படம் | akkininews

எதிர்காலத்தை வரையறுக்க விரும்பினால் கடந்த காலத்தைப் படி – கன்பியுசியஸ்

சுமந்திரனின் நாடாளுமன்ற உரையை முன்னிறுத்தி, ஒரு விவாதத்திற்கான அழைப்பு.

2014ஆம் ஆண்டு வரவு-செலவுத்திட்டத்தின் வெளியுறவு அமைச்சுக்கான நிதியொதுக்கீடுகள் மீதான சூழ்நிலை விவாதத்தின்போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆற்றிய உரையின் மீதான ஒரு பிரதிபலிப்பாகவே, இக்கட்டுரை அமைகிறது. சுமந்திரன் தனதுரையில் பல்வேறு விடயங்கள் குறித்து பேசியிருந்த போதும், குறிப்பாக அவர் தமிழ் மக்களை நோக்கி குறிப்பிட்டிருக்கும் விடயங்களையே இக்கட்டுரை அடிக்கோடிடுகின்றது. அவை வருமாறு:

“ஒரு நீண்டகால தேவையான தம்மைத் தாமே ஆராய்ந்தறிதலை மேற்கொள்வதற்காக, இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு நான் தமிழ் மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன். நாம் எவ்விடத்தில் தவிறிழைத்தோம்? பூரணசுயராஜ்யத்தை வலியுறுத்தி 1931ஆம் ஆண்டு தேர்தலைப் பகிஸ்கரித்ததில் யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் தவறிழைத்துவிட்டதா? இரண்டு குடியேற்ற ஆணைக்குழுக்களுக்கு கண்டிய காங்கிஸினால் முன்வைக்கப்பட்ட சமஷ்டி முறைமைக்கான கோரிக்கையை நிராகரித்ததில் எமது தலைவர்கள் தவறிழைத்துவிட்டனரா? 50-50 கோரிக்கையை முன்வைத்து அதன் பின்னர் இந்திய-பாகிஸ்தானிய பிரஜா உரிமைச் சட்டத்தை நிறைவேற்ற அரசிற்கு ஆதரவளித்ததன் மூலம் ஜி.ஜி.பொன்னம்பலம் தவறிழைத்துவிட்டாரா? 1951இல் சமஷ்டி ஆட்சி முறை ஒன்றையும் 1976இல் தனி இராஜ்ஜியமொன்றையும் கோரியதன் மூலம் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தவறிழைத்தாரா? 1981இல் மாவட்ட அபிவிருத்திச் சபை முறைமையை ஏற்றுக்கொண்டு அதன் பின்னர் 1987இல் மாகாணசபை முறைமையை ஏற்றுக்கொள்ள மறுத்ததில் த.வி.கூ. தலைவர்கள் தவறிழைத்தார்களா? ஆயுதப் போராட்டமொன்று உருவாவதில் தமிழ் அரசியல் தலைவர்கள் சம்மந்தப்பட்டிருந்தார்களா?

தமிழ் இளைஞர்கள் பற்றி என்ன கூறுவது? அரசுக்கெதிராக ஆயுதப் புரட்சியொன்றை ஆரம்பித்ததில் அவர்கள் தவறிழைத்துவிட்டார்களா? வன்முறையில் அறவே நம்பிக்கைவைக்காத ஒருவர் என்றவகையில் நான் இந்த கேள்வியை கேட்கிறேன், சமத்துவத்திற்கும் ஒடுக்குமுறையிலிருந்தான விடுதலைக்குமான எமது போராட்டத்தை வன்முறை முன்னோக்கி நகர்த்தியுள்ளதா என்ற கேள்விக்கு வன்முறை நியாயமானதென கருதுகின்றவர்கள் கூட பதில் கூற வேண்டும். தமிழர் ஒற்றுமை பற்றி என்ன கூறலாம்? எமது ஒற்றுமையின்மை பெரும்பான்மையினரால் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளப்பட்டதா? சகோதர ஆயுதக்குழு உறுப்பினர்களை கொன்றதன் மூலம் பிரபாகரன் தவறிழைத்துள்ளாரா? தமிழ் அரசியல் தலைவர்களையும் சிங்கள அரசியல் தலைவர்களையும் கொலை செய்வதற்கு அவர் உத்தரவிட்டது தவறா? சிவிலியன் இலக்குகள் மீதான தாக்குதல்களுக்கும் கொலைகளுக்கும் நியாயமேதும் உண்டா? பௌத்த மத வழிபாட்டுத் தலங்களுக்கெதிரான தாக்குதல்களுக்கும் இஸ்லாமிய வழிப்பாட்டுத் தலங்களுக்குள் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கும் நியாயம் ஏதும் உண்டா? தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக பலமாக இருந்தபோது அரசியல் தீர்வை அடைவதற்கிருந்த வாய்ப்பை பாழடித்தமை பற்றி என்ன கூறுவது? 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது ஜ.ம.சு.மு.யோடு இணைந்து செயற்பட்டு தேர்தலைப் பகிஸ்கரிக்குமாறு மக்களை கோரியபோது அவர்கள் தவறிழைத்துவிட்டார்களா? கட்டாயமாக குறிப்பாக சிறுவர்களை சேர்த்துக்கொண்டதில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தமிழ் ஆயுதக்குழுக்கள் குற்றவாளிகளா? காட்டிக் கொடுக்கும் எட்டப்பன்கள் பற்றி என்ன கூறுவது? தற்போது அரசின் அரவணைப்பில் சுகம் அனுபவிக்கும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவர்கள் பற்றி என்ன கூறலாம்?

