படம் | Seithy
மன்னார் மாவட்டத்தின் தெற்குப் புறத்திலே உள்ள முசலிக் கிராமத்திலே அண்மையில் ஆய்வு ஒன்றிலே ஈடுபட்டிருந்த போது அங்கிருந்த முஸ்லிம் பெரியவர் ஒருவர் வனவளப் பாதுகாப்பு என்ற பெயரில் அங்கு வாழும் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் பற்றிக் குறிப்பிட்டார். அது மட்டுமல்லாமல் அவர் என்னை நோக்கி சில கேள்விகளையும் முன்வைத்தார்: “நாங்கள் பாரம்பரியமாகப் பயன்படுத்தி வந்த காட்டு வளங்களைத் தொடர்ந்தும் பயன்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தடை விதித்துள்ளது. எனது வீட்டின் பின்புறம் வனவளப் பாதுகாப்பு அதிகாரிகளினால் இப்போது பாதுகாக்கப்பட்ட காடாக மாற்றப்பட்டுள்ளது. ஒரு மண்வெட்டி செய்ய பிடி தேவை என்றால் கூட என்னால் பின்னுக்கு இருக்கிற மரத்தினை வெட்ட முடியாது. முசலி தெற்குப் பகுதியில் புதிதாகப் புத்தர் சிலையும் அமைக்கப்பட்டிருக்கிறது. நாங்களும் வட மாகாணத்தினைச் சேர்ந்தவர்களே. ஆனால், உங்களுடைய முதலமைச்சர் ஐயா ஏன் எங்களுடைய பிரச்சினைகள் பற்றி எதுவும் பேசுவதில்லை? ஒரு கை தட்டினால் சத்தம் கேட்குமா? எல்லாரும் சேர்ந்து பிரச்சினைகளைத் தீர்க்க முன்வரலாமே?” எழுக தமிழ் என்ற தமிழ் மையவாத நிகழ்வினைப் பற்றிக் கேள்விப்பட்ட போதும், அது தொடர்பான பதிவுகளைப் பார்த்த போதும் எனது கண்முன்னே அந்த முஸ்லிம் பெரியவர் தான் முதலிலே தோன்றினார். தமிழ்த் தேசியவாதம் தொடர்பாக அவரிடம் இருந்து வெளிப்பட்ட விமர்சனம் அந்த முஸ்லிம் மனிதரின் நாளாந்த வாழ்வினை அடிப்படையாகக் கொண்டதாகவும் மிகவும் வலிமை மிக்கதாகவும் அமைந்தமையினை நான் அப்போது உணர்ந்தேன்.
இதை எழுதிக் கொண்டிருக்கும் போது என்னை நோக்கிப் பலர் ரிசாத் பதியுதீன் தானே முஸ்லிம்களுக்கு இருக்கிறார் என்று பலர் சொல்வதும், முஸ்லிம்கள் வேறு ஒரு தேசம், எனவே நாம் எவ்வாறு அவர்களுக்காகப் பேச முடியும் என்று சொல்லக்கூடும் என்பது எனக்குத் தெரிகிறது. ரிசாத் பதியுதீன் என்ன செய்கிறார், யாருக்காகச் செய்கிறார் என்பதனை நாம் கவனத்தில் எடுக்கத் தேவையில்லை. அவர் செய்வது பிழையாகவேயும் இருக்கட்டும். தமிழ் – முஸ்லிம் மக்களுக்கு இடையிலான அரசியல், சமூக உறவுகளை வளர்த்தெடுக்காது ஏனைய சமூகங்களின் அரசியல் தலைமைகளினைத் தொடர்ந்தும் சாடிக்கொண்டிருப்பது, மக்கள் அரசியலுக்கு ஒவ்வாத ஒரு அணுகுமுறை. இதுவும் ஒரு விதமான தேசியவாத -அடிப்படைவாதச் சிந்தனை: நாம் எமது சமூகம் பற்றி மட்டுமே பேச வேண்டும் – ஒவ்வொருவரும் தத்தமது சமூகத்தின் நலன்களைப் பார்த்துக்கொண்டால் சரி போன்ற வாதங்கள் ஒரு