படம் | DNAindia

சிறிலங்காவின் இரண்டாவது பிரதமரான டட்லி சேனாநாயக்க மரணமடைந்த போது, அவரை நினைவு கூரும் வகையில் நிகழ்வொன்று இடம்பெற்றதாம். இதன்போது அவரது பெருமைகள் பற்றி பலரும் பேசியிருக்கின்றனர். இவ்வாறான புகழ்சிகளுக்கு மத்தியில் ஒருவர் மட்டும் இவ்வாறு கூறினாராம்: கசாப்புக்கடைக்காரனும் காலமாகிவிட்டால் போதிசத்துவன் என்று போற்றப்படுகிறான். பொதுவாக அரசியல் தலைவர்களை அவர்களது மரணத்திற்கு பின்னர் புகழ்ந்து பேசுவது ஒரு நாகரீகமாகப் பார்க்கப்படுகிறது. ஒருவரை அவரது மரணத்திற்குப் பின்னர் இகழ்ந்து பேசுவது தவறுதான். ஆனால், ஒரு தனிநபரை முன்னிறுத்தி ஒரு தேசத்தின் அரசியலை கணிப்பிடும் போது அதில் நிதானமும் தெளிவும் அவசியம். சில தினங்களுக்கு முன்னர் காலம்சென்ற தமிழ் நாட்டு முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா தொடர்பில் ஈழத் தமிழ் அரசியல் பரப்பில் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்களை உற்றுநோக்கியபோது, டட்லி தொடர்பில் முன்னர் படித்த அந்த குறிப்புத்தான் நினைவுக்கு வந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் மற்றும் ஜரோப்பிய நாடுகளைத் தளமாகக் கொண்டு இயங்கிவரும் விடுதலைப் புலிகள் சார்பான அமைப்புக்கள் என பலரும் ஜெயலலிதா தொடர்பில் தங்கள் புகழாரங்களை சூட்டிக்கொண்டிருக்கின்றனர். அண்மைக் காலத்தில் எதிரும் புதிருமான அனைத்து ஈழ அரசியல் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் அனைவரும் ஒருவருக்கு அஞ்சலி செலுத்தியிருக்கின்றார்கன் என்றால், அது ஜெயலலிதாவிற்கான அஞ்சலி ஒன்றுதான். சம்பந்தன் தனது அறிக்கையில், ஜெயலலிதாவின் மறைவு தமிழ்நாட்டு தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல ஈழத் தமிழ் மக்களுக்கும் ஒரு பேரிழப்பாகும் என்று குறிப்பிட்டிருக்கின்றார். மேலும், தனது அறிக்கையில் ஜெயலலிதா தமிழ்நாடு சட்ட மன்றத்தில் தமிழ் பேசும் மக்களின் உரிமையை வலியுறுத்தும் வகையில் தீர்மானங்களை நிறைவேற்றியிருந்ததாகவும் தெரிவித்திருக்கின்றார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் தம்மைத் தாமே ஆழ்வதற்கான சூழலை ஏற்படுத்த ஜெயலலிதா முனைப்புடன் செயற்பட்டதாக தெரிவித்திருக்கின்றார். இதற்கும் அப்பால், வடக்கு மாகாண சபையின் கொடியையும் அரைக்கம்பத்தில் பறக்கவிட்டு, ஒட்டுமொத்த வடக்கு மக்களும் ஜெயலலிதாவின் மறைவால் துயருறுவதான தோற்றமும் காண்பிக்கப்பட்டிருக்கிறது. இதேபோன்று நாடு கடந்த அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரகுமாரனால் பிரசுரிக்கப்பட்டிருக்கும் அறிக்கையில், ஜெயலலிதா ஈழத் தமிழ் மக்களை பொறுத்தவரையில் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்புக் காலத்திலும் அதன் பின்னரும் ஜெயலலிதா எடுத்த நிலைப்பாடு அவரை காவியத் தலைவியாக கருதும் நிலையை ஏற்படுத்தியதாக குறிப்பிடுகின்றார். மேலும், ஜரோப்பிய நாடுகளைத் தளமாகக் கொண்டு இயங்கும் தமீழீழ செயற்பாட்டாளர்களும் ஜெயலலிதாவின் மறைவு தொடர்பில் உணர்ச்சிகரமான அறிக்கைகளை வெளியிட்டிருக்கின்றனர். குறிப்பாக விடுதலைப் புலிகளின் தமிழீழ நிலைப்பாட்டை தொடர்ந்தும் பேணிப்பாதுகாக்க முற்படும் புலம்பெயர் அமைப்புக்கள் பலவும் ஜெயலலிதாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தியிருக்கின்றன.

