கடந்த சில வாரங்களாக இலங்கையின் சுற்றுச் சூழல் மாசடையச் செய்வதில் பல்தேசிய கம்பனிகளின் பாத்திரம் குறித்து சர்ச்சைக்குரிய பல விடயங்கள் ஊடகங்களில் பதிவாகி வருகின்றன. அதிகமாக சிங்கள ஊடகங்களில் இவை பதிவு செய்த அளவுக்கு தமிழ் ஊடகங்களில் வெளிவரவில்லை. ஏற்கெனவே, ரத்துபஸ்வல பகுதியில் தண்ணீரில் கலக்கப்பட்ட தொழிற்சாலைக் கழிவு பற்றிய பாரிய சர்ச்சை, சமீபத்தில் கொகோ கோலா நிறுவனம் வெளியியேற்றிய கழிவினால் களனி கங்கை விஷமாவது குறித்த விடயங்களுடன் இந்த விடயத்தையும் துணைக்கு இழுத்ததும் ஜிப்பி (Jiffy) குறித்த செய்திக்கு முக்கிய இடமும், நம்பகத்தன்மையும் கிடைத்துவிடுகிறது.

ஆனால், இலங்கையில் இப்போது இது பெரும் சர்ச்சைக்குரிய ஒரு விடயமாக மேலெழுந்துள்ளன. அதேவேளை, மக்களை திசைதிருப்பும் நோக்கில் இந்த விடயம் உண்மைக்கு புறம்பான விடயங்களை வெளிப்படுத்தி பொய்களை ஊதிப்பெருப்பித்தும், உண்மையை சிறுப்பித்தும் பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகிறது. பல்தேசிய கம்பனிகள் இலங்கை சந்தைக்குள் ஒரே துறையில் போட்டியிடுகின்ற போது விலைபோகக்கூடிய நம் நாட்டு ஊடகங்களையும், அரச அதிகாரிகளையும் கைக்குள் போட்டுக்கொண்டு அந்தந்த நாட்டு கம்பனிகள் தத்தமக்குள் சண்டையில் ஈடுபடுகின்றன. ஆக ஊடகத் தகவல்களை மட்டுமே ஆதாரமாக நம்பியிருக்கும் பாமர மக்கள் இதனால் திசைதிருப்பப்பட்டு உண்மைக்கு புறம்பான தகவல்களை பின்தொடர வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

ஆரம்பத்தில் இந்த “ஜிப்பி” எனப்படும் நோர்வே தனியார் நிறுவனம் பற்றிய சிங்கள ஊடக செய்திகளை நம்பி மேலதிகமாக ஆராய்ந்துகொண்டு போகும்போது கிடைத்த தகவல்கள் அதுவரை பரப்பட்ட செய்திகளுக்கு எதிர்மாறான ஆதாரங்களையே வெளிப்படுத்தின. இதற்காக உரிய ஊழியர்கள், கிராமவாசிகள் என்போரின் பேட்டிகள், சுற்றுச் சூழல் அமைப்புகள், நோர்வேயிலுள்ள ஜிப்பி நிறுவனத்தின் உரிமையாளர் ஆகியோரிடமிருந்து பல பேட்டிகளையும், விசாரணைகளையும் மேற்கொண்டதில் இந்த செய்திகளுக்கு மாறான உண்மைகள் கிடைத்தன.

தோற்றம் – பின்னணி

அப்படிப்பட்ட ஒரு சிக்கலில் தான் மாட்டிக்கொண்டிருக்கிறது நோர்வே நிறுவனமொன்று. Jiffy எனப்படும் இந்த நிறுவனம் இலங்கையில் 2003ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒன்று. இலங்கை, அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 44 நாடுகளில் தொழில் நிறுவனங்களை நடத்தி வரும் ஒரு பல்தேசிய கம்பனி.

இலங்கையில் பெருமளவு கிடைக்கக்கூடிய தேங்காய் தும்பு, நார் என்பவற்றைக் கொண்டு இயற்கை விவசாயத்துக்குப் (Organic farm) பயன்படுத்தப்படும் பொருட்களை இந்த நிறுவனம் தயாரித்து வருகிறது. இதே வகை உற்பத்தியில் உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் பல ஈடுபட்டு வருகின்றன.

