படம் | AFP PHOTO/ Ishara Kodikara, HAVEERU

‘திருமலை’ என்று நினைக்கிறேன், அந்தத் திரைப்படத்தில் விவேக் ஒரு கேள்வி கேட்பார் ஒருவரிடம், அந்தக் கேள்வி கிட்டத்தட்ட பலவருடங்களாக அரசாங்க தொலைக்காட்சி நிலையமான பொதிகை போன்ற சனல்களில் இடைவேளைகளின் போது பரவலாக உச்சரிக்கப்பட்டது. “புள்ளிராஜாவிற்கு எயிட்ஸ் வருமா?” அதாவது, பாலியல் தொழிலாளர்களிடம் செல்லும் ஆண்கள் ஆணுறை அணியாவிட்டால் எய்ட்ஸ் வரும் என்பதை வலியுறுத்தி விளம்பரமொன்றை, எயிட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் அறிமுகம் செய்ய அதற்கு எதிராக மகளிர் அமைப்புகள் போராட்டம் நடத்தி அந்த விளம்பர முறைமை நீக்கப்பட்டது. காரணம் எயிட்ஸ் பரவ பெண்கள் மட்டுமா காரணம், ஆண்கள் இல்லையா என்பதுதான். எயிட்ஸ் என்பது பலர் அறிந்த வகையில் சினிமாவில் நகைச்சுவைக்காட்சிக்குப் பயன்படுத்தப்படும் சொல்லாகியது.

“எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டன்”, இதுவும் எயிட்ஸ் என்ற கருத்தை சார்ந்த நகைச்சுவை வசனம்தான். இந்த வசனத்தில் மக்கள் எயிட்ஸ் பற்றி புரிந்துகொண்ட விடயம் எயிட்ஸ் நோய் வந்தவர், உடல் ரீதியான பாதிப்பை எதிர்நோக்குவார் என்பதுதான். அதுவே மக்களின் விழிப்புணர்வாக அந்த காலங்களில் இருந்தது. கேள்வி இங்கேதான் ஆரம்பிக்கிறது, SIV, HIV இது என்ன? இங்கு முதல் ஆங்கில எழுத்தைக்கொண்ட இவற்றை வேறுபடுத்தினாலும் இரண்டும் ஏதோவொரு புள்ளியில் சந்தித்ததற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. SIV (Simian Immunodeficiency Virus) அதாவது, சிம்பன்சி குரங்கிலிருந்து பரவும் ஒரு வகை வைரசாக இது ஆரம்ப காலத்தில் அறியப்பட்டது. சிம்பன்ஸி எனப்படும் மனிதக்குரங்கினால் (apesஇல் இருந்து) பரவியிருக்கலாம் என்பது ஒரு பொது அபிப்பிராயமாக கருதப்பட்டது. பின்னர் அந்தக் கருதுகோளுக்கு எதிர்வினையாக அது கொரில்லாவிலிருந்து பரவியிருக்கலாம் என முன்வைக்கப்பட்டது. கொரில்லாக்கள் பூரணமாக தரைவாழ்க்கைக்கு உரிய மனிதக்குரங்குகள். அவை தரையில் நடந்து நிமிர்ந்த நிலையில் சிறு தூரங்களுக்கு செல்லக்கூடியன. பொதுவாக எயிட்ஸ் நோய்க்காரணி வைரஸ்க்கள் பழைய உலகக்குரங்குகள் அதாவது, ஆபிரிக்க ஆசியப்பகுதியில் வசிக்கும் குரங்கினம் மற்றும் hominoidsகளிலும் (மனிதன், மனிதக்குரங்குகளிலும்) இலகுவாக பரவக்கூடியன. ஆகவேதான் எயிட்ஸ் நோயானது ஆபிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் அதிகளவு இனங்காணப்படும் ஒரு நிலை காணப்படுகிறது.