இது உண்மையாகவே ஒரு நீண்ட பட்டியலாகும். எனினும் நாம் அவற்றிற்கு பதிலளிப்பதைத் தவிர்த்து சுதந்திரமாக இருக்கமுடியுமென எதிர்பார்க்கலாமா? சுதந்திரமான ஒரு சர்வதேச விசாரணையானது, நிச்சயமாக நாமும் எமது மக்களும் பல அசௌகரியமான உண்மைகளை எதிர்கொள்ளுவதற்கு எமக்கு உதவும்”

சுமந்திரன் முன்னிறுத்தியிருக்கும் மேற்படி கேள்விகள், முக்கால் நூற்றாண்டுகால தமிழர் அரசியல் போக்கின் மீது தொடுக்கப்பட்டிருக்கும் கேள்விகளாகும். நான் இங்கு அனைத்தையும் எடுத்தாளவில்லை, மாறாக, தமிழ்த் தேசிய அரசியலின் பிதாமகர் என்றழைக்கப்படும் தமிழரசு கட்சியின் ஸ்தாபகரும், பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சிற்பியுமாக இருந்த எஸ்.ஜே.செல்வநாயகம், அதன் பின்னர் கடந்த மூன்று தசாப்தகால அரசியலில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களால் மீட்பராகவும், தமிழ் அரசியலின் (பாலகுமாரனின் சொல்லில்) இமாலய வியப்பென நோக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் ஆகிய இருவரது அரசியல் தலையீடுகளை மட்டுமே இங்கு எடுத்துநோக்க முற்படுகின்றேன். பின்காலனித்துவ இலங்கையில் தமிழரின் உரிமைசார் அரசியல் என்பது மேற்படி இருவரது சிந்தனைகளாலும் செயல்களாலுமே புடம்போடப்பட்டது. ஆனால், மேற்படி இருவரும் அரசியல் பண்புநிலையில் ஒரே தரத்தானவர்கள் அல்ல. ஆனால் தீவிரவாதியான பிரபாகரன், மிதவாதியான செல்வநாயகத்தால் போடப்பட்ட அரசியல் அடித்தளத்தின்மீதே பயணித்தழிந்தார் என்பதுதான் இதிலுள்ள முரண்நகையாகும்.

அந்த அடித்தளத்தின் மீது பயணிக்கும் முனைப்பிற்காக பிரபாகரன் எத்தகைய காரியத்தையும் பின்விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் செய்வதற்கு தயாராக இருந்தார்; செய்தார். அந்தவகையில் நோக்கினால், செல்வநாயகத்தின் அசல் அரசியல் சீடன் பிரபாகரனே ஆவார். சுமந்திரன் தனதுரையில், பிரபாகரன் குறித்து எழுப்பியிருக்கும் கேள்விகளுக்கு ஒரு வரியில் விடையிறுப்பதாயின் பிரபாகரனின் செயல்கள் அனைத்துமே செல்வநாயகத்தால் போடப்பட்ட ‘தனிநாடு’ என்னும் அடித்தளத்தில் தொடர்ந்தும் பயணிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட கைங்கரியங்களாகும். தமிழில் ஒரு பழமொழியுண்டு: ஏட்டுச் சுரக்காய் கறிக்குதவாது. அதாவது சிந்தனையற்ற, கேள்விகளற்ற வெறும் படிப்பு ஆக்கத்திற்கு பயன்படப்போவதில்லை என்பதே அதன் பொருள். செல்வநாயகத்தின் வழித்தடத்தில் பிரபாகரன் கேள்விகளற்று பயணித்ததும் அத்தகைய ஒன்றேயாகும். செல்வநாயகத்தால் 1976இல் வட்டுக்கோட்டையில் முன்மொழியப்பட்ட ‘சுதந்திர தனிநாடு’ என்னும் ஏட்டுச் சுரக்காயை சுயபரீசீலனையற்று காவித்திரிவதில் கர்வம் கொண்ட ஒருவராகவே பிரபாகரனின் காலம் கழிந்தது. அந்த கர்வத்திற்காக பிரபாகரன் தொடர்ச்சியாக செய்துவந்த தவறுகளின் விளைவுதான் முள்ளிவாய்க்கால் அவலம். அத்துடன், தமிழர்களின் இன்றைய நிலைமை. எனவே, பிரபாகரனின் மீதான விமர்சனம் என்பது தவிர்க்க முடியாமல் செல்வநாயகத்தின் மீதான விமர்சனமாகவும் இருக்கிறது.

விடுதலைப் புலிகள் அமைப்பு மட்டுமல்ல, அனைத்து ஆயுதம் தாங்கிய அமைப்புக்களும் வடக்கு-கிழக்கு இணைந்த தமிழர் பகுதியை அடிப்படையாகக் கொண்டு ஒரு தனிநாட்டை நிறுவவேண்டும் என்ற வேட்கையுடனேயே போராட்டத்தில் ஈடுபட்டன. ஆனால், அவர்கள் அனைவருக்குமான அரசியல் அடித்தளமாக அமைந்திருந்தது, 1976இல் முன்மொழியப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானமாகும். எனவே, செல்வநாயகத்தால் முன்வைக்கப்பட்ட மேற்படி தீர்மானம் சரியான ஒன்றா? ஏன் செல்வநாயகம் இத்தகையதொரு தீவிரமான அரசியல் கோசத்தை கையிலெடுத்தார்? எவ்வாறான காரணிகள் செல்வநாயகத்தின் மேற்படி முடிவில் செல்வாக்குச் செலுத்தியிருக்கலாம்? ஒரு துல்லியமான அரசியல் மதிப்பீட்டுடனும், தூரநோக்குடனும்தான் செல்வநாயகம் இவ்வாறானதொரு அரசியல் முடிவை வந்தடைந்தாரா?