குருநாகல் மாவட்டத்தில் கொபேய்கன என்கிற கிராமத்திலேயே 75 ஏக்கர் நிலப்பரப்பில் ஜிப்பி நிறுவனத்தின் தொழிற்சாலை 250 மில்லியன் ரூபாய் முதலீட்டில் 2010இல் அமைக்கப்பட்டது. இன்று இது 24 மணி நேரமும் இயங்கும் தொழிற்சாலை. சூழ உள்ள பல நூற்றுக்கணக்கானோர் இந்த நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். அதிகமான பெண்கள் தும்பை உலரச் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்தப் பிரதேசத்தில் தென்னை வளர்ப்பவர்கள் பலர் தேங்காய் தும்புகளையும், நார்களாக பிரித்தும் ஜிப்பி நிறுவனத்துக்கு விற்பனை செய்வதால் பல குடும்பங்கள் பலனடைகின்றன. இவ்வாறு உற்பத்தி செய்யப்பட்டவற்றை இறுதிப் பொதிசெய்யும் தொழிற்சாலையும் பன்னல பிரதேசத்தில் இயங்கிவருகிறது. இந்தத் தொழிற்சாலையை தொடங்குவதற்கு பசில் ராஜபக்‌ஷ ஒரு பங்குதாரராக இணைக்கப்பட்டதாக அந்தப் பிரதேச மக்கள் நம்புகிறார்கள். சூழல் அமைப்புகளும் அவ்வாறு தெரிவித்து வருகின்றன.

இலங்கை தேசிய ஏற்றுமதி சம்மேளனம் (National Chamber of Exporters of Sri Lanka – NCE) வருடாந்தம் வழங்கும் விருதுகளில் “சுற்றுச் சூழல், கழிவுப் பொருட்களின் மறுபாவனை, சிறந்த சக்தி முகாமைத்துவம் என்பவற்றுக்கான விருதை 2012 இலிருந்து பெற்றுவருகிறது ஜிப்பி. இந்த வருடமும் விருதுக்கு தெரிவாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கும் நிலையில் அதனை அவர்களுக்கு வழங்கக் கூடாது என்கிற குரல்களைக் காணக்கூடியதாக இருக்கிறது.

தண்ணீரில் விஷமா? – வழக்கு

இந்தத் தொழிற்சாலையில் தும்பைக் கழுவி வெளியிடப்படும் கழிவுநீர் தெதுறு ஓயா ஆற்றில் கலக்கப்படுவதாகவும், அதனால் ஆற்றில் கல்சியம் நைத்திரேட் Ca(NO3)2 எனும் இராசாயனம் அதிகளவில் கலக்கப்பட்டு அந்த நீர் மாசடைந்திருப்பதாகவும், சூழ உள்ள கிணறுகளையும் அது பாதித்திருப்பதாகவும், சூழ மேற்கொள்ளப்படும் விவசாய நிலங்களும் விஷமடைந்திருப்பதாகவும் செய்திகள், கட்டுரைகள், ஊடக அறிக்கைகள் பரப்பப்பட்டு வருகின்றன.

முதலாவது கல்சியம் நைத்திரேட் எனப்படுவது விசாயத்துக்கும் பயன்படுத்தப்பட்டுவரும் ஒரு உர வகையே. அது விஷமல்ல. ஒரு லீட்டர் தண்ணீரில் 50 கிராம் அளவு நைத்திரேட் இருக்கலாம் என்பது உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்திருப்பதாகவும், ஆனால் தெதுரு ஓயாவில் எடுக்கப்பட்ட நீரை பரிசோதனை செய்ததில் அதில் 2109.52 கிராம் நைத்திரேட் இருந்ததாகவும் உண்மைக்கு புறம்பான செய்தி பரப்பப்பட்டது. இந்த செய்தியையே ஊடகங்களும், சுற்றுச் சூழல் கல்வி நிலையமும் (Environment and Nature Education Center) பிரச்சாரம் செய்தன. கடந்த 16ஆம் திகதியன்று அந்த நிறுவனம் கூட்டிய ஊடக மாநாட்டில் வெளியிடப்பட்ட பல தகவல்கள் உண்மைக்கு புறம்பான தகவல்களின் தொகுப்பாகவே இருந்தன. அந்த நிறுவனத்தின் அமைப்பாளர் ரவீந்திர காரியவசத்தை இந்தக் கட்டுரைக்காக தொடர்புகொண்டு விசாரித்த போது அவர் மத்திய சூழல் அதிகார சபையில் அறிக்கையை முன்வைத்தே கருத்து வெளியிட்டார். அந்த அறிக்கையை எமக்கும் கிடைக்கச் செய்தார். ஆனால், அந்த அறிக்கையின் படி பரிசோதனை அனைத்தும் ஜிப்பி தொழிற்சாலைக்கு உள்ளேயே மேற்கொள்ளப்பட்டிருப்பது தெரியவந்தது. சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டிருப்பதாயின் சூழ உள்ள கிணறுகளையும், மண்ணையும், அந்த தெதுறு ஓயா ஆற்று நீரையும் பரிசோதித்து இருக்க வேண்டும். அந்த அறிக்கையில் 2109.52கிராம் நைத்திரேட் இருப்பதாக தெரிவித்திருப்பது கூட நேரடியாக தும்பை ஊற வைத்திருந்த இடத்திலிருந்து நேரடியாக எடுக்கப்பட்டதுதான் என்பதை அந்த அறிக்கையிலிருந்து தெளிவாகின்றது.

