பட மூலம், WOSU

பேஸ்புக்கின் இணை ஸ்தாபகரும் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மார்க் சகர்பர்க் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் முன்னிலையில் கடந்த மே மாதம் தோன்றியவேளை அவர் தனது ஸ்தாபனத்தின் மீதான கட்டுப்பாட்டை இழந்துவிட்டார் என அவருக்குத் தெரிவித்திருந்தேன். அவரை நேருக்குநேர் எதிர்கொண்ட ஒரு சில அரசியல்வாதிகளில் நானும் ஒருவன் என்ற அடிப்படையில் அந்த சந்தர்ப்பம் குறித்து நான் மகிழ்ச்சியடைந்திருந்தேன். ஆனால், ஏமாற்றமளிக்கும் விதத்தில் என்னுடைய எந்தக் கேள்விக்கும் நேரடியான வாய்மூல பதில்கள் கிடைக்கவில்லை.

நான் மாத்திரமல்ல, இலாபநோக்கில் பேஸ்புக் பதிலளிக்கும் கடப்பாட்டினை பின்பற்ற தவறுவது குறித்து உலகெங்கிலும் உள்ள அரசியல்வாதிகளும் ஏமாற்றமடைந்துள்ளனர். பேஸ்புக்குடன், நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டிருந்த சுயஒழுங்குபடுத்தல் என்ற கட்டுக்கதை முடிவிற்கு வந்துவிட்டது. சகர்பர்க் அமெரிக்க காங்கிரஸ் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் முன்னிலையில் தோன்றி பல மாதங்களாகிவிட்டன. எனினும் முகநூலின் வர்த்தக நடைமுறைகள் குறித்த முக்கியமான கேள்விகளுக்கு இன்னமும் பதிலளிக்கப்படாத நிலையே காணப்படுகின்றது.

கேம்பிரிஜ் அனலடிகா மோசடியைப் பொறுத்தவரை பேஸ்புக்கிற்கு அது குறித்து தெரியுமா என்பதும் எப்போது தெரியவரும் என்பதும் தெளிவற்றதாகக் காணப்படுகின்றது. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்கு பேஸ்புக் ஊடான வெளிநாட்டு தலையீடு பங்களிப்பு செய்தது என்பதும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான  சர்வஜன வாக்கெடுப்பில் என்ன தாக்கத்தை பேஸ்புக் மூலமான தலையீடுகள் ஏற்படுத்தின என்பதும் இன்னமும் தெளிவற்றவையாகக் காணப்படுகின்றன.

பேஸ்புக் ஊடாக இலக்குவைக்கப்பட்ட முடிவற்ற பிரச்சாரங்களால் ஐனநாயகத் தேர்தல்களுக்கு ஆபத்துக்கள் உள்ளனவா? எவருக்கும் தெரியாது. இதற்கு முக்கிய காரணம் பேஸ்புக்கின் இரகசியதன்மையே. பேஸ்புக் தனிப்பட்ட பாதுகாப்பில் முன்னேற்றங்களை செய்திருப்பதாகத் தெரிவிக்கின்றது. எனினும், ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுக்கொண்டது போன்று பேஸ்புக் கேம்பிரிட்ஜ் அனலடிகா மோசடி குறித்து உள்ளக ஆய்வினை மேற்கொள்ளத் தவறியுள்ளதன் காரணமாக  எதிர்வரும் மே மாதம் இடம்பெறவுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத் தேர்தலில் அதிகளவு வெளிநாட்டுத் தலையீடுகள் இடம்பெறலாம் என அச்சமடைவதற்கான காரணங்கள் உள்ளன.

பேஸ்புக்கிலும்  ஏனைய பாரிய டிஜிட்டல் நிறுவனங்களும்  வெறுப்புணர்வை தூண்டும் பேச்சு மற்றும் தவறான தகவல்கள் பரப்புவதை கட்டுப்படுத்துவதற்கான ஐரோப்பிய  ஆணைக்குழுவின் ஒழுக்காற்றுக் கோவையில் கைச்சாத்திட்டுள்ள போதிலும் இதனைவிட அதிகளவு நடவடிக்கைகளை எடுக்கவேண்டியது அவசியம். ஒழுக்காற்றுக் கோவை அதிகளவு பலவீனமானதாகக் காணப்படுவதுடன்  நிறுவனங்கள் தங்கள் வாக்குறுதிகளை எப்போது நிறைவேற்றவேண்டும் என்பதற்கான கால எல்லை எதனையும் கொண்டிருக்கவில்லை. இதனைத் தொடர ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொதுவான தரவு பாதுகாப்பு ஒழுங்குபடுத்தல் விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அதிகளவு வளங்கள் அவசியம். இதன் காரணமாக தொழில்நுட்ப நிறுவனங்கள் தனிப்பட்ட தரவுகளை தவறாக பயன்படுத்தியதற்கான தண்டப்பணத்தை வர்த்தகத்திற்கான செலவாக மாத்திரம் கருத முடியாது.