மறைந்த தமிழ் நாட்டின் தலைவர் ஒருவருக்கு ஈழத் தமிழ் மக்களின் சார்பில் அஞ்சலி செலுத்த வேண்டியது அவசியம். ஆனால், ஒருவருக்கு அஞ்சலி செலுத்துவதென்பது வேறு, அவரை அரசியல் ரீதியில் நோக்குவது என்பது வேறு. ஆனால், ஜெயலலிதா பற்றி பேசியிருக்கும் எங்களது தமிழ்த் அரசியல் தலைவர்களும் சரி (எல்லோரும் அல்ல) தமிழ்த் தேசிய அரசியல் செயற்பாட்டாளர்களும் சரி அஞ்சலி என்பதையும் தாண்டி அளவுக்கதிகமாக உணர்ச்சிவசப்பட்டிருக்கின்றனர்.

இந்த உணர்ச்சிவசப்பட்ட அறிக்கைகளை பார்த்தபோது ஒரு கேள்வி எழுந்தது. ஒருவேளை, ஜெயலலிதாவின் இறப்பு 2009இற்கு முன்னர் நிகழ்ந்திருந்தால் அவருக்கு ஈழத் தமிழ் மக்கள் சார்பில் எவராவது அறிக்கை வெளியிட்டிருப்பாரா?

1982இல் எம்.ஜி.இராமச்சந்திரனால் அரசியலுக்குள் கொண்டுவரப்பட்ட ஜெயலலிதா, 1991இல் தமிழ் நாட்டின் முதல்வரானார். அப்போது இந்திய தேசிய காங்கிரசுடன் கூட்டணி அமைத்தே ஜெயலலிதா தேர்தலில் வெற்றிபெற்றிருந்தார். இந்தத் தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழ் நாடு வந்த போதுதான் ராஜீவ் காந்தி தற்கொலை குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டார். ராஜீவ் கொலப்பட்டதைத் தொடர்ந்து வந்த இரு தினங்களில் தேர்தல் இடம்பெற்றது. ராஜீவ் கொலையினால் ஏற்பட்ட அனுதாப அலையே ஜெயலலிதா வெற்றிபெறுவதற்கான முக்கிய காரணமாகும். இதே 91ஆம் ஆண்டுதான் முத்துவேல் கருணாநிதியின் ஆட்சி தேசிய பாதுகாப்புக்கு பங்கம் விளைவித்தது என்னும் குற்றச்சாட்டின் அடிப்படையில் கலைக்கப்பட்டு தமிழ் நாடு, ஜனாதிபதி ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது. 1989இல் இடம்பெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற தி.மு.கவின் ஆட்சி 1991 ஜனவரியில் கலைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற தேர்தலில்தான் ராஜீவ் தலைமையிலான காங்கிரஸ் – ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க – கூட்டணி வெற்றிபெற்றது. ஜெயலலிதா தமிழ் நாட்டின் தலைவராக வெளிந்தெரிந்த காலத்திலிருந்து அவர் இறக்கும் வரையில் அவர் ஒருபோதுமே விடுதலைப் புலிகளை முக்கியமாக அதன் தலைவராக இருந்த பிரபாகரனை ஆதரித்தவரல்ல.