Acquired immune deficiency syndrome இந்தப் பதத்தை கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? அதன் ஒவ்வொரு முதலாவது ஆங்கில எழுத்தையும் பார்த்தால் விளங்கிக்கொள்ளலாம் AIDS அது ஒரு பரீட்சையமான வார்த்தை. அது எப்படியானதொரு வார்த்தை என்றால் தீண்டத்தகாத அளவு கெட்டவார்த்தை. நோயெதிர்ப்பு பற்றியும், வைரஸ்கள் பற்றியும் தெரிந்து கொள்வது எயிட்ஸ் பற்றிய ஒரு சிறிய விளக்கத்தை எமக்கு தரும். சாதாரணமாகவே படித்தவர்களை தவிர சாதாரண மக்களிடம் இந்த நோய் பற்றிய விழிப்புணர்வு இருக்காது. ஆரம்பத்தில் அமெரிக்காவில் இந்த நோய் இருப்பது உறுதி செய்யப்பட்ட போது ஆப்பிரிக்க நாடுகளில் ஆயிரக்கணக்கானோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கவிடயம். இது இலகுவாக ஆரம்பத்தில் அடையாளம் காணப்பட்டது, அமெரிக்காவில் உள்ள சில ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள் மூலம். அடுத்து இந்தியாவில் பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் இனங்காணப்பட்டார்கள். பரவலாக சாதாரண கிராமத்திலும், அபிவிருத்தி அடையாத நெருக்க குடியிருப்பு வாசிகளிடமும் இனங்காணப்பட்டது. இலங்கையைப் பொறுத்தவரை HIV தாக்கம் ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தாலும் கிட்டத்தட்ட எயிட்ஸ் உடன் வாழ்வோர் எண்ணிக்கை 4000 ஐ அண்மித்ததாக காணப்படுகின்றது. இதற்குக் காரணம் ஓரினச்சேர்க்கை மற்றும் பாலியல் தொழில் போன்றவையாகும்.

எயிட்ஸ் பற்றி கடந்த ஆண்டுகளில் தமிழில் வந்த திரைப்படத்தில் மிருகம் என்ற படத்தை பாரத்திருப்பீர்கள். ஆனால், அதில் சித்தரிக்கப்பட்டது போல்தான் ஒரு எயிட்ஸ் நோயாளி இனங்காணப்படுகிறாரா? என்றால் இல்லை. பஸ்ஸில் தெருவில், மிகவும் உயர் ரக இடங்களில் கூட என்ற வேறுபாடு இல்லாமல் ஒரு எயிட்ஸ் நோயாளியை கடந்துகொண்டிருக்கிறோம். ஆகவே, பாதுகாப்பான உடலுறவு என்பது நிச்சயமாக அறியப்படவேண்டியது. எயிட்ஸ் நோயாளியொருவர் எலும்பும் தோலுமாகத்தான் காட்சி தரவேண்டும் என்ற அவசியம் இல்லை. மனித உடலின் குருதியை மையமாகக் கொண்டு உருவாகும் ஒரு பால்வினை நோய்தான் எயிட்ஸ் HIV (Human immunodeficiency virus). பொதுவாக உயிருள்ள ஒரு உடலை எடுத்து அதனை விருந்து வழங்கியாக கொண்டு தமது அனுசேபத்தொழிற்பாடுகளை ஆக்கும் ஒரு நுண்ணங்கி வகையே இந்த வைரஸ்கள். அதாவது, குருதியில் காணப்படும் வெண்குழியங்கள் பிறபொருள் எதிரிகளாக தொழிற்பட்டு உடலினுள் சேரும் நோயாக்கிகளை அழிக்கக்கூடியன. ஆனால், இந்த HIV வைரசானது முதலில் அழிப்பது இந்த வெண்குழியங்களையே. கிருமித்தொற்று அதிகரிக்கும் அதேவேளை நோயெதிர்ப்பு தன்மையும் முற்றுமுழுதாக இல்லாமல் போகும். ஆகவே, ஒரு சாதாரண சிறிய நோய் கூட மரணத்தை ஏற்படுத்தி விடுவதையே எய்ட்ஸ் செய்கிறது. ஆனால், நோய் எதுவும் இல்லாத ஒரு எயிட்ஸ் நோயாளி எப்போதும் சாதாரண மனிதர் போல் காட்சியளிப்பார். எயிட்ஸ் நோயின் இறுதி நிலையே அதாவது, கிருமித்தொற்றின் அதிகரிப்பே அந்த எலும்பும் தோலுமாக காட்சியளிக்கும் நிலை.

