படம் | Obchodcajem

உடல் பருமனை குறைக்க உதவுவதும் உடலிற்கு அதிக கலோரியினை வழங்குவதன் மூலம் புத்துணர்ச்சி வழங்க கூடியதுமான கிறீன் டீ (Green Tea) முதல் அனைத்து தேயிலை உற்பத்தியிலும் பங்குகொண்டுள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்கள், நாளாந்த வேதனத்தை ரூ 1000 ஆக அதிகரிக்குமாறு வலியுறுத்தும் வகையிலான போராட்டத்தில் ஈடு பட்டுள்ளனர். மழை, வெயில் என்ற பாகுபாடு இன்றி தமது உழைப்பினை மேற்கொள்ளும் இந்த சகோதர மக்களினது வாழ்வானது வாழ்க்கையை நடாத்த முடியாத லயன் அறைகளில் பல தசாப்தங்களாக தொடர்ந்து வருகிறது. அந்த இருள் மயமான வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய தருணம் இப்போது பிறந்துள்ளது. அந்த மக்கள் வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து குளவி, அட்டைகளின் தாக்குதல்களையும் சகித்த வண்ணம் தமது நெற்றியில் கோர்க்கப்பட்ட, முதுகில் தாங்கும் கூடையில் தமது கரங்களால் சேர்க்கும் தேயிலையினால் உருவாக்கப்பட்ட தேநீர் சுவையானதாயினும், அதன் பின்னால் உள்ள கதை மிகவும் கசப்பானது. ஏனெனில், அவர்களின் சேவைக்காக அவர்கள் பெறும் சம்பளமானது மிகவும் அற்பமானது என்பதும், அவர்கள் தமது வாழ்வினை கட்டியெழுப்ப பாரிய துயரத்தை எதிர்நோக்குவதாலுமாகும்.

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி மன்றத்திற்கு ஏற்ப 1987ஆம் ஆண்டு 19 ஏக்கர் நிலப்பரப்பில் ஆய்வாக பயிரிடப்பட்ட தேயிலை பயிரானது உலக தேயிலை கேள்வியின் 19% ஐ  பூர்த்திசெய்கின்ற அளவு வலுப்பெற்றுள்ளது. அத்துடன், இலங்கையின் தேயிலை மிகவும் தூய்மையானது என்றும், ஓசோன் நல தேயிலை (Ozone Friendly Tea) என்றும் நற்பெயர் பெற்றுள்ளது. அத்துடன், இலங்கையில் இருந்து 40 நாடுகளுக்கு கிறீன் டீ ஏற்றுமதி செய்யப்படுகின்றது. மேலும், உலக தேயிலை கேள்வியில் 17% ஐ இலங்கை பூர்த்தி செய்வதோடு, உலக தேயிலை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் 3ஆவது இடத்தினைப் பெற்றுள்ளது. இங்கு இலங்கை, கென்யா (25%) மற்றும் சீனா (18%) ஆகிய நாடுகளுக்கு அடுத்து இரண்டாம் நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இலங்கை மூன்று வருடகாலமாக சராசரியாக ஏற்றுமதி செய்யப்படும் தேயிலை கிலோ ஒன்றிற்காக 4.66 டொலர் பெறுமதியை தக்கவைத்துள்ளது. முன்னிலையில் உள்ள நிலையில் சீனா, கென்யா போன்ற நாடுகள் தேயிலை கிலோ ஒன்றின் விலை முறையே 3.86 டொலர், 3.26 டொலர் என்ற பெறுமதியைக் கொண்டிருக்கின்றன. உலக பொருளாதாரம் மற்றும் இலங்கையில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக தேயிலை ஏற்றுமதி சிறிது வீழ்ச்சி அடைந்திருந்தாலும், உள்நாட்டில் தேயிலை ஒரு கிலோவினது விலையானது ரூ 750விற்கு (பொதி செய்யப்பட்ட) அதிகமாகவே காணப்படுகின்ற காரணத்தினாலும் அதற்கான சர்வதேச வரவேற்பினாலும் இலங்கையில் தேயிலை உற்பத்தியானது செழிப்பாகவே உள்ளது எனக் கூறலாம்.

இந்நிலையில், தோட்டத் முதலாளிமார்கள் இந்தத் தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கை அசாதாரணமானது எனக் கூறுவது எந்த அளவில் நியாயமானது.