செல்வநாயகம் 1944இல் தமிழ் அரசியலில் பிரவேசித்திருந்தாலும், 1949இல் சமஷ்டிக்கட்சியை உருவாக்கியதிலிருந்தே அவரது சிந்தனைகள் தமிழர் அரசியலில் பிரதான இடத்தைப் பெற்றுக்கொண்டது. ஆனால், ஆரம்பத்திலேயே செல்வநாயகத்தின் அரசியல் அணுகுமுறை ஒரு குழப்பகரமானதாகவே வரலாற்றில் பதிவாகியிருக்கிறது. 1949இல் தமிழர்களுக்கென ஒரு அரசியல் கட்சியை ஸ்தாபித்த செல்வநாயகம், அதனை தமிழர்கள் மத்தியில் தமிழரசு கட்சியாகவும், சிங்களவர்கள் மத்தியில் சமஷ்டிக்கட்சியாகவுமே காண்பித்திருந்தார். ஒருவேளை, தமிழ் நாட்டை கருத்தில்கொண்டு இவ்வாறானதொரு எண்ணம் கருக்கொண்டிருக்கலாம். இந்தியாவைப் பொருத்தவரையில் தமிழ் நாடு என்பது ஒரு மாநிலம் மட்டுமே. ஆனால், அந்த மாநிலத்தில் வாழும் தமிழ் மக்களைப் பொருத்தவரையில் அது அவர்களின் நாடு. செல்வநாயகத்தின் தமிழரசு – சமஷ்டி என்னும் சொற்கையாளுகைக்குப் பின்னால் இத்தகையதொரு பார்வை உள்ளுறைந்திருக்கலாம்.

ஆனால், சமஷ்டிக்கட்சியை உருவாக்கிய செல்வநாயகத்திடம் தனிநாடு குறித்த எந்தவொரு நிலைப்பாடும் இருந்திருக்கவில்லை. இங்கு ஒரு சுவாரசியமான வரலாற்று தகவலை பதிவுசெய்ய வேண்டியிருக்கிறது. 1936இல் தமிழர்களுக்கு ஒரு தனியான நாடு தேவை என்னும் மனுவானது, இரண்டு இலங்கை தமிழர்களால் பிரித்தானிய அரசிற்கு அனுப்பிவைக்கப்பட்டது. அந்த வேண்டுகோளை விடுத்தவர்களில் ஒருவர் இலங்கை பாதுகாப்பு படையைச் (Ceylon Defense Force) சேர்ந்த கலாநிதி பொன்னையா, மற்றையவர் வடமாராட்சியை சேர்ந்த நொத்தாரிசு வல்லிபுரத்தான். மேற்படி மனுவை தயாரிப்பதற்கு செல்வநாயகத்தின் உதவியை அவர்கள் பெற்றிருக்கின்றனர். செல்வநாயகத்தின் அரசியல் சுயசரிதையை எழுதிய கலாநிதி. ஏ.ஜே.வில்சன், மேற்படி சந்தர்ப்பத்தின் போது செல்வநாயகம், அவர்களுக்கு பகிரங்க ஆதரவை தெரிவித்திருக்கவில்லை. அதேவேளை, அவர்களது ஆர்வத்தை குறைக்கும் வகையிலும் நடந்துகொள்ளவில்லையென்று குறிப்பிடுகின்றார். ஆனால், அதே செல்வநாயகம்தான் 1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டையில் தனிநாட்டுக்கான பிரேரணையை முன்மொழிகின்றார். இவ்வாறானதொரு தீவிர நிலைப்பாட்டை செல்வநாயகம் முன்மொழிந்தபோது அவர் நோய்வாய்ப்பட்டு மிகவும் பலவீனமான நிலையில் இருந்தார். ஒரு மனிதன் தனது வாழ்வின் இறுதித் தருணத்தில் நிற்கும்போது, மிக உயர்ந்ததொரு இலட்சியத்தை வெளிப்படுத்துவாராக இருப்பின், அதன் நடைமுறைச்சாத்தியம் பற்றி நாம் என்ன கூறலாம்? அத்தகைய தருணத்தில் வெளிவரும் ஒரு இலட்சிய சிந்தனையானது எவர் மீதான நம்பிக்கையின் அடிப்படையில் முன்வைக்கப்படும், குறித்த நபரின் மீதா அல்லது மற்றவர்கள் மீதா? செல்வநாயகம் தன் வாழ்வின் இறுதித் தருணத்தில் மேற்கொண்ட முடிவானது எவர் மீது சுமத்தப்பட்டது? அந்த மற்றவர்கள் யாராக இருந்தனர்? இவ்வாறான கேள்விகள் இங்கு தவிர்க்க முடியாதவை. ஏனெனில், 1977ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்பதாகவே செல்வநாயகம் காலமாகிவிட்டார். மேற்படி தேர்தலின்போது தமிழ் மக்கள் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு வழங்கிய ஆதரவே தனிநாட்டுக்கான மக்கள் ஆணையாகவும் நோக்கப்பட்டது.