ஆனால், ஜெயலலிதாவை அரசியலுக்குக் கொண்டு வந்தவரான எம்.ஜி.ஆர் விடுதலைப் புலிகளின் போசகராக இருந்த ஒருவர். ஆனால், ஜெயலலிதா தனது அரசியல் ஆசானை இந்த விடயத்தில் இறுதி வரையில் பின்பற்றவில்லை. ஒருவேளை ராஜீவ் கொலையின் போது எம்.ஜி.ஆர் பதவியில் இருந்திருந்தால் அவரது நிலைப்பாடும் கூட அப்படியே இருந்திருக்கலாம். ஜெயலலிதாவின் அரசியல் ஞானகுருவும், நெருங்கிய நன்பருமான துக்ளக் சோ என்று அழைக்கப்படும் சோ.ராமசாமியின் விடுதலைப் புலிகள் தொடர்பான நிலைப்பாடு என்னவென்பதை, தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் இயங்கிவரும் அனைவரும் அறிவர். 2014ஆம் ஆண்டு புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் போது, ஜெயலலிதாவின் இலங்கை தொடர்பான நிலைப்பாடு பற்றி சோ இவ்வாறு கூறுகின்றார். அவரது சில நிலைப்பாடுகள் தொடர்பில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால், ஜெயலலிதா ஒரு போதுமே விடுதலைப் புலிகளை ஆதரிக்கவில்லை, அவர்களுக்கு உதவி செய்யவில்லை, அவர்களுக்கு மறைமுகமாக ஆதரவு கொடுக்கவில்லை. இதுதான் மற்றவர்களுக்கும் ஜெயலலிதாவிற்கும் உள்ள வித்தியாசம். ஏனெனில், விடுதலைப் புலிகள்தான் இலங்கையிலுள்ள நாசகார சக்தி. அப்படியான சக்தியை கருணாநிதி ஆதரித்தார். ஆனால், ஜெயலலிதா ஆதரிக்கவில்லை. யுத்தக் குற்றங்கள் தொடர்பான கேள்விக்கு சோ இவ்வாறு பதிலளித்திருக்கின்றார். முதலில் அது யுத்தமே அல்ல. அது தீவிரவாத குழு ஒன்றிற்கு எதிரான இராணுவ நடவடிக்கை (military action against terrorist). இதனை சரியா தவறா என்று கேட்டால் அதனை நான் சரியென்றே சொல்வேன். புலிகள் சிவிலியன்களை கேடயமாகப் பயன்படுத்திய போது இராணுவம் சும்மா இருக்க முடியுமா? எனவே, சிவிலியன்கள் நிச்சயமாக பாதிக்கப்பட்டிருப்பர். ஆனால், அதற்கு விடுதலைப் புலிகள்தான் காரணமேயன்றி, ராஜபக்‌ஷ அரசாங்கம் அல்ல.

சோவின் கருத்திற்கு சமாந்தரமான ஒரு கருத்தைத்தான் ஜெயலலிதாவும் கொண்டிருந்தார். இறுதி யுத்தத்தின் போது தமிழ் மக்கள் கொல்லப்படுவது தொடர்பில், யுத்தமென்றால் சாவார்கள்தான் என்பதே ஜெயலலிதாவின் நிலைப்பாடாகவும் இருந்தது. இறுதி யுத்தத்தின் போது ஜெயலலிதாவின் ஆதரவைப் பெறும் முயற்சிகளிலும் விடுதலைப் புலிகள் ஈடுபட்டிருந்தனர். ஜெயலலிதாவிற்கு அனுப்பிய கடிதங்கள் சிலவற்றை பதிவு இணையத்தளம் பிரசுரித்திருக்கிறது. அந்தக் கடிதங்கள் போர் முடிவுறுவதற்கு இரு மாதங்களுக்கு முன்னர்தான் அனுப்பப்பட்டிருக்கின்றன. ஆனால், எந்தவொரு கடிதத்திலும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கையெழுத்திடவில்லை. உண்மையில் விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த நடேசன் ஜெயலலிதாவிற்கு மட்டுமல்ல கருணாநிதிக்கும் கடிதங்களை அனுப்பியிருப்பார். அவையும் ஒரு நாள் பிரசுரமாகலாம். போரின் உக்கிரம் விடுதலைப் புலிகளை கொஞ்சம், கொஞ்சமாக விழுங்கிக் கொண்டிருந்த போது, அதிலிருந்து மீளும் நோக்கில் பலருடனும் விடுதலைப் புலிகள் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தனர். அப்போது விடுதலைப் புலிகளின் சர்வதேச பொறுப்பாளராக இருந்த கே.பியும் பலருடன் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்ததாக தனது நேர்காணல்களில் தெரிவித்திருக்கின்றார். எனவே, ஜெயலலிதாவிற்கு விடுதலைப்புலிகள் அனுப்பிய கடிதங்கள் ஆச்சரியத்துக்குரியவை அல்ல.

