படம் | THE JOURNAL

மீண்டெழுதல்

அழிக்கப்பட்ட நகரிலேயே புது அவதாரம் எடுத்து, தம் மக்களையும் போராளிகளையும் இழந்த இடத்திலேயே தம் இறைமையை மீட்பதற்கு சின் பையின் உறுதியெடுக்க, அதனைத் தொடர்ந்து, அதன் இராணுவக் கட்டமைப்பென கூறப்படுகின்ற அயர்லாந்து குடியரசு இராணுவம் – ஐ.ஆர்.ஏ (Irish Republican Army -IRA)  அயர்லாந்தின் சுதந்திரத்துக்கான கெரில்லா போராட்டத்தை ஆரம்பித்தது (அயர்லாந்து தொண்டர்கள் என்ற இராணுவ அமைப்பே 1916 தோல்விக்குப் பின்னர் ஜ.ஆர்.ஏ ஆக மாற்றம் பெற்றதென பரவலாகக் கருதப்படுகிறது.)

1919இல் ஆரம்பித்த சுதந்திரத்திற்கான போர் இருதரப்புக்கும் இடையில் ஏற்பட்ட போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து 1921இல் முடிவுக்கு வந்தது. அதன் பிரகாரம், ஆங்கிலேயருக்கும் அயர்லாந்துக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கத்தோலிக்கர்கள் வாழும் சுதந்திர அயர்லாந்து அரசாக ஒரு பகுதியும், புரொட்டஸ்தாந்தினர் வாழும் வட அயர்லாந்து இன்னொரு பகுதியாகவும் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, வட அயர்லாந்து ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பகுதியாக இணைக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை ஐ.ஆர்.ஏயின் ஒரு பகுதியினர் எதிர்த்தனர்.

இதனோடு ஆரம்பித்த ஐ.ஆர்.ஏயின் பிளவு, காலத்துக்குக் காலம் பல பிரிவுகளாக உருவெடுத்தது. அதேவேளை, அரசியல் இயக்கமான சின் பையினுக்குள்ளும் உள்ளக முரண்பாடுகள் தோன்றி சின் பையினுலிருந்து ஒரு தொகுதியினர் வெளியேறி Fianna Fáil என்ற பிறிதொரு அமைப்பை தோற்றுவித்து தேர்தல்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றனர். இவ்வாறு அரசியல் அமைப்பான சின் பையினுக்குள்ளும் ஆயுத அமைப்பான ஐ.ஆர்.ஏக்குள்ளும் பிளவுகளும் பிரிவுகளும் தோன்றின, தொடர்ந்தன.

எது எப்படி இருப்பினும், ஐக்கிய இராச்சியத்தின் சகல நேரடிக் கட்டுப்பாடுகளிலிருந்தும் விடுதலைபெற்று, இயேசுபிரான் மரித்து அவர் மீண்டும் உயிர்த்தெழுந்த காலப்பகுதியில், அதாவது 18 ஏப்ரல் 1949 அயர்லாந்து குடியரசாக பூரணசுதந்திரத்துடன் மிளிரத்தொடங்கியது.

அடிப்படைகளில் விட்டுக்கொடுப்பில்லை

இருப்பினும், அயர்லாந்துக்கு உரித்தான வட அயர்லாந்தின் ஆறு தொகுதிகள் ஐக்கிய இராச்சியத்தோடு இருந்தது அயர்லாந்தை உறுத்திக்கொண்டேயிருந்தது. முரண்பாடுகள் தொடர்ந்த போதும் சின் பையினும் ஜ.ஆர்.ஏயும் பிளவுபடாத ஐக்கிய அயர்லாந்தை வலியுறுத்தி வந்தன. இதன் நிமிர்த்தம், 1969 தொடக்கம் 1967 வரை ஐ.ஆர்.ஏயின் தாக்குதல்கள் தொடர்ந்தன. மறுபுறம், பிரித்தானியப் படைகளின் தாக்குதல்களும் தொடர்ந்தது.