2003ஆம் ஆண்டு ஜிப்பியின் மீதான குற்றச்சாட்டுகள் அதன் போட்டி நிறுவனங்களால் தூண்டப்பட்டன. இதனைத் தொடர்ந்து வட மத்திய மாகாண சூழல் அதிகாரசபை (Wayamba Environmental Authority) தலையிட்டது. ஜிப்பி நிறுவனத்தினுள் சென்று மேற்கொண்ட பரிசோதனைகளின் பின்னர் அது வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்ட குற்றச்சாட்டில் எந்த அடிப்படையும் இல்லை என்று தெரிவித்தது. முயற்சி தோல்வியடைந்த போட்டியாளர்கள் வேறு வழியில் தலையீடு செய்தனர். அதன்படி சம்பந்தமே இல்லாத மத்திய சூழல் அதிகாரசபை (CEA) அதிகாரிகளை அங்கு அனுப்பியது. அவர்கள் வெளியிட்ட 8 பக்க அறிக்கையை ஆதாரம் காட்டித்தான் தெதுறு ஓயா ஆறு விஷமடைந்திருப்பதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால், அந்த அறிக்கை அப்படி சொல்லவில்லை, உண்மைக்கு புறம்பான செய்தி இது என்று ஜிப்பி நிறுவனம் அந்த ஊடகங்களுக்கு எதிராக நட்ட ஈடு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கின் இறுதியில் உண்மைக்குப் புறம்பான செய்தியை வெளியிட்டதற்காக ரன்திவ எனும் பத்திரிகையை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் 11.09.2013 இடைக்கால தடையை விதித்து தீர்ப்பு வழங்கியது. அதுபோல அதே மாதம் 18 திகதி ஸ்ரீ லங்கா மிரர் இணையத் தளத்துக்கும் பிழையான செய்தி வெளியிட்டமைக்காக இடைக்கால தடையை விதித்தது நீதிமன்றம். “தென்னம் மட்டை பதனிட்ட விஷக்கழிவு தெதுறு ஓயாவுக்கு” எனும் தலைப்பில் 27.06.2013 ஸ்ரீ லங்கா மிரரில் வெளியான பிழையான செய்தி குறித்த வழக்கின் தீர்ப்பே அது. ஆனால், அத்தீர்ப்பில் ஜிப்பி நிறுவனத்துக்கு நட்ட ஈடு வழங்கத் தேவையில்லை என்றும் தீர்ப்பளித்திருந்தது. 24.11.2014 அன்று குறித்த செய்தியை வெளியிட்டமைக்கு ஸ்ரீ லங்கா மிரர் மன்னிப்புகோரி செய்தி வெளியிட்டது.

இந்தத் தகவலை நம்பி செய்தி வெளியிட்ட பல இணையத்தளங்கள் பின்னர் அதற்காக மன்னிப்பு கோரின. சில இணையத்தளங்கள் அந்த செய்தியை நீக்கின.

இப்படிப்பட்ட உண்மைகளை திரிபுபடுத்தி வெளியிடப்பட்டு வருவதன் உள் நோக்கங்களை ஆராய வேண்டியிருக்கிறது. ஒரு சிறிய உதாரணம்; அந்த ஊடக மாநாட்டில் “இவர்களைப் பற்றித் தெரிந்ததால் தான் இந்தியாவுக்குள் இவர்களை விடவில்லை. விரட்டியே விட்டார்கள்” என்று கூறப்பட்டது. ஆனால், இலங்கையை விட அதிக உற்பத்தியை ஜிப்பி நிறுவனம் இந்தியாவிலேயே மேற்கொண்டு வருவது தெரிய வருகிறது. இத்தகைய பொய்களை வெளியிடுவதற்கு ஊடக மாநாடுகளையும் நடத்துகிறார்கள். தம்மீதான நம்பகத்தன்மையையும் குழி தோண்டி புதைத்து விடுகிறார்கள்.