நான் மேலே குறிப்பிட்டவாறு, செல்வாநாயகம் தன் வாழ்நாளின் இறுதித் தருணத்தில்தான் இவ்வாறானதொரு முடிவை பகிரங்கப்படுத்தினார் என்பது உண்மையாயினும், 1970ஆம் ஆண்டிலிருந்தே அவர் இவ்வாறானதொரு நிலைப்பாட்டை நோக்கி சிந்திக்கத் தலைப்பட்டிருக்கின்றார் என்றே பதிவுகள் கூறுகின்றன. ஏன் இவ்வாறானதொரு முடிவு நோக்கி செல்வநாயகம் சிந்திக்கத் தலைப்பட்டார்? இதற்கு மிகத் துல்லியமான பதில்களை கண்டுகொள்ள முடியாது. ஆனால், பதிவுசெய்யப்பட்டிருக்கும் தகவல்கள் மீதான எனது அவதானத்தின்படி, இரண்டு விடயத்தின் அடிப்படையில்தான் மேற்படி விடயத்தை அணுகமுடியும். ஒன்று வடக்கு கிழக்கில் சமஷ்டிக் கட்சிக்கான ஆதரவு வீழ்ச்சியடையத் தொடங்கிய பின்புலத்தில், மக்களை தொடர்ந்தும் தனது சமஷ்டிக் கட்சியின் சிந்தனையெல்லைக்குள் கட்டுப்படுத்திவைக்கும் ஒரு உபாயமாக ‘தனிநாடு’ என்னும் கவர்ச்சிகரமான ஒரு சொற்பதத்தை கையிலெடுக்க முற்பட்டிருக்கலாம். இவ்வாறு நான் குறிப்பிடுவதற்கு ஒரு தெளிவான காரணம் உண்டு. 1970ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில், சமஷ்டி கட்சியின் கோட்டையாக கருதப்பட்ட இரண்டு தொகுதிகளில் நாகநாதன் மற்றும் செல்வநாயகத்தின் கொள்கை முன்னெடுப்பாளரான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் ஆகியோர் ஜி.ஜி.பொன்னம்பலத்தின் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வேட்பாளர்களால் தோற்கடிக்கப்படுகின்றனர். அதேவேளை, சமஷ்டிக் கட்சியின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மூத்த தலைவர்களில் ஒருவரான இராசமாணிக்கமும் தோல்வியடைகின்றார். இந்தத் தேர்தலின்போது, 19 ஆசனங்களில், 12 ஆசனங்களையே சமஷ்டிக் கட்சியால் வெற்றிபெற முடிந்தது. அதேவேளை, தமிழ் மத்தியதரவர்க்க இளைஞர்கள் மத்தியில் மிதவாதிகள் மீதான அதிருப்திகள் தீவீரமடைகின்றன. இதன் விளைவாக ஒரு ஆயுத அமைப்பு உருப்பெறக் கூடுமென்னும் நிலைமையையும் செல்வநாயகம் உணர்கின்றார். இவையனைத்தும் சமஷ்டிக் கட்சியின் செல்வாக்கை சிதைவடையச் செய்துவிடலாமென்றும் செல்வா அச்சப்படுகின்றார். எனவே, இத்தகையதொரு புறச் சூழலில் அனைத்து தரப்பினரையும் வசியப்படுத்தக் கூடியதொரு முன்மொழிவை செய்வதன் ஊடாக நிலைமைகளை தொடர்ந்தும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியுமென்று செல்வநாயகம் நம்பியிருக்கலாம். அதன் பொருட்டு இத்தகையதொரு முடிவுக்கு வந்திருக்கலாம்.

