படம் | jdsrilanka

தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் முறை மக்கள் மத்தியிலும் அரசியல் கட்சிகளிடையேயும் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி விடுகின்றன. ஆனால், அது அரசுக்கு வாய்ப்பாக அமைந்து விடுகின்றது. ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், உள்ளூராட்சி தேர்தல், மாகாண சபைத் தேர்தல் என நான்கு தேர்தல் முறைகள் உள்ளன. இவற்றில் ஏதேனும் ஒரு தேர்தல் ஒவ்வொரு ஆண்டும் மாறி மாறி வந்து விடுகின்றன. ஒரே நேரத்தில் அனைத்து தேர்தல்களையும் நடத்தி முடிக்கும் திட்டம் அரசிடம் இல்லை. அதற்கு இரண்டு காரணங்களை கூறலாம். ஓன்று தேர்தல் அடிக்கடி நடைபெற்றால்தான் மக்களை உசுப்பேத்தி செல்வாக்கை தங்கள் பக்கம் வைத்திருக்கலாம். இரண்டாவது எதிர்க்கட்சிகளை பலவீனமாக்குவது. இந்த இரண்டு அணுகுமுறைகளையும் ஒவ்வொரு தேர்தல் நடைபெறும்போது காணலாம்.

ஆதரவை பெற முயற்சி?

இந்த நான்கு தேர்தல் முறையினாலும் ஒவ்வொரு அரசியல் கட்சிகளின் தனித்துவமும் இழக்கப்படுகின்றன. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் தென்மாகாண சபை, மேல் மாகாண சபை ஆகியவற்றின் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. அதனையடுத்து ஜனாதிபதி தேர்தலும் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் காரணத்தினால் தற்போது அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பை பெறுவதில் அரசு முனைப்பு காட்டியுள்ளது. குறிப்பாக அரச பங்காளிக்கட்சிகளின் ஆதரவு ஏற்கனவே இருந்தாலும் தொகுதிப் பங்கீடுகள் தொடர்பாக பேச்சுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை தலைமையாக கொண்டு செயற்படும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஒவ்வொரு தொகுதியிலும்; கூடுதல் ஆசனங்களை பெறுவது வழமை. ஆனால், இம்முறை தமக்கு பலவீனமான தொகுதிகளில் பங்காளிக் கட்சிகளின் வேட்பாளர்களை நிறுத்துவதில் ஆர்வம் செலுத்துகின்றது.

அதற்கான பேச்சுகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெறுகின்றன. கட்சியின் தலைவர் என்ற முறையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆலோசனைகளும் அவ்வப்போது பெறப்படுகின்றன. கடந்த வெள்ளிக்கிமை இரவு அலரி மாளிகையில் கட்சியின் பிரதேச அமைப்பாளர்களுடனான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. அதில் பங்காளிக் கட்சிகளுக்கு தொகுதிகளை பங்கிடுவது தொடர்பான யோசனை ஒன்றை ஜனாதிபதி முன்வைத்திருக்கின்றார். பலவீனமான தொகுதிகளில் பங்காளிக் கட்சிகளின் வேட்பாளர்களை நிறுத்தவேண்டிய அவசியம் குறித்து இந்த சந்திப்பில் ஜனாதிபதி வலியுறுத்தினார் என அறியமுடிகின்றது.

எதிர்கட்சி உறுப்பினர்கள்

அதேவேளை, ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்குள் உள்வாங்குவது குறித்தும் இந்த சந்திப்பில் பேசப்பட்டிருக்கின்றன. கடந்த தேர்தல்களின்போது ஐக்கிய தேசிய கட்சி, ஜே.வி.பி ஆகியவற்றில் போட்டியிட்டு கூடுதல் வாக்குகளை பெற்றவர்களை தங்கள் பக்கம் எடுப்பது தொடர்பான பேச்சுக்களை முன்னெடுக்க வேண்டிய அவசியம் பற்றியும் வலியுத்தப்பட்டுள்ளது. வடமேல் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவை தங்கள் பக்கம் எடுத்து மூன்று இலட்சம் வாக்குகளை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு பெற்றுக் கொண்டதுபோல மேற்படி இரண்டு மாகாண சபைத் தேர்தல்களிலும் ஐக்கிய தேசிய கட்சியின் செல்வாக்குள்ள மூத்த உறுப்பினர்களை உள்வாங்கும் திட்டம் தற்போது வகுக்கப்பட்டுள்ளன.

அதன் ஒரு கட்டமாகவே ஐக்கிய தேசிய கட்சியின் மேல்மாகாண சபை உறுப்பினர் ஒருவர் கடந்த வாரம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைத்துக் கொள்ளப்பட்டார். இது அமைச்சர் மைத்திபால சிறிசேனவின் முயற்சிகளில் ஒன்றாகும். இது தொடர்பாகவும் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற சந்திப்பில் பேசப்பட்டிருக்கின்றது. இந்த நான்கு தேர்தல் முறைகளும் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில் இருந்த காலத்தில் இருந்து கடந்த 26 வருடங்களாக நடைமுறையில் இருந்து வருகின்றன. எதிர்க்கட்சி உறுப்பினர்களை உள்வாங்கும் திட்டம் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில் இருந்த காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வருகின்றன. ஆனாலும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான கூட்டு அரசாங்கம் 1994ஆம் ஆண்டு பதவிக்கு வந்த காலத்தில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்களை தேர்தல் காலங்களில் உள்வாங்கும் திட்டம் தீவிரமாகவும் சட்டத்திற்கு முரணாகவும் பின்பற்றப்பட்டு வருகின்றன.

