நாம் வாழும் இயற்கை என்பது ஒரு கண்ணாடிவெளி, இயற்கையை நாம் எப்படிப் பார்க்கிறோமோ அது எங்களை அதே மாதிரியான தோற்றநிலையில் அவதானிக்கும். ‘நெபுலா’ வெடிப்பில் உருவான பூமி ஆரம்பத்தில் ஒரு தனியுருவற்ற திண்மமாக இருந்தது, ஒரு குளிர்த்திண்மம். ஆனால், அது தன்னை அழகாக்க ஆழ்நிலையில் வெப்பத்தை கொண்டு குமுறிக்கொண்டிருந்தது. அந்த வெப்ப அழுத்தமே எரிமலையாய் வெடித்தது. கார்பன்டை ஒக்சைட் (co2)
நீராவியை அதிகளவிலும், மிதேன் அமோனியாவை சிறிதளவிலும் தோற்றுவித்த மாற்றம் இதுதான், அந்தப் பூமியில் ஒட்சிசன் இல்லை, மக்கள் இல்லை, இயற்கை இல்லை, படைத்தலின் சூட்சுமம் மட்டுமே நிரம்பி வழிந்தது. அந்த ஆரம்பத்தில் இருந்த நீராவி தான் காலப்போக்கில் நீராக மாறி முதல் நீர்நிலை, அதாவது சமுத்திரம் தோன்றியது, நாம் எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா இந்த பூமியை கோளமென சொல்லும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், பூமியின் குழிகள் நீர்க்கொண்டு நிரப்பப்படாதவிடத்து இந்த பூமிக்கு ஒரு அழகானகோள நிலை கிடைத்திருக்குமா என்று. உலகையும் உடலையும் முழுமையாக்குவதே நீர். பின்னர் நடந்த இரசாயனத்தாக்கங்களால் பூமியின் முதலுயிரான சயனோ பக்ரீரியா நீரிலே தோன்றியது. அந்த ஒரு உயிர்தான் நமது ஆரம்பம். அந்த உயிரிலிருந்துதான் இன்றைய அனைத்தும். இயற்கை என்பதன் தோற்றம் வெறும் நெருப்பு கோளில், யார் தான் வாழமுடியும். எல்லாமே பூமியின் முதல் மழையாய் இருந்தது.
பிறகொரு நாள் ஒரு மனிதன் தோன்றினான். அவன் இயற்கையை நேசித்தான். இயற்கையின் ஒவ்வொரு நிலையையையும் தன்னுடன் இணைத்துக்கொண்டான். நீரை, நெருப்பை, ஆகாயத்தை, நிலத்தை, காற்றை, மரம், செடி, கொடிகளை வணங்கினான். அப்போது தோன்றியது தான் அந்தக்கல்லின் கதை, பூமியின் தோற்றத்தில் ஒரு கல் இருந்தது.
அது எப்போதும் நீர்நிலைகளை அண்டிய பகுதிகளிலயே இருந்தது. நாகரீகம் என்பதன் உருவாக்கமென்பதே நீரை அடிப்படையாக கொண்டு இருந்தபோதும், நீரை சார்ந்திருந்த அந்த கல்லின் வளர்ச்சி மிகப்பெரியது. அது மனிதர்களின் நாகரீகத்துக்குள் புகுந்து கொண்டது. ஆரம்பத்தில் மரம், செடி, கொடிகளிலால் கூடாரம் அமைத்த மனிதன் நாகரீகப்பாதையின் அடுத்தபடி நிலையாக கற்களால் வீடுகளை கட்டுவித்தான், கல் மீதான கவர்ச்சி மனிதனிடம் இயற்கையை மறக்கச்செய்தது. நாகரீக மனிதனிடம் கல்லே கடவுளானது. இயற்கையை கல்லின் கோவமெனச்சாடினான். இயற்கைக்கும் மனிதனுக்கும் மிகப்பெரிய தூரம் உருவானது. இயற்கை எப்படி தன்னைத்தானே செதுக்குகின்றதோ அதேபோலதான், அது புறக்கணிக்கப்படும் போது தன்னைத்தானே அழித்துக்கொள்கிறது. இயற்கை வாழ்க்கையாக இருக்கிறது.