புலனாய்வு

மூன்று மாதங்களுக்கு முன்னர் நேரடியாக அங்கு சென்று அங்கு பணியாற்றும் பல ஊழியர்களிடமிருந்து தகவல்களை திரட்டியிருந்தேன். அந்த ஊர் மக்களிடமிருந்தும் கூட இந்த நிறுவனத்துக்கு எதிரான கருத்துக்கள் வெளிவரவில்லை. நேரடியாக அந்த தொழிற்சாலைக்குள் ஊர் முக்கியஸ்தர் ஒருவருடன் சென்று பத்திரிகையாளர் என்று காட்டிக்கொள்ளாமல் பல விடயங்களை அவதானித்ததுடன், பல புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டு வந்தேன். தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் பற்றிய பிரச்சினை குறித்தே அவர்களில் பலர் முறைப்பாடு செய்தார்கள்.

நோர்வேயில் இருக்கும் நிறுவனத்தின் உரிமையாளர் டாக்பின் அன்டர்சனை தொடர்பு கொண்டு உரையாடியபோது ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 650 ரூபா சம்பளம் வழங்கப்படுவதையும் 11 மணித்தியாலங்கள் வேலை வாங்கப்படுவத்தையும் ஒப்புக்கொண்டார். அது இலங்கையின் தொழிற்சட்டங்களுக்கு அமையவே வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். இதற்கு தொழிற்சங்கவாதிகள் தான் பதில் கூற வேண்டும்.

அன்டர்சன் தெரிவித்த கருத்தின்படி மத்திய சூழல் அதிகாரசபை வெளியிட்ட அறிக்கையிலும் பல குளறுபடிகள் இருப்பதாகவும் இதன் காரணமாக உண்மை அறியுமுகமாக மூன்றாந்தரப்பு சர்வதேச பகுப்பாய்வு நிறுவனமொன்றை ஆராயும்படி கோரியதாகவும் அவர்கள் 45 விதமான மாதிரிகளை பகுப்பாய்வுக்கு உட்படுத்தியதாகவும், அந்த அறிக்கையில் கூட அப்படியான எந்தத் தவறும் கண்டுபிடிக்கவில்லை என்றும் தெரிவித்தார். சுவிற்ஸர்லாந்தைச் சேர்ந்த இந்த SGS நிறுவனம் சர்வதேச ரீதியில் பிரபலமும், நம்பகத்தன்மையையும் பெற்றது என்கிறார்.

இலங்கையின் இடம்

தென்னாசியாவும், தென்கிழக்காசியாவும் உலக தென்னை சார்ந்த உற்பதியில் முதன்மை வகிக்கின்றன. இலங்கை இன்று இந்த உற்பத்தியில் ஐந்தாவதாக இருக்கின்றது. இலங்கைக்கு இன்று பாரிய அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் ஒரு துறையாக இது மாறியிருக்கிறது. நெதர்லாந்து, நோர்வே, இஸ்ரேல், பிரான்ஸ், பிரித்தானியா, ஸ்பெயின் போன்ற நாடுகளின் பல்தேசிய கம்பனிகள் இலங்கையில் இந்தத் துறையில் முதலிட்டு இருக்கிறன.

மூலப் பொருள் கிடைக்கிறது, உற்பத்திச் செலவு குறைவு, குறைந்த கூலிக்கு ஊழியர்கள் என்பதால் இந்த பல்தேசிய கம்பனிகள் இந்தத் துறையில் இலங்கையில் காலூன்றியுள்ளன.

கொபேய்கன கிராமத்துக்கு அருகில் இதே துறையில் இன்னுமொரு அமெரிக்க நிறுவனம் ஒன்று தோற்றுவிக்கப்பட்டதன் பின்னர் மூலப் பொருட்களை பெறுவதில் இந்த நிறுவனங்களுக்கு இடையில் போட்டி நிலவுவதை அவதானிக்க முடிகிறது. Riococo எனும் இந்த அமெரிக்க நிறுவனத்துக்கு அடிக்கடி அமெரிக்க உயர்ஸ்தானிகர் வந்து போவதை செய்திகளிலிருந்து காண முடிகிறது. உழைப்பையும், வளங்களையும் நீதியையும் சுரண்டுவதற்கு நம் நாடு எப்போதும் திறந்தே இருக்கிறது அல்லவா.

