறிந்த சங்கதிதான். ஆனால், முடிந்தவரை அதனை மக்களின் மேம்பாட்டுக்குப் பயன்படுத்தப்பட வேண்டுமென்பதும் முக்கியமான ஒன்று. இன்று இலங்கையில் எந்தவொரு மாகாண சபையிலும் அதன் அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் குற்றசாட்டு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படவில்லை. அதற்கென குழு நியமிக்கப்படவில்லை. வடக்கு மாகாண சபையில் மட்டும்தான் அது நிகழ்ந்திருக்கிறது. ஒரு இடத்தில் ஊழல் நடைபெறுகிறதென்றால் அல்லது நடைபெற்றிருக்கிறதென்று சந்தேகம் எழுகிறதென்றால், அதன் பொருள், அங்கு அதிகளவு நிதி வந்திருக்கிறது என்பதுதானே?

இவ்வாறானதொரு சூழலில்தான் 30 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் தமிழர்களுக்கான ஒரு அரசியல் தீர்வு தொடர்பில் பேசப்படுகிறது. இது தொடர்பில் சில ஆரம்ப வேலைகளும் பூர்த்தியடைந்திருக்கின்றன. அவற்றின் விளைவுகள் என்ன என்பதையும் பொறுத்திருந்தே நோக்க வேண்டியிருக்கிறது. நான் இப்படி கூறுவதால் தமிழ் மக்களின் அடிப்படைகளை கைவிட்டுவிட்டு கொழும்பின் காலில் விழுமாறு கூறுகின்றார் என்று எவரேனும் அவசரப்பட்டு யோசிக்கலாம். இதுவும் நமது தமிழ்ச் சூழலில் காணப்படும் மிகப்பெரிய குறைபாடு. அரசியல் என்பது சுலோகங்களை உயர்த்திப்பிடிப்பது மட்டுமல்ல, அவ்வாறான கோரிக்கைளை ஒருபுறம் வலியுறுத்திக் கொண்டே, பிறிதொரு புறமாக சாத்தியமான வழிகளால் புகுந்து எங்களுக்குத் தேவையானவற்றில் எடுக்கக்கூடியவற்றை எடுத்துக்கொள்வது. இது ஒரு தொடர் செயற்பாடு. அதேவேளை, பிறிதொரு புறமாக எங்களது அரசியல் நிலைப்பாட்டை தொடர்ச்சியாக வலியுறுத்திக் கொண்டுமிருப்பது. இதுதான் அரசியலில் பேரம்பேசும் பலத்தை இழக்காமல் இருப்பதற்கான உக்தி. இந்த இரண்டிற்கும் இடையில் ஒரு சமநிலையை பேணிக்கொள்ளும் சமூகமே அரசியலில் முன்னோக்கி நகர முடியும். இவ்வாறான சிந்தனைவழி நகராத சமூகங்கள், தனது சிதைவை உணர்ந்து கொள்ளாது, முன்னோக்கி நகர்வதான ஒரு கற்பனையில் மூழ்கிக்கிடக்கும். தமிழ் சமூகம் அப்படியானதொரு சமூகமா?

நீங்கள் மேலே வாசித்தவாறு, எங்களுடைய அரசியல் செயற்பாடுகள் பல தலைமுறைகளை கண்டுவிட்டன. ஆனால், முன்னர் இருந்த நிலைமையை விடவும் தமிழ் சமூகம் சகல விடயங்களிலும் பின்நோக்கி தள்ளப்பட்டிருக்கிறது. அவ்வாறாயின் எங்களுடைய தந்திரோபாயங்களில் எங்கோ பெரியதொரு ஓட்டை இருக்கிறது என்றுதானே பொருள். ஒருவேளை, நாங்கள் எங்களது உரிமைகளுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் போதே, பிறிதொரு புறமாக எங்களுடைய சமூகத்திற்கு எதிராக திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்ற கட்டமைப்புசார் செயற்பாடுகளைத் தடுப்பதிலும் நாம் வெற்றிபெற்றிருந்தால் எங்களுடைய நகர்வுகளை சரியென்று வாதிட முடியும். ஆனால், இங்கு அப்படி நிகழவில்லையே! இன்று கிழக்கு மாகாணத்தை எடுத்துக் கொண்டால், அங்கு தமிழ் மக்கள் மூன்றாம் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். பொருளாதார ரீதியிலும் அரசியல் ரீதியிலும் தமிழ் மக்கள் மிக மோசமாக பின்நோக்கி தள்ளப்பட்டிருக்கின்றனர். ஒரு காலத்தில் திருகோணமலை ஈழத்தின் தலைநகரமென பிரகடனப்படுத்தப்பட்டது. இவ்வாறானதொரு சுலோகத்தை முன்னிறுத்தியதன் விளைவாக கொழும்பு, திருகோணமலையை இலக்கு வைத்து திட்டமிட்டவகையில் சிங்களவர்களைக் குடியேற்றியது. அதேவேளை, கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் அரசியல் பலத்தை சிதைக்கும் வகையில் திட்டமிட்ட வகையில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டது. சிறிமாவோ பண்டாரநாயக்க தனது 1988 – தேர்தல் விஞ்ஞாபனத்தில் இதனை ஒப்புக்கொண்டிருக்கிறார். இங்கு கேள்வி தமிழ் அரசியல் தலைமைகளினால் இவற்றை தடுக்க முடிந்ததா? ஒருபுறம் தமிழ் தலைமைகள் உரிமைகளுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் போதுதான், மறுபுறத்தில் தமிழ் மக்களின் சனத்தொகை பரம்பலை செயற்கையாக மாற்றியமைக்கும் வகையிலான செயற்பாடுகளும் அரங்கேறிக் கொண்டிருந்தன. கொழும்பின் இலக்கு எப்போதும் கிழக்காக இருந்ததே தவிர, அது ஒருபோதும் வடக்கு மாகாணமாக இருந்ததில்லை. விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியில் வளர்ச்சியடைந்தன் பின்புலத்தில்தான், கொழும்பு வடக்கில் இராணுவக் கட்டமைப்புக்களை பலப்படுத்தியது. உண்மையில் வடக்கு என்பதை தமிழர்களுக்குரிய இடமாகவே சிங்களவர்களும் புரிந்துகொண்டிருக்கின்றனர். ஆனால், கிழக்கு மாகாணத்தை அவர்கள் அவ்வாறு நோக்கியதில்லை. ஆனால், இன்று நடத்து முடிந்தவைகள் நடந்து முடிந்தவைகள்தான். இனி எக்காலத்திலும் கிழக்கு மாகாணத்திலிருக்கின்ற சிங்கள மக்களை வெளியேற்ற முடியாது. அவர்களும் தற்போது கிழக்கின் மக்கள். இந்த இடத்தில் இருக்கின்ற கிழக்கு தமிழ் மக்களின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார வாழ்வையாவது, பாதுகாப்பதற்கும் அதனை மேம்படுத்துவற்கும் தமிழ் தலைமைகளிடம் இருக்கின்ற தந்திரோபாயங்கள் என்ன?

