படம் | Eranga Jayawardena Photo, AP, Sangam

அரசாங்கம் மிகவும் அவசர அவசரமாக சில விடயங்களை அரங்கேற்றிவருகிறது. மக்களுடனான கலந்தலோசனைக்கான செயலணி (Consultation Task Force) காணாமல் போனோருக்கான அலுவலகம் தொடர்பில் மக்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருக்கும் போதே, குறித்த அலுவலகம் தொடர்பான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறது. அவ்வாறாயின் இதுவரை மக்கள் வழங்கிய ஆலோசனைகளின் பெறுமதி என்ன? அரசாங்கத்தின் மேற்படி செயலானது அரசாங்கம் விடயங்களை இதயசுத்தியுடன் அனுகவில்லை என்பதையே உறுதிப்படுத்துகின்றது. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே உண்மை ஆணைக்குழு தொடர்பான சட்டமூலத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாததிற்கு முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருக்கின்றார். ஒருவேளை அது முடியாது போகுமானால் அடுத்த ஆண்டு ஜனவரியில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்திருக்கின்றார். இதன்போது மங்கள சமரவீர தெரிவித்திருக்கும் பிறிதொரு விடயம் மிகவும் முக்கியமானது. அதாவது, உண்மை ஆணைக்குழுவை தொடர்ந்து உள்நாட்டு நீதிப் பொறிமுறை (Domestic Mechanism) உருவாக்கப்படும், அது கலப்பு நீதிமன்றமாகவோ அல்லது சர்வதேச நீதிமன்றமாகவோ இருக்காது, மாறாக அது முற்றிலும் ஒரு உள்நாட்டு நீதிமன்ற பொறிமுறையாகவே அமைந்திருக்கும்.

இலங்கை அரசாங்கத்தால் இணையனுசரனை வழங்கி ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜெனீவா பிரேரணையில் அரசாங்கம் ஏற்படுத்தவுள்ள நீதிப்பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பு இருக்கும் என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது மிகவும் தெளிவான சொற்தொடரும் கூட. ஆனாலும் கூட (சம்பந்தனின் கண்டுபிடிப்பில் மனச்சாட்சியுள்ள ஜனாதிபதி) மைத்திரிபால சிறிசேனவும் சரி, ரணில் விக்கிரமசிங்கவும் சரி கலப்பு நீதிமன்றத்திற்கு எதிராகவே பேசிவருகின்றனர். இந்த விடயத்தில் அவர்கள் மிகவும் தெளிவான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகவே தெரிகிறது. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் மங்கள சமரவீரவின் மேற்படி அறிக்கையும் வெளிவந்திருக்கிறது. இம்மாதத்துடன் முடிவுற்ற மக்கள் கலந்தாலோசனை செயலணியின் சந்திப்புக்களில் பங்குகொண்டு தங்களின் கருத்துக்களை பதிவுசெய்திருந்த வட கிழக்கு மக்களனைவரும் தங்களுக்கு இலங்கையின் கட்டமைப்புக்களில் நம்பிக்கையில்லையென்றவாறான அபிப்பிராயத்தையே தங்களின் மொழியில் தெரிவித்திருந்தனர்.