இதே இயற்கையின் ஒரு மர்ம அழிவுதான் யாழ்ப்பாணத்தின் நீர்ப்பிரச்சினைகளின் மைய ஊற்று. பூமியின் கடல் நீர் என்பது 98% வீதமாக இருக்கும் அதேவேளை 2% தான் நன்னீராக இருக்கின்றது. இந்த ஒரு அளவீட்டிலிருந்தே நன்னீர் என்பது எவ்வளவு அரிய வளம் என்பதை உணர்ந்து கொள்ளமுடிகிறது. அதேவேளை, பூமியின் அளவில் நிலத்தடி நீர் என்பது ஒரு முக்கியமான கூறாகவிருக்கும் அதேவேளை, புவியின் நன்னீர் அளவில் 70% பனிக்கட்டியால் சூழப்பட்டும் 29% நிலத்தடி நீராகவும், மீதி நன்னீர் ஏரிகளும் நன்னீர் வளங்களாகவும் காணப்படுகின்றன. அதேவேளை, உலகில் உள்ள 30%மான மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை என்பதும் வெளிப்படை உண்மையாகும். இலங்கையை பொறுத்தவரை 870 சதுர கி.மீ. பரப்பளவில் நீர்வளத்தைக் கொண்டிருந்தாலும் 25 மாவட்டங்களில் 16 மாவட்டங்களிலுள்ள மக்களில் 30% மாணவர்கள் பாதுகாப்பான குடிநீரை உபயோகப்படுத்துவதில்லை. இங்கு நிலக்கீழ் நீரென்பது புவியின் நிலப்பரப்பினடியில் பொதிந்து காணப்படும் நீர்வளமாகும். யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் கடந்த சில வருடங்களாக வெவ்வேறு பிரதேசங்களில் வெவ்வேறு வகையான நீர் சம்பந்தமான பிரச்சினைகளை அவதானிக்கலாம். ஆரம்பத்தில் முறையற்ற விவசாய நடவடிக்கைகளால் யாழ்ப்பாணத்திலும் கற்பிட்டியிலும் நிலத்தடி நீரினுள் நைதரசன் இரசாயனக் கழிவுகள் பரவிய அதேவேளை, தொழிற்சாலைகள் சன நெரிசல் அதிகமாக இருந்த கொழும்பு நகரப்பகுதிகளிலும் அதிகளவு நிலத்தடி நீர் மாசடைதல் கணிசமாக ஏற்பட்டுக்கொண்டிருந்தது. யாழ்ப்பாண விவசாயம் எனும்போது அது மிக அதிகளவாக இந்நீர் வளத்தை கொண்டே செழிப்புறுகிறது. மறுபுறம் பாதுகாப்பற்ற விவசாய நடவடிக்கைகள் அதிகளவான செயற்கை உரப்பாவனை. சாப்பிடும் உணவு, மரக்கறிகளை விட யாழ். நகரவாசி ஒருவன், பாதுகாப்பற்ற இந்த விவசாய நடிக்கைகளால் அதிகளவு நைத்திரேட்டு நீரைக்குடிக்கிறான் என்பது, அறிந்து கொள்ள முயற்சிக்காத உண்மை. மறுபுறம் மலக்கழிவு நீர்ப்பிரச்சினையின் தாயகமும் நமது யாழ்ப்பாணமே. யாழ்ப்பாணத்தான் செலவுக்கு பயந்து நோயை வாங்கிக்கொள்பவன் என்பது இந்த மலக்கழிவு சேர்தல் பிரச்சினை விளக்கும், காரணம், மலக்குழியை துப்பரவாக்க அதிக செலவாகும் என்ற நோக்கம் கருதி மலக்குழியின் அடிப்பகுதியையும் கரைப்பகுதியிலும் யாழ்ப்பாணத்திலுள்ள