விடுதலைப் புலிகளின் பரம வைரியான ஜெயலலிதா, விடுதலைப் புலிகள் அமைப்பு இராணுவ ரீதியில் அழிக்கப்பட்ட பின்புலத்தில்தான் தனிநாட்டுக்காகப் போராடப் போவதாக குறிப்பிட்டார். ஏன் அதுவரை தனிநாடு பற்றி பேசாதவர் திடீரென்று பேசினார்? ஜெயலலிதா ஒரு அரசியல் அப்பாவியல்ல. அவர், தனது அதிகாரங்களை தக்கவைத்துக் கொள்வதில் கைதேர்ந்த அரசியல் வாதி. தமிழ் நாடு சட்டமன்றத்தில் அவர் நிறைவேற்றிய பிரேரணை, ஈழத் தமிழ் மக்களை முன்வைத்து வாக்குகளை பெறக்கூடிய அனைவரையும் விழிபிதுங்க வைத்தது. அதில் தனிநாட்டுக்கான பொதுசன வாக்கெடுப்பின் அவசியம் பற்றி வலியுறுத்தியிருந்தார். இதன் மூலம் தமிழ் நாட்டின் அனைத்து ஈழ ஆதரவாளர்களையும் ஒரங்கட்டி தானே ஈழத் தமிழ் மக்களுக்கான காவலன் என்பதான தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டார். ஜெயலலிதாவின் இந்த தடாலடியான செயற்பாடுதான் அவரை ஈழத் தமிழ் ஆதரவாளர்கள் மத்தியில் திடீர் கதாநாயகியாக்கியது. ஆனால், இதில் பலரும் பார்க்கத் தவறிய விடயம் இதே ஜெயலலிதான், 2002இல் ராஜீவ் கொலையாளியான பிரபாகரனை கைதுசெய்து சாகும் வரை தூக்கில் போட வேண்டுமென்று கூறியவர். அந்த வகையில் பார்த்தால் தனிநாட்டுக்காக இறுதிவரை போராடிய பிரபாகரனை தூக்கிலிட வேண்டுமென்று ஜெயலலிதா நிறைவேற்றிய பிரேரணையும், பிரபாகரனின் இறப்புக்கு பின்னர், தனிநாட்டுக்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென்று முன்வைக்கப்பட்ட பிரேரணைகள் என தற்போது தமிழ் நாட்டு சட்ட மன்றத்தில் இரண்டு பிரேரணைகளும் உண்டு. 2002இல் நோர்வேயின் மத்தியஸ்த்துடனான சமாதான பேச்சுவார்த்தை இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போதுதான், அந்த நிகழ்சி நிரலை குழப்பும் வகையில் ஜெயலலிதா மேற்படி பிரேரணையை கொண்டுவந்திருந்தார். மேலும் 1991இல் இடம்பெற்ற சம்பவத்திற்குப் பின்னர் விடுதலைப் புலிகளை தடைசெய்துமாறு மத்திய அரசிற்கு தொடர்ச்சியாக அழுத்தங்களை கொடுத்து வந்தவரும் இதே ஜெயலலிதான்.

ஆனால், எந்த அமைப்பு தனது இராணுவ பலத்தால் இரு தசாப்தங்களுக்கும் மேலாக ஒரு நடைமுறை அரசை வடகிழக்கு பகுதிகளில் கட்டியெழுப்பியிருந்ததோ, அந்த அமைப்பு அழிவுற்றதன் பின்னர் தனிநாட்டுக்கான பிரேரணையை ஜெயலலிதா முன்வைத்திருக்கின்றார். இதிலிருந்து ஜெயலலிதா உணர்வெழுச்சியினால் அவ்வாறானதொரு தீர்மானத்தை நிறைவேற்றவில்லை என்பதை விளங்கிக் கொள்ளலாம். விருதுநகரில் இடம்பெற்ற தேர்தல் கூட்டமொன்றில் பேசுகின்ற போது ஈழத் தமிழ் மக்களின் அழிவுகளுக்கு காரணமான காங்கிரசிற்கும் அதனுடன் கூட்டு வைத்திருக்கும் தி.மு.கவினருக்கும் வாக்களிக்கப் போகின்றீர்களா என்று கேட்கிறார். இதிலிருந்து அவரின் திட்டம் வெள்ளிடைமலை. இறுதி யுத்தத்தில், பொது மக்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் தமிழர்கள் என்னும் நிலையில் தமிழ் நாட்டு சாதாரண மக்கள் மத்தியில் ஒரு அனுதாபம் இருந்தது உண்மை. அந்த அனுதாபத்தை கருணாநிதிக்கு எதிராக திருப்பிவிடும் நோக்கில் ஈழ சென்ரிமென்டை ஜெ கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டார். உண்மையில் ஜெயலலிதா தனிநாட்டுக்கு ஆதரவானவராக இருந்திருந்தால் அதனை பிரபாகரன் இருக்கின்ற போது வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.