பிரித்தானியப் படைகளின் பொதுமக்களுக்கு எதிரான தாக்குதல்கள் ஐ.ஆர்.ஏக்கான ஆதரவுத் தளத்தை பலப்படுத்தியதோடு, சுதந்திர அயர்லாந்தே தமக்கான தீர்வாக அமையும் என்ற சிந்தனையையும் தொடர்ந்து தூண்டியது. 1977இல் ஐ.ஆர்.ஏ. மீள ஒருங்கிணைக்கப்பட்டது. இவர்களுக்கு பலஸ்தீன விடுதலை இயக்கம் உட்பட வேறு பல வெளிநாட்டு உதவிகளும் கிடைத்தது. 1981இல் ஐ.ஆர்.ஏயின் ஏழு அங்கத்தவர்கள் உட்பட பத்துபேர் உண்ணா நோன்பிருந்து அயர்லாந்தின் சுதந்திரத்துக்காக உயிர்நீத்தார்கள்.

பிரித்தானியாவோ உண்ணாவிரதத்துக்கோ அயர்லாந்தின் உணர்வுகளுக்கோ மதிப்பளிக்கவில்லை. ஆனால், இது அயர்லாந்தின் போராடும் உணர்வின் இன்னுமொரு பரிமாணத்தைக் காட்டியதோடு, பிரித்தானியாவின் அடக்குமுறை நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்ந்தாலும் அயர்லாந்து அடிபணியப்போவதில்லை என்பதை எடுத்துக் காட்டியது.

சமகாலத்தில், சின் பையினும் ஐக்கிய அயர்லாந்து உருவாக்கத்திற்கான அரசியல் முன்னெடுப்புகளை மேற்கொண்டுவந்தது. உண்ணாவிரதத்திற்குப் பிற்பாடு, ஆயுதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்து, அயர்லாந்தின் சுதந்திரப் போராட்டத்தை அரசியல் ஜனநாயகப்படுத்துவதற்கு முயற்சித்தார்கள் சின் பையினின் முக்கிய தலைவர்களான ஜெரி அடம்சும் (Gerry Adams) மார்ட்டின் மக்கின்னசும் (Martin McGuiness).

இதற்குப் பிற்பாடும் பல்வேறு முரண்பாடுகள் வெவ்வேறு பக்கங்களிலிருந்த எழுந்தன. ஆயினும், இறுதியில் 1998இல் பெரியவெள்ளி (Good Friday Agreement) அல்லது பெல்பாஸ்ட் உடன்படிக்கை (Belfast Agreement) கைச்சாத்திடப்பட்டது. இது அதிகாரப் பரவலாக்கலுக்கும், வட அயர்லாந்து தொடந்தும் ஐக்கிய இராச்சியத்தின் அங்கமாக இருக்க ஒப்புதல் அளித்தது. 28 ஜூலை 2005இல் தமது போரியல் நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவருவதாக ஐ.ஆர்.ஏ அறிவித்தது.

அரசியல் போராட்டம், ஆயுதப் போராட்டம், போர் நிறுத்த உடன்பாடுகள், சமாதானப் பேச்சுவார்த்தைகள், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என்று நீடித்த போதும் பிரித்தானியாவின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் வட அயர்லாந்து, அயர்லாந்து குடியரசுடன் இணைக்கப்பட்டு ஐக்கிய அயர்லாந்து உருவாக வேண்டும் என்ற இலட்சியத்தில் சின் பையின் தொடந்தும் உறுதியாக இருந்து வருகிறது. அதன் வெளிப்பாடே, ஐக்கிய அயர்லாந்தின் உருவாக்கத்திற்கான குரலை ஐக்கிய இராச்சியத்தின் ஜூன் 23 வாக்கெடுப்புகள் வெளிவந்த பின்னும் உரத்து கூறியுள்ளது சின் பையினின் தலைமை.

இதேவேளை, வட அயர்லாந்தின் கணிசமான மக்களும் அயர்லாந்து குடியரசுடன் இணைவதற்கான தமது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளதோடு, அயர்லாந்து குடியரசின் கடவுச்சீட்டுக்களுக்கும் விண்ணப்பிக்கத் தொடங்கியுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் வெளியேறுவதென்ற பொதுவாக்கெடுப்பு முடிவுகள் வட அயர்லாந்து மக்களின் முடிவுகளை துரிதப்படுத்தியிருப்பினும், வட அயர்லாந்து மக்கள் மத்தியில் அயர்லாந்து குடியரசுடன் தாம் இணைய வேண்டும் என்ற மனமாற்றம் இதற்கு முன்னரே துளிர்விடத் தொடங்கிவிட்டது.