கணிசமான வீட்டுக்கார்ர்கள் சீமெந்து பூசாமலே விட்டுவிடுவார்கள். மலம் நிலத்துடன் கலக்கும் அது நிலக்கீழ் நீருடன் சேரும். மனித மலத்திலுள்ள கொடிய அரக்கனே ஈ – கோலை ( e-coli) பக்ரீரியா வகையைச் சேர்ந்தது. அது நீருக்குள் கலந்து அதை அருந்தும் போது உடலுக்குள் சென்று சமிபாட்டுத்தொகுதி நோய்களையும், சிறுநீரகக் கோளாறுகளையும் ஏற்படுத்திவிடுகிறது. இறுதியாக கிட்னிக்காக லட்சக்கணக்கில் காசு செலவளிக்க பத்திரிகையில் விளம்பரம் கொடுப்பவர்களும் உண்டு. யாழ்ப்பாணத்தில் மலக்கழிவு கலந்த பிரச்சினை பல ஆண்டுகளாகவே இருக்கின்றது. கார்டியா, ஈ-கோலை (gardia, e-coli) போன்ற நுண்ணங்கிகள் அவதானிக்கப்பட்டும் யாழ். மக்கள் மேலும் மேலும் அதே தவறை செய்வது வருத்தத்திற்குரியது என்பதை தவிர என்ன சொல்லிவிட.
தண்ணிய சுடவச்சாவது குடிப்பம் என்ட அறிவும் மக்களுக்கு உருவாவது கஸ்ரம் தான். மக்களுக்கு இருக்கிற இன்னொரு அனுமான பிரச்சினை கிணறை சுத்தமாக்கிறதுக்கு பயன்படுத்திற குளோரின் அளவு தான். மக்கள் எந்த வெளிற்றும் தூளை மலசலகூடம் சுத்தமாக பாவிக்கின்றார்களோ, அதே தூளை கிணற்றுக்குள் போட்டுவிடுவார்கள் கேட்டால் கிணறில இருக்கிற பாசியையும் நுண்ணங்கியையும் அழித்துவிடும் என்பார்கள். உண்மையாக கிணற்றுக்குள் இருக்கும் நுண்ணங்கிகள் எத்தனை வகையானவை என்பது பற்றிய பார்வையும் அவசியம் தானே. அழியும் நுண்ணங்கிகளில் நீரின் அசுத்தங்களை பிரிகையடைய செய்யும் நுண்ணங்கிகளும் இறந்து போகும் என்பது வெளிப்படை உண்மை. அதேவேளை, சரியான அளவு இல்லாத குளோரின் செறிவு நீரை அருந்தும் எமது குடலையும் பாழ்படுத்திக்கொண்டிருக்கிறது என்பதையும் உணரவேண்டும். யாழ்ப்பாண நீரை பொறுத்தவரை நன்னீர் வற்றிப்போதல், நன்னீர் உவராதல், நன்னீர் மாசடைதல் போன்ற பிரச்சினைகளின் அடித்தளம் எப்போதோ இடப்பட்டுவிட்டது அதுவும், நம்மாலயே ஏற்பட்டு விட்டது, விவசாயத்திற்கான கிணறுகளை அதிகளவாக தோண்டிவருவதால் நீர் வற்றிப்போதலும் ஏற்பட்டுவிட்டது. சனத்தொகை வளர்ச்சின் மூலம் நீர்ப்பாவனை அதிகரிப்பதால் ஏற்கனவே யாழ்ப்பாண கரையோரப்பகுதிகளில் நீர் உவராதலும் ஏற்பட்டுவிட்டது. இப்போதோ புதுப்பிரச்சினையாக உருவாகியிருப்பது சுன்னாகம், அதையண்டிய பகுதிகளில் ஏற்பட்ட நீரில் எண்ணெய் கலந்த பிரச்சினை.