வரட்டுத்தனமான பன்மைத்துவத்தின் வெளிப்பாடுகள். இவ்வாறான நொண்டிச் சாட்டுக்கள் தமிழ் – முஸ்லிம் உறவுகளை அடிமட்டத்திலே உருவாக்குவதற்கோ அல்லது பலமூட்டுவதற்கோ வழி செய்யமாட்டாது. வட மாகாணத்தில் வாழும் பெரும்பான்மை சமூகத்தினைச் சேர்ந்தவர்கள் என்ற வகையில் இந்த முஸ்லிம் பெரியவரின் கேள்விக்குப் பதிலளிக்க வேண்டியது எமது பொறுப்பு. இந்தக் கேள்விகள் தமிழ்த் தேசியவாதம் என்ற பெயரிலே நாம் மேற்கொள்ளும் எதிர்ப்பு அரசியலை கேள்விக்குட்படுத்த வேண்டியதன் அவசியத்தினைச் சுட்டி நிற்கின்றன. மேலும், தேசியவாத/ இனவாத ஒடுக்குமுறையின் கீழ் வாழும் சமூகங்கள் என்ற வகையிலும், ஒரு பிராந்தியத்திலே உள்ள நில, நீர் மற்றும் சூழல் சார் வளங்களைப் பகிர்ந்துகொள்ளும் சமூகங்கள் என்ற வகையிலும் பிராந்திய ரீதியிலான ஒரு எதிர்ப்பு இயக்கத்தினைக் கட்டியெழுப்புவதற்கு தமிழ் – முஸ்லிம் உறவுகள் வலுப்பெற வேண்டும். இதனை இன அடையாளத்தினை மையமாகக் கொண்ட தேசியவாதங்களினால் – அது தமிழ்த் தேசியவாதமாக இருந்தாலும் சரி, முஸ்லிம் தேசியவாதமாக இருந்தாலும் சரி – ஒருபோதும் செய்ய முடியாது. ஏனெனில், இன ரீதியிலான அல்லது பண்பாட்டு ரீதியிலான தேசியவாதத்தின் மிகவும் அடிப்படையான குணங்களிலே ஒன்று, குறித்த நிலப்பரப்பின் மீது ஒரு குறித்த இனத்துக்கு மட்டுமே இறைமை இருக்கிறது என்ற வாதம். இந்த வாதம் ஒடுக்கும் இன ரீதியிலான தேசியவாதங்களிலும் இருக்கிறது, ஒடுக்கப்படும் இன ரீதியிலான தேசியவாதங்களிலும் இருக்கிறது. இன்னொரு வழியிலே சொன்னால், இந்த அடிப்படையிலே புறமொதுக்கும் இயல்பானது ஒடுக்கும் தேசியவாதங்களும், ஒடுக்கப்படும் தேசியவாதங்களும் ஒரே விதமான சிந்தனை வடிவங்களே என்பதனை எமக்கு வெளிக்காட்டி விடுகிறது. இந்தக் காரணங்களினாலேயே மேலைத்தேய அரசியல் மற்றும் தத்துவார்த்தப் பாரம்பரியங்கள் பலவற்றிலே முன்னிறுத்தப்பட்ட, இறைமை சுதந்திரத்துக்கு அவசியமானது என்ற கருத்தினை ஹன்னா அரென்ட் நிராகரிக்கிறார். இறைமை பன்மைத்துவத்துக்கு எதிரானது என அரென்ட் தனது The Human Conditions என்ற நூலிலே வாதிடுகிறார்: “எந்த ஒரு மனிதனும் இறைமையுடையனவாக இருக்க முடியாது; ஏனெனில், மனிதன் அல்ல மனிதர்களே புவியிலே வாழ்கிறார்கள்.” ஒரு தனி மனிதனின் பெயரிலோ அல்லது ஒரு தேசத்தின் பெயரிலோ இறமையினைக் கோருவது போலியானது எனக் கூறும் அரென்ட், ஒருவருக்கு ஒருவர் செய்து கொண்ட சத்தியங்கள் அல்லது உறுதி மொழிகளின் அடிப்படையில் வைத்து நோக்கப்படும் போது மாத்திரமே இறைமை ஒரு வரையறுக்கப்பட்ட யதார்த்தமாக இருக்கிறது எனக் கூறுகிறார்.