ஜெயலலிதா தொடர்பிலான தமிழ் தேசியவாதிகளின் அஞ்சலிகளை பார்க்கும் போது இப்பத்தியாளருக்குள் இப்படியொரு கேள்விதான் எழுந்தது: இப்போது எந்த ஜெயலலிதாவிற்கு இவர்களெல்லாம் அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கின்றனர்? தனி நாட்டுக்காக தனது உயிர் போகும்வரையில் போராடிய பிரபாகரனை கைதுசெய்து தூக்கில் போட வேண்டுமென்று கூறிய ஜெயலலிதாவிற்காகவா அல்லது பிரபாகரனின் மறைவுக்குப் பின்னர் தனிநாட்டுக்கான கோரிக்கை என்பது வெற்றுச் சுலோகம் என்பதை விளங்கிக்கொண்டு, கருணாநிதியின் வாக்குவங்கியை சிதைக்கும் நோக்கில் தன்னை ஈழ ஆதரவாளராக காண்பித்துக் கொண்ட ஜெயலலிதாவிற்காகவா? யாருக்காக? அதிலும் இப்போதும் தங்களை புலிகளின் ஆதரவாளர்களாக காண்பித்துக் கொண்டிருப்போர் எவ்வாறு ஜெயலலிதாவிற்காக அஞ்சலி செலுத்த முடியுமா?

சம்பந்தன் தனது இரங்கல் அறிக்கையில் தமிழ் பேசும் மக்கள் தொடர்பில் ஜெயலலிதா சட்டமன்றத்தில் பெறுமதியான பிரேரணைகளை முன்வைத்திருப்பதாக குறிப்பிட்டிருக்கின்றார். ஆனால், சம்பந்தன் எந்த பிரேரணையை குறிப்பிடுகின்றார் என்பது தெளிவாக தெரியாவிட்டாலும் நிச்சயமாக 2013இல் ஜெயலலிதா சட்டமன்றத்தில் நிறைவேற்றிய பிரேரணை சம்பந்தன் எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள மாட்டார். ஏனெனில், சம்பந்தன் சமஸ்டிக் கோரிக்கையைக் கூட கைவிட்டுவிடுவதற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டிருப்பவர். மேலும், சம்பந்தன் முன்னரைப் போல் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் இந்தியாவின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் கூடத் தெரியவில்லை. அண்மைக்காலமாக சம்பந்தன் இந்தியாவிலிருந்து விலகி நிற்பதாகவே தெரிகிறது. சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்ற பின்னர் இதுவரை ஒரு முறை கூட புதுடில்லிக்கு விஜயம் செய்யவும் இல்லை, அரசியல் தீர்விற்காக இந்தியாவின் ஆதரவைக் கோரவும் இல்லை. இது தொடர்பில் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்துவரும் ஏனைய கட்சிகள் மத்தியில் அதிருப்திகள் நிலவுகின்றன. கூட்டமைப்பின் தலைவர் என்னும் வகையில் சம்பந்தன் ஒரு போதுமே ஜெயலலிதாவை சந்திக்க முயற்சிக்கவில்லை. சம்பந்தன் தமிழ் நாட்டு பி.ஜே.பி தலைவர்களைச் சந்தித்து தமிழ் மக்களின் பிரச்சினைகளை தெளிவுபடுத்திய போதிலும் கூட, முதலமைச்சரான ஜெயலலிதாவை சந்திக்க விரும்பவில்லை. ஜெயலலிதா ஒரு வில்லங்கமான ஆள் என்பதே சம்பந்தனின் கணிப்பாக இருந்தது.

தமிழ்த் தேசிய வாதிகள் மத்தியில் தமிழ் நாடு தொடர்பில் ஒரு பொதுவான பார்வையுண்டு. கடந்த கால அனுபவங்கள் அந்தப் பார்வையை தவறென்று நிரூபித்திருந்தாலும் கூட தற்போதும் அதனை சில தமிழ் தேசியவாதிகள் நம்புகின்றனர். அதாவது, இந்தியாவின், இலங்கை தொடர்பான கொள்கை நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆற்றல் தமிழ் நாட்டிற்கு உண்டு என்பதே அந்த நம்பிக்கை. இதன் காரணமாகவே தமிழ் நாட்டு அரசியல் தலைவர்களுடன் நெருக்கமான தொடர்பைப் பேணிக்கொள்ள முயற்சிக்கின்றனர். ஜெயலலிதா தொடர்பில் காண்பிக்கப்பட்டுவரும் இந்த அபரிமிதமான பாசப்புலம்பல்களுக்குப் பின்னாலும் கூட, அந்த பார்வையின் செல்வாக்குண்டு. அதாவது, ஜெயலலிதாவை தூக்கிப்பிடிப்பதன் மூலம் அ.இ.அ.தி.முகவிடம் நெருக்கமான தொடர்பை பேணலாம் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு. இந்தியாவைப் பொறுத்தவரையில் தனது அயலுறவுக் கொள்கையில் பிராந்திய பாதுகாப்பு பதற்றங்களுக்கு ஒரு இடமுண்டு. அவ்வாறான பதற்றங்களின் போது அயல்நாடுகளின் மீது தலையீடு செய்வதை இந்தியா ஒரு வெளிவிவகார உபாயமாகவே கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்தியாவின் தலையிடும் ஆற்றல் இலங்கையிலுள்ளவர்களின் விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பாற்பட்டதாகும்.