எயிட்ஸ் பாதுகாப்பற்ற உடலுறவு அதாவது, எயிட்ஸ் நோயாளி எந்த வர்க்கமாகவும் இருக்கலாம். பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் உடலுறவு என்பது கூட எயிட்ஸ் என்ற நோயின் கண்டுபிடிப்பின் பின் கேள்வியாக்கப்பட்டது. இது பாலியல் எனும் பொது சமூக சிந்தனையை குழப்பியது என்றே சொல்லவேண்டும். கணவன் மனைவிக்குத் தெரியாமல் பாலியல் தொழில் செய்பவர்களை நாடுபவராக இருக்கலாம். அல்லது bisexual பழக்கமுடையவராக இருக்கலாம். கணவரின் ஆண் நண்பர் ஒருவேளை பாலியல் தொழிலாளர்களை நாடுபவராக இருக்கலாம் அது கணவரை தாக்கி பின்னர் மனைவியைத்தாக்கி அவர்களின் பிறக்கும் பிள்ளைகளையும் பாதிக்கும். அதிகமாக பெற்றோர்களின் தவறினால் பிறக்கும் அதிக குழந்தைகள் எயிட்ஸ் நோயாளிகளாக பிறக்கின்றனர். அவர்கள் முற்றுமுழுதாக சமூகத்தில் ஒரு குப்பைகளைப்போல பார்க்கப்படுகிறார்கள். அடுத்து HIV பரவுவதற்கான வேறு வழி என்று கருதுமிடத்தில் HIV என்பது குருதி மற்றும் உடல் திரவங்களின் மூலம் பரவும், பலர் நுளம்புக்கடியால் பரவும் என்ற தவறான அபிப்பிராயத்துடன் நமது சமூகத்தில் வாழ்கின்றனர். அது முற்றுமுழுதான மூட நம்பிக்கையை ஒத்தது, இதுபோல எயிட்ஸ் நோயாளிகளுடன் கதைத்தாலே எயிட்ஸ் பரவும் என்ற கருத்தில் வாழ்பவர்களும் இருக்கின்றனர். எயிட்ஸ் இரத்தத்தின் மூலம் பரவுவதால் அதைப் புரிந்துகொண்டு இரத்தம் கலக்கும் சந்தர்ப்பங்களை கருதிக்கொண்டு நாம் விழிப்புணர்வாக இருக்கவேண்டும். பாதுகாப்பற்ற ஊசிகள் ஏற்றுவதை மற்றும் இரத்தம் ஏற்றிக்கொள்வதைஇ சவர அலகு பயன்படுத்தலை தவிர்க்க வேண்டும். ஒரு போதை ஊசி ஏற்றிக்கொள்ளும் பழக்கம் உடையவரையும், பாதுகாப்பற்ற பச்சை உடலில் குத்திக்கொள்பவரையும் நாம் விழிப்புணர்வு செய்யப்படவேண்டிய கூட்டத்தில் அடக்கவேண்டும். அதேவேளை, எயிட்ஸ் நோயாளிகளை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதில் பலருக்கு சிரமமாக இருக்கும், இரத்தவழி உறவை தவிர்த்து அவர்களுடன் எவ்வாறும் பழகலாம்.

எயிட்ஸ் நோயாளிகள் ஏன் ஒதுக்கப்படுகிறார்கள் என்ற கேள்வி எமக்கு எல்லோருக்கும் இருக்கும். இதற்கான ஒரே பதில் சரியான விழிப்புணர்வு இன்மை. இது எயிட்ஸ் கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை காணப்படும் பொதுக்கேள்வி, விழிப்புணர்வினாலும் தீர்க்கப்பட முடியாமல் இருக்கிறது. ஒரு HIV தொற்று அந்த நோயாளியின் உடல் சார்ந்த சகல அதிகாரத்தையும் இழக்கவைக்கிறது. அதாவது, அவர் தொடத்தகாதவர். அவர் உடலுறவு கொள்ள தகுதியற்றவர். அவர் சமூகத்தின் மத்தியில் ஒரு அடிநிலைத் தனியனாக மாறிப்போகிறார். அப்படி என்றால் உடலின் பாலியல் தன்மையை அது சார்ந்த எதிர், நேர் விடயங்களைக்கொண்டா ஒரு மனிதன் சமூகத்தில் பழகக்கூடியவன், பழகமுடியாதவனாக தீர்மானிக்கப்படுகிறான்? இதற்கு விடையளிப்பதற்கு எந்தப் பதிலும் இல்லாமல் போகிறது. ஆனாலும், எயிட்ஸ் நோயாளிகள் இயற்கை மரணத்தை விட சமூகத்தால் புறக்கணிக்கப்படுவதால் தற்கொலை செய்து கொள்கின்றனர். இன்னொரு பகுதியினர் உயிரியல் ஆயுதமாக உபயோகிக்கப்பட்டு சமூகத்தில் பலருக்கு இந்த நோயைப்பரப்புவதில் தீவிரமாக இருக்கின்றனர். அதனால் நாம் சரியான விழிப்புணர்வுடன் அவர்களை சமூகத்திலிருந்து ஒதுக்காமல் இருப்பது நமது கடமையெனக் கருதலாம்.