தொழில்நுட்ப நிறுவனங்களை பொறுப்புக்கூற வைக்கக்கூடிய விசாரணை அமைப்புகளும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் இல்லை. அமெரிக்காவில் 2016 ஜனாதிபதித் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு குறித்து விசாரணை செய்யும் விசேட அதிகாரி ரொபோட் முயுல்லர்: பல குற்றச்சாட்டுகளைப் பதிவுசெய்துள்ளார், பல தண்டனைகளை வழங்கியுள்ளார். இதன் மூலம் சமூக ஊடகங்கள் தொடர்புபட்ட வழக்குகளில் அதிகாரங்கள் வழங்கப்பட்ட வழக்கறிஞர்களின் முக்கியத்துவத்தை வெளிக்கொணர்ந்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் சமீபத்திய தேர்தல்களில் இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக தனது விசேட அதிகாரியை நியமிப்பதன் மூலமும் இந்த விடயத்தில் அமெரிக்காவை பின்பற்றவேண்டும், முன்னோக்கி  நகரவேண்டும். மேலும், தரவுகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவதன் மூலம்  இழைக்கப்படும் குற்றங்களை கையாளவேண்டும்.

மேலும், ஐரோப்பிய ஒன்றியம் அனைத்து நாடுகளிலும் அனைத்து மொழிகளிலும் பிழையான தகவல்களைப் பரப்பும் ரஷ்யாவின் நடவடிக்கையைக் கண்டுபிடித்து ஆய்வு செய்வதற்கான வலுவான பொறிமுறையொன்றை உருவாக்கவேண்டும். இதன்மூலமே வழக்கு தொடுநர்களும் சட்ட அமுலாக்கல் அதிகாரிகளும் வாக்குமூலங்களை பதிவுசெய்து இவ்வாறான நடவடிக்கைகளைத் தடுக்கக்கூடிய வலிமையைப் பெறுவார்கள். உரிய தந்திரோபாயத்தை முன்வைத்தால், சமூக ஊடகங்கள் பிழையான தகவல்களைப் பரப்புவதைக் கண்டுபிடித்து அவை வெளியானவுடனேயே தடுப்பதன் மூலம் பிழையான தகவல்கள் பரவுவதைத் தடுக்கலாம்.

ஐரோப்பிய ஒன்றியத்தைப் பொறுத்தவரையில், 2015இல் ஐரோப்பிய பேரவையால் உருவாக்கப்பட்ட ஈஸ்ட்ஸ்டிரட்கொம் செயலணியை விஸ்தரிப்பதுடன், ஐரோப்பிய இராஜதந்திர சேவையிலிருந்து அதனை சுயாதீனமானதாக்கவேண்டும். பிழையான தகவல்களை இனங்காண்பது, ஆய்வு செய்வது பகிரங்கப்படுத்தி அது வெளியாவதைத் தடுப்பதே அதன் ஒரேயொரு நோக்கமாக அமையவேண்டும்.

நீண்டகால அடிப்படையில் மேற்குலக ஜனநாயகத்திற்கு பேஸ்புக் உட்பட ஏனைய சமூக ஊடகங்களால் ஏற்படக்கூடிய ஆபத்தைத் தடுப்பதற்கு ஒரே ஒரு வழிமுறையே உள்ளது. அது ஒழுங்குபடுத்தல். 2008 நிதி நெருக்கடியை வங்கிகளின் சுய ஒழுங்குபடுத்தல்களால் தவிர்க்க முடியாது போனது போன்று தொழில்நுட்பத் துறையின் சுயஒழுங்குபடுத்தல்கள் பேஸ்புக்கை பொறுப்பான ஒரு செயற்பாட்டாளராக மாற்றத் தவறியுள்ளன.

பாரிய தொழில்நுட்ப நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளை தனிப்பட்ட தரவுகள் மீதான ஏகபோக உரிமைக்குத் தீர்வைக் காண்பதற்கான விதிமுறைகள் ஊடாக  ஆரம்பிக்கவேண்டும். மேலும் எவரும் தரவுகளை வழிமுறை செயலாக்கத்திற்கு உட்படுத்தும்போது வெளிப்படைத்தன்மையையும் பதிலளிக்கும் கடப்பாட்டையும் கொண்டிருப்பதற்கான புதிய விதிமுறைகள் எங்களுக்கு அவசியம். ஆனால், இறுதியில் பேஸ்புக்கோ அல்லது வேறு எந்த பாரிய தொழில்நுட்பமோ வீழ்ச்சியடைவதற்கான வாய்ப்புள்ளதை நாங்கள் நிராகரிக்கக்கூடாது.