முசலியினைச் சேர்ந்த முஸ்லிம் பெரியவர் என்னிடம் வெளிப்படுத்திய ஆதங்கங்கள் வடக்குக் கிழக்கில் இடம்பெறும் கட்டமைப்புசார் பிரச்சினைகளான பௌத்தமயமாக்கம், நில அபகரிப்பு, இராணுவ மயமாக்கம் போன்றன அந்தப் பிரதேசத்தில் வாழும் தமிழர்களை மட்டுமல்லாது முஸ்லிம் மக்களினையும் பாதிப்பதனை நாம் காணக் கூடியதாக இருக்கிறது. இவ்வாறான பிரச்சினைகளை எழுக தமிழிலே செய்தது போல ஒரு தமிழ்த் தேசியவாத வில்லையினூடாக விளக்க முற்படுவது பிழையானதும் அபாயகரமானதுமான ஒரு முயற்சியே. சமூகங்களுக்கு இடையிலே நல்லுறவினை ஏற்படுத்துவதனை விடுத்து சமூகங்கள் மேலும் மேலும் ஒன்றிலிருந்து மற்றொன்று தள்ளிப் போவதனையே இந்த மாதிரியான அரசியல் முன்னெடுப்புக்கள் ஊக்குவிக்கும். இந்த வகையிலே எழுக தமிழ் நிகழ்வு ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பெரும்பான்மைவாத மனநிலையினையே எடுத்துக்காட்டியது. நாட்டிலும் வடக்குக் கிழக்கிலும் அரச ஒடுக்குமுறையினால் வெவ்வேறு சமூகங்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதனை வெளிக்கொண்டு வருவதிலிருந்து இந்த நிகழ்வு தவறியது.
எழுக தமிழ்ப் பேரணியிலே முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளிலே பல நியாயமானவை: காணாமற் போனோர் தொடர்பான உண்மைகளை வெளிக்கொண்டு வருதல், பௌத்த மயமாக்கத்தினை நிறுத்துதல், இராணுவ மயமாக்கத்தினையும், நில ஆக்கிரமிப்பினையும் முடிவுக்குக் கொண்டு வருதல், சமஷ்டி ரீதியிலான அரசியற் தீர்வுகளைக் கோருதல். ஆனால் இவை எல்லாமே ஒரு தமிழ்த் தேசியவாத அடிப்படைப் பார்வையில் இருந்தே இந்த நிகழ்விலே முன்வைக்கப்பட்டன. நிலம், கடல் வளம் என்பன பற்றிக் குறிப்பிட்டப்பட்ட கோரிக்கைகளிலே ‘எமது’ என்ற சொற்பதம் திரும்பத் திரும்பப் பிரயோகிக்கப்பட்டிருந்தது. இந்தக் கோரிக்கைகள் தமிழ்த் தேசம் பற்றியும் அதனது இறைமை பற்றியும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளின் தொடர்ச்சியாக பதாகைகளிலே இடம்பெற்றன. எனவே, இந்த இயற்கை வளங்கள் தொடர்பான கோரிக்கைகள் கூட தமிழ்த் தேசியவாதச் சாயல் மிக்கவையாகவே அமைந்தன. இந்த வளங்களை வடக்குக் கிழக்கிலே வாழும் ஏனைய சமூகங்களுடன் தமிழர்கள் பகிர்ந்து கொள்ளுகிறார்கள் என்ற விளக்கத்தினையும், இதனால், இந்தப் பிராந்தியத்தின் மீதும் அதன் வளங்களின் மீதும் தமிழர்களுக்கு இருக்கும் இறைமை மட்டுப்படுத்தப்பட்டது என்ற விளக்கத்தினையும் இந்தக் கோரிக்கைகள் முன்வைக்கத் தவறின.