இரண்டாவது, இந்தியாவின் உதவியுடன் அவ்வாறானதொரு தனிநாட்டை உருவாக்க முடியுமென்று செல்வநாயகம் நம்பியிருக்க வேண்டும். அல்லது அப்படியொரு சூழல் எதிர்காலத்தில் கனிந்துவரலாமென்று அவர் நம்பியிருக்கலாம். நான் மேலே குறிப்பிட்ட அரசியல் சுயசரிதையில் பதிவுசெய்யப்பட்டிருக்கும் சில தகவல்கள் அவ்வாறானதொரு புரிதலுக்கு வருமாறு என்னை வலுயுறுத்துகின்றது. செல்வநாயகம் 1972, பெப்ரவரி 20இல் தமிழ் நாட்டிற்கு சென்று, அங்கு காங்கிரஸ் மற்றும் தி.மு.க கட்சிகளின் தலைவர்களை சந்திக்கின்றார். தமிழ் மக்கள் பிரிந்து சென்று தனிநாடு அமைக்கும் கோரிக்கையை வலியுறுத்தி வருவதாகவும், அது ஒன்றே தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரேயொரு மார்க்கமென்றும், தங்களை நிர்பந்தித்து வருவதாகவும் மேற்படி சந்திப்பின் போது செல்வாநாயகம் குறிப்பிடுகின்றார். இதனைத் தொடர்ந்து செல்வா 1972 ஒக்டோபரில் தனது நாடாளுமன்ற பதவியை ராஜினாமா செய்கின்றார். செல்வாவின் இந்த நடவடிக்கைகள் அனைத்துக்கும் ஒரு உந்துசக்தியாக இருந்தது 1971இல் இடம்பெற்ற பங்களாதேஷின் உருவாக்கமாகும். பங்களாதேஷின் பிறப்பின் பின்னால் இந்தியா இருந்தது என்பதொன்றும் இரகசியமானதல்ல. “பங்களாதேஷ் தனிநாடாகியமை தமிழரின் அரசியல் முன்நகர்வில் தவிர்க்க முடியாத தாக்கத்தை ஏற்படுத்தியது. சமஷ்டி நிலைப்பாட்டை கைவிட்டு தனிநாட்டை பிரகடனம் செய்யும்படியான உத்வேகத்தையும் ஏற்படுத்தியது” என கலாநிதி.ஏ.ஜே.வில்சன் பதிவுசெய்திருக்கிறார். மேலும், கலாநிதி வில்சன் பதிவுசெய்திருக்கும் பிறிதொரு விடயம் இங்கு மிகுந்த முக்கியத்துமுடையதாகும். தமிழகத் தலைவர்களை சந்தித்த மேற்படி பெப்ரவரியில், வடக்கின் கரையோரக் கிராமமான வல்வெட்டித்துறையில் அனைத்துக்கட்சிகளின் கூட்டமொன்று இடம்பெறுகிறது. காணி உரிமைகள், பிராந்தியரீதியான சுயாட்சி, குடியேற்றக் கொள்கை மற்றும் தொழில் வாய்ப்புக்களின் புறக்கணிப்பு ஆகியவற்றுக்கு எதிரான ஆறு அம்சக் கோரிக்கையொன்று (Six Point Formula) இதன்போது முன்மொழியப்பட்டது. இது பங்களாதேஷின் சுதந்திர யுத்தத்திற்கு முன்னர்  ஷேக் முஜிபு ரகுமானால் (Sheikh Mujibur Rahuman) அரசியலமைப்புப் பேரவைக்கு சமர்பிக்கப்பட்ட ஆறு அம்சக் கோரிக்கைகளை மீளுருப்படுத்துவதாகவே இருந்தது. மேற்படி தகவல்களை ஆதாரமாகக் கொண்டு சிந்திப்பதாயின் செல்வாநாயகம் இந்தியாவை கருத்தில் கொண்டுதான் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்திருக்கின்றார் என்னும் முடிவுக்கு வருவது தவிர்க்கமுடியாததாகிறது. பங்களாதேஷ் உருவாக்கத்திற்கு உதவியது போன்று  இந்தியா ஈழத் தமிழர்களுக்கும் உதவ முன்வரும் என்னும் நம்பிக்கை செல்வநாயகத்திடம் இருந்திருக்கலாம். பங்களாதேஷ் சுதந்திர நாடாக உருவாகிய அதே 1971இல் இலங்கையின் தெற்கு பகுதிகளில் ஜே.வி.பி எனப்படும் இடதுசாரி இளைஞர் குழு அரசை வீழ்த்துவதற்கான கிளர்சியிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. பதிவுசெய்யப்பட்டிருக்கும் தகவல்களை ஆதாரமாகக் கொண்டே எனது வாதத்தை இங்கு முன்வைத்திருக்கின்றேன். மேற்படி இரண்டு காரணங்களைத் தவிர்த்து வேறு எந்த அடிப்படையில் செல்வாவின் வட்டுக்கோட்டை தீர்மானத்தை விளங்கிக்கொள்வது?

ஆனால், செல்வநாயகத்தின் ‘தனிநாட்டு’ நிலைப்பாடு ஒரு தூரநோக்கில் சிந்தித்து முன்வைக்கப்பட்டதாகக் கருத இடமுண்டா? இன்று மேற்படி தனிநாட்டு கோசத்தின் விளைவுகளை திரும்பிப் பார்க்கும்போது செல்வநாயகம் பாரியதொரு வரலாற்றுத் தவறுக்குரியவராகவே தெரிகின்றார். ஏனெனில், செல்வநாயகம் இவ்வாறானதொரு தீர்மானத்தை 1976இல் வெளியிடாது இருந்திருந்தால், ஆயுதரீதியான தலையீட்டின் மூலம் தமிழர் அரசியலை கையாள முற்பட்ட அமைப்புக்கள் ‘தனிநாட்டு’ கொள்கையை கையிலெடுத்திருப்பர் என்பது சந்தேகமே! ஏனெனில், பிரபாகரன் உட்பட்ட ஆயுத அமைப்புக்களின் தலைவர்கள் அனைவரும் மிதவாதியான செல்வநாயகத்தின் கோசத்தைப் பற்றிப் பிடித்துக்கொண்டனரே தவிர, அவர்களிடம் தமிழ் மக்களின் எதிர்காலம் தொடர்ப்பில் எந்தவொரு மாற்று திட்டங்களும் இருந்திருக்கவில்லை. பங்களாதேஷ் விடயத்தில் இந்தியாவின் அணுகுமுறையில் செல்வநாயகம் ஈர்க்கப்பட்டது போன்றே ஆயுத அமைப்புக்களின் தலைவர்களும் ஈர்க்கப்பட்டனர். இன்றும் தமிழரசு கட்சியின் மூத்த தலைவர்களுடன் வட்டுக்கோட்டை குறித்து பேசினால் அவர்களின் பதில் – இந்தியாவிற்கு தேவையாக இருந்திருந்தால் அது சாத்தியப்பட்டிருக்கும் என்று சாதாரணமாக பதிலளிப்பதை நான் கேட்டிருக்கின்றேன். இன்றும், செல்வநாயகத்தை விட்டுக்கொடுக்காமல் பேசும் ஒரு போக்கே காணப்படுகிறது. ஆனால், இலங்கை தொடர்பில் இந்தியாவிற்கு அப்படியொரு தேவை இருந்ததா? செல்வநாயகம் இலங்கை நிலைமையை பாகிஸ்தான் நிலைமைகளோடு பொருத்தி பங்களாதேஷினால் ஈர்க்கப்பட்டிருப்பாராயின், அதனை ஒரு சரியான கணிப்பென்று நாம் குறிப்பிட முடியுமா?