அன்று இந்தியா தன்னுடைய தலையீட்டிற்கான கருவியாக தமிழ் நாட்டையே கைக்கொண்டிருந்தது. இந்தியா எவ்வாறு தனது அயலுறவுக் கொள்கைக்கு வாய்ப்பாக தமிழ் நாட்டை கைக்கொண்டதோ அதேபோன்று தமிழ் நாட்டின் அரசியல் தரப்புக்களை எங்களுக்கு ஆதரவாக மாற்றுவதன் மூலம், மத்திய அரசின் மீது அழுத்தங்களை பிரயோகிக்க முடியுமென்பதே தமிழ் தேசியவாதிகளின் கணிப்பாக இருந்தது. 2009இல் தமிழ் நாடு பார்த்துக் கொண்டிருக்கும் போதுதான் விடுதலைப் புலிகள் மிக மோசமாக அழிக்கப்பட்டனர். ஆனால், தமிழ் நாட்டால் யுத்தத்தை தடுத்து நிறுத்தும் வகையில் மத்திய அரசின் மீது வீரியம்மிக்க அழுத்தங்கள் எதனையும் பிரயோகிக்க முடியவில்லை. ஒரு சில எதிர்ப்புக்கள் காண்பிக்கப்பட்டன. ஆனால், அவற்றால் மத்திய அரசின் கொள்கை நிலைப்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்த முடியவில்லை. ஏன் முடியவில்லை? இந்தியா ஒன்றால்தான் யுத்தத்தின் போக்கை மாற்ற முடியும் என்னும் நிலைமையிருந்தது உண்மைதான். ஆனால், அவ்வாறானதொரு நிலைமையை நோக்கி இந்தியாவை திருப்ப தமிழ் நாட்டால் முடியவில்லை.

இந்தியாவின் கொள்கை நிலைப்பாட்டுக்காக மாநிலங்களைப் பயன்படுத்தும் நிலைமைதான் இருக்கிறதேயன்றி, மாநிலங்களால் இந்தியாவின் அயலுறவு கொள்கைகளை மாற்றியமைக்கக் கூடிய நிலைமை இந்தியாவில் இல்லை. இந்தியாவின் தேசிய கொள்கைகளில் மாநிலங்களின் செல்வாக்கு என்பது மிகவும் மட்டுப்பட்ட நிலையிலேயே காணப்படுகிறது. இதன் காரணமாகவே தமிழ் நாட்டால் ஈழத் தமிழ் மக்கள் தொடர்பில் எந்தவொரு காத்திரமான நடவடிக்கைகளையும் எடுக்க முடியவில்லை. இந்த அடிப்படையில் நோக்கினால், ஜெயலலிதாவின் ஈழ ஆதரவு நிலைப்பாடு என்பது அ.இ.அ.தி.முகவின் வாக்கு வங்கியை உயர்த்தியதேயன்றி, அதற்கு அப்பால் இந்தியளவில் அதற்கு எந்தவொரு முக்கியத்துவமும் இல்லை. அப்படியொரு முக்கியத்துவம் வர வேண்டுமாக இருந்தாலும் கூட, அதுவும் சவுத்புளொக்கின் தேவையில்தான் தங்கியிருக்கிறது. அரசியல் சாசனம் தொடர்பில் விவாதிக்கப்படும் இன்றைய சூழலில், இந்திய மத்திய அரசை நோக்கி கூட்டமைப்பும் ஏனைய தமிழ் தரப்புக்களும் பணியாற்றுவதுதான் சிறந்தது. குறிப்பாக வடக்கு – கிழக்கு இணைப்பு விவகாரங்களில் இந்தியாவின் கரிசனைகளை பரீசீலிக்க வேண்டிய அவசியம் உண்டு.

யதீந்திரா