முதலைமைச்சர் விக்னேஸ்வரன் தனது உரையிலே தமிழர்கள் என்ற பதத்தினைத் தவிர்த்து தமிழ் பேசும் மக்கள் என்ற பதத்தினைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தினார். ஆனால், இலங்கையிலே தமிழ் பேசும் மக்கள் எதிர்கொண்ட வன்முறைச் சம்பவங்கள் என அவர் பட்டியலிட்ட சம்பவங்கள் அனைத்தும் (1958, 1961, 1974, 1977, 1983) நாட்டில் வாழும் இலங்கை மற்றும் இந்திய வம்சாவளித் தமிழர்களை இலக்கு வைத்து, வடக்குக் கிழக்கிலும் நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் மேற்கொள்ளப்பட்ட வன்செயல்களாக இருந்தன. முஸ்லிம்களினை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட மாவனல்ல (2001) மற்றும் அளுத்கம (2014) வன்செயல்களைப் பற்றி விக்னேஸ்வரனின் உரையிலே எதுவுமே சொல்லப்படவில்லை. மேலும், தமிழர்களின் இறைமை வடக்குக் கிழக்குக்கு மட்டுமே என வரையறை செய்யும் எழுக தமிழ் நிகழ்ச்சியிலே நாட்டின் தென்பகுதியிலே வாழ்ந்த தமிழ் மக்களைப் பாதித்த வன்முறைகள் குறித்து விக்னேஸ்வரன் பேசியமை வடக்குக் கிழக்கினையும் தமிழர்களையும் இணைத்து நோக்கும் தமிழ்த் தேசியவாத அரசியலில் இருக்கும் அகமுரண்பாடு ஒன்றினை முரண் நகையாக வெளிக்காட்டியது. இது தென்னிலங்கையிலே வாழும் தமிழர்களையும் அவர்கள் எதிர்கொண்டு கொண்டிருக்கும் இனவாதத்தினையும் வடக்குக் கிழக்கினை மையமாகக் கொண்டு செயற்படும் தமிழ்த் தேசிய அரசியல் ஒரு வகையான சந்தர்ப்பவாத நோக்கிலே பயன்படுத்துவதற்கு ஒரு எடுத்துக்காட்டாகவும் அமைந்தது.
வடக்குக் கிழக்கினைச் சேர்ந்த ஏனைய சமூகங்கள் தமிழர்களுடன் சேர்ந்து செயற்பட விரும்புகிறார்களா இல்லையா என்பதற்கு அப்பால், அவ்வாறான சேர்ந்து செயற்படுவதற்கான வெளிகளைத் தமிழ்த் தரப்புக்கள் உருவாக்கியிருக்கிறார்களா என்ற கேள்வியினைக் கேட்பது இன்றைய காலத்திலே மிகவும் முக்கியமானது. இந்த விடயத்திலே தமிழர்கள் திறந்த மனத்துடன் செயற்படுவதே வடக்குக் கிழக்கிலே தற்போது தமிழ் மையவாதத்துடன் இயங்கும் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் ஒரு புதிய புரட்சிகரமான பன்மைத்துவ வடிவத்தினைப் பெற வழி செய்யும். இதுவே வடக்குக் கிழக்கிற்கு வெளியிலுள்ள தமிழ் மக்களுடைய பாதுகாப்பிற்கு ஓரளவாயினும் உத்தரவாதத்தினை வழங்கும். ஏனெனில், வடக்கும் கிழக்கும் தமிழர்களுக்கு உரியது என்ற தமிழ்த் தேசியவாத அரசியற் தர்க்கத்தின் தவிர்க்க முடியாத மற்றொரு பக்கம் நாட்டின் ஏனைய பகுதிகள் யாவும் சிங்கள – பௌத்தர்களுக்கு உரியது என்பதாகும்.