ஆனால், இந்தியாவின் நேரடியான தலையீட்டுக்குப் பின்னர் அனைவருக்கும் ஒரு விடயம் வெள்ளிடைமலையானது. அதாவது, இந்தியா இலங்கையை உடைக்கும் நோக்கில் தலையீடு செய்யவில்லை. அவ்வாறு செய்யப்போவதுமில்லை. இந்த பின்புலத்தில் 1987இற்கு பின்னர் புலிகள் தவிர்ந்த பிரதான இயக்கங்கள் அனைத்தும் ‘தமிழீழம்’ என்னும் நிலைப்பாட்டிலிருந்து விலகிக் கொண்டன. இந்தியாவை பகைத்துக் கொண்டு பயணிக்க முடியாது என்னும் யதார்த்தத்தையும் உணர்ந்துகொண்டன. ஆனால், பிரபாகரன் மட்டும் செல்வநாயகத்தின் ஏட்டுச் சுரக்காயை கைவிடவில்லை. இந்தியாவை எதிர்த்தும் தன்னால் நிற்க முடியுமென்னும் வீறாப்பு வாதத்திற்குள் விழுந்தார். இந்த இடத்திலிருந்துதான் பிரபாகரனின் தவறுகளால் மட்டுமே தமிழர் அரசியல் ஆளப்படும் நிலைமை தோன்றுகின்றது. ஆனால், ஆரம்பத்தில் இந்தியா பிரபாகரனுக்கே பிரதான இடத்தைக் கொடுத்தது. அமிர்தலிங்கத்திற்குக் கூட அத்தகையதொரு பிரதான இடத்தை ராஜீவ்காந்தி கொடுத்திருக்கவில்லை. மாகாணசபை நிர்வாகத்தை பொறுப்பேற்றுக்கொண்ட ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியை இந்தியா ஆரம்பத்தில் ஒரு விடயமாகவே கருத்தில் எடுத்திருக்கவில்லை. அந்தளவிற்கு பிரபாகரன் மீதே இந்தியா அதிக ஆர்வத்தைக் காண்பித்தது. இதற்கு அன்றைய சூழலில் பிரபாகரன் இராணுவரீதியாக பலமாக இருந்ததே காரணம். பிரபாகரன் தனது எதேச்சாதிகார அணுகுமுறையின் ஊடாக ஏனைய இயக்கங்களை தடைசெய்து தன்னை பிரதான இடத்திற்கு கொண்டுவருவதில் வெற்றிபெற்றிருந்தார் என்பதே உண்மை. இது குறித்து பிறிதொரு இயக்கத்தின் மூத்த தலைவர் குறிப்பிடும்போது, அன்று இந்தியா பிரபாகரனை தனித்து நோக்கியதற்கு அவரது பலம் மட்டுமல்ல காரணம், அன்று, தமிழ் இயக்கங்களை கையாளும் பொறுப்பிலிருந்த இந்திய உளவுத்துறை அதிகாரியான சந்திசேகரனுக்கு பிரபாகரன் மீதிருந்த தனிப்பட்ட விருப்பமும் ஒரு காரணம் என்கிறார் அவர். அன்று இந்திய தூதுவராக இருந்த, ஜே.என்.தீட்சித் கூட பிரபாகரன் மீதுள்ள ஈடுபாட்டை பதிவு செய்திருக்கிறார். ஆனால், இவையெல்லாம் பிரபாகரன், இந்தியாவை விரோதித்துக்கொள்ளாத வரைதான் நீடித்தது. இந்தியாவை விரோதித்துக் கொண்டு தன்னால் தமிழீழத்தை காண முடியுமென்று பிரபாகரனை நம்பச் செய்தது எதுவென்று விளங்கவில்லை. அதனை ஒரு அரசியல் கற்றுக்குட்டித்தனம் என்றுரைப்பதைத் தவிர வேறு ஏதும் விளக்கங்கள் இருக்க முடியுமா?

ஆனால், இந்த இடத்திலும் பிரபாகரனை ஆகர்சித்துக் கொண்டிருந்தது செல்வநாயகத்தின் அந்த ஏட்டுக்சுரக்காய்தான். இந்த இடத்தில் சுமந்திரன் எழுப்பியிருக்கும் ஒரு கேள்வியை இணைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. 1981இல் மாவட்ட அபிவிருத்திச் சபை முறைமையை ஏற்றுக்கொண்டு அதன் பின்னர் 1987இல் மாகாணசபை முறைமையை ஏற்றுக்கொள்ள மறுத்ததில் த.வி.கூ. தலைவர்கள் தவறிழைத்தார்களா? நிட்சயமாக தவறுசெய்துள்ளனர்.