இதற்கு ஆதாரமாக அண்மையில் தீர்ப்பு வழங்கப்பட்ட குமாரபுரம் படுகொலை வழக்கை அவர்கள் உதாரணம் காட்டியிருந்தனர். 1996ஆம் ஆண்டு, திருகோணமலை குமாரபுரத்தில் இடம்பெற்ற தமிழ் மக்கள் மீதான படுகொலை தொடர்பான வழக்கு கடந்த 20 வருடங்களாக இடம்பெற்றுவந்த நிலையில், கடந்த மாதம் குற்றம்சாட்டப்பட்ட இராணுவத்தினரை நீதிமன்றம் விடுதலை செய்திருந்தது. இத்தனைக்கும் படுகொலைக்கு உள்ளானவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட இராணுவத்தினரை அடையாளம் காட்டியிருந்தனர். எனினும், அவர்களுக்கு நீதிகிடைக்கவில்லை. இன்று நல்லிணக்கத்திற்கான குறியீடாக தன்னை காண்பிப்பதில் வெற்றிபெற்றிருக்கும் சந்திரிக்கா குமாரதுங்க நிறைவேற்று ஜனாதிபதியாகவிருந்த காலத்திலேயே மேற்படி குமாரபுரம் படுகொலை இடம்பெற்றிருந்தது. வீடுகளுக்குள் புகுந்த இராணுவத்தினர் கண்மூடித்தனமாக அப்பாவி மக்களை சுட்டுக் கொன்றனர். இதன்போது 24 (சிறுவர்கள், பெண்கள் உட்பட) பேர் படுகொலை செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஒரு இடத்திலேயே அடக்கம் செய்யப்பட்டனர். இவர்களை நினைவுகூர்ந்து நினைவுத் தூபியொன்றை கட்டியெழுப்ப வேண்டுமென்று அப்பகுதி மக்கள் விரும்பி முயற்சித்த போதும், அதற்கும் சந்திரிக்கா அரசாங்கம் அனுமதித்திருக்கவில்லை. இப்போதும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் அந்த விருப்பத்துடன்தான் இருக்கின்றனர். இதுபோன்று ஏராளமான படுகொலைகள் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டுள்ளன. இவ்வாறான 1956 – 2001 தொடக்கம் இடம்பெற்ற 127 தமிழின படுகொலைச் சம்பவங்களை, வட கிழக்கு மனித உரிமைகள் செயலகம் (North East Secretariat on Human Rights) ஆவணப்படுத்தியுள்ளது. இவற்றையெல்லாம் வெறுமனே உள்நாட்டு பொறிமுறை ஒன்றின் மூலம் கையாள முடியுமா?

இலங்கையின் பங்குபற்றலோடு மட்டும் நிறுவப்படும் எந்தவொரு கட்டமைப்பின் கீழும் தமிழ் மக்களுக்கான நீதி கிடைக்குமென்பது கானல்நீரே. இது தொடர்பில் நாடு கடந்த அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரகுமாரன் தனது அறிக்கையில் எழுப்பியிருக்கும் கேள்விகள் மிகவும் கனதியானது. அதாவது, யுத்தத்தின் இறுதிக்காலங்களில் பொறுப்புள்ள பதவிகளை வகித்து வந்தவர்களால் உருவாக்கப்பட்டு, அவர்களால் மேற்பார்வை செய்யப்படும் நீதிப்பொறிமுறையானது எவ்வாறு நம்பகத்தன்மை வாய்ந்ததாக அமைய முடியும்? அத்தகைய பொறிமுறை எவ்வாறு அனைத்துலக சமூகத்தினரால் ஏற்றுக்கொள்ளப்பட முடியும்? இவ்வாறானதொரு கேள்வியை சம்பந்தன் எழுப்பியிருந்தால் அது இன்னும் கனதியாக இருந்திருக்கும்.

இலங்கையின் கட்டமைப்புக்கள் குற்றங்களால் நிரம்பிக் கிடக்கிறது என்பதே ஜ.நாவின் மதிப்பீடும் கூட. வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பு தொடர்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் பிரேரணை ஒன்றிற்கு இணையனுசரனை வழங்கியதன் மூலம், இலங்கை அரசாங்கமும் மேற்படி குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்கின்றது. ஆனால், தற்போது தங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கு மாறாக பேசப்படுகிறது. சிறிலங்காவின் இராஜதந்திர நடைமுறையை அவதானித்தால் ஒரு விடயம் வெள்ளிடைமலை. அதாவது, வாக்குறுதிகளை முந்திக்கொண்டு வழங்குவதும் பின்னர் அதனை சர்வசாதாரணமாக மீறுவதும் கொழும்பின் ஆளும் வர்க்கத்திற்கு கைவந்த கலை. விசாரணை பொறிமுறை தொடர்பான விடயத்திலும் இதுதான் அரங்கேறிவருகிறது. சர்வதேச அழுத்தங்களை எதிர்கொள்ளும் ஒரு உபாயமாக முன்னர் ஏற்றுக்கொண்ட, வெளிநாட்டு நீதிபதிகள் விவகாரத்தை, தற்போது உள்நாட்டு அரசியல் காரணங்களை முன்னிறுத்தி மறுதலிக்கின்றனர். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஜ.நா. மனித உரிமைகள் பேரவையின் அமர்விற்கு முன்பதாக தாங்கள் திட்டமிட்டவாறு பல விடயங்களை அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளது. அரசாங்கத்தின் நிகழ்ச்சிநிரல் மிகவும் தெளிவானது. ஆனால், அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்பில் சம்பந்தனின் நிலைப்பாடு என்ன என்பதற்கான பதில்தான் தெளிவற்ற ஒன்றாகத் தொடர்கிறது.