சிங்கள பௌத்தத் தேசியவாத ஒடுக்குமுறைக்கு எதிரான தமது போராட்டத்தினைத் தமிழ் மக்கள் ஒரு தமிழ் – இந்து அடையாள அடிப்படையிலே செய்ய முற்பட்டிருப்பார்களாயின் எழுக தமிழ் நிகழ்வுகளிலே நாம் கண்ணுற்றது போல இந்து மத குருமாரும், கிறிஸ்தவ மத குருமாரும் தோளோடு தோள் நின்று செயற்பட்டிருப்பது சாத்தியமாகி இருக்காது. ஆனால், இந்த மதச்சார்பற்ற அரசியல் நிலைப்பாடு கூட இப்போது எழுக தமிழுக்கு ஆதரவளிக்கும் சில சக்திகளினால் அபாயத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலே தலித்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், பழங்குடி மக்கள் போன்றோருக்கு எதிராகச் செயற்படும், இந்துத்துவ பாசிச சிந்தனையினைப் பிரதிபலிக்கும் அமைப்பான விஷ்வ ஹிந்துப் பரிஷத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு மாநாட்டிலே பங்காற்றிய முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனது உரையிலே இலங்கையிலே இடம்பெற்ற போரின் போது இந்து சமயத்தவர் மாத்திரம் எதிர்கொண்ட பிரச்சினைகளைப் பற்றிப் பேசியமையும், தமிழ்க் கிறிஸ்தவர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள் குறித்து அவர் அங்கு எதுவும் குறிப்பிடாமையும், தமிழ்க் கிறிஸ்தவர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளின் மீது விக்னேஸ்வரனுக்கு இருக்கும் கரிசனை பற்றி சந்தேகத்தினை எழுப்பியுள்ளது. எழுக தமிழுக்காகத் தீவிரமான ஊடகப் பிரசாரங்களிலே ஈடுபட்டிருந்த வலம்புரிப் பத்திரிகையின் பல ஆசிரியர் தலையங்கங்கள் இந்துத்துவ/ சைவத்துவ அடிப்படையிலானவையாகவும், சமய ரீதியிலான பிளவுகளைத் தமிழர் மத்தியிலே விதைப்பனவாகவும் அமைந்தன. நல்லூர்க் கந்தசுவாமி கோயில் மகோற்சவத்தினை முன்னிட்டு வலம்புரியிலே எழுதப்பட்ட ஆசிரியர் தலையங்கம் ஒன்று தமிழ் அடையாளத்தினையும் இந்து/ சைவ அடையாளத்தினையும் ஒருமிக்கச் செய்யும் பத்திரிகை ஆசிரியரின் விபரீதமான அரசியல் சிந்தனையினை வெளிக்காட்டியது:
“பொதுவில் உலக நாடுகள் தமது அடையாளமாக சில வரலாற்றுச் சின்னங்களை காட்சிப்படுத்திக் கொள்வது வழக்கம். உதாரணமாக சுதந்திரதேவி சிலை என்பது அமெரிக்காவை குறிப்பதற்கான அடையாளமாகும். அதேபோல் மலேசியா என்றதும் ருவின்ஸ் ரவர் நம் கண்முன் காட்சி தருகிறது. இந்த வகையில் ஈழத்தமிழர் என்றால் அவர்களின் அடையாளம் நல்லூர்க் கந்தனின் திருக்கோயில் என்பதாகவே இருக்கும்.”
“நல்லூர்க் கந்தப்பெருமானை தம் தலைவனாகவும் நல்லூர்க் கந்தப்பெருமானின் திருவிழா தலைவனுக்கான பெருவிழாவாகவும் அதுவே தமிழ் மக்களின் அரசாட்சியாகவும் கருதப்படுகிறது.”
“தமிழ் மக்களின் தலைவன் நல்லூர் முருகனே. அவனின் ஆலயம் தலைவனின் மாளிகை. மன்னவன் எழுந்தருளுவதால் தம் குறைகள் அனைத்தும் தீரும் என்ற மிக உன்னதமான நம்பிக்கை இன்றுவரை தமிழ் இனத்தின் இருப்புக்குக் காரணமாகிறது.”
வலம்புரிப் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எழுக தமிழ் நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருந்த தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டுக் குழுவில் அங்கம் வகிக்கும் நான்கு உறுப்பினர்கள் ஒருவர் என்பதனையும் நாம் மறந்துவிடக் கூடாது. வடபகுதியிலே அண்மைக் காலமாக வேரூன்றி வரும் இந்துத்துவா அமைப்புக்களுக்குத் தீனிபோடும் வகையிலே வலம்புரிப் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கள் அமைந்துள்ளன.