Michele J. Sison, the US Ambassador

இப்போது இந்த நோர்வே நிறுவனத்தின் மீதான பாய்ச்சல் வெறும் சூழலியல் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல இதற்குப் பின்னால் உள்ள ஆழமான அரசியலையும் விளங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது.

குறிப்பாக சிங்கள ஊடகங்கள், மற்றும் அமைப்புகள் இதனை பாரியளவு பிரசாரங்களை மேற்கொண்டதன் பின்னணியில் ஏற்கெனவே நிலைபெற்றுள்ள நோர்வே மீதான சிங்கள தேசியவாத எதிர்ப்புணர்ச்சி சம்பந்தப்பட்டுள்ளது. கடந்த சமாதான முயற்சி காலத்தில் நோர்வே பற்றிய பல புனைவுகளும், மாயைகளும் சிங்கள தேசியவாத ஊடகங்கங்களாலும், பேரினவாத தரப்புகளாலும் பாரிய அளவில் மேற்கொள்ளப்பட்ட பரப்புரை பெருமளவில் வெற்றியடைந்தது. நோர்வேயின் சமாதான பங்களிப்பை மாத்திரமல்ல, நோர்வேயின் உதவிகளையும் கூட சந்தேகிக்கச் செய்யும் வகையில் இந்த பரப்புரைகள் நம்பவைக்கப்பட்டன. ஆக சாதாரண சிங்கள பொதுப்புத்தி நோர்வே எதிர்ப்பலையைகொண்டிருப்பதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை. சமாதான முயற்சி தோல்வியடையச் செய்யும் முயற்சியின் பின்னணியில் நோர்வேயை அன்னியப்படுத்தியத்தில் இந்த “வெறுப்பலைக்கு” கணிசமான பாத்திரம் உண்டு.

நோர்வே மீதான தீவிர எதிர்ப்பாளரான சம்பிக்க ரணவக்க கடந்த அரசில் சூழலியல் அமைச்சராக இருந்ததும் இந்த சக்திகளுக்கு சாதகமாகப் போனது. சம்பிக்கவின் கவனத்துக்குக் கொண்டு சென்று அழுத்தம் பிரயோகித்தனர். இப்போது இலங்கையில் சூழலியல் அமைச்சு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழேயே இருக்கின்றது. இப்போது இதுவா நல்லாட்சி இழுத்து மூடு இந்த நிறுவனத்தை என்று கோஷமிடத் தொடங்கியிருக்கின்றன.

அந்நிய முதலாளித்துவ முதலீட்டு பல்தேசிய கம்பனிகள் நம் நாட்டுக்கு நன்மை செய்வதற்காக வரவில்லை. அவர்களின் ஒரே நோக்கம் சுரண்டல் மட்டுமே. லாபம் மட்டுமே. அவர்களிடம் கழிவிரக்கம் காண முடியாது. ஆனால், அதனை அந்த நோக்கில் உறுதியாக அம்பலப்படுத்த வேண்டும். இப்போது அந்த முதலீட்டாளர்களின் சண்டைக்குள் நமது கவனம் வீண் திசைதிருப்பலுக்கு உள்ளாகியிருக்கிறது. உண்மையை கண்டடைவோம்.

உண்மையை வெளியிடுவதாக கூறிக்கொள்பவர்கள் ஏற்கெனவே எடுத்த முன்முடிவுகளுடனும், முன் அனுமானங்களுடன் இந்தப் பணியை மேற்கொண்டதால் ஒன்றில் அவசரப்பட்டு இத்தகைய செய்திகளை வெளியிட்டிருக்கக் கூடும். அல்லது எப்பேர்பட்டாவது இவர்களை மோசமாக சித்திரிக்க வேண்டும் என்கிற முழு முடிவுடன் இப்படி அனணுகியிருக்கக் கூடும்.

ஆய்வு முறையில் இரண்டு பிரதான போக்கை பரவலாகக் காணலாம். ஒன்று தேடிக் கிடைத்த ஆதாரங்களில் இருந்து முடிவுக்கு வருதல். மற்றது ஒரு முடிவை எடுத்துக் கொண்டு அதனை நிறுவுவதற்கு தகவல்களைக் கோர்த்தல். இந்த இரண்டாவது வழிமுறை பெரும்பாலும் புனைவிலேயே முடிகிறது. தமது முடிவுகளை நம்பியிருப்போரை பிழையாக வழிகாட்டுவதில் போய் முடிகிறது.