பிரச்சினையொன்று ஏற்படும் முதலோ அது வளர்ந்து பெரிதாகும் வரையோ, மக்கள் அதை செய்தியாக கேட்கவே பிரியப்படுவார்கள். எண்ணை கலத்தல் பிரச்சினை என்பதற்கு ஆரம்பத்தில் ஒரே காரணத்தை கூறினாலும், அதாவது நொதேர்ன் பவர் நிறுவனத்தின் கழிவுகளால் அது சேர்ந்ததென்று, தற்போது அது வதந்தி எனவும் மறுக்கப்பட்டு வருகின்றது. இது எந்தளவுக்கு உண்மை என்ற விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் போதே இது அந்த பிரதேசத்தில் உள்ள வாகன, இயந்திர பழுது பார்க்கும் நிறுவனத்தின் கழிவு எண்ணைகளால் வந்த பிரச்சினை என்பதும் சில அரசியல் பிரமுகர்களினதும் கருத்து. இன்னொரு விதமான கருத்தாக காங்கேசன்துறை பகுதிகளில் முன்னாள் ஜனாதிபதிக்கு நெருக்கமாக இருந்த ஒரு சர்வாதிகார அரசியல் கட்சியின் உதவியுடன், சில விசமிகளால் நடத்தப்பட்ட முறையற்ற மண் அகர்வால் ஏற்பட்ட பாதிப்பு என்ற ஊகமும் இருக்கின்றது. அதே கட்சி அதை மறுத்து இது புலிகள் யாழ்ப்பாணத்தில் ஏற்படுத்திய விளைவு என்றும் பகிரங்க அறிவித்தல்களை மக்கள் மத்தியில் விதைத்தபடி இருக்கிறார்கள். நீர்ப்பிரச்சனை என்பது உலக அரசியலுக்கே அப்பாற்பட்டது என்றபோது, மக்கள் இப்படியான கருத்துக்களிலும் தெளிவின்மையிலும் சிக்கி ஒரு விரக்தியான மனநிலையிலே காணப்படுகின்றனர். இனி மக்கள் இது பற்றி எப்படியான பார்வையுடன் இருக்கின்றார்கள் என்பதை அறிதல் அவசியமாகும்.
இந்த எண்ணை கலத்தல் பிரச்சினையானது, யாழ்ப்பாணத்தில் சுன்னாகம், இணுவில், ஏழாலை, மல்லாகம், தெல்லிப்பழை, கட்டுவன், அளவெட்டி, இளவாலை போன்ற இடங்களில் அடையாளங் காணப்பட்டதுடன், இங்கே ஆரம்பத்தில் சுன்னாகத்திலுள்ள கிணறுகளில் இந்தப் பிரச்சினை அடையாளங் காணப்பட்டதால் அந்த பிரதேசத்தில் அமைந்துள்ள நொதேர்ன் பவர் நிறுவனம்தான் அதற்கு காரணம் என்று ஊகிக்கப்பட்டது. ஆனால், இந்தப் பிரச்சினை இப்போது பெரிய பிரச்சினையாக உருமாறி அந்தப் பிரதேச நீரானது பாவனைக்கு உதவாத நீர் என்று தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. இருந்தும் அந்த நீரிலையே மக்கள் குளிக்கவும் சமைக்கவும் செய்வதை தடுக்கமுடியாமல் உள்ளது. அதாவது, நீரை கடைகளில் வாங்கும் செலவை மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்பதே உண்மை. குழந்தைகளுக்கு மினரல் வோட்டரில் குளிப்பாட்டுபவர்களும் உருவாகியிருக்கின்றார்கள். சுன்னாகம் சார்ந்த பிரதேசங்களிலும், ஏன் யாழ்ப்பாணத்திலும் கூட தொண்டை, வயிறு சம்பந்தமான புற்றுநோய்கள் ஏற்படுவதாகவே வைத்திய நிபுணர்களின் கூற்றாக இருக்கிறது. இது இந்த எண்ணை பிரச்சினையின் ஆரம்பகால விளைவு என்று கூட பலரின் கருத்தாக உலவிவருகின்றது.