1977ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தனிநாட்டு கோசத்தை முன்வைத்து அமோக வெற்றியீட்டிய தமிழர் விடுதலைக் கூட்டணியானது பின்னர் 1981ஆம் ஆண்டில் மாவட்டசபை (District Council) முறைமையை நோக்கி கீழறங்குகிறது. இந்த வரலாற்று தருணத்தில் செல்வநாயகத்தின் கொள்கை முன்னெடுப்பாளரான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், கூட்டணியை வழிநடத்திக்கொண்டிருந்தார். செல்வநாயகத்தின் கொள்கை முன்னெடுப்பாளரான அமீரால் எவ்வாறு இத்தகையதொரு தலைகீழ் நிலைக்கு சடுதியாகச்செல்ல முடிந்தது? ஆனால், இத்தகையதொரு தலைகீழ் கொள்கை நிலைக்குள் பிரவேசிக்க முடிந்த அமிர்தலிங்கத்தால் ஏன் 1987இல் மாகாணசபையை ஏற்க முடியாமல் போனது?

இந்த இடத்தில் செல்வநாயகத்தின் அரசியல் வளர்ப்பு பற்றியும் சிறிது நோக்க வேண்டியிருக்கிறது. உண்மையில் செல்வநாயகத்தின் அரசியல் கொள்கை தொடர்பில் குறிப்பிடும் வில்சன், ஒரு சட்டத்தரணி, அத்துடன் அரசியல்வாதி என்னும் வகையில் செல்வநாயகம் ஒரே பாய்ச்சலில் (Single Leap) தனது இலக்கை அடைந்துவிட முடியுமென்று நம்பியிருக்கவில்லை. மாறாக, ‘இப்பொழுது கொஞ்சம் பின்னர் அதிகம்’ (Little now and more later) என்பதே செல்வாவின் கொள்கையாக இருந்தது, என்கிறார். அதேவேளை, கேக் கிடைக்கவில்லை என்பதற்காக பானை நிராகரிக்கக் கூடிய ஒருவராகவும் அவர் இருந்திருக்கவில்லை (He would not refuse bread if cake was not offer)  என்றும் வில்சன் குறிப்பிடுகின்றார். இந்த அடிப்படையில் நோக்கினால், செல்வநாயகம் ஒரு உறுதியான நிலைப்பாட்டுடன் ‘தனிநாடு;’ குறித்துச் சிந்தித்திருக்கவில்லை என்பது துலாம்பரமாகின்றது. தனிநாடு கிடைத்தால் நல்லது இல்லாவிட்டால் குறைவான ஏதாவதொன்று கிட்டட்டும் என்னும் மனோநிலையே செல்வநாயகத்திடம் இருந்திருக்க வேண்டுமென்னும் முடிவுக்கே நாம் வரவேண்டியிருக்கிறது. ‘தனிநாடு’  என்னும் கோசத்தை கையிலெடுப்பதன் ஊடாக கொழும்பு தன்னை நோக்கி இறங்கிவரலாம் என்னும் கணிப்பும் செலவநாயகத்திடம் இருந்திருக்கலாம். ஒரு ஊடகவியலாளரின் கேள்விக்கு (தமிழர் விடுதலைக் கூட்டணி அதன் இலக்கை அடைவது எவ்வாறு/ How the TULF archive it’s goal) அவரளித்த பதில், அதனையே வலியுறுத்துகின்றது. நாங்கள் கொடுத்திருக்கும் இந்த தொந்தரவால் அவர்களே எங்களை வெளியில் தூக்கி வீசுவார்கள். (We would make such a nuisance of ourselves that they would throw out us). எனவே, (செல்வநாயகத்தின் கொள்கையின்படி) தனிநாட்டை விட்டுவிட்டு கீழறங்குவதானது, அமிர்தலிங்கத்தைப் பொறுத்தவரையில் தவறானதல்ல, அதாவது, முதலில் ‘கொஞ்சம் பின்னர் அதிகம்’. ஆனால், அதே அமிர்தலிங்கம் ஏன் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் ஊடான மாகாணசபையை பொறுப்பெடுக்க மறுத்தார். அமிர்தலிங்கம் பொறுப்பெடுக்க மறுத்த பின்னனியிலேயே ஈ.பி.ஆர்.எல்.எப். அந்த இடத்திற்கு வரநேர்ந்தது. அமிர்தலிங்கம் அன்று மகாணசபையை ஏற்க மறுத்ததன் பின்னனியில் ஒரேயொரு காரணமே இருந்தது, அதாவது, பிரபாகரன் கொலை செய்துவிடுவார் என்னும் அச்சம். ஆனால், அதன் பின்னராவது அமிர்தலிங்கத்தை பிரபாகரன் விட்டுவைத்தாரா?

இந்த இடத்தில் அமிர்தலிங்கம் பற்றிய செல்வாவின் கணிப்பும் பொய்த்துவிட்டது. அமிர் பற்றி செல்வா இவ்வாறு கூறிச் செல்கின்றார். தமிழரசு கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்று இப்போது அதைக்கொண்டு நடத்தும் அமிர்தலிங்கத்திடம் நான் காணும் முக்கிய சிறப்பியல்பு அவரது அஞ்சாமையாகும். மிகப் பலம் வாய்ந்த எமது எதிரியாகிய இலங்கை அரசை எதிர்த்து நாம் போராடுவதற்கு அஞ்சா நெஞ்சம் படைத்தவர்களே வேண்டும்.