நீதிமன்ற தீர்ப்புகள்

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரசு பக்கம் மாறிச் சென்றால் கட்சியின் தலைமை நீதிமன்றத்தில் அந்த உறுப்பினருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யும். அத்துடன், கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவும் நடவடிக்கை எடுத்து அந்த உறுப்பினரை கட்சியில் இருந்து நீக்கும். ஆனால் நீதிமன்ற தீர்ப்புகள் அரசு பக்கம் தாவிச்சென்ற உறுப்பினருக்கு சாதகமாகவே அமைகின்றன. இதனால் எதிர்க்கட்சிகள் எதுவும் செய்ய முடியாது. ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து இதுவரை 21 மூத்த உறுப்பினர்கள் அரசுடன் இணைந்துள்ளனர். அவர்களில் 17 பேர் ஆளும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் அமைச்சர்களாகவும் பதவி வகிக்கின்றனர். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் காலத்தில் இருந்து இந்த நடைமுறை தீவிரமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

 விலைபேசப்படுகின்றனர்

ஆனால், மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசு பதவிக்கு வந்த பின்னர்தான் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் பலர் பணத்துக்கு விலைபேசப்படும் நடைமுறை பழக்கத்துக்கு கொண்டுவரப்பட்டன. நடைபெறவுள்ள மேற்படி இரண்டு மாகாண சபைத் தேர்தல்களிலும் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பணத்துக்கு உறுப்பினர்களை பெறும் செயற்பாடுகள் மேலும் தீவிரமடையாலம் என்பதில் சந்தேகம் இல்லை. ஏனெனில், அரசுக்கு மக்கள் ஆதரவு இருக்கின்றது என்பதை சர்வதேசத்துக்கு காண்பித்து அதன் மூலம் வரவுள்ள கடும் அழுத்தங்களை குறைத்துக்கொள்ள வேண்டிய அவசரத்தேவை அரசுக்கு உள்ளது. அதற்கு இந்த நான்கு தேர்தல் முறைகளும் சாதகமாக அமைந்துள்ளன.

எவ்வாறாயினும், அரசியலமைப்பில் உள்ள ஜனநாயகத்துக்கு முரணான சில விதி முறைகள் குறித்து எதிர்க்கட்சிகளும் பேச மறுக்கின்றன. ஜே.வி.பி பேசினாலும் ஒரு காலத்தில் ஆளும் கட்சியாக வரலாம் என்ற எதிர்ப்பார்ப்புடன் ஐக்கிய தேசிய செயற்படுவதனால் அரசியலமைப்பில் உள்ள ஜனநாயகத்துக்கு முரணான சரத்துக்கள் குறித்து பேசமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுதான் இனப்பிரச்சினையும் தீர்க்கப்படாமல் 60 ஆண்டுகள் சென்றமைக்கும் காரணமாகும்.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சார்ந்த சகல பிரச்சினைகளுக்கும் நடைமுறையில் உள்ள இரண்டாம் அரசியலமைப்புதான் காரணம் என்பதை தெரிந்து கொண்டாலும் அதனை எதிர்த்துப் பேசக்கூடிய ஆற்றல் பிரதான எதிர்க்கட்சிகளிடம் இல்லாமல் போனது ஏன்? அடிப்படையில் இனரீதியாக சிந்திப்பதால் தங்கள் கட்சியின் தனித்துவம் கூட சிதைந்து போகின்றது என்பதை உணரமுடியாத நிலையில் ஐக்கிய தேசிய கட்சி உள்ளது. இதே நிலை ஜே.வி.பிக்கும் உண்டு. அவ்வாறு உணர்ந்தாலும் சிங்கள பௌத்த தேசியவாத சிந்தனையை உயர்வாக கருதுவதனால் அந்த எல்லையை மீறி அவர்களால் எதுவும் செய்ய முடியாதுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் யாப்பு

நடைமுறையில் உள்ள அரசியல் யாப்பின் தந்தை ஐக்கிய தேசிய கட்சிதான். அதனால் ஜனநாயகத்துக்கு முரணாக உள்ள சரத்துகள் பற்றி பேச அவர்கள் விரும்பாமல் இருக்கலாம். இனரீதியான சிந்தனையுடன்தான் தொகுதிவாரி தேர்தல் முறை மாற்றப்பட்டு விகிதாசார தேர்தல் முறை 1982இல் அறிமுகமானது. 6ஆவது திருத்தச்சட்டம், பயங்கரவாத தடைச் சட்டம், பத்திரிகை பேரவை சட்டம், நீதிமன்ற நடைமுறை, வேலை வாய்ப்பு, போன்ற பல சரத்துக்கள் ஜனநாயகத்துக்கு முரணான இனரீதியான ஏற்பாடுகள் என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 2001ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட 17ஆவது திருத்தச்சட்டம் 2010ஆம் ஆண்டு நீக்கப்பட்டு 18ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த ஏற்பாடும் ஏனைய அரசியல் கட்சிகளின் தனித்துவத்துக்கு சவாலானது.

அமரர் ஜே.ஆர்.ஜயவாத்தன இனப்பிரச்சினை என்பதை மையாகக் கொண்டு இனரீதியான கண்ணேட்டத்தில் சட்டங்களை உருவாக்கினார். ஆனால், அந்த சட்டங்கள் சிங்கள அரசியல் கட்சிகளுக்கும் சிங்கள மக்களின் ஜனநாயகத்துக்கும் தற்போது இடையூறாக மாறிவிட்டது. அதனை எதிர்த்து வெகுஜன போராட்டங்களை ஆரம்ப்பிக்கும் தகுதியை இடதுசாரிகளும் இழந்துவிட்டன.

ஞாயிறு தினக்குரல் பத்திரிகைக்காக அ.நிக்ஸன் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.

Nix P0001