இந்த நீரில் எண்ணை எப்படிக் கலந்திருக்கின்றது என அவதானிக்கும் போது அது பிரதேச வாரியாக வித்தியாசமான தன்மைகளில் அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. சில கிணறுகளில் செறிவாகவும், சில கிணறுகளில் சாதாரணமாக புலப்படகூடிய வகையிலும் இருக்கின்றது.
மக்களின் உணர்வுதளங்களில் தற்போதைய சூழ்நிலை
“தம்பி என்ர தண்ணி இது. இத தான் நான் குடிப்பன், சாகும் வரை. குடிப்பன் என்றா” ஒரு அறுபது வயதான அம்மா. “அண்ணா முந்தியெல்லாம் ஏழாலைக்காரன் புங்குடுதீவோ, நயினாதீவுப் பக்கமோ போனா எங்கள கிணறு காவியள் என்டு சொல்லுவினம், அவ்வளவு அற்புதமான தண்ணி எங்கட. இப்ப எங்கட நிலய பாத்து சிரிக்கினம். எங்கட கிணறுகள் அழிஞ்சு நாசமா போச்சுது, எங்க இருந்தும் குழாயில் தண்ணி கொண்டரலாம், எங்கட கிணறுகள் எங்களுக்கு திருப்பி கிடைக்குமே?” ஓம் உண்மையாகவே கிணறுகள் என்பது ஒரு மரபுச்சின்னம், கிணறு ஒரு வீட்டில் இருந்தால் அது அற்புதமான நிலத்தடி நீரை வழங்கும் அட்சயபாத்திரங்களாகவே கருதப்படும். எங்கட வீட்ட ஒரு கிணறு இருக்கு என்பது பெருமைக்குரிய ஒரு விசயம். அவையெல்லாம் இனி இல்லாமலே போகப்போகின்றது எனும்போது அவர்களின் மனநிலை எப்படியிருக்கும். அதை தான் இந்தப் பிரச்சினை மக்களுக்கு வழங்கியிருக்கிறது. தீர்வாக எத்தனை பவுசர்களில் நீர் வந்தாலும், ஒருவாளிக் கிணற்று நீரை ஈடுசெய்யமுடியுமா? நாங்கள் குளித்த கிணறுகள், சமைத்த கிணறுகள் நஞ்சாகிவிட்டது எனும் சொல்லை எத்தனை பேரால் ஜீரணிக்க முடிகிறது.
எத்தனை தாய்களின் முலைகளுக்குள்ளால் இனி ஆர்சனிக் கசியும், எத்தனை ஆண்கள் இனிப் பேடியாவார்கள்? எத்தனை குழந்தைகளின் புன்னகை இனி விகாரமடையும்? உங்களால் உணரமுடிகிறதா? இது தான் இப்போது யாழ்ப்பாணத்தை பாதித்துக்கொண்டிருக்கும் இயற்கையின் விகாரம். ஒரு சில இடங்களில் விளையாடும் குழந்தைகளை பார்க்கும் போது அவர்களது உடலில் எத்தனை புண்கள். அவர்களுக்கு இனி என்ன தேவை? பாதிக்கப்பட்ட நமக்கு இனி என்ன தேவை? நல்ல நீரும் அதற்கான தீர்வும். யாரைக் குற்றவாளியாக்குவது என்பதைவிட எதை செய்யலாம் என்ற தெளிவான சிந்தனையுடன் இருப்பதே நமக்கு அவசியம்
இயற்கையை இனியாவது குழந்தையாக அணைத்துக்கொள்ளுவோம். அது எமது கண்ணீரை ஒரு புன்னகையால் துடைக்கும்.
(சுன்னாகத்தில் கிணறை இழந்தோருக்கு)
ஆதி பார்த்தீபன்