இதற்கு அயர்லாந்தின் அடையாளத்தை நிலைநிறுத்துவதோடு, பிரித்தானியாவின் சட்ட அதிகாரத்தை முடிவுக்கு கொண்டுவர முயன்ற அயர்லாந்தின் அரசியல் பீடங்களுக்கும், அயர்லாந்தின் சுதந்திரத்தை, அயர்லாந்துக்கான சர்வதேச அங்கீகாரத்தை உறுதிப்படுத்துவதில் முதன்மை பாத்திரம் வகித்த, புலம்பெயர்ந்து உலகின் பல பாகங்களிலும் வாழும் அயர்லாந்து மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகளுக்கும் இடையில் நிலவிய வினைத்திறன் மிக்க கூட்டுச் செயற்பாடுகள் வழிவகுத்தன.

புலம்பெயர் அயர்லாந்து மக்கள்

அயர்லாந்தில் இடம்பெற்ற சுதந்திரத்துக்கான போர் பல மில்லியன் அயர்லாந்து மக்களை உலகெங்கும் புலம்பெயர வைத்தது. அயர்லாந்து குடியரசில் வாழும் அயர்லாந்து மக்களின் எண்ணிக்கையோ சுமார் 4.6 மில்லியன். ஆனால், அயர்லாந்தை அடியாகக் கொண்ட சுமார் 70 மில்லியனுக்கு மேற்பட்ட அயர்லாந்து மக்கள் உலகெங்கும் பரந்து வாழ்கிறார்கள். புலம்பெயர்ந்த அயர்லாந்து மக்கள், உலகில் பலம் வாய்ந்த புலம்பெயர்ந்த சமூகக் கட்டமைப்புகளில் முக்கியமான தரப்பாகும். அவர்கள் தனித்து உணர்வுரீதியான செயற்பாடுகளுடன் மட்டும் தமது நடவடிக்கைகளை மட்டுப்படுத்தவில்லை. மாறாக, ஐக்கிய அயர்லாந்தின் சுதந்திரம் தொடங்கி ஐக்கிய அயர்லாந்தின் உருவாக்கம் வரை சொந்த நிகழ்ச்சி நிரலில் நேர்த்தியான நிர்வாக முகாமைத்துவத்தோடு தமக்குரிய செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.

இவர்களுடைய செயற்திறன் மிக்க நடவடிக்கையின் விளைவால், அமெரிக்காவின் ஜனாதிபதியாக பில் கிளின்டன் இருந்தபோது, சின் பையினின் முக்கிய தலைவரான ஜெரி அடம்ஸ் அமெரிக்காவில் நுழைவதற்கான அனுமதி வழங்கப்பட்டது. ஐ.ஆர்.ஏயை பயங்கரவாத அமைப்பாக குறிப்பிட்டு அதனோடு ஜெரி அடம்ஸ் தொடர்புபடுத்தப்பட்டதோடு, ஜெரி அடம்ஸ் அமெரிக்காவுக்குள் நுழைவதை அமெரிக்கா இராஜாங்க திணைக்களம் முழுமையாக எதிர்த்தது. ஆயினும், இறுதியில் புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வாழும் அயர்லாந்து மக்கள், அமெரிக்காவின் தீர்மானம் மேற்கொள்ளும் தரப்புகளை இலக்குவைத்து மேற்கொண்ட நேர்த்தியான பரப்புரைகளும் செயற்திட்டங்களும் ஜெரி அடம்ஸ் அமெரிக்காவுக்குள் நுழைவதை உறுதிப்படுத்தியது.

நாற்பத்தெட்டு மணித்தியால அனுமதிதான் கிடைத்ததாயினும், இது சர்வதேச ரீதியில் சீன் பையின் தனிமைப்படுத்தப்பட்டதை முறியடிக்க பக்கத்துணையாக மாறியது. உலகெங்கும் பரந்து வாழ்ந்தாலும் தமது அடி அயர்லாந்து என்ற அடையாளத்துக்கு இன்றும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் அயர்லாந்தை அடியாகக் கொண்டவர்கள்.

1916 எழுச்சி தோல்வியில் முடிந்த போதும் அது அயர்லாந்தின் விடுதலைக்கு வித்தாக அமைந்தது. ஆதலாலேயே, அடக்குமுறைக்கு அடிபணிய மறுத்த அயர்லாந்தின் பதினாறு போராளிகள் படுகொலைசெய்யப்பட்ட நினைவேந்தல் நிகழ்வுகள் நூறாவது ஆண்டிலும் அயர்லாந்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் உணர்வுபூர்வமாகவும் எழுச்சிபூர்வமாகவும் இடம்பெற்றது.

சமகாலப்பகுதியில், அயர்லாந்து புலம்பெயர் சமூகங்கள் வாழுகின்ற பல்வேறு நாடுகளிலும் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது. இந்த நினைவேந்தல் நிகழ்வுகள், சுதந்திரப் போராட்டத்தையும் அதற்காக வீழ்ந்தவர்களையும் கௌரவிப்பதாக அமைந்தது. கூட்டு நினைவுகூரல் என்பது அயர்லாந்தின் வரலாற்றோடு பின்னிப்பிணைந்ததாக இருந்துவருகிறது. அது, அயர்லாந்தின் எழுச்சியிலும் அயர்லாந்தின் அடையாளத்தை கட்டமைப்பதிலும் பங்கு வகிக்கிறது.

ஈழத்தமிழர்களுடனான தொடர்பு

மே 2009இல் ஈழத்தமிழர்கள் மீதான இனஅழிப்பு இடம்பெற்ற பின், அவர்களுக்கு மரியாதை செலுத்தும் முகமாகவும், அவர்களின் ஆத்மா சாந்தியடையவும் வேண்டி அயர்லாந்திலுள்ள கணிசமான கத்தோலிக்க தேவாலயங்களில் மணியோசையைத் தொடர்ந்து அமைதி வணக்கமும் செலுத்தப்பட்டது.

ஜனவரி 2010இல் டப்ளினில் கூடிய மக்கள் தீர்ப்பாயம் இலங்கைத் தீவில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு போர்க்குற்றம் மற்றும் மானுட குலத்திற்கு எதிரான குற்றங்களை புரிந்துள்ளது, இனஅழிப்பு தொடர்பாக மேலதிக விசாரணைகள் தேவையென அறிவித்தது. இதன் நிமிர்த்தமே, டிசம்பர் 2013இல் ஜேர்மனியின் பிறேமன் நகரில் கூடிய மக்கள் தீர்ப்பாயம் ஈழத்தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு இனஅழிப்பை மேற்கொண்டுள்ளது என்ற தீர்ப்பை வழங்கியது.

அழிவுகளுக்கு மத்தியிலும் சுதந்திரத்துக்கான பயணத்தைத் தொடர்ந்து இலட்சியத்தை அடைந்த தேசம் எமக்கான பாடத்தை மட்டும் சொல்லிநிற்கவில்லை. மாறாக, ஈழத்தமிழர்களின் நீதிக்காக சில பங்களிப்புகளையும் வழங்கியுள்ளது.

பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழர் தாயக அரசியல் தரப்புகளும், தமிழர் தாயகத்தை மையப்படுத்திய புலம்பெயர் தமிழ் அமைப்புகளும், நீதி மறுப்பும், தமிழின அடையாள அழிப்பு மிகநுட்பமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சூழலில், தமிழர் தேச நலனை அடைவதற்காக என்ன செய்யப் போகிறார்கள்? எப்படிச் செய்யப் போகிறார்கள்?

மாறிவரும் உலக ஒழுங்கையும், சுதந்திரத்திற்காகப் போராடிய, போராடிக்கொண்டிருக்கும் அனுபவங்களையும் வரலாறுகளையும் மனதிற் கொண்டு, தமிழர் தேச அணுகுமுறைகளிலும் உபாயங்களிலும் மாற்றம் ஏற்படாதவிடத்து, தமிழர்களின் இலட்சியப் பயணம் மேலும் பல நெருக்கடிகளை எதிர்கொள்வதோடு, இலக்கிலிருந்து இன்னும் தூர விலகிவிடும்.

நிர்மானுசன் பாலசுந்தரம்