சம்பந்தனைப் பொறுத்தவரையில் அரசாங்கத்தை நம்பலாம், நாங்கள் எதிர்பார்ப்பதைக் காட்டிலும் அதிகம் கிடைக்கக் கூடுமென்றவாறான நம்பிக்கையுடன் இருக்கிறார். சம்பந்தன் இவ்வாறு நம்பிக்கையுடன் வலம்வந்துகொண்டிருக்கும் போதுதான் அரசாங்கம் தன்னுடைய நிலைப்பாடுகளை மிகவும் தெளிவாக வெளியிட்டுவருகிறது. அதனை நடைமுறைப்படுத்துவதற்குமான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. சம்பந்தன் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் என்னும் வகையில் அனைத்துமே அவருடைய சம்மதத்துடனேயே நிகழ்ந்துவருகின்றன. இந்த இடத்தில்தான் ஒரு பிரச்சினையை மிகவும் உன்னிப்பாக அவதானிக்க வேண்டியிருக்கிறது. சம்பந்தன் வெறும் எதிர்க்கட்சித் தலைவர் மட்டுமல்ல, மாறாக, அவர் தமிழ் மக்களின் தலைவராகவும் இருக்கின்றார். தமிழ் மக்களின் சார்பில் அனைத்து தீர்மானங்களையும் மேற்கொள்ளவல்ல அதிகாரத்தில் இருக்கிறார்.

இவ்வாறானதொரு சூழலின் கீழ், அரசாங்கம் மேற்கொள்ளும் அனைத்து முடிவுகளும் தமிழ் மக்களின் ஆதரவுடன்தான் மேற்கொள்ளப்படுகின்றன என்றவாறே சர்வதேசத்தால் புரிந்துகொள்ளப்படும். சம்பந்தன் தொடர்ச்சியாக கடைப்பிடித்துவரும் மௌனம் அவ்வாறானதொரு புரிதலுக்கே வழிவகுக்கின்றது. இதில் பிறிதொரு கேள்வியையும் கேட்கலாம். அதாவது உள்நாட்டு பொறிமுறை தொடர்பில் அரசாங்கம் மட்டும்தான் உறுதியாக இருக்கிறதா அல்லது எதிர்க்கட்சித் தலைவரான சம்பந்தனும் அப்படியானதொரு நிலைப்பாட்டில்தான் இருக்கிறாரா?

அரசாங்கம் ஏன் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பை தொடர்ச்சியாக மறுதலித்துவருகிறது? அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக போரிட்டு வெற்றிபெற்ற இலங்கை இராணுவத்தை தண்டிப்பதென்பது, சிங்கள மக்களின் மனச்சாட்சிக்கு ஒப்பான விடயமல்ல. ஒரு வேளை குற்றங்கள் நடந்திருப்பினும் கூட, அவற்றை கிளறுவதில் என்ன பயன்? எனவே, விடங்கள் அனைத்தையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம்தான் தாங்கள் விரும்புகின்ற ஒன்றை செய்யமுடியும். காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு காணாமல் போனோருக்கான சான்றிதழ்களை வழங்குதல். ஒருவேளை இறுதி யுத்தம் தொடர்பில் குற்றவாளிகளென்று எவரேனும் அடையாளம் காணப்பட்டால் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குதல். இதனை மனதில் கொண்டுதான் அரசாங்கம் சர்வதேசப் பங்களிப்புடன் கூடிய நீதிப்பொறிமுறையை நிராகரிக்கின்றது. சம்பந்தனைப் பொறுத்தவரையிலும் சம்பந்தனிடம் இது தொடர்பில் ஒரு திடமான நிலைப்பாடு இல்லை. ஆட்சி மாற்றத்திற்கு முன்னர் கூட குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவது தொடர்பான பேச்சுக்களின் போது சம்பந்தன் அது தொடர்பில் மிகவும் அலட்சியமான பதிலையே கொண்டிருந்தார். மஹிந்தவை, கோட்டபாயவை தண்டிப்பதால் தமிழ் மக்களுக்கு என்ன கிடைத்துவிடப் போகிறது? எனவே, இந்தப் பின்புலத்தில் சிந்தித்தால் அரசாங்கம் எதனை விரும்புகிறதோ அதுதான் சம்பந்தனின் விருப்பமாகவும் இருக்கலாம் போலும்.