நான் சகர்பர்க்கிற்குத் தெரிவித்த விடயம் தற்போதும் பொருத்தமானதாக உள்ளது. அவர் உருவாக்கிய விடயத்தின் மீதே அவருக்குக் கட்டுப்பாடு இல்லை போல தோன்றுகின்றது. அப்படி அவர் கட்டுப்பாட்டை தன்னிடம் வைத்திருந்தாலும் கூட பேஸ்புக்கின் பிரதம நிறைவேற்று அதிகாரியின் மனதில் உள்ள மேலும் அதிகளவு வெளிப்படையான தொடர்புபடுத்தப்பட்ட உலகம் குறித்து நாங்கள் கவலையடையவேண்டும். போலியான செய்தி எது? வெறுப்பைத் தூண்டும் தகவல் எது? எது அவ்வாறான செய்தியில்லை என்பதைத் தீர்மானிப்பதற்கான நடவடிக்கையில் பேஸ்புக்கில் உள்ள ஒவ்வொரு சொல்லையும் இந்தியாவிலும் ஏனைய நாடுகளிலும் உள்ள குறைந்தளவு சம்பளம் பெறும் பேஸ்புக் ஊழியர்கள்  நுணுக்கமாக ஆராய்வது குறித்து கற்பனை செய்து பாருங்கள்.

நியுயோர்க் டைம்ஸ் சமீபத்தில் தெரிவித்தது போன்று பேஸ்புக் தனது வர்த்தகத்தை எப்பாடுபட்டாவது பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதற்காக அது சமீபத்தில் தன்னை அதிகளவு விமர்சித்துவரும் நிதிவழங்குநர் மற்றும் தொண்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஜோர்ஜ் சொரசிற்கு எதிரான யூத எதிர்ப்பு பிரச்சாரத்தை மேற்கொள்வதற்காக இரகசிய மக்கள் தொடர்பாடல் நிறுவனமொன்றை பணிக்கு அமர்த்தியுள்ளது. இவ்வாறான கடும் கண்டனத்திற்குரிய நடவடிக்கைகள் பேஸ்புக் நிறுவனத்திடம் இரகசியமாக பேணவேண்டிய விடயங்கள் உள்ளன என்பதை புலப்படுத்தியுள்ளது. பிரிட்டனின் நாடாளுமன்ற குழுவொன்று ரஷ்யாவின் தீய செயற்பாடுகள் குறித்து 2014ஆம் ஆண்டிலேயே பேஸ்புக்கிற்கு தெரிந்திருக்கலாம் என்பதை புலப்படுத்தும் மின்னஞ்சல் ஒன்றை கைப்பற்றியுள்ளது.

மில்லியன் கணக்கான மக்களின்  தனிப்பட்ட தரவுகள் – செய்திகள் மற்றும் தகவல்கள் பரிமாற்றத்தின் மீதான ஏகபோக உரிமை ஜனநாயகத்திற்கான தெளிவான தற்போதைய ஆபத்தாகக் காணப்படுகின்றது என்பது குறித்து  எந்தவித சந்தேகமும் இல்லை.

தான் நம்பகத்தன்மை மிக்க விதத்தில் நடந்துகொள்வேன் என்பதை நம்ப முடியாது என பேஸ்புக் முகாமை மீண்டும் மீண்டும் நிருபித்துள்ளது.

எங்கள் தரவுகளை முகாமைத்துவம் செய்வது மற்றும் தனது நடவடிக்கைகளை சுத்தம் செய்வது குறித்த நிறுவனத்தின் வாக்குறுதிகளில் மக்களாகிய நாங்கள் நம்பிக்கை கொள்ளவேண்டும் என்பதற்கான காரணம் இல்லை.

சுய  ஒழுங்குபடுத்தல்கள் மோசமான தோல்வியைத் தழுவியுள்ளன. இது உண்மையான நடவடிக்கைளுக்கு எதிரான தருணம்.

கை வெர்கொவ்ஸ்டட்

முன்னாள் பெல்ஜியம் பிரதமர், ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உள்ள ஐரோப்பிய குழுவிற்கான தாராளவாதிகள் மற்றும் ஜனநாயகவாதிகள் கூட்டணியின் தலைவர்


Copyright: Project Syndicate, 2018.
www.project-syndicate.org