இன்று வடக்கு – கிழக்கு இணைப்பு பற்றி விவாதிக்கப்படுகிறது. இது தொடர்பில் கூட்டமைப்பின் சார்பில் அரசியல் யாப்பு விவகாரங்களைக் கையாண்டுவரும் எம்.ஏ.சுமந்திரன், அது தற்போது (உடனடியாக) சாத்தியமில்லை என்று கூறியிருந்தார். சுமந்திரன் கூறுவது உண்மை என்பது அனைவருமே அறிந்த ஒன்றும் கூட. இதுதான் யதார்த்தம் என்றால் உடனடியாக செய்ய முடியாத ஒன்றை வைத்துக் கொண்டு, அரசியலை எவ்வாறு அணுக முடியும்? பலரது பார்வையில் வடக்கு – கிழக்கு இணைப்பு என்பது முஸ்லிம் சமூகத்துடன் மட்டுமே தொடர்புடையது. ஆனால், அது ஒரு முழுமையான உண்மையல்ல. உதாரணத்திற்கு முஸ்லிம் சமூகம் உடன்பட்டால் கூட தற்போதைய அரசியல் சூழலில் கொழும்பு அதற்கு இணங்கப் போவதில்லை. இந்தச் சூழலில் கூட்டமைப்பிடம் இரண்டு தெரிவுகள்தான் உண்டு. ஒன்று, ஏற்கனவே 13ஆவது திருத்தச் சட்டத்தில் இருக்கின்ற இரண்டு மாகாணங்கள் விரும்பினால் இணைந்து செயற்பட முடியுமென்னும் ஏற்பாட்டை புதிய அரசியல் யாப்பிலும் உள்ளடக்குவது. இல்லை நாங்கள் இணங்கப் போவதில்லை என்று கூறிக்கொண்டு வெளியேறுவது. ஆனால், இந்த அரசாங்கத்திற்கு நெருக்கடிகளை ஏற்படுத்தி, அதன் வீழ்சிக்கு கூட்டமைப்பு வழிவகுக்குமாக இருந்தால், இந்திய மற்றும் அமெரிக்க தொடர்புகளை தொடர்ந்தும் நட்புரீதியில் பேணிக்கொள்வதில், கூட்டமைப்பு பல நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். இதனையும் கருத்தில் கொண்டுதான் கூட்டமைப்பு செயலாற்ற வேண்டியிருக்கிறது. தமிழ் மக்களின் அடிப்படையான அரசியல் கோரிக்கைகளை விட்டுவிட வேண்டியதில்லை. அதேவேளை, மீளவும் தமிழர்கள் நடுவீதிக்கு வந்துவிடாத வகையிலும் உபாயங்கள் அமைந்திருக்க வேண்டும். கூட்டமைப்பு, இந்த நிலைமைகளை நிதானமாகவும் தந்திரோபாயமாகவும் கையாளாது விட்டால், ஒட்டுமொத்த உலகமும் தமிழர்களை கைவிட்டுவிடும் ஆபத்துமுண்டு.

இன்றைய சூழலில், தந்திரோபாய ரீதியான அரசியல் அணுகுமுறைகள்தான் தமிழர்களுக்கு கைகொடுக்கக் கூடியது. வெறும் எதிர்ப்பும் தவறு. அதேபோன்று வெறும் ஆதரவும் தவறு. இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு அரசியல் உபாயத்தை இணம்கண்டு செயலாற்ற வேண்டிய பொறுப்பு கூட்டமைப்பிடம் உண்டு. ஏனெனில், நிலைமைகள் மிகவும் வேகமாக தமிழ் மக்களுக்குப் பாதமாக மாற்றிக் கொண்டிருக்கிறது.

யதீந்திரா