உண்மையில் 1984களுக்குப் பின்னர் இலங்கை அரசை எதிர்ப்பதைக் காட்டிலும், பிரபாகரனை எதிர்த்து நிற்பதற்கே அதிக அஞ்சாமையுணர்வு தேவைப்பட்டது. ஆனால், அந்த அஞ்சாமையை வெளிப்படுத்துவதில் அமிர் தோல்விடைந்தார். ஆனால், பிரபாகரனுக்கு அஞ்சி அமிர்தலிங்கம் உள்ளிட்ட தலைவர்கள மாகாணசபையை பொறுப்பேற்க மறுத்தமையானது, ஒரு வரலாற்று தவறென்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. அமிர்தலிங்கம் போன்றதொரு தலைவர் அதனை பொறுப்பேற்றிருந்தால் நிலைமைகள் வேறுவிதமாக அமைந்திருக்கும். பிரேமதாச அரசும், தான் நினைத்த மாத்திரத்தில் அதனை கையாண்டிருக்க முடியாது போயிருக்கும். பிரபாகரனுக்கு அஞ்சித்தான் மிதவாதிகள் மாகாணசபையை எதிர்ப்பதாக பாசாங்குசெய்தனர் என்பது இன்று வெள்ளிடைமலையாகியுள்ளது. ஏனெனில், புலிகளின் அழிவுக்கு பின்னர்தான் மாகாணசபையையும் சாதகமாக கைக்கொள்ள வேண்டுமென்னும் சிந்தனை தமிழ் சூழலில் முளைவிட்டிருக்கிறது. பிரபாகரன் மாகாணசபையை ஏற்க மறுத்தது எந்தளவு ஒரு வரலாற்றுத் தவறோ, அதேயளவு அமிர்தலிங்கம் மாகாணசபையை ஏற்க மறுத்ததும் ஒரு வரலாற்றுத் தவறே ஆகும்.

இன்று நிலைமைகளை திரும்பிப் பார்த்தால், பிரபாகரனே துருத்திக் கொண்டு தெரிகிறார். ஆனால் பிரபாகரன் போன்ற ஒருவரது உருவாக்கத்தில் மிதவாதிகளுக்கும் கணிசமான பங்குண்டு. குறிப்பாக வன்முறை அரசியல் இறுதியில் ஒரு கட்டற்ற வன்முறையாக உருவெடுத்ததில் மிதவாதிகளுக்கும் பங்குண்டு. நமது கொள்கைக்கு மாறானவர்கள் இயற்கையான மரணத்திற்குரியவர்கள் அல்லர் என்னும் புரிதலை இளைஞர்களுக்குள் விதைத்தவர்கள் செல்வநாயகத்தால் வளர்க்கப்பட்ட மிதவாதிகளேயன்றி வேறு எவருமல்ல. துரோகிகளை அழித்தொழித்தல் என்பதற்கான பாலபாடத்தை பிரபாகரன் மிதவாதிகளிடமிருந்தே கற்றுக்கொண்டார். யாழ்ப்பாண மேயர் அல்பிரட் துரையப்பாவை நோக்கி தாங்கள் வீசிய பிரபாகரன் என்னும் பூமறாங், இறுதியில் அமிர்தலிங்கத்தின் கழுத்தையும் சீவிச் சென்றபோதுதான் தமிழ் வன்முறையரசியலின் கோர முகத்தை மிதவாதிகள் புரிந்துகொண்டனர். அமிர்தலிங்கம் குறித்த சுயசரிதையை (The murder of a moderate) எழுதிய சபாரத்தினம், தன் முன்னுரையை ‘அவர்கள் ஏன் அவர்களை (அமிர்தலிங்கத்தை) கொன்றனர்’ என்னும் தலைப்பில் எழுதியிருக்கிறார். இப்படியொரு கேள்வியை எந்தவொரு மிதவாதியாவது, துரையப்பா விடயத்தில் எழுப்பியதுண்டா? எங்களால் போற்றப்பட்டது, பின்னர் எங்களை நோக்கியும் வந்தது.

இது குறித்து இன்னும் நீட்டிச் செல்லலாம். ஆனால், இங்கு சுமந்திரனால் முன்கொண்டுவரப்பட்ட சில கேள்விகளை அடியொன்றியே எனது சில அவதானங்களை இங்கு பதிவு செய்திருக்கின்றேன். சுமந்திரன் ஒரு முக்கியமான காலகட்டத்தில் சில அடிப்படையான கேள்விகளை தமிழர்கள் முன் வைத்திருக்கின்றார். இது குறித்து ஒரு பரந்த உரையாடல் தமிழ்ச் சூழலுக்கு அவசியம் என்னும் அடிப்படையில்தான் நான் இங்கு சில விடயங்களை சுட்டிக்காட்டியிருக்கின்றேன். இது எனது அவதானம், முடிந்த முடிவல்ல. எங்கு அது நம்மை கொண்டு சேர்ப்பிக்கும் என்றறியாமல் நாம் தொடங்கிய பயணத்தின் பாதையை திரும்பிப்பார்க்க நம்மால் முடியுமானால், இது குறித்து ஒரு விவாதத்தை முன்னெடுப்பதில் நாம் தயக்கம்கொள்ள வேண்டியதில்லை.

சமகாலம் – 2014, ஜனவரி

யதீந்திரா

DSC_4908