தோட்டக் கம்பனிகள் முன்வைக்கும் இன்னொரு காரணியாக தொழிலாளர்களின் வருகை குறைவாகக் காணப்படுவதை முன் வைக்கின்றனர். அதனை விளங்கப்படுத்துவதற்காக 2014ஆம் வருட மத்திய வங்கி அறிக்கையை நோக்குவோம். இதன்படி 2005ஆம் ஆண்டு தேயிலையினால் 81.5 பில்லியன் வருமானமும், 2013இல் 199.4 பில்லியன் வருமானமும் கிடைத்துள்ளது. மேலும், 2005இல் ஆடை கைத்தொழில் மூலம் பெற்ற வருமானம் 291.3 பில்லியன் ஆகும். அதேபோல் 2013இல் பெற்ற வருமானம் 583 பில்லியனாகும். இதனடிப்படையில் தேயிலை உட்பத்தித்துறை வளர்ச்சி அடைந்துள்ள போதிலும் ஆடை உற்பத்தித்துறை அதிவேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது எனலாம். இதனால், குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்வதை விடுத்து ஆடை உற்பத்தித்துறைக்கு அல்லது வேறு தொழில்களுக்குச் செல்ல அவர்கள் முனைந்திருக்கலாம் என எதிர்பார்க்கலாம். மேலும், 2012 மற்றும் 2001 சனத்தொகை பரம்பலினை நோக்கும் போது தோட்ட புறத்தில் 2012இல் 8,85,600 (4.4%) மக்கள் தொகையினரும் 2001இல் 9,14,700 (5.4%) மக்கள் தொகையினரும் வாழ்வதாக புள்ளிவிபரவியல் கூறுகின்றது. இதிலிருந்து தோட்டப்புற சனத்தொகை குறைவை அவதானிக்கலாம். இது நல்லதொரு பிரதிபலனாகும். ஏனெனில், அவர்கள் அந்த சூழலில் இருந்து வெளி வருதலானது வரவேற்கதக்கதாகும். அதனடிப்படையில் தோட்ட முதலாளிமார் சங்கம் கூறுவது உண்மையே. இந்த நிலைமை அவர்களால்தான் உருவாக்கப்பட்டது என்று கூறுவது பொருத்தமாக இருக்கும். அவர்கள் தமது தொழிலாளர்களைப் பற்றி முன்னரே யோசித்திருக்க வேண்டும். சில வேளைகளில் அவர்கள் வேறேதேனும் திட்டமிட்டிருந்திருக்கலாம். இறுதியில் அவர்களின் திட்டங்கள் தோல்வி அடைந்தது சந்தோசமே.

இந்த 1,000 ரூபா சம்பள உயர்வு நியாயமானதே. ஏனெனில், சாதாரண கூலித் தொழில் செய்யும் ஒருவர் கூட சாதாரணமாக ரூ 1,000 சம்பளம் பெறுகின்றார். இதன் மூலம் அவர்களின் சம்பளம் அசாதாரணமானது எனக் கூறவில்லை. ஒருவர் வாழ்வதற்கு அவசியமான மிக குறைந்த சம்பளத்திற்கும் குறைவான சம்பளத்தினையே தோட்டர் தொழிலாளர்கள் பெறுகின்றார்கள்.

வாக்குகளைக் கொள்ளையடிப்பதற்காக 1,000 ரூபா சம்பள உயர்வு பற்றி தேர்தல் மேடைகளில் பேசப்பட்டது சிறந்த யோசனையாகும். ஆனால், அந்த யோசனைக்காக வாக்குகளைப் பெற்று பதவிகளைப் பெற்றுக்கொண்டவர்கள் இன்று முதலாளிமார்களின் பேச்சுக்கு தலையாட்டும் பொம்மைகளாக மாறிவிட்டார்கள்.

இதற்கு முதல் இவர்கள் ஒரு காட்டிக்கொடுப்பை செய்தார்கள். இதேபோன்றதொரு சம்பள உயர்வை கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது தொழிலாளர்கள் கோரிய சம்பளத்திற்கும் குறைவான தொகைக்கு தொழிற்சங்கங்கள் உடன்பட்டு கைச்சாத்திட்டிருந்தன. அந்த உடன்படிக்கையில் ஆறுமுகன் தொண்டமானின் இலங்கை தொழிலாளர் சங்கம், வடிவேல் சுரேஷின் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், ராமநாதனின் தோட்டத் தொழிலாளர் சங்கம் ஆகிய 3 பிரதான தொழிற்சங்கங்கள் தமது தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சந்தர்ப்பத்தை, அதிகாரத்தைப் பாவித்து உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன. அதன் பின் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் இறுதியில் தொழிலாளர் ஒருவரின் அடிப்படை சம்பளமாக ஒரு நாளைக்கு ரூ 450 ஆகவும், கொடுப்பனவுகள் சேர்த்து ரூ 620 ஆகவும் அதிகரிக்கப்பட்டது. அந்தச் சம்பளத் தொகையையே தற்போதும் தொழிலாளர்கள் பெறுகிறார்கள்.

பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் இறுதியில் தனியார் துறையினருக்கான ரூ 2,500 சம்பள உயர்வினை 25 நாட்களுக்கு வழங்க முதலாளிமார் 2016.07.25ஆம் திகதி உடன்பட்டனர். மேல் குறிப்பிட்ட மூன்று தொழிற்சங்கங்களுக்கும் இந்தக் கொடுப்பனவு குறித்த உடன்படிக்கையில் தீர்மானம் எடுக்கும் அதிகாரங்கள் இருந்தபோதிலும் திகாம்பரத்தின் தேசிய தொழிலாளர் சங்கம், மனோ கணேசனின் கட்சி என்பன தாங்களும் அவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்று தொழிலாளர்களை ஏமாற்றிய வண்ணம் செயற்படுகின்றனர்.

கடந்த வருடம் வழங்கப்பட்ட தீபாவளி போனஸ் தொகையான 10,000 ரூபா இம்முறை 6,500 ரூபாவாகக் குறைக்கப்பட உள்ளதாக வடிவேல் சுரேஷ் கூறியுள்ளார். இதன் மூலம் தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிமார் சங்கம் இரண்டும் ஒன்றே என்ற நிலை உருவாகிவிட்டது. இந்த நிலையில், பல இயக்கங்கள் தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரும் போராட்டத்தில் தொழிலாளர்களுடன் ஒன்றினைந்து வெற்றியை நோக்கி அழைத்துசெல்லும் வண்ணம்ம் உள்ளன. முதலாளிமார் சங்கம், தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை சுற்றி பெரிய வலை விரித்திருக்கும் நிலையில் அந்த வலையினை வெட்டியெரிய அனைவரது உதவியும் தேவைப்படும் தருணம் தற்போது வந்துள்ளது.

கிரிஸ்ண குமார்