கடந்த காலங்களிலே காஷ்மீரிலும், பாலஸ்தீனத்திலும் உருவாகிய மதச்சார்பற்ற சுயநிர்ணய உரிமைப் போராட்டங்களினை முன்னெடுத்த இயக்கங்கள், தலைமைகள், புத்திஜீவிகள் சுயநிர்ணயத்தினை அந்தப் பிராந்தியத்தின் பன்மைத்துவத்தின் அடிப்படையில் கட்டியெழுப்ப முற்பட்டிருந்தார்கள். 1967 ஜூன் மாதத்திலே ஏற்பட்ட அரபு – இஸ்ரேலிய யுத்தத்தின் பின்னர் பாலஸ்தீனியர்கள் மத்தியிலே ஏற்பட்ட மதச்சார்பற்ற ஒரு அரசுருவாக்க முயற்சி பற்றி 1979இல் (அப்போது இரண்டு நாடுகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற தீர்வு பாலஸ்தீனர்கள் மத்தியில் மேலோங்கி இருந்தது) நொஸ்டால்ஜிக் உணர்வுகளுடன் The Question of Palestine என்ற நூலிலே எட்வேட் சைட் எழுதிய குறிப்புக்களை இங்கு நினைவுபடுத்துவது சிறந்தது:
பல்வேறு இடப்பெயர்வுகள், நாடுகடந்து வாழும் சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் பாலஸ்தீனிய எதிர்ப்பு இயக்கத்தினால் (பின்னர் பாலஸ்தீன விடுதலை இயக்கம் என அறியப்பட்டது) முன்வைக்கப்பட்ட மத்திய கிழக்குத் தொடர்பான பார்வை கடந்த காலத்தில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களில் இருந்து வேறுபட்டிருந்தது. புதிய சிந்தனை பாலஸ்தீனப் பிராந்தியத்தில் இருக்கும் அரபுக்களுக்கும், யூதர்களுக்கும் பொதுவான ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக அரசினை உருவாக்குவது பற்றியதாக இருந்தது. இந்தக் கருத்து பலராலும் வெறுக்கப்பட்டாலும், இதனுடைய முக்கியத்துவத்தினை ஒருவரும் குறைத்திட முடியாது. தமது அரசினை ஆக்கிரமிப்பு மூலம் பெற்றுக்கொண்ட யூதர்கள் பாலஸ்தீனத்தில் இருக்கிறார்கள் என்ற பல தலைமுறை அரபுக்களாலும் பாலஸ்தீனர்களும் ஏற்றுக்கொள்ள முடியாது இருந்த கருத்து இப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டது. யூதர்களை வெறுமனே ஏற்றுக்கொள்ளுவதற்கு அப்பாலும், இந்த சிந்தனை விரிவுபெற்றிருந்தது. என்னுடைய அறிவுக்கு எட்டிய வரை பல் சமயங்களை உள்ளடக்கிய மத்திய கிழக்கின் உருவாக்கத்தினைப் பற்றி சிந்தித்த ஒரே ஒரு முயற்சியாக இது இருந்தது. மதச்சார்பற்ற, மனித உரிமைகளின் அடிப்படையிலான அரசுருவாக்கம் பற்றி இங்கு சிந்திக்கப்பட்டிருந்தது. சமய அடிப்படைகளோ, சிறுபான்மையினரை ஒதுக்கி வைப்பதையோ அல்லது சிரியாவில் இருந்தது போல பூகோள அரசியல் ஐக்கியத்தினை முன்னிறுத்திய தேசியவாதத்தினையோ தவிர்த்து முற்றிலும் வேறுபட்ட சிந்தனை ஒன்று இங்கே முன்வைக்கப்பட்டது.
இஸ்ரேல் – பாலஸ்தீனப் பிரச்சினைக்குத் தனித் தனியான இரண்டு அரசுகளின் அடிப்படையிலான தீர்வுக்கு எட்வேட் சைட் 1980களில் ஆதரவு அளித்தாலும், பின்னர் 2003இல் அவர் இரட்டைத் தேசிய அரசு ஒன்று இஸ்ரேல் – பாலஸ்தீனத்திலெ உருவாக வேண்டும் எனவும் இரண்டு சமூகங்களின் கூட்டு அடையாளங்களும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனவும் எழுதுகிறார்.
1947 ஒக்டோபரிலே மத வன்முறைகள் காஷ்மீரில் ஏற்பட்ட போது அங்கு இந்து, முஸ்லிம், சீக்கிய சமூகங்களிடையே ஒற்றுமையினை முன்னிறுத்தும் வகையில் ஷேக் முஹம்மது அப்துல்லாவின் தலைமையில் இயங்கிய காஷ்மீர் சுயநிர்ணய அமைப்பான தேசிய மாநாடு என்ற இயக்கத்தினரால் “Shere-Kashmir ka kya irshad, Hindu, Muslim, Sikh ithaad” என்ற கோஷம் எழுப்பப்பட்டது. அப்துல்லாவின் மதச்சார்பற்ற அரசியல், வன்முறையின் போது பிராந்தியத்திலே சிறுபான்மையாக இருந்த இந்துக்களுக்குக் கவசமாக அமைந்தது. காஷ்மீர் சுயநிர்ணயப் போராட்டம் இன்றைய காலத்தில் இஸ்லாமியச் சாய்வு மிக்கதாக இருந்தாலும், அதனது ஆரம்ப வருடங்களிலே அது மதச்சார்பின்மையினை வலியுறுத்தி இருந்தது. அங்கிருந்த முக்கியமான சுயநிர்ணய இயக்கம் முஸ்லிம் மாநாடு என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டாலும், அது பிராந்தியத்தில் உள்ள எல்லா சமூகத்தவரையும் உள்வாங்கும் வகையிலே தன்னை ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு என 1939இல் பெயர் மாற்றம் செய்துகொண்டது. பிராந்தியத்தில் வாழ்ந்த எல்லா மக்களுக்கும் சமூக, சமய, பொருளாதார ரீதியிலான வேறுபாடுகள் இன்றி சம உரிமைகள் கிடைப்பதனை அது வலியுறுத்தியது. விவசாயிகளுக்கு நிலங்கள் கிடைக்க வேண்டும் என்ற வகையிலே நில உரிமைச் சீர்திருத்தங்களை இந்த இயக்கம் முன்வைத்தது.
பாலஸ்தீனம், காஷ்மீர் ஆகிய பிராந்தியங்களிலே எழுச்சி பெற்றிருந்த சுயநிர்ணய உரிமைப் போராட்டங்கள், அந்தப் பிராந்தியங்களிலே நிலவிய கலாசார, மத, இன ரீதியிலான முரண்களைத் தீர்ப்பதிலே காட்டிய கரிசனையினையும், நிலத்தினை அங்கு வாழ்ந்த எல்லா சமூகங்களுக்கும் உரியதாகப் பார்க்க வேண்டியதன் அவசியத்தினை வெளிப்படுத்தியமையினையும் மேற்குறிப்பிட்ட உதாரணங்களில் இருந்து நாம் விளங்கிக் கொள்ள முடியும். வரலாற்று ரீதியிலும் புவியியல் ரீதியிலும் இந்த சுயநிர்ணய உரிமைப் போராட்டங்கள் வேறுபட்டிருந்தாலும், இந்த உதாரணங்களை முன்னிறுத்தி நாம் சிந்திக்கையில், வடக்குக் கிழக்கினை அடிப்படையாகக் கொண்ட ஒரு சுயநிர்ணயம் உருவாக வேண்டுமானால் அது அந்தப் பிராந்தியத்தினுள் இருக்கும் அக முரண்பாடுகளுக்குத் தீர்வு காணும் நோக்கிலே செயற்படல் வேண்டும் என்பது புலனாகிறது. இந்த அக முரண்பாடுகளிலே பிரதானமான ஒன்று இந்தப் பிராந்தியத்தில் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு இடையிலான உறவுகள் பற்றியது. இரண்டு சமூகங்களும் ஒன்றில் ஒன்று நம்பிக்கை அற்றனவாக இருக்கின்றன. கடந்த காலம் பற்றிய கசப்பான அனுபவங்கள் காரணமாக இந்த இரண்டு சமுதாயங்களும் ஒன்றை ஒன்று சந்தேகத்துடனும், பயத்துடனும் நோக்கும் நிலை இன்று நிலவுகிறது. இந்த உறவுகளைச் சீர் செய்வதற்கான ஓர் அரசியற் செயன்முறையினைத் தமிழ்த் தேசியவாத சிந்தனையினாலோ அல்லது முஸ்லிம் தேசியவாத சிந்தனையினாலோ முன்கொண்டு செல்ல முடியாது. ஏனெனில், தேசியவாதங்களின் கண்களுக்குத் தாம் சார்ந்த சமூகம் தவிர மற்றவர்கள் புலப்படுவதில்லை. அவ்வாறு புலப்பட்டாலும் அவர்கள் தேசத்திற்கு வெளியில் இருப்போராக, உண்மையான அக்கறையற்ற வகையிலேயே பார்க்கப்படுவர். எழுக தமிழிலே முன்வைக்கப்பட்ட கோசங்களும் சரி பேச்சுக்களும் சரி, தமிழ் முஸ்லிம் உறவுகள் பற்றியோ, தமிழ் சமூகத்திலே புரையோடிப் போயிருக்கும் சாதிய, பால் ரீதியான ஒடுக்கு முறைகள் பற்றியோ எதனையும் குறிப்பிடவில்லை. எழுக தமிழ் ஒரு ஜனநாயகச் செயன்முறை என்ற வாதத்தினைப் பலரும் முன்வைத்தாலும், அன்றைய நிகழ்வுகளிலே தமிழ் சமூகத்தின் மத்தியில் இருக்கும் ஜனநாயக மறுப்புக்கள் பற்றியோ, கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளினால் தமிழ்த் தேசியத்தின் பெயரால் மேற்கொள்ளப்பட்ட ஜனநாயக மறுப்புக்கள் பற்றியோ எவரும் எதனையும் குறிப்பிடவில்லை.
எழுக தமிழின் தமிழ்த் தேசியக் கூச்சலில் இருந்து விடுபட்டு நாம் சுயநிர்ணயம் பற்றி மாற்று வழிகளிலே சிந்திக்க முற்படுவது அவசியம். அதற்காக வரலாறு எமக்கு சில நல்ல உதாரணங்களை விட்டுச் சென்றுள்ளதாகவே நான் கருதுகிறேன். பத்மநாபாவினால் உருவாக்கப்பட்ட ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினது (ஈ.பி.ஆர்.எல்.எஃப்.) சிந்தனையிலும் சரி செயற்பாடுகளிலும் சரி, தமிழ் சமூகத்தின் உள்ளிருக்கும் சாதி, வர்க்கப், பால் ரீதியிலான வேற்றுமைகளைப் பற்றிய ஒரு தெளிவும் பார்வையும் இருந்தது. அது மட்டுமல்லாமல் அவர்கள் வடக்குக் கிழக்கில் நிலவிய இனப் பல்வகைமை பற்றியும் கவனம் மிக்கவர்களாக இருந்தார்கள். புலிகள், புளொட், டெலோ போன்ற அமைப்புக்களுக்கு முற்றிலும் மாறுபட்ட வகையிலே, தமது பெயரிலே ‘தமிழ்’ என்ற பதம் இருந்தால் அது வட கிழக்கில் வாழும் ஏனைய சமூகங்களினைத் தமது அரசியல் செயன்முறைகளில் இருந்து நீக்கம் செய்து விடும் எனக் கருதி, ‘தமிழ்’ என்ற பதத்தினைத் தமது இயக்கத்தின் பெயரில் இருந்து ஈ.பி.ஆர்.எல்.எஃப். இனர் தவிர்த்திருந்தார்கள். ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பிலே முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள் போன்றோர் மட்டுமல்லாது சில சிங்களவர்களும் கூட இணைந்தனர். இணைந்த வடக்குக் கிழக்கு மாகாணத்திலே ஈ.பி.ஆர்.எல்.எஃப். 1980களின் இறுதியிலே ஆட்சி செய்த போது அவர்கள் மாகாணத்தில் வாழ்ந்த எல்லா இன மக்களின் நலனினையும் கருத்திலே கொண்டு செயற்பட்டனர். 1980களின் இறுதியில் இந்த அமைப்பு இந்திய இராணுவத்தினருடன் இணைந்து பல மனித உரிமை மீறல்களிலே ஈடுபட்டதனைப் பற்றி நாம் விமர்சனம் மிக்கவர்களாக இருக்க வேண்டிய அதேவேளை, இந்த அமைப்பின் ஆரம்ப வருடங்களிலே அமைப்பு முன்னிறுத்திய அரசியல் இலக்குகளும், அரசியற் பார்வையும், எழுக தமிழ் போன்ற குறுகிய இனத் தேசியவாதங்களுக்கு மாற்றாக, வடக்குக் கிழக்கிலே சுய நிர்ணயம் பற்றி நாம் சிந்திக்கையிலே எமக்கு உற்சாகம் அளிப்பனவாகவே இருக்கின்றன.
மகேந்திரன் திருவரங்கன்
Ezuka Tamil: A Skewed Vision of Self-Detemination என்ற தலைப்பில் ‘கொழும்பு ரெலிகிராப்’ தளத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.