படம் | THE INDEPENDENT
ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடர்ந்தும் இணைந்திருப்பதா அல்லது பிரிந்து செல்வதா என்பதை தீர்மானிப்பதற்காக, பிரித்தானிய மக்களிடையே நடாத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில், 51.9% பிரித்தானியர்கள் பிரிந்து செல்வதென முடிவெடுத்துள்ளார்கள். இந்த முடிவானது, பிரித்தானியாவில் மட்டும் தாக்கத்தை செலுத்தப்போவதில்லை. மாறாக, சமகால உலக ஒழுங்கை மாற்றியமைக்கப்போகிறது. இதில் குறிப்பாக அரசியல், பொருளாதாரம் சார்ந்த விடயங்கள் பெரும்பங்கினை வகிக்கப் போகின்றன.
பொது வாக்கெடுப்பு முடிவுகள் வெளிவந்து அடுத்த சில மணித்தியாலங்களுக்குள், உலகளாவிய ரீதியில் சீனா தவிர்ந்த ஏனைய நாடுகளின் பங்குச்சந்தை ஆட்டம் காணத்தொடங்கியது. சீனாவின் சந்தை கூட ஜூன் 24ஆம் திகதி 1% வீழ்ந்தது. ஆயினும், ஜூன் 27ஆம் திகதி மீண்டெழுந்துவிட்டது. பிரித்தானிய பவுண்சின் பெறுமதி 1985ஆம் ஆண்டிற்குப் பிறகு முதற்தடவையாக பெரும்வீழ்ச்சி கண்டது.
மறுபுறம், ஐரோப்பிய ஒன்றியத்தினதும் பிரித்தானியாவினதும் எதிர்காலம் கேள்விக்குள்ளாகியுள்ளது. அதேவேளை, ஸ்கொட்லாந்து தேசம் தாம் சுதந்திர நாடாக மலர்வதற்கான செயற்திட்டங்களை ஆரம்பித்துள்ளது. இருப்பினும், எதனையும் உறுதிபடக் கூறக்கூடியதாக இன்றைய சூழல் இன்னும் கனியவில்லை. ஆயினும், உலக அரசியலில் வல்லன வாழும், பலம் நிர்ணயிக்கும் என்பது மீண்டும் ஒரு தடவை நிரூபிக்கப்படப் போகிறது.
ஒரு காலத்தில் உலகின் பெரும்பாலான பகுதிகளை ஆண்ட பிரித்தானியா இன்று தன்னை தக்கவைத்துக்கொள்வதற்கான பெரும் போராட்டத்தை நடாத்த வேண்டியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு நாம் வெளியேறினால், ஐரோப்பிய ஒன்றியம் பலவீனம் அடையும் என எண்ணிய, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்து செல்ல வேண்டும் என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்த பிரித்தானியா அரசியல்வாதிகளுக்கு, இன்று ஐக்கிய இராச்சியம் பிளவுபடுவதை தடுக்க முடியுமா என்ற நிலை தோன்றியுள்ளது.
ஏனெனில், ஐக்கிய இராச்சியம் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்றே 62% ஸ்கொட்லாந்து மக்களும் மற்றும் 56% வட அயர்லாந்து மக்களும் வாக்களித்திருந்தனர். ஆயினும், ஐக்கிய இராச்சியத்தின் ஒட்டுமொத்த முடிவென்பது ஸ்கொட்லாந்து மற்றும் வட அயர்லாந்து மக்களின் அரசியல் விருப்புக்கு இசைவாக வெளிவரவில்லை. இதனால், தமது தேசங்களின் எதிர்காலத்தை தாமே தீர்மானிக்க வேண்டும் என குறித்த இரண்டு தேசங்களும் முடிவெடுத்துள்ளன. இதில், ஸ்கொட்லாந்து பெரும் முனைப்போடு உடனடியாகவே செயற்படவும் தொடங்கிவிட்டது.
சுதந்திர நாடாக திகழ்ந்த ஸ்கொட்லாந்து 1707இல் ஐக்கிய இராச்சியத்துடன் இணைக்கப்பட்டது. ஆயினும், அன்றிலிந்தே தாம் தொடந்தும் ஒரு தனிநாடகவே இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஸ்கொட்லாந்து மக்களின் ஒரு சாராரிடம் காணப்பட்டது. தமது தேசத்தின் சுதந்திரத்தை வலியுறுத்தி காலத்திற்கு காலம் பல்வேறு போராட்டங்களை ஸ்கொட்லாந்து மக்கள் முன்னெடுத்தார்கள். இதற்கு ஸ்கொட்லாந்தின் தேசியக் கட்சி (Scottish National Party – SNP) தலைமை வகித்தது. இருப்பினும், சுதந்திரத்திற்கான இவர்களின் போராட்டங்கள் முழுமையாக வெற்றி பெறவில்லை. ஆனால், அவர்களுடைய ஒவ்வொரு போராட்டமும், தொடர்ச்சியான போராட்டங்களுக்கான அடித்தளத்தையும், எதிர்கால வெற்றிக்கான அடிப்படைகளையும் உருவாக்கியது.
பிரித்தானியாவிலிருந்து ஸ்கொட்லாந்து பிரிந்து செல்வதா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்கான முதலாவது பொது வாக்கெடுப்பு செப்டெம்பர் 18, 2014இல் இடம்பெற்றது. இதில் பிரிந்து செல்லவேண்டும் என 44.7% மக்களும், பிரிந்து செல்லக்கூடாது என 55.3% மக்களும் வாக்களித்தனர்.
பிரிந்து சென்று தனியரசு அமைப்பதற்கு ஆதரவான “ஆம்” என்ற வாக்குகளே வெல்லும் என இறுதி நாள் வரை எதிர்பார்க்கப்பட்ட போதும், முடிவு எதிர்மாறானதாகவே இருந்தது.
பிரிந்து சென்றால் ஸ்கொட்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்க முடியாது என்ற அச்சுறுத்தல் மற்றும் தம்மை நிலைநிறுத்துவதற்கான பொருளாதார வளம் ஸ்கொட்லாந்திடம் இல்லையென்ற பிரிந்து செல்வதற்கு எதிரானவர்களின் பிரச்சாரம் ஒரு புறமும், ஸ்கொட்லாந்து பிரித்தானியாவுடன் இணைந்திருந்தால் பொருளாதார ரீதியான பெரும் ஆதரவு வழங்கப்படும் என பிரித்தானியா வழங்கிய வாக்குறுதி மறுபுறமும் ஸ்கொட்லாந்து பிரிந்து செல்வதற்கு எதிரான இல்லையென்ற வாக்குகள் வெற்றிபெற உதவியது.
பிரித்தானியாவிலிருந்து பிரிந்து சென்றால், ஸ்கொட்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்துவம் வகிக்க முடியாது என அச்சுறுத்திய பிரித்தானிய, இன்று ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதற்கு முடிவெடுத்துள்ளது. ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து நீடிப்பதற்கே ஸ்கொட்லாந்து வாக்களித்தது. மூலோபாயத்துடன் முன்னெடுக்கப்பட்ட இந்த நகர்வின் ஊடாக, எதனை காரணம் காட்டி ஸ்கொட்லாந்தின் சுதந்திரம் சுமார் 21 மாதங்களுக்கு முன்னர் தடுக்கப்பட்டதோ, இன்று அதனையே காரணமாகக் காட்டி இறைமையும் சுதந்திரமும் உள்ள தேசமாக மலர்வதற்கு ஸ்கொட்லாந்து தன்னை தயார்படுத்துகிறது.
செப்டெம்பர் 2014இல் இடம்பெற்ற பொதுசன வாக்கெடுப்பு முடிவுகள் வெளிவந்த பின், இந்த சந்ததி மட்டுமல்ல, இதற்கு அடுத்த சந்ததிகூட ஸ்கொட்லாந்தின் சுதந்திரத்திற்கான கனவை ஒத்திவைக்கும் எனக் கூறினார்கள் ஸ்கொட்லாந்தின் சுதந்திரத்துக்கு எதிரான தரப்புகள். ஆனால், ஸ்கொட்லாந்தின் சுதந்திரத்திற்கான இரண்டாவது பொதுவாக்கெடுப்புக்கான தயார்ப்படுத்தல்கள் இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதற்குள் மீண்டும் துளிர்விடத் தொடங்கியுள்ளது.
பொதுசன வாக்கெடுப்பில் ஏற்பட்ட தோல்வியை ஏற்றுக்கொள்வதாக கூறிய ஸ்கொட்லாந்தின் தேசியக் கட்சியின் அன்றைய தலைவரான அலெக்ஸ் சல்மொன்ட், ஸ்கொட்லாந்து மக்களின் ஜனநாயக ஆணைக்கு மதிப்பளிப்பதாகத் தெரிவித்ததாடு, ஸ்கொட்லாந்துக்கு சுதந்திரம் இந்தக் கட்டத்தில் தேவையில்லை என பெரும்பாலானவர்கள் முடிவெடுத்திருக்கிறார்கள். ஆயினும், 1.6 மில்லியன் மக்கள் சுதந்திரம் வேண்டும் என்ற தங்கள் அபிலாசையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். எங்கள் கனவுக்கு எப்போதும் மரணமில்லை என்ற தொனிப்பட்ட கருத்தையும் தெளிவாகவும் உறுதியாகவும் கூறிய அலெக்ஸ் சல்மொன்ட், அரசியலிருந்து விலகி இருந்த பல ஸ்கொட்லாந்து மக்களை இன்று அரசியல்மயப்படுத்தி இருக்கிறோம் எனவும் தெரிவித்தார். ஸ்கொட்லாந்தின் சுதந்திரத்துக்கான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்துவரும் அலெக்ஸ் சல்மொன்ட் பொதுவாக்கெடுப்பு வெற்றிபெற வேண்டும் என்பதற்காக 30 மாதங்கள் தொடர்ச்சியாக பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தவர். பொதுசன வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து தலைமைப் பதவியிலிருந்து விலகினார்.
அதன்பின்னர் ஸ்கொட்லாந்தின் இன்றைய முதன்மை அமைச்சராக இருக்கின்ற நிக்கொல ஸ்ரேயென் ஸ்கொட்லாந்தின் தேசியக் கட்சிக்கு தலைமையேற்றார். அலெக்ஸ் சல்மொன்ட் அவருக்கு ஆதரவாக இருந்து வந்ததோடு ஸ்கொட்லாந்தின் சுதந்திரத்தை மனதிலிருத்தி தொடர்ந்தும் செயற்பட்டுவந்தார். அதன் வெளிப்பாடே ஸ்கொட்லாந்து தொடர்ந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிப்பதை உறுதிசெய்வதற்காக தற்போது ஐரோப்பிய ஒன்றியத்துடனான இராஜதந்திர செயற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிக்கொல ஸ்ரேயென், ஸ்கொட்லாந்தின் இரண்டாவது பொது வாக்கெடுப்பு தொடர்பாக கருத்துருவாக்கம் செய்வதற்கும் ஊடகங்களை கையாள்வதற்குமான பொறுப்பை அலெக்ஸ் சல்மொன்ட்டிடம் கையளித்துள்ளார்.
நாற்பத்தைந்து வயதான நிக்கொல ஸ்ரேயென் மூத்த அரசியல்வாதிகள் பலரையம் வியப்பில் ஆழ்த்தக்கூடிய வகையில் தீர்மானங்களை மேற்கொள்பவர். எந்தவிடயத்தையும் ஆழமாக கூர்ந்து கவனித்து நகர்வுகளை மேற்கொள்பவர். 2010இல் இடம்பெற்ற தேர்தலில் ஆறு ஆசனங்களை மட்டுமே பெற்ற ஸ்கொட்லாந்தின் தேசியக் கட்சி 2015 இடம்பெற்ற தேர்தலில் 59 ஆசனங்களில் 56 ஆசனங்களைப் பெற்று பெருவெற்றியீட்டுவதற்கு காரணமாகத் திகழ்ந்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடர்ந்தும் இணைந்திருப்பதா அல்லது பிரிந்து செல்வதா என்பதை தீர்மானிப்பதற்கான பொதுவாக்கெடுப்புக்கு விவகாரம் உரிய கவனத்தைப் பெறத்தொடங்கி நிறைவடையும் வரை பிரித்தானிய மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் குழப்ப நிலையில் இருக்க தெளிவான சிந்தனையோடு செயற்பட்டவர் நிக்கொல ஸ்ரேயென். அதன்காரணமாகவே, பொதுவாக்கெடுப்பு முடிவுகள் வெளிவந்த அடுத்த சில மணித்தியாலங்களிலேயே தனது இலக்கை நோக்கிய பயணத்தில் விரைவாகவும் விவேகமாகவும் செயற்படத் தொடங்கினார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் ஸ்கொட்லாந்து தொடர்ந்தும் அங்கம் வகிப்பதை உறுதிசெய்வதோடு ஸ்கொட்லாந்தின் சுதந்திரத்தையும் இறமையையும் வென்றெடுப்பதற்கான தயார்ப்படுத்தல்களை விவேகமாக முன்னெடுக்கிறார். இவை இரண்டும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை. இதில் ஒன்று கைகூடாமல் போனாலும் தனது இலக்கு முழுமையான நலனை அடையாது என்பதை புரிந்து அதற்கேற்றவாறு காய்களை நகர்த்துகிறார்.
தேச விடுதலைக்கான பயணம் நெருக்கடிகள் நிறைந்த நீண்ட பயணம் என்பதை நிக்கொல ஸ்ரேயென் சந்திக்கும் சவால்கள் எடுத்துக் காட்டுகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் ஸ்பெயின், ஸ்கொட்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பதை எதிர்க்கிறது. ஸ்கொட்லாந்து கற்றலோனியாவினதும் பாஸ்க் இனங்களினதும் சுதந்திரத்துக்கான முன்னுதாரணமாக மாறிவிடக்கூடாது என்பதற்காக, ஸ்கொட்லாந்தின் முனைப்புகளை முளையிலேயே கிள்ளியெறிய முயல்கிறது ஸ்பெயின். கொசொவோ சுதந்திரத்தை அங்கீகரிக்காத ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளில் ஸ்பெயின் முக்கியத்துவம் மிக்க நாடாகும்.
அத்துடன், ஐரோப்பிய ஒன்றியத்தில் பலம்மிக்க நாடான பிரான்ஸும் எதிர்ப்புத் தெரிவிக்கிறது. ஸ்கொட்லாந்து பிரித்தானியாவின் அங்கமாக உள்ளவரை ஐரோப்பிய ஒன்றியத்தில் நிலைத்திருக்க முடியாது என்ற பிரான்ஸின் நிலைப்பாடு, ஸ்கொட்லாந்து சுதந்திரமடைந்தால் மாறக்கூடும். ஆனால், இது ஒரு நீண்ட பயணம். மறுபுறம் ஸ்கொட்லாந்தின் சுதந்திரத்திற்கான பயணத்தை விரைவுபடுத்தும்.
இதேவேளை, ஸ்கொட்லாந்து பிரிந்து செல்வதா இல்லையா என்பதற்கான இரண்டாவது பொது வாக்கெடுப்பு நடாத்தப்பட்டால், பிரிந்து செல்வதற்கு ஆதரவான தரப்பு வெற்றியடையும் என்பதற்கான சாத்தியப்பாடு அதிகமாகக் காணப்படுவதால், இரண்டாவது பொது வாக்கெடுப்பு நடாத்தப்படுவதற்கான அனுமதியை பிரித்தானிய நாடாளுமன்றம் இலகுவில் வழங்காது.
ஆயினும், இத்தனை சவால்களையும் அறியாதவர் அல்ல நிக்கொல ஸ்ரேயென். இருப்பினும், ஸ்கொட்லாந்தின் சுதந்திரத்தில் அவர்கொண்டுள்ள பற்றுறுதி எந்தச் சவால்களையும் எதிர்கொள்ளும் மனோதிடத்தை அவருக்கு வழங்கியுள்ளது. பதினாறு வயதில் ஸ்கொட்லாந்தின் தேசியக் கட்சியில் இணைந்த நிக்கொல ஸ்ரேயென் மூன்று முறை தேர்தலில் தொடர்ச்சியாக தோல்வியுற்றார். ஆயினும், ஸ்கொட்லாந்தின் விடுதலை மீதான விருப்பு தோல்விகளை தாண்டியும் அவரை அரசியலில் நிலைத்திருக்க வைத்தது. அவரது சிறந்த தலைமைத்துவமும் நேர்த்தியான திட்டமிடலும் அவர் தலைமை வகிக்கும் மக்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்திசெய்ய வேண்டும் என்ற அவரது திடசங்கற்பமும் ஸ்கொட்லாந்தின் சுதந்திரத்திற்கு மீண்டுமொரு தடவை வழியேற்படுத்தியுள்ளது.
தமிழ் மக்களுக்கான தீர்வை மனதிற்கொண்டு ஸ்கொட்லாந்தின் அரசியல் தொடர்பாக கரிசனை செலுத்துகின்ற தமிழ்த் தரப்புகளும், சரியான தலைமைத்துவம் இன்றி தள்ளாடுகின்ற ஈழத்தமிழர்களும் ஸ்கொட்லாந்தின் தேசியக் கட்சியிலிருந்தும் அதன் தலைமைத்துவத்திலிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களை கவனத்திற்கொள்வார்களா?
நிர்மானுசன